யுன்னான்-குய்சோ உயர்நிலம்
சீன புவியியல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யுன்னான்-குய்சோ உயர்நிலம் அல்லது யுன்குய் உயர்நிலம் (Yunnan–Guizhou Plateau, எளிய சீனம்: 云贵高原; மரபுவழிச் சீனம்: 雲貴高原; பின்யின்: Yúnguì Gāoyuán) தென்மேற்குச் சீனாவிலுள்ள ஓர் உயர்நிலப் பகுதி. இந்தப் பகுதி சீன மாகாணங்களான யுன்னான் மற்றும் குய்சோவில் பரவியுள்ளது. யுன்குய்யின் தென்மேற்குப்பகுதி ஒப்பீட்டளவில் தட்டையான் மேட்டுப்பகுதிகளைக் கொண்ட ஒரு மெய்யான உயர்நிலம், அதன் வடகிழக்குப்பகுதி பொதுவாக, குன்றுகளையும், பள்ளத்தாக்குகளையும் சுண்ணாம்புக் கரடுகளையும் கொண்ட மலைப்பாங்கான பகுதி.

Remove ads
நிலவியல்
வரையறை
திட்டவட்டமான வரையறையின்படி யுன்குய் உயர்நிலம், தென்மேற்கில் யுன்னான் மாகாணத்திலுள்ள செவ்வாற்றுப் பிளவிலிருந்து வடகிழக்கில் ஹுனான் மாகாணத்திலுள்ள ஊலிங் மலைகள் வரை நீண்டுள்ளது.[1] இந்த உயர்நிலப்பகுதி கிழக்கு யுன்னானின் பெரும்பாலான பகுதியையும் குய்சோவின் பெரும்பாலான பகுதியையும் உள்ளடக்கியுள்ளது. பொதுவாக உயர்நிலத்துக்குரிய பண்புகள் இல்லாத போதிலும் யுன்னானின் பிற பகுதிகளும் சுற்றியுள்ள உயர்நிலங்களும் யுன்னான்-குய்சோ உயர்நிலத்தின் பகுதிகளாகவே குறிப்பிடப்படுகின்றன.[2]
பரவலாகப் பயன்படுத்தப்படும் வரையறையின்படி யுன்குய் உயர்நிலம், யுன்னான் மற்றும் குய்சோ மாகாணங்களை மட்டுமல்லாது சிச்சுவான் மாகாணத்தின் குலின் மாவட்டத்தையும் தென்கடைக்கோடிப் பகுதிகளையும், சோங்கிங்கின் கிழக்குப்பகுதியையும் ஹுபேய் மாகாணம்த்தின் தென்மேற்குப்பகுதியையும் ஹுனான் மாகாணம்த்தின் மேற்குப்பகுதியையும் குவாங்ஷி மாகாணத்தின் வடமேற்குப்பகுதியையும் உள்ளடக்கியதாக அறியப்படுகின்றது.[1]
மனிதப் புவியியல்
தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள யுன்குய் உயர்நிலம், தென் சீனாவை சிச்சுவான் வடிநிலத்திலிருந்து பிரிக்கின்றது. நெடுங்காலமாக இந்தப்பகுதி சீனாவின் காயலாகக் கருதப்பட்டுவருகின்றது.[3] வரலாற்று நோக்கில் இந்த உயர்நிலம், மலைப்பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பாரம்பரியமாக வேளாண் தொழில் செய்துவரும் பல சிறுபான்மையினரின் தாயகமாக விளங்கிவருகின்றது. இன்றைய காலத்தில் யுன்குய் பகுதி சீனாவின் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற பகுதியாக உள்ளது. மானிட வளர்ச்சிக் குறியீட்டுத் தரவரிசையில் குய்சோவும் யுன்னானும் சீனாவிலுள்ள மாகாணங்களில் கடைசி மூன்று இடத்தில் உள்ளன.[4] இந்த உயர்நிலத்தில் உள்ள மக்கள் பலர் பண்டைய பாரம்பரிய முறையில் கிராமங்களில் வாழ்ந்துவருகின்றனர்.
இந்த உயர்நிலத்திலுள்ள பெரிய நகரங்கள் குன்மிங், குய்யாங், மற்றும் ஸுன்யீ. இந்த உயர்நிலத்திலுள்ள கடுமையான நிலப்பரப்பைக் கடக்கும் நோக்கில், சீரிய பொறியியல் திறத்தை எடுத்துக்காட்டும் வகையில் தொடர்வண்டிப்பாதைகளும் உயர்வேகநெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. உலகின் மிக உயரமான பாலமான பெய்பங்சியாங் பாலம், யுன்னான் குய்சோ எல்லையில் யுன்குய் உயர்நிலத்தின் மையத்தில் கட்டப்பட்டுள்ளது.
இயல் புவியியல்
யுன்குய் உயர்நிலம் சுண்ணாம்புக் கரடுகளாலான செங்குத்தான முகடுகளையும் ஆழமான பள்ளத்தாக்குகளையும் உள்ளடக்கிய கடுமையான நிலப்பரப்பைக் கொண்ட மலைப்பகுதி.[5] இந்த உயர்நிலம் வடமேற்கே ஹெங்டுவான் மலைகளாலும் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கே தாழ்மையான நிலப்பரப்பாலும் தாங்கப்பட்டுள்ளது. பிற பெரிய மலைத்தொடர்கள் யுன்குய் உயர்நிலத்தின் ஊடாகவோ அதைச் சுற்றியவாறோ அமைந்துள்ளன. ஊமெங் மலைகளும் ஊலியன் பெங்கும் யாங்சி ஆற்றின் மேற்பகுதியிலுள்ள ஜின்ஷா ஆற்றிற்கு இணையாக யுன்குய்யின் வடக்கு-மையமாக ஒரு தடுப்பாக அமைந்துள்ளன. வடக்கே, தலூ மலைகள் சிச்சுவான் வடிநிலத்துடன் யுன்குய்யின் எல்லையில் அமைந்துள்ளன. வடகிழக்கிலிருக்கும் ஊலிங் மலைகள் உயர்நிலத்துக்கும் யாங்சீ வடிநிலத்துக்கும் நடுவே இடைநிலப்பரப்பாக அமைந்துள்ளது. தெற்கில் மியாவோ மலைத்தொடர் தென் சீனாவின் சுண்ணாம்புக் குன்றுகளாக உருமாற்றமடைகின்றது. தென்மேற்கே செவ்வாற்றின் குறுக்கேயுள்ள ஐலாவோ மலைகள் திட்டவட்டமான தடுப்பாக அமைந்துள்ளன.[1][6]
ஆசியாவிலுள்ள பெரிய ஆறுகளின் ஊற்றுக்கண்ணான கிழக்குத் திபெத்திலுள்ள உயர்ந்த மலைமுகடுகளில் தோன்றும் சில ஆறுகள் தென்திசையில் யுன்னான்-குய்சோ உயர்நிலத்தை நோக்கிப் பயணிக்கின்றன.[7] அந்த ஆறுகளில், சல்வீன் ஆறும் மேக்கொங் ஆறும் தென்திசையை நோக்கிப் பயணிக்குமாறும் யாங்சி ஆறு வடகிழக்கு திசையை நோக்கிப் பயணிக்குமாறும் உயர்நிலத்தைச் சுற்றிப் பிரிகின்றன. பெரும்பாலான யுன்குய் உயர்நிலத்தின் மேற்குப்பகுதி முத்து ஆற்றின் தலையோடைகளான நான்பான் மற்றும் பைபான் ஆறுகளாலும், கிழக்குப்பகுதி யாங்சி ஆற்றின் துணையாறான ஊ ஆற்றாலும் நீர்வடியப்படுகின்றது.
தியான் சீ மற்றும் பூசியான் ஏரிகளை உள்ளிட்ட பல பெரிய ஏரிகள் யுன்குய் உயர்நிலத்தின் யுன்னான் பகுதிகளில் அமைந்துள்ளன. உயர்நிலத்தின் மேற்கு எல்லையில ஹெங்டுவான் மலைகளின் தென்புற அடிவாரத்தில எர்ஹாய் ஏரி அமைந்துள்ளது.[1]
Remove ads
காலநிலை மற்றும் சூழலியல்
இந்த உயர்நிலத்தின் காலநிலை தென்மேற்கில் வறட்சியான நிலையிலிருந்து படிப்படியாக வடகிழக்கில் மழைமிகு நிலைக்கு மாற்றம் பெறுகின்றது. மையக்கிழக்கு யுன்னானில் யுன்குய்யின் சில பகுதிகள் குறுபாலைக் காலநிலையைக் கொண்டுள்ளன. பெரும்பாலான குய்சோ ஈரப்பதம்மிக்க துணை வெப்பமண்டலக் காலநிலையைக் கொண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. யுன்குய் உயர்நிலத்தின் யுன்னான் பகுதி பெரும்பாலும் துணை வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகளையும், குய்சோவின் பகுதி அகண்ட இலைகளைக் கொண்ட கலப்புக் காடுகளையும் கொண்டுள்ளன.[8][9]
யுன்குய் உயர்நிலம், வளமான நீர்நிலைகளைக் கொண்டபகுதி. பலவகையான கனிம வளங்களைக் கொண்ட இந்தப்பகுதியில் பணப்பயிர்களும் பல அரியவகை மூலிகைகளும் பயிரிடப்படுகின்றன.[10]
Remove ads
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads