மலாயா அவசரகாலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலாயா அவசரகாலம் (மலாய்: Darurat Malaya; ஆங்கிலம்: Malayan Emergency சீனம்: 馬來亞緊急狀態) என்பது 1948-ஆம் ஆண்டில் இருந்து 1960-ஆம் ஆண்டு வரை பிரித்தானிய மலாயாவில் அமல் படுத்தபட்ட ஓர் ஒழுங்கு நடவடிக்கை காலம் ஆகும்.[1][2]
பிரித்தானிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போர் (Anti–British National Liberation War) என்றும் இந்தக் காலக் கட்டம் அறியப்படுகிறது. அத்துடன் பிரித்தானிய மலாயாவில்; மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது, மலாயா தேசிய விடுதலை படையினருக்கும் பொதுநலவாயப் படையினருக்கும் இடையே நடைபெற்ற ஒரு போரை மலாயா அவசரக் காலப் போர் என்றும் அழைக்கிறார்கள்.[3][4][5]
மலாயா தேசிய விடுதலை படை (Malayan National Liberation Army) (MNLA) என்பது மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் போர்ப் படை ஆகும். மலாயா காலனித்துவ பிரித்தானியர்கள், மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மீது தொடுத்த போர்க் காலத்தை மலாயா அவசரகாலம் என்று அழைத்த்னர். ஆனால், மலாயா தேசிய விடுதலை படையினர் அந்தக் காலக் கட்டத்தை 'தேசிய பிரித்தானிய எதிர்ப்பு விடுதலைப் போர்' என்று அழைத்தனர்.
Remove ads
வரலாறு
மலாயாவில் இருந்த ஈயச் சுரங்க உரிமையாளர்களும், ரப்பர் தோட்ட உரிமையாளர்களும், போர் எனும் சொல்லைத் தவிர்த்தனர். அதற்கு அவசரகாலம் என்று புது வடிவம் கொடுத்தனர். ஏனென்றால், போர் என்ற சொல் பயன்படுத்தப் படுமானால், எந்த ஓர் இழப்புத் தொகையும் காப்புறுதியின் வழியாகக் கிடைக்காது.
அவசரகாலம் என்றால் காப்புறுதியின் மூலமாக இழப்பீடுகள் கிடைக்கின்ற வாய்ப்புகள் அதிகம். ஆகவே, போர் எனும் சொல் மாற்றம் செய்யப்பட்டு அவசரகாலம் எனும் அடைமொழி பயன் படுத்தப்பட்டது.[6]
மலாயா கம்யூனிஸ்டுகள் தோல்வி
மலாயாவில் நடந்த இந்த உள்நாட்டுப் போரில், 1960-ஆம் ஆண்டில், மலாயா கம்யூனிஸ்டுகள் தோல்வி அடைந்தனர். இருப்பினும் அவர்களின் தலைவர் சின் பெங் 1967-ஆம் ஆண்டு அந்தச் சண்டையை மீண்டும் புதுப்பித்தார்.
அதற்கு முன்னரே ஆஸ்திரேலிய, பிரித்தானிய படைகள் அப்போரில் இருந்து மீட்டுக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் சின் பெங்கின் புதிய அணுகுமுறையும் தோல்வி கண்டது.
மலாயாவின் பொருளாதாரம் பாதிப்பு
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மலாயாவின் பொருளாதாரம் மிக மோசமான பாதிப்பு நிலையை அடைந்தது. வேலையில்லாமை, குறைவான ஊதியம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவின. தொழிலாளர்களிடையே பரவலான அமைதியற்றத் தன்மை இருந்தது.
1946-ஆம் ஆண்டில் இருந்து 1948-ஆம் ஆண்டு வரை ஆங்காங்கே வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. இந்தக் காலக் கட்டத்தில் பிரித்தானியர் மலாயாவின் பொருளாதாரத்தைச் செப்பனிட பலவகையான முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஐரோப்பிய தோட்ட நிர்வாகிகள் கொலை

1948 ஜூன் மாதம் 16-ஆம் தேதி பேராக், சுங்கை சிப்புட்டில் மூன்று ஐரோப்பிய தோட்ட நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அன்று காலை 8.30-க்கு சுங்கை சிப்புட், எல்பில் தோட்டத்தின் (Elphil Estate) நிர்வாகி ஏ.இ.வால்கர் (A.E. Walker) அவருடைய அலுவலக அறை மேசையில் சுட்டுக் கொல்லப் பட்டார்.
அதற்கு அடுத்து, முப்பது நிமிடங்கள் கழித்து இரண்டு கி.மீ. தொலைவில் இருந்த பின் சூன் தோட்ட (Phin Soon Estate) நிர்வாகி ஜே.எம்.எலிசன் (John Allison) என்பவரும், அவருடைய துணை நிர்வாகி இயான் கிறிஸ்டியன் (Ian Christian) என்பவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
நான்காவது முறையாக, சுங்கை சிப்புட் நகருக்கு அருகிலுள்ள மற்றும் ஓர் ஐரோப்பியர் தோட்டத்தில் மற்றொரு தாக்குதல் திட்டமிடப்பட்டது. இருப்பினும் அது தோல்வி அடைந்தது. அந்த ஐரோப்பியரின் ஜீப் வண்டி பழுது அடைந்ததால் அவர் வேலைக்கு தாமதமாகி விட்டார். இருப்பினும் அவரைக் கொல்வதற்காக முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.[7]
இந்த அசம்பாவிதங்கள் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களை நிலை தடுமாறச் செய்தது. கொலை செய்யப்பட்ட பிரித்தானிய நிர்வாகிகளின் உடல்கள் பத்து காஜாவில் உள்ள ஆங்கலிக்கன் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து, பிரித்தானியர்கள் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்தனர்.[8]
மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்குத் தடை

அதன் வழி மலாயா கம்யூனிஸ்டு கட்சி முற்றாகத் தடை செய்யப்பட்டது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர். விசாரனைகள் இல்லாத கைது நடவடிக்கை தீவிரமாக அமல் படுத்தப்பட்டது.[9]
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக சின் பெங் என்பவர் இருந்தார். மலாயா கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டதும் அக்கட்சியின் உறுப்பினர்கள் கிராமப்புறப் பகுதிகளில் அடைக்கலம் அடைந்தனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சி என்பது மலாயா மக்கள் விடுதலைப் படை என்று மாற்றம் கண்டது. மலாயா கம்யூனிஸ்டுகளினால் கிராமப்புற மக்களின் வாழ்வில் சித்ரவதைகளும் தொல்லைகளும் தொடர்ந்தன.[10]
ரகசியமான இராணுவப் பயிற்சிகள்

ஜப்பானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது, மலாயா கம்யூனிஸ்டு கட்சி ஜப்பானியர்களை எதிர்த்து கொரில்லா போர் முறையில் களம் இறங்கியது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பிரித்தானியர்கள் ஏற்கனவே ஆயுதங்களை வழங்கி ஜப்பானியர்களை எதிர்க்கச் செய்தனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பிரித்தானியர்கள் ரகசியமான முறையில் இராணுவப் பயிற்சிகளையும் வழங்கி வந்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியினரின் ஆயுதஙளைப் பிரித்தானியரிடமே மீண்டும் ஒப்படைக்குமாறு கட்டளையிடப் பட்டது. இருப்பினும் அந்த ஆயுதங்களில் பெருவாரியான ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. மலாயா கம்யூனிஸ்டு கட்சியினரே வைத்துக் கொண்டனர். பின்னர், அதே ஆயுதங்கள்தான் பிரித்தானியர்களுக்கு எதிராகவும் திசை திருப்ப பட்டன.[11]
Remove ads
கொரில்லா போர்

மலாயா தேசிய விடுதலை படையினர் (Malayan National Liberation Army (MNLA) கொரில்லா போர்த் தந்திரங்களைக் கையாண்டனர். மின்நிலையங்கள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றைச் சேதம் அடையச் செய்தல், ரப்பர் தோட்டங்களில் தாக்குதல் நடத்துதல், பொது போக்குவரத்திற்கு குந்தகம் விளைவித்தல் போன்றவையே மலாயா தேசிய விடுதலை படையினர் கையாண்ட கொரில்லா போர் தந்திரங்களாகும்.[12]
அப்போது மலாயாவில் 3.12 மில்லியன் சீனர்கள் இருந்தனர். இவர்களில் ஏறக்குறைய 500,000 பேர் மலாயா தேசிய விடுதலை படையினருக்கு ஆதரவாக இருந்தனர். மலாய்க்காரர்களில் சிலரும் ஆதரவு வழங்கினர்.
இந்தியர்களின் ஆதரவு
இந்தியர்களைப் பொறுத்தவரையில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்தாங்காலி, களும்பாங், பத்து ஆராங், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், சுங்கை சிப்புட் போன்ற இடங்களில் வாழ்ந்த இந்தியர்கள் கூடுதலான ஆதரவுகளை வழங்கி வந்தனர்.
மலாயா தேசிய விடுதலை படையினர் சீனர்களின் ஆதரவைப் பெற்றதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. தேர்தல்களில் வாக்களிக்க சீனர்கள் மறுக்கப்பட்டது; சீனர்களுக்கு நில உரிமைகள் இல்லாமல் போனது; பெருவாரியான சீனர்கள் ஏழைகளாக இருந்தது போன்ற தலையாயக் காரணங்களைச் சொல்லலாம்.
மார்க்சிய-லெனினிச சித்தாந்தங்கள்
மலாயா தேசிய விடுதலை படையினருக்கு Min Yuen [13] எனும் பொருளுதவி துணை அமைப்பு இருந்தது. இந்த 'மின் யுவான்' துணை அமைப்பு பொதுமக்களுடன நெருக்கமான தொடர்புகளைக் கொண்டு இருந்தது. மலாயா தேசிய விடுதலை படையினருக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருட்களை 'மின் யுவான்' வழங்கி வந்தது.
மலாயா தேசிய விடுதலை படையினர் அடர்ந்த காடுகளில் இராணுவ முகாம்களை அமைத்து வைத்திருந்தனர். அந்த முகாம்களில் அவர்களுக்கு மார்க்சிய-லெனினிச சித்தாந்தங்கள் சொல்லித் தரப்பட்டன. இராணுவ போர்ப் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட்டன. தவிர, பொதுமக்களிடம் விநியோகம் செய்யச் சொல்லி அரசியல் செய்தி சுற்றறிகைகளும் வழங்கப்பட்டன.
Remove ads
பிரிக்ஸ் திட்டம்

மலாயா தேசிய விடுதலை படையின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சில முக்கிய நடவடிக்கைகளை பிரித்தானியா மேற்கொண்டது. ஈயச் சுரங்கங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈட்டுபட்டது. ’பிரிக்ஸ்’ திட்டத்தையும் (Briggs Plan)[14] அமல் செய்தது. மலாயா தேசிய விடுதலை படையினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருளுதவிகளைத் துண்டிப்பதுதான் ’பிரிக்ஸ்’ திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.
’பிரிக்ஸ்’ திட்டத்தை உருவாக்கியவர் எரால்டு பிரிக்ஸ் (General Sir Harold Briggs)[15] என்பவர். இவர் அப்போது மலாயாவின் பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கை இயக்குநராக இருந்தார்.
மனைப்பகுதிகளுக்கு சொத்துரிமை
’பிரிக்ஸ்’ திட்டம் பல முகப்புக்கூறுகளைக் கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது பொதுமக்களை வேறு குடியிருப்பு பகுதிகளுக்கு மறுக் குடியேற்றம் செய்வதாகும். 470,509 கிராமப்புற மலாயா மக்கள் மறுக் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
அவர்களில் 400,000 சீனர்களும் அடங்குவர். கிராமப்புற மலாயா மக்கள் காடுகளின் விளிம்புப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் புதுக்கிராமங்களில் மறுக் குடியேற்றம் செய்யப்பட்டனர். புதுக்கிராமங்கள் புதிதாக உருவாக்கப் பட்டவை.
புதுக்கிராமங்கள் முள்வேலிகளால் பாதுகாக்கப் பட்டன. காவல் சாவடிகள் இருந்தன. இரவு நேரங்களில் ஒளிவிளக்குகள் பிரகாசமாக எரிந்தன. தொடக்கக் காலங்களில் மக்கள் அந்தத் திட்டத்தை விரும்பவில்லை.
ஆரோக்கியமான இருப்பிட வசதிகள்
இருப்பினும் நல்ல ஆரோக்கியமான இருப்பிட வசதிகள் அமைத்துக் கொடுக்கப் பட்டதால், காலப் போக்கில் அந்தத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் வாழ்ந்த மனைப்பகுதிகளுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. பண உதவியும் செய்யப்பட்டது.[16]
மலாயாவின் அவசரகாலம் ஒரு முடிவிற்கு வரும்போது அந்த அவசரகால நடவடிக்கையில் ஏறக்குறைய 40,000 பிரித்தானிய, பொதுநலவாயத் துருப்புகள் 8,000 கம்யூனிஸ்டு கொரில்லாக்களுக்கு எதிராக ஈடுபட்டிருந்தனர்.
என்றி கர்னி
சர் என்றி கர்னி மலாயா கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தங்களையும் தீவிரவாதத்தையும் முறியடித்த பெருமைக்கு உரியவர். அவர் மலாயாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். மலாயா கம்யூனிஸ்டுகளை அழித்தே தீருவேன் என்று உறுதிபூண்டு போராடினார்.
ஆனால், இறுதியில் கம்யூனிஸ்டுகளால் 1951-ஆம் ஆண்டு பிரேசர் மலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். சர் என்றி கர்னியின் கல்லறை கோலாலம்பூர் செராஸ் சாலையில் இருக்கிறது.
சர் என்றி கர்னி கொல்லப்பட்டது மலாயா மக்களிடையே, கம்யூனிஸ்டுகளின் மீது ஒரு பரவலான வெறுப்புனணர்வை ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் ஆணையருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன எனும் ஒரு கேள்விக்குறி மக்களிடையே தோன்றியது. அதனால், மலாயா கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தங்களில் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மலாயா இராணுவம்
சர் ஹென்றி கர்னியின் பின்னவராக வந்த ஜெரால்ட் டெம்ப்ளர் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார். மலாயாவில் வாழும் சீனர்களுக்கு வாக்களிக்கும் உரிமைகளை உடனடியாக வழங்கினார். ’பிரிக்ஸ்’ திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்தினார். மலாயா இராணுவம் எனும் ஒரு புதிய இராணுவப் படையையும் உருவாக்கினார்.
கம்யூனிஸ்டு கொரில்லாக்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானத் தொகையையும் கூட்டி பொதுமக்களை உற்சாகப் படுத்தினார். காவல் துறையின் புலான்ய்வுத் துறையையும் விரிவாக்கம் செய்தார்.
Remove ads
பொது மன்னிப்பு
1955 செப்டம்பர் 8ஆம் தேதி மலாயா கம்யூனிஸ்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப் படுவதாக மலாயாக் கூட்டரசு அரசாங்கம் அறிவித்தது.[17] இதே போன்ற ஓர் அறிவிப்பஒ சிங்கப்பூர் அரசாங்கமும் அறிவித்தது. ஆனால், மலாயா தேசிய விடுதலை படையினருடன் எவ்வித பேரமும் பேச முடியாது என்று அப்போதைய மலாயாவின் முதலமைச்சர் துங்கு அப்துல் ரகுமான் அறிவித்தார்.
பொதுமன்னிப்பின் மூல கூறுகள்
- அவசரகாலம் தொடர்பான தவறுகளைச் செய்தவர்கள் உடனடியாக சரண் அடையலாம். அவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.
- இப்போதே அவர்கள் விரும்பும் நபரிடம் சரண் அடையலாம். பொது மக்களிடமும் சரண் அடையலாம்.
- பொதுவான சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு படையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.
- சரண் அடைந்தவர்களிடம் அரசாங்கம் விசாரண நடத்தும்.
- ஒருவர் சரண் அடைந்து நாட்டிற்கு விசுவாசமாக நடந்து கொள்ள விரும்பினால் அவருக்கு அரசாங்கம் எல்லா வகைகளிலும் உதவி செய்யும்.
- சமுதாயத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்படுவார். அவருடைய குடும்பத்தாருடன் இணைத்து வைக்கப்படுவார்.
- சரண் அடைந்த பின்னர் அவர்களுடைய நடமாட்டம் தொடர்ந்து கவனிக்கப்படும்.
- சீனாவிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.[18]
Remove ads
பாலிங் பேச்சுவார்த்தை
தன்னுடைய நோக்கம் வெற்றி பெறவில்லை என்பதை உணர்ந்த சின் பெங், ஆளும் பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்த அழைப்பு விடுத்தார். அந்தப் பேச்சு வார்த்தை மலேசிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றது. 1955 டிசம்பர் 28ஆம் தேதி கெடா, பாலிங்கில் உள்ள பாலிங் அரசாங்க ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்றது.
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சின் பெங், அதன் தலைமைச் செயலாளர் ரசீட் மைடின், மத்திய பிரசார அமைப்பின் தலைவர் சென் தியென் கலந்து கொண்டனர். மலாயா அரசாங்கத்தைப் பிரதிநிதித்து துங்கு அப்துல் ரகுமான், டத்தோ டான் செங் லோக், சிங்கப்பூர் முதலமைச்சர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை
சண்டை சச்சரவுகளுக்கு ஒரு சுமுகமான முடிவு காண்பதே அந்த பாலிங் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்கு ஆகும். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் சின் பெங்கின் கோரிக்கைளை மலாயா தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
இறுதியில் பாலிங் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தக் கட்டமாக நியூசிலாந்து தன்னுடைய இராணுவப்படையை அனுப்பியது. பொதுநலவாய உறுப்பு நாடுகள் தத்தம் படைகளையும் மலாயாவுக்கு அனுப்பி வைத்தன.
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் இறுதி முயற்சி
பாலிங் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததினால், 1956 பிப்ரவரி 8ஆம் தேதி முதலமைச்சர் துங்கு பொது மன்னிப்பை மீட்டுக் கொண்டார். மலாயா கம்யூனிஸ்டுகளுக்கு ஐந்து மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் கம்யூனிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும் உறுதியாகச் சொன்னார்.[19]
எனினும், மலாயா கம்யூனிஸ்டு கட்சி மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்த தன்னால் இயன்ற வரை முயற்சிகள் செய்து பார்த்தது. ஆனால், அனைத்தும் வெற்றி பெறவில்லை. மலாயா சுதந்திரம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் கூட, ஆகக் கடைசியாக மலாயா கம்யூனிஸ்டு கட்சி இன்னொரு முயற்சி செய்து பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு கேட்டது. ஆனால், துங்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
மலாயா சுதந்திரம் அடைந்தது
1957 ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி மலாயா சுதந்திரம் அடைந்தது. மறு ஆண்டில் பேராக், தெலுக் இந்தானில் கம்யூனிஸ்டு கொரில்லாக்கள் கடைசியாக ஒரு தாக்குதல் நடத்தினர். அதுதான் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் கடைசி தாக்குதல்.
அந்தத் தாக்குதலில் வெற்றி பெற முடியாமல் போகவே, தாக்குதல் நடத்திய அனைவரும் அரசாங்கக் காவல் துறையிடம் சரண் அடைந்தனர். மலாயாவில் ஆங்காங்கே எஞ்சியிருந்த கம்யூனிஸ்டு கொரில்லாக்கள் தென் தாய்லாந்து எல்லையில் தஞ்சம் அடைந்தனர். 1960 ஜுலை 31-இல் அவசரகாலம் முடிவிற்கு வந்ததாக மலாயா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன் பின்னர் சின் பெங், தென் தாய்லாந்தில் இருந்து சீனா, பெய்ஜிங்கிற்குச் சென்றார். அவருடன் முக்கியமான சிலரும் சென்று சீனாவில் அடைக்கலம் அடைந்தனர்.
Remove ads
அவசரகாலம் முடிவிற்கு வந்தது
- இந்த அவசரகாலப் போரில் 6,710 கம்யூனிஸ்டு கொரில்லாக்கள் கொல்லப்பட்டனர்.
- 1,287 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 2,702 கொரில்லாக்கள் சரண் அடைந்தனர்.
- அரசு தரப்பில் 1,345 மலாயா இராணுவத்தினரும் காவல் துறையினரும் கொல்லப்பட்டனர்.
- 519 பொதுநலவாய அதிகாரிகளும், பொதுமக்களில் 2,478 பேரும் இறந்து போயினர்.
நூல்கள்
- Barber, Noel (1971). War of The Running Dogs. London: Collins. ISBN 0-00-211932-3.
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads