மன்ஹாட்டன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்ஹாட்டன் (Manhattan) என்பது நியூயார்க்கு நகரத்தின் ஐந்து பெருநகரங்களில் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டதும், புவியியல் ரீதியாக மிகச் சிறிய பரப்பளவு கொண்டதும் ஆகும். நியூயார்க் மாவட்டத்துடன் இணையாக அமைந்துள்ள மன்ஹாட்டன், அமெரிக்க மாநிலமான நியூயார்க்கில் பரப்பளவில் மிகச்சிறிய மாவட்டமாகும். மாநிலத்தின் தெற்கு முனைக்கு அருகிலுள்ள மன்ஹாட்டன் தீவில் கிட்டத்தட்ட முழுமையாக அமைந்துள்ள மன்ஹாட்டன், வடகிழக்கு பெருநகரத்தின் மையமாகவும், நியூயார்க் பெருநகரப் பகுதியின் நகர்ப்புற மையமாகவும் உள்ளது. [6] மன்ஹாட்டன் நியூயார்க் நகரத்தின் பொருளாதார மற்றும் நிர்வாக மையமாக செயல்படுகிறது. மேலும் உலகின் பண்பாட்டு, நிதி, ஊடகம், பொழுதுபோக்கு ஆகியவற்றின் தலைநகராக விவரிக்கப்படுகிறது. [7] [8]
இன்றைய மன்ஹாட்டன் முதலில் லெனேப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. [9] 1624 ஆம் ஆண்டு டச்சு குடியேற்றவாசிகள் மன்ஹாட்டன் தீவில் ஒரு வர்த்தக குடியேற்றத்தை நிறுவியதன் மூலம் இல்கு ஐரோப்பிய குடியேற்றம் தொடங்கியது; இந்தக் குடியேற்றத்துக்கு 1626 ஆம் ஆண்டில் நியூ ஆம்ஸ்டர்டாம் என்று பெயரிடப்பட்டது. 1664 ஆம் ஆண்டில் இந்தப் பகுதி ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, மேலும் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் தனது சகோதரர் இரண்டாம் யேம்சுக்கு நிலங்களை வழங்கிய பிறகு நியூயார்க் என பெயர் மாற்றப்பட்டது. [10] இன்றைய லோயர் மன்ஹாட்டனை தளமாகக் கொண்ட நியூயார்க், 1785 முதல் 1790 வரை அமெரிக்காவின் தலைநகராக செயல்பட்டது. [11] நியூயார்க் துறைமுகத்தில் உள்ள சுதந்திர தேவி சிலை, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல இலட்சக் கணக்கான குடியேறிகளை வரவேற்றது, மேலும் இது அமெரிக்கா மற்றும் அதன் கொள்கைகளின் உலக அடையாளமாக உள்ளது. [12] 1898 ஆம் ஆண்டு நியூயார்க் நகரம் ஒருங்கிணைக்கப்பட்டபோது மன்ஹாட்டன் ஒரு பெருநகரமாக மாறியது, மேலும் நகர அரசாங்கத்தின் தலைமை இடமான நியூயார்க் நகர மண்டபத்தையும் கொண்டுள்ளது. 1920களில் அப்பர் மன்ஹாட்டனில் உள்ள ஹார்லெம், இப்போது கலாச்சார ஹார்லெம் மறுமலர்ச்சி என்று அழைக்கப்படும் இடத்தின் மையமாக மாறியது. ஸ்டோன்வால் தேசிய நினைவுச்சின்னத்தின் ஒரு பகுதியான கிரீன்விச் கிராமத்தில் உள்ள ஸ்டோன்வால் விடுதி, 1969 ஆம் ஆண்டு நவீன ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகள் இயக்கத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இது வானவில் நண்பர்களின் பண்பாட்டில் மன்ஹாட்டனின் மையப் பங்கை உறுதிப்படுத்துகிறது. [13] [14] மன்ஹாட்டன் தான் அசல் உலக வர்த்தக மையத்தின் தளமாகும். இது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களின் போது அழிக்கப்பட்டது .
உலகின் மிகப்பெரிய இயற்கை துறைமுகங்களில் ஒன்று அமைந்துள்ள இந்தப் பெருநகரமானது அட்சன் ஆறு, கிழக்கு ஆறு, ஹார்லெம் ஆறு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. மேலும் ரூஸ்வெல்ட், யூ தாண்ட், ராண்டால்ஸ் மற்றும் வார்ட்ஸ் தீவுகள் உள்ளிட்ட அருகிலுள்ள பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. மன்ஹாட்டன் தீவு லோயர் மன்ஹாட்டன், மிட் டவுன் அப்பர் மன்ஹாட்டன் என மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மன்ஹாட்டன் உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட இடங்களில் ஒன்றாகும், 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,694,250 மக்கள் 22.66 சதுர மைல்கள் (58.69 km2) , [15] பரப்பளவில் வாழ்கின்றனர். மேலும் இதன் குடியிருப்புகளின் விலை அமெரிக்காவில் பிற பகுதிகளைவிட ஒரு சதுர அடி அளவில் அதிக விலையைக் கொண்டுள்ளது. [16]
மன்ஹாட்டனில் வால் ஸ்ட்ரீட்டும், உலகின் இரண்டு பெரிய பங்குச் சந்தைகளான நியூயார்க் பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக்கும் அமைந்துள்ளன. கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம், ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம், நியூயார்க் நகர பல்கலைக்கழகம் போன்ற ஏராளமான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும், பல பன்னாட்டு ஊடக நிறுவனங்களும் மன்ஹாட்டனில் அமைந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் மன்ஹாட்டனின் மிட் டவுன் பகுதியில் உள்ள டர்டில் பே பகுதியில் அமைந்துள்ளது. உலகின் அதிகம் பேரால் பார்வையிடப்படும் 10 சுற்றுலா தலங்களில் மூன்று தலங்களான டைம்ஸ் சதுக்கம், மையப் பூங்கா, கிராண்ட் சென்ட்ரல் முனையம் ஆகியவை மன்ஹாட்டனில் உள்ளன. [17] நியூயார்க் பென் தொடருந்து நிலையம் மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து மையமாகும். மேற்கு அரைக்கோளத்தில் சீன மக்கள் அதிகம் வசிக்கும் சைனாடவுன் இங்குதான் உள்ளது. [18] உலகின் மிகவும் விலையுயர்ந்த வணிகத் தெருவாக ஐந்தாவது அவென்யூ தரவரிசைப்படுத்தப்பட்டது. அது 2024 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்குச் சென்றது. [19] இந்தப் பெருநகரப் பகுதியில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், கிரைஸ்லர் கட்டிடம், 1 உலக வர்த்தக மையம் உள்ளிட்ட பல வானளாவிய கட்டிடங்கள் முதன்மையான பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளன. [20] இது தேசிய கூடைப்பந்து சங்கத்தின் நியூயார்க் நிக்ஸ், தேசிய ஹாக்கி லீக்கின் நியூயார்க் ரேஞ்சர்ஸ் ஆகியவற்றின் அமைவிடமாக உள்ளது.
Remove ads
வரலாறு
லெனேப் குடியிருப்பு
வரலாற்று ரீதியாக மன்ஹாட்டன், முன்சி, லெனேப், [21] வாப்பிங்கர் ஆகியப் பழங்குடியினர் வசிக்கும் லெனேப்ஹோக்கிங் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சபோஹானிகன், நெக்டான்க், கோனாண்டே கோங் உள்ளிட்ட பல லெனேப் குடியிருப்புகள் இப்பகுதியில் இருந்தன. அவை தொடர்ச்சியான பாதைகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. தீவின் முதன்மைப் பாதை, பின்னர் பிராட்வேயாக மாறியது, இப்போது வடக்கில் இன்வுட் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து தெற்கில் உள்ள பேட்டரி பூங்கா வரை அது சென்றது. மன்ஹாட்டன் முழுவதும் லெனேப் மக்களின் மீன் பிடித்தல், நடவு செய்தல் ஆகியவற்றிற்கான பல்வேறு தளங்கள் நிறுவப்பட்டன. [9]
காலனித்துவ காலம்
1524 ஏப்ரலில், பிரான்சின் முதலாம் பிரான்சிசுக்காக பணி செய்யும் பொருட்டு பயணம் செய்த புளோரன்சு நில ஆய்வாளர் ஜியோவானி டா வெர்ராசானோ, தற்போது நியூயார்க் நகரமாக மாறுயுள்ளப் பகுதியைப் பார்வையிட்டு ஆவணப்படுத்திய முதல் ஐரோப்பியராவார். வெர்ராசானோ, தற்போது தி நாரோஸ் என்று அழைக்கப்படும் ஏற்ற இறக்கம் கொண்ட நீரிணையில் நுழைந்து, அப்பர் நியூயார்க் துறைமுகத்தைச் சுற்றியுள்ள நிலத்திற்கு, மன்னர் முதலாம் பிரான்சிஸின் குடும்பப் பெயரைக் குறிப்பிடும் வகையில், நியூ அங்கோலேம் என்று பெயரிட்டார்; அவர் துறைமுகத்திற்குள் போதுமான தொலைவு பயணித்து அட்சன் ஆற்றைக் கண்டார். மேலும் அவர் இப்போது அப்பர் நியூயார்க் விரிகுடா என்று அழைக்கப்படும் விரிகுடாவுக்கு - மன்னரின் அக்களான மார்குரைட் டி நவரேவின் நினைவாக சாண்டா மார்கரிட்டா விரிகுடா என்று பெயரிட்டார். [22]
மன்ஹாட்டனின் வரைபடமானது முதன்முதலில் 1609 ஆம் ஆண்டு என்றி அட்சனின் பயணத்தின் போது வரையப்பட்டது. [23] ஹட்சன் மன்ஹாட்டன் தீவையும் அங்கு வசிக்கும் பூர்வ குடிமக்களையும் கடந்து, பின்னர் அவரது பெயரால் தற்போது அழைக்கபடும் அட்சன் ஆற்றைக் கடந்து சென்றார். பயணத்தில் உடன் இருந்த ஒரு அதிகாரியான ராபர்ட் ஜூயட்டின் பயணக் குறிப்பேட்டில், மன்ஹாட்டன் முதன்முதலில் மன்னா-ஹட்டா என்று எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. [24]
1624 ஆம் ஆண்டு கவர்னர்ஸ் தீவில் இடச்சு உரோம வர்த்தகக் குடியேற்றம் நிறுவப்பட்டதன் மூலம், நியூ நெதர்லாந்தில் ஒரு நிரந்தர ஐரோப்பியர் இருப்பிடம் தொடங்கப்பட்டது. 1625 ஆம் ஆண்டில், மன்ஹாட்டன் தீவில் உள்ள ஃபோர்ட் ஆம்ஸ்டர்டாம் கோட்டையில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன, பின்னர் இது நியூ ஆம்ஸ்டர்டாம் ( நியூவ் ஆம்ஸ்டர்டாம் ) என்று அழைக்கப்பட்டது. இது தற்போதைய லோயர் மன்ஹாட்டன் பகுதியில் உள்ளது. [25] ஆம்ஸ்டர்டாம் கோட்டை கட்டப்பட்டது நியூயார்க் நகரத்தின் பிறப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [26] 1647 ஆம் ஆண்டில், பீட்டர் ஸ்டுய்வேசன்ட் காலனியின் டச்சு இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவரே அதன் கடைசி டச்சு இயக்குநராவார். நியூ ஆம்ஸ்டர்டாம் 2, பிப்ரவரி, 1653 அன்று முறையாக ஒரு நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. 1664 ஆம் ஆண்டில், ஆங்கிலப் படைகள் நியூ நெதர்லாந்தை கைப்பற்றி, வருங்கால மன்னர் இரண்டாம் ஜேம்ஸ், ஆங்கில யார்க் மற்றும் அல்பானி டியூக்கின் நினைவாக அதற்கு "நியூயார்க்" என்ற புதிய பெயரை இட்டனர். 1673 ஆகத்தில், டச்சுக்காரர்கள் காலனியை மீண்டும் கைப்பற்றி, அதற்கு "நியூ ஆரஞ்சு" என்று பெயர் மாற்றினர். ஆனால் மூன்றாம் ஆங்கிலோ-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெஸ்ட்மின்ஸ்டர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் அடுத்த ஆண்டு அதை நிரந்தரமாக இங்கிலாந்துக்குத் திருப்பிக் கொடுத்தனர். [27]
Remove ads
புவியியல்
ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் கூற்றின்படி, நியூயார்க் கவுண்டியின் (மாவட்டம்) மொத்த பரப்பளவு 33.6 சதுர மைல்கள் (87 km2) , இதில் 22.8 சதுர மைல்கள் (59 km2) நிலமாகவும், 10.8 சதுர மைல்கள் (28 km2) (32%) நீர் நிலையாகவும் உள்ளது. அப்பர் மன்ஹாட்டனின் வடக்குப் பகுதி ஒரு புவியியல் துருத்துநிலவடிவமாக உள்ளது. மன்ஹாட்டன் தீவு 22.7 சதுர மைல்கள் (59 km2) பரப்பளவில், 13.4 மைல்கள் (21.6 km) நீளமும் 2.3 மைல்கள் (3.7 km) அகலம் கொண்டுள்ளது.
இந்தப் பெருநகரப் பகுதி முதன்மையாக மன்ஹாட்டன் தீவு, மார்பிள் ஹில்லின் சுற்றுப்புறம் மற்றும் கிழக்கு ஆற்றில் உள்ள ரேண்டால்ஸ் தீவு மற்றும் வார்ட்ஸ் தீவு, ரூஸ்வெல்ட் தீவு உள்ளிட்ட பல சிறிய தீவுகள்; மற்றும் நியூயார்க் துறைமுகத்தில் தெற்கே உள்ள கவர்னர்ஸ் தீவு மற்றும் லிபர்ட்டி தீவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [28]
காலநிலை

கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் கீழ், நியூயார்க் நகரம் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை ( Cfa ) மற்றும் ஈரப்பதமான கண்ட காலநிலை ( Dfa ) இரண்டையும் கொண்டுள்ளது; [29] இது வட அமெரிக்க கண்டத்தின் வடக்கு திசையில் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையைக் கொண்ட முக்கிய நகரமாகும். இந்த நகரம் ஆண்டில் சராசரியாக 234 நாட்கள் ஆண்டுதோறும் ஓரளவு சூரிய ஒளியுடன் இருக்கும்.
இப்பகுதியின் குளிரான மாதமான சனவரி மாதத்தில் தினசரி சராசரி வெப்பநிலை 32.6 °F (0.3 °C) ஆகும். ; குளிர்காலத்தில் வெப்பநிலை பொதுவாக 10 °F (−12 °C) ஆகக் குறையும் , [30] மேலும் குளிர்கால மாநங்களில் பல நாட்கள் 60 °F (16 °C) வெப்பநிலை எட்டும். வசந்த காலமும் இலையுதிர் காலமும் கணிக்க முடியாதவை, குளிராகவோ அல்லது வெப்பமாகவோ இருக்கலாம், இருப்பினும் அவை பொதுவாக லேசான ஈரப்பதத்துடன் இருக்கும். கோடைக்காலம் பொதுவாக வெப்பமும், ஈரப்பதமும் நிறைந்ததாக இருக்கும், ஜூலை மாதத்தில் தினசரி சராசரி வெப்பநிலை 76.5 °F (24.7 °C) இருக்கும். கோடைக் கால இரவு நேர வெப்பநிலை பெரும்பாலும் நகர்ப்புற வெப்பத்தீவு நிகழ்வால் மோசமாக இருக்கும். பகலில் உறிஞ்சப்படும் வெப்பம் இரவில் மீண்டும் வெளியாவதால் இவ்வாறு நேர்கிறது. இதனால் காற்று அதிகமாக வீசாதபோது வெப்பநிலை 7 °F (4 °C) வரை அதிகரிக்கிறது. [31] ஒவ்வொரு கோடையிலும் சராசரியாக 17 நாட்களில் பகல்நேர வெப்பநிலை 90 °F (32 °C) ஐ விட அதிகமாக இருக்கும். சில ஆண்டுகளில் 100 °F (38 °C) விட அதிகமாகும். [32]
மன்ஹாட்டன் ஆண்டுதோறும் 49.9 அங்குலங்கள் (1,270 mm) மழைப்பொழிவைப் பெறுகிறது. 1981 முதல் 2010 வரையிலான குளிர்காலத்தில் சராசரி பனிப்பொழிவு 25.8 அங்குலங்கள் (66 cm) ; இருந்தது. இது ஆண்டுதோறும் கணிசமாக மாறுபடும்.
Remove ads
குறிப்புகள்
- Official weather observations for Central Park were conducted at the Arsenal at Fifth Avenue and 64th Street from 1869 to 1919, and at Belvedere Castle since 1919.[33]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads