மெகாரியன் ஆணை

மெகாரா மீது டெலியன் கூட்டணி விதித்த பொருளாதார தடைகள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மெகாரியன் உறுத்தாணை (Megarian Decree) என்பது பெலோபொன்னேசியன் போர் வெடிப்பதற்கு சற்று முன்னர் ஏதெனியன் பேரரசால் சு. கிமு 432 இல் மெகாரா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் தொகுப்பாகும். இந்த நடவடிக்கையானது வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக பொருளாதாரத் தடையை முதலில் பயன்படுத்தபட்ட ஒன்றாக கருதப்படுகிறது.[1] இதற்கு காரணமாக கிரேக்க தெய்வமான டிமிடருக்கான புனித நிலமானன ஹைரா ஆர்காஸ்[2] எனப்படும் இடத்தில் மெகாரியர்கள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுவது, அவர்களைக் கண்டிக்க அவர்களின் நகரத்திற்கு அனுப்பப்பட்ட ஏதெனியன் அறிவிப்பாளர் கொல்லப்பட்டது மற்றும் ஏதென்சிலிருந்து தப்பி ஓடிவந்த அடிமைகளுக்கு அடைக்கலம் கொடுத்தது போன்றவை கூறப்பட்டன.[3] மெகாரியன் ஆணையால் மெகாராவானது டெலியன் கூட்டணிக்குள் எந்த துறைமுகத்திலும் வணிகம் செய்வதிலிருந்து முற்றிலும் தடுக்கப்பட்டது. இந்த ஆணையை மீறி ஏதென்சுக்குள் காலடி எடுத்து வைக்கும் மெகாரியன்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தடை அந்த நகரத்தை தனிமைப்படுத்தி அதன் பொருளாதாரத்தை பெரிதும் சேதப்படுத்தியது. பெலோபொன்னேசியப் போர் தொடங்க மெகாரியன் ஆணை செலுத்திய செல்வாக்கு இன்றுவரை மிகவும் விவாதிக்கப்படும் ஒரு விசயமாக உள்ளது.[4]

Remove ads

பின்னணி

Thumb
பெரிக்கிள்ஸ், மெகாரியன் ஆணையை வெளியிட்டவர்

மெகாரியன் ஆணையானது அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மெகாரியர்களின் துரோக நடத்தைக்காக ஏதெனியர்களின் பழிவாங்கும் செயலாகக் கருதப்பட்டது. இந்த ஆணையைக்கு ஆதரவாக இருந்த பெரிக்கிளீசின் தரப்பில் எசுபார்த்தாவை நோக்கி வேண்டுமென்றே ஆத்திரமூட்டவேண்டும் என்பதாக இருந்திருக்கலாம்.[5] காரணம் எதுவாக இருந்தபோதும் பெலோபொன்னேசியப் போரின் முக்கிய காரணங்களில் ஒன்றாக மெகாரியன் ஆணை என்று கருதும் அறிஞர்கள் உள்ளனர்.[2]

Thumb
பெலோபொன்னேசியப் போரின் போது கூட்டணிகளின் வரைபடம்

மெகாரியா மீது மேற்கொள்ளப்பட்ட பொருளாதார முற்றுகையால் ஏதெனியன் பேரரசு முழுவதும் துறைமுகங்கள் மற்றும் சந்தைகளில் மெகாரியர்கள் வணிகம் செய்யக்கூடாது என்று தடை விதித்தது. இது மெகாரியன் பொருளாதாரத்தை நசுக்கியது.[1] இந்த பொருளாதாரத் தடைகள் மெகராவின் கூட்டாளிகளையும் பாதித்திருக்கும், மேலும் ஏதென்சு தனது போட்டியாளர்களை பலவீனப்படுத்தவும் தன் செல்வாக்கை விரிவுபடுத்தவும் மேற்கொண்ட நடவடிக்கையாகவும் கருதப்பட்டிருக்கலாம். பெலொப்பொனேசியா மற்றும் அட்டிகா இடையேயான முக்கியமான பாதைகளை மெகாரா கட்டுப்படுத்தியது. இது ஏதென்சு மற்றும் எசுபார்த்தா என இரண்டிற்கும் முக்கியமானதாக இருந்தது.[6] இந்த தடையால் இரு அரசுகளுக்கும் இடையேயான அமைதி குலைந்தது. மெகாரா அதன் நட்பு நாடான எசுபார்த்தாவிடம் உதவி கேட்டு முறையிட்டதால் பெலோபொன்னேசியன் போர் தொடங்கியது.[1] மோதலுக்கு காரணமான, இந்த ஆணையைக் கைவிட வேண்டும் என்பது ஏதெனியர்களுக்கு எசுபார்த்தாவின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.[6] ஏதென்சு போரைத் தவிர்க்க விரும்பினால், மெகாரியன் ஆணையை திரும்பப் பெற வேண்டும் என்பது எசுபார்த்தன்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளில் ஒன்றாகும் என்று துசிடிடீஸ் குறிப்பிடுகிறார். மேலும் இதில் அடங்கி இருந்த பிற கோரிக்கைகள்: ஏதென்சு பெரிக்கிளீசு வம்சத்தினரை நாடு கடத்தவேண்டும் (பெரிக்கிளீசு நாடுகடத்தப்படவேண்டும் என்று நேரடியாக குறிப்பிடுவதற்கு பதிலாக மறைமுகமாக இவ்வாறு கேரப்பட்டது), பொடிடேயா முற்றுகையைக் கைவிட வேண்டும், ஏதென்சின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள ஏஜினாவுக்கு உடனடியான விடுதலை அளிக்கவேண்டும், தன்னுடைய ஏகாதிபத்தியத்தைக் கலைத்துவிடவேண்டும். அதாவதுஏதென்சு பேரரசுக்கு உட்பட்ட எல்லா அரசுகளுக்கும் விடுதலை அளிக்கவேண்டும் என்பனவாகும்.[7] இவற்றிறை நிறைவேற்ற பெரிக்கிளீசு மறுத்துவிட்டார். ஆனால் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவுக்கும் உள்ள தகறாறுகளை, ஒரு மத்தியஸ்தரை நியமித்து அதன் மூலம் தீர்த்துக் கொள்ளலாமென்று தெரிவித்தார். எசுபார்த்தா இதற்கு உடன்படவில்லை.

Remove ads

முக்கியத்துவம்

Thumb
மெகாரா நகரில் உள்ள நவீன தொல்லியல் தளம்

பெலோபொன்னேசியன் போர் வெடிப்பதற்கு இந்த ஆணை எந்த அளவுக்கு ஊக்கியாக இருந்தது என்பது விவாதப் பொருளாகும்.[8] போருக்கான முதன்மையான ஆதாரமான துசிடிடீஸ், போருக்கான காரணத்தைப் பற்றிய தனது பகுப்பாய்வில் இந்த ஆணைக்கு மிகக் குறைந்த முக்கியத்துவத்தை அளிக்கிறார். மேலும் எசுபார்த்தன்களின் ஒரு சாக்குப்போக்காக இதைக் கருதுகிறார். ஏதென்சின் வளர்ந்து வரும் சாம்ராச்சியத்தைப் பற்றிய எசுபார்த்தாவின் பயம்தான் போருக்கு உண்மையான காரணம் என்று துசிடிடீஸ் கருதுகிறார்.[9] பொடிடேயா மற்றும் கோர்ஃபு மீதான மோதல்களைப் போலல்லாமல், அவர் ஆணை குறித்து விரிவாக விவரிக்கவில்லை.

Thumb
பண்டைய கிரேக்கம் மற்றும் ஏஜியன் கடல் வரைபடம்

இந்த ஆணையின் முக்கியத்துவத்திற்கான முக்கிய ஆதாரமாக அரிஸ்டாஃபனீஸ் என்னும், பண்டைய நாடக ஆசிரியரின் அக்கால நையாண்டி குறிப்பு உள்ளது. அவரது நாடகமான தி ஆச்சார்னியன்ஸ் (II.530-7) என்னும் நாடகத்தில் இந்த ஆணை மெகாரியர்களை "மெதுவாக பட்டினிக்கு" உள்ளாக்கியது. மேலும் உதவிக்காக எசுபார்த்தன்களிடம் முறையீடு செய்தது எப்படி என்பதைக் குறிப்பிடுகிறது. அரிஸ்டோஃபன்சின் மற்றொரு நாடகமான பீஸ், போர்க் கடவுளால் மெகாராவில் போர் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் குறிப்பிடுகிறது. இருப்பினும், இவை பொழுதுபோக்கிற்காக வடிவமைக்கப்பட்ட நகைச்சுவை நாடகங்கள் என்பதால், வரலாற்று தோக்கில் அவற்றின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது.

எசுபார்த்தன்கள் "ஏதென்சு மெகாரியன் ஆணையைத் திரும்பப் பெற்றால் போரைத் தவிர்க்கலாம்" என்று கூறியதால், துசிடிடீசியின் குறிப்புகளில் ஆணையைப் பற்றிய முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றன.[10] இருப்பினும், கிமு 440 இல் சமோசின் கிளர்ச்சியின் போது, மெகாரியன் ஆணை நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, எசுபார்த்தன்கள் பெலோபொன்னேசியன் கூட்டணியில் இருந்து போர்ப் பிரகடனத்தை கோரினர் என்றும் துசிடிடீஸ் தெரிவிக்கிறார்.

வரலாற்றாளர் டொனால்ட் ககன், எசுபார்த்தாவுடனான முப்பது ஆண்டுகால அமைதி ஒப்பந்தத்தை முறிக்காமல் மெகராவுடனான சிக்கலைத் தீர்க்க ஏதென்சு எடுத்த முயற்சியாக இந்த ஆணையை அவர் விளக்குகிறார்.[11] மெகாரா ஏதென்சை பதிலடி கொடுக்கும் வகையில் காயப்படுத்தியது. ஆனால் ஏதென்சானது எசுபார்த்தன் கூட்டாளியை வெளிப்படையாக தாக்குவது அமைதி ஒப்பந்தத்தை மீறும் செயல், எனவே ஏதென்சு இவ்வாறு தடை விதித்தது, இது எசுபார்த்ததாவின் கூட்டாளிகளுக்கு எசுபார்த்தாவின் இராணுவ பாதுகாப்பை தாண்டி தாக்காமல் அவற்றை வணிகரீதியாக தாக்கி தண்டிக்கும் வழியைக் காட்டுவதாகும். எனவே, எசுபார்த்தாவை நேரடியாகத் தூண்டிவிடுவதைத் தவிர்க்கும் முயற்சியாகவே இந்த ஆணையைப் பார்க்க முடியும்.[12]

Remove ads

மாற்று விளக்கங்கள்

வரலாற்று திருத்தல்வாதியான ஜிஇஎம் டி ஸ்டி என்பவர் குறிப்பிடுகையில், கிரேக்க நகரங்கள் அனைத்திலும் பெரும்பாலான வணிகம் மெட்டிக்குகள் (வெளிநாட்டினர் அல்லது வெளியாட்கள்) மூலம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மெகாரியன் குடிமக்களுக்கு மட்டுமே இந்த தடை ஆணை பொருந்தும் என்பதால், வணித் தடை மெகாராவை கணிசமாக பாதிக்காது என்று அவர் வாதிடுகிறார்.[13] ஏதென்சின் மீதான போர் மீதான எசுபார்த்தன் ஆர்வமே போருக்கான காரணம் என்று அறிஞர் கூறுகிறார். அரசியல் ரீதியாக அதற்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதன் பாரிய அளவிலான அடிமை மக்களால் ஏற்படும் ஆபத்து போன்ற பல காரணிகளால் உந்தப்பட்டதாக அவர் தெரிவிக்காறார்.[14]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads