மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீன மக்கள் குடியரசில், மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல் (The Great Leap Forward) என்பது சீனப் பொதுவுடைமைக் கட்சியின் ஒரு பொருளாதார, சமூக நடவடிக்கையைக் குறிக்கும். இது 1958 முதல் 1961 வரையிலான காலப் பகுதியில் சீனாவின் திட்டமிடல் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தியது. இது சீனாவின் பெருந்தொகையான மக்கள் சக்தியைப் பயன்படுத்தி, விரைவான தொழில்மயமாக்கத்தின் மூலமாகவும், கூட்டுப்பண்ணையாக்கத்தின் மூலமும் அதன் வேளாண்மைப் பொருளாதாரத்தை நவீன பொதுவுடைமைச் சமுதாயமாக மாற்றும் நோக்கத்தைக் கொண்டது. உற்பத்தி ஆற்றல் கோட்பாட்டின் அடிப்படையில் மா சே துங் இந்த நடவடிக்கைக்குத் தலைமை வகித்தார். தானியங்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேலும் கடுமையாக்கப்பட்டது.
|
1949–1976, மாவோ காலம்
| ||||||
|
See also: | ||||||
|
| ||||||
|
| ||||||
|
| ||||||
|
புவியியல் - அரசியல் - கல்வி சீனா வலைவாசல் | ||||||
இந்த நடவடிக்கை மூலம் சீன நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் கட்டாயமான வேளாண்மைக் கூட்டுழைப்பு முறையின் அறிமுகம் ஆகும். இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டது. தனியார் வேளாண்மை முயற்சிகள் தடைசெய்யப்பட்டதுடன், அவ்வாறு ஈடுபட்டோர் எதிர்ப் புரட்சியாளர்கள் எனக்கூறித் தண்டனைக்கு உள்ளாயினர். பொதுமக்கள் போராட்டக் கூட்டங்கள் மூலமும் சமுதாய அழுத்தங்கள் மூலமும் ஊரக மக்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல் நடவடிக்கையின் முன்னுரிமையாகிய ஊரகத் தொழில் மயமாக்கம் இந்த நடவடிக்கையும் பல்வேறு பிழைகள் காரணமாகக் கைவிடப்பட்டது.[1]
மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல் நடவடிக்கை பேரழிவில் முடிவுற்றது. இக்காலத்தில் நிகழ்ந்த அட்டூழியங்களினால் கோடிக் கணக்கானவர்கள் இறந்தனர்.[2] இறப்புத்தொகை 1.8 கோடி.[3] முதல் 4.5 கோடி[4] வரையில் இருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது. கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்துதல், திட்டமிட்ட வன்முறை என்பன மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல் நடவடிக்கையின் அடிப்படைகளாக அமைந்தன என்றும் இதனால் இது மனித வரலாற்றின் மிகக் கொடூரமான பெருமெடுப்பிலான மனிதக் கொலைகளுக்குக் காரணமாகியது என்றும் வரலாற்றாளர் பிராங்க் டிக்கோட்டர் கூறுகிறார்.[5] அதே நேரம் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "மந்த்லி ரிவியூ" போன்ற மார்க்சிய வெளியீடுகள் மேற்படி எண்ணிக்கைகளினது நம்பகத்தன்மை குறித்தும், இந்தக் கொலைகளில் மா சே துங்கின் பங்கு குறித்தும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன.[6]
மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல் நடவடிக்கை இடம்பெற ஆண்டுகளில் உண்மையில் சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. 1953 முதல் 1983 வரையான காலப் பகுதியில் 1958 முதல் 1961 வரையான காலப் பகுதியிலேயே சீனாவின் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியைக் காட்டியது. இந்நடவடிக்கைக்கான பெருமளவு முதலீடு மிகவும் குறைவான வளர்ச்சியையே கொடுத்தது. சில வேளைகளில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை. சுருக்கமாக, மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல் பெருஞ் செலவுடன் கூடிய பேரழிவு என்கிறார் டுவைட் பேர்க்கின்சு என்னும் பொருளியலாளர்.[7]
1960 இலும் 1962 இலும் இடம்பெற்ற சீனப் பொதுவுடைமைக் கட்சி மாநாடுகளில் மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சலின் எதிர்மறை விளைவுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், மா சே துங்கும் பெருங் கண்டனத்துக்கு உள்ளானார். மிதவாதிகளான லியு சாவோக்கி, டெங் சியாவோபிங் ஆகிய தலைவர்கள் கட்சியில் செல்வாக்குப் பெற்றனர். மா சே துங் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். இதனைத் தொடர்ந்து இதற்கு எதிராக மா சே துங் கலாச்சாரப் புரட்சியைத் தொடங்கவேண்டி இருந்தது.
Remove ads
பின்னணி
1949 ஆம் ஆண்டு அக்டோபரில் குவோமிந்தாங் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர், சீனப் பொதுவுடைமைக் கட்சி உடனடியாக மக்கள் சீனக் குடியரசை அறிவித்தது. தொடர்ந்து, நிலவுடைமையாளரதும், பணக்காரக் குடியானவர்களதும் நிலங்கள் கட்டாயமாக ஏழைக் குடியானவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டன. வேளாண்மைத் துறையில் பொதுவுடைமைக் கட்சியினால் கேடானவை எனக் கருதப்பட்ட கஞ்சா போன்ற பயிர்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் நெல் பயிரிடப்பட்டது.
கட்சிக்குள் நிலப் பகிர்வு குறித்துப் பெரிய விவாதங்கள் இடம்பெற்றன. மத்திய குழு உறுப்பினரான லியு சாவோக்கி மாற்றங்கள் படிப்படியாக இருக்கவேண்டும் என்றும், கூட்டுப்பண்ணை முறையைத் தொழில்மயமாக்கத்தின் பின்னரே அறிமுகப்படுத்தவேண்டும் என்றும் அதன் மூலமே வேளாண்மையின் இயந்திரமயமாக்கத்துக்கான இயந்திரங்களைப் பெற முடியும் என்றும் அவர் வாதித்தார். மா சே துங் தலைமையினான கடும்போக்குவாதிகள் தொழிமயமாக்கத்துக்கான முதலீடுகளைப் பெற ஒரேவழி வேளாண்மையை அரசின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டு அதன்மூலம் தானிய விநியோகத்தில் தனியுரிமையை நிலை நாட்டுவதே என்று வாதித்தனர். தானியங்களைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கூடிய விலைக்கு விற்பதன்மூலம் தொழில்மயமாக்கத்துக்கான முதலீட்டைப் பெறமுடியும் என்பது அவர்கள் கருத்து.
கூட்டுப் பண்ணைகளும், பிற சமூக மாற்றங்களும்
1949 ஆம் ஆண்டுக்கு முன்னர் சீனக் குடியானவர்கள் தமது சிறிய நிலங்களில் வேளாண்மை செய்து கொண்டும், சந்தைப் படுத்துதல், விழாக்கள், முன்னோருக்கு மரியாதை செய்தல் போன்றவற்றில் மரபுவழி வழக்கங்களைக் கடைப்பிடித்துக் கொண்டும் வாழ்ந்தனர்.[8] இந்த நிலையில், நாட்டின் தொழில்மயமாக்கத்துக்கான நிதி வளத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வேளாண்மைத் துறையில் அரசின் தனியுரிமையை ஏற்படுத்தும் மா சே துங்கின் கொள்கையை மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதைச் சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் உணர்ந்தனர். இதனால், கூட்டுப்பண்ணைகளை உருவாக்குவதன் மூலம், குடியானவர்களைக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்றும் அதன்மூலம் வேளாண்மைக் கருவிகளையும், விலங்குகளையும் குடியானவர்கள் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் எண்ணினர். இந்தக் கொள்கையை 1949 முதல் 1958 வரையான காலப் பகுதியில் படிப்படியாக நடைமுறைப்படுத்தினர். முதலில் 5 தொடக்கம் 15 குடும்பங்களைக் கொண்ட "ஒருவருக்கொருவர் உதவும் குழுக்கள்" அமைக்கப்பட்டன. பின்னர் 1953 ஆம் ஆண்டில் 20-40 குடும்பங்களை உள்ளடக்கியதாகத் "தொடக்கநிலை வேளாண்மைக் கூட்டுறவுக் குழுக்கள்" அமைக்கப்பட்டன. தொடர்ந்தி 1956ல் 100-300 குடும்பங்கள் சேர்ந்த "மேல்நிலைக் கூட்டுறவு அமைப்புகள்" உருவாகின. அத்துடன் 1954ல் கூட்டுப்பண்ணைகளை உருவாக்கவும் அதில் சேர்ந்துகொள்ளவும் குடியானவர்களைக் கட்சி ஊக்குவித்தது. இது குடியானவர்களுடைய நிலங்களைப் பறித்துக்கொள்ளாமலும், அவர்களுடைய வாழ்வு முறைகளைக் கட்டுப்படுத்தாமலும் அவர்களுடைய செயற்றிறனைக் கூட்டும் என நம்பப்பட்டது.[8] எனினும் 1958 ஆம் ஆண்டில் தனியார் நிலவுரிமை இல்லாது ஒழிக்கப்பட்டதுடன், சீனா முழுவதிலும் உள்ள குடும்பங்கள் அரசினால் நடத்தப்பட்ட கம்யூன்களில் இணைந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயம் ஆகியது.
Remove ads
குறிப்புகள்
மேலும் வாசிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
