மாண்டின்கா மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாண்டின்கா மக்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் வாழும் இனக்குழுக்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள். இவர்களை மாண்டென்கா, மாண்டின்கோ, மாண்டிங், மாலின்கே போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு.[8] பல நாடுகளில் வாழும் இவர்களது மொத்த மக்கள்தொகை 11 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் பேரரசர் சூன்யாத்தா கெயித்தாவின் கீழ் எழுச்சி பெற்ற மாலிப் பேரரசின் வழிவந்தோராவர். மாண்டின்காக்கள், மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய இனமொழிக் குழுவும், 20 மில்லியன் மக்கள்தொகை கொண்டதுமான மாண்டே மக்கள் குழுவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவில் மாண்டின்காக்களுடன் தியுலா, போசோ, பிஸ்சா, பம்பாரா போன்ற பல இனக்குழுக்களும் அடங்குகின்றன. தொடக்கத்தில் மாலியைத் தாயகமாகக் கொண்ட இவர்கள், 13ம் நூற்றாண்டில் முன்னைய பேரரசுகளிடம் இருந்து விடுதலை பெற்று, மேற்கு ஆப்பிரிக்காவில் பரந்திருந்த பேரரசு ஒன்றை அமைத்தனர். இவர்கள் நைகர் ஆற்றுப் பகுதியில் இருந்து, நல்ல வேளாண் நிலங்களைத் தேடியும், பேரரசு விரிவாக்கத்துக்காகவும், மேற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். பூலா ஜிகாத் எனப்பட்ட தொடர்ச்சியான சண்டைகள் ஊடாகப் பல மாண்டின்கா மக்கள் உள்ளூர் நம்பிக்கைகளை விட்டு இசுலாத்தைத் தழுவினர். தற்கால ஆப்பிரிக்காவில் 99% மாண்டின்காக்கள் முசுலிம்கள்.[9][10]
மாண்டின்கா மக்கள் பெரும்பாலும் மேற்கு ஆப்பிரிக்காவில், குறிப்பாக கம்பியா, கினியா ஆகிய நாடுகளில் பெரும்பான்மை இனக்குழுவாக வாழ்கின்றனர்.[11] இவர்கள் குறிப்பிடத்தக்க அளவில், மாலி, சியேரா லியோனி, ஐவரி கோஸ்ட், செனகல், புர்க்கினா பாசோ, லைபீரியா, கினி-பிசாவு, நைகர், மௌரித்தானியா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர். பரவலாக வாழ்ந்தாலும் பெரும்பாலான நாடுகளில் இவர்கள் பெரும்பான்மை இனக்குழு அல்ல. பெரும்பாலான மாண்டின்காக்கள், மரபுவழி நாட்டுப் புற ஊர்களில் உள்ள குடும்ப நிலங்களில் வாழ்கின்றனர். இவர்களது சமூகம் சாதிப் படிநிலை அமைப்புக் கொண்டது.[8][12][13]
மாண்டின்காச் சமுதாயங்கள், குழுத் தலைவராலும், முதியோர் குழுக்களாலும் வழிநடத்தப்படும் தன்னாட்சித்தன்மை கொண்டவை. இது ஒரு வாய்வழிச் சமூகம். தொன்மங்கள், வரலாறு, அறிவு அனைத்தும் வாய்வழியாகவே ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது.[14]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads