லிஸ் டிரஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேரி எலிசபெத் டிரஸ் (Mary Elizabeth Truss, பிறப்பு: 26 சூலை 1975) ஒரு பிரித்தானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2022 செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 25 வரை ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பதவியில் இருந்தார். 2022 அக்டோபர் 20 அன்று, மொத்தம் 45 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்த நிலையில், நாட்டின் பொருளாதார, அரசியல் நெருக்கடி அதிகரித்திருந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.[1][2][3] 49 நாட்கள் மட்டும் பதவியில் இருந்த இவர், ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதம மந்திரி ஆவார்.[4] 2021 முதல் 2022 வரை வெளியுறவு செயலாளராக பணியாற்றினார். 2010 முதல் தென்மேற்கு நோர்ஃபோக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இவர் வெளியுறவு செயலாளராகவும், பெண்கள் மற்றும் சமத்துவ அமைச்சராகவும் பணியாற்றினார்.[5] கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினரான இவர், டேவிட் கேமரூன், தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகிய பிரதமர்களின் தலைமையில் பல்வேறு அமைச்சரவை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இவர் பொருளாதார ரீதியாக புதிய தாராளவாத மற்றும் சமூக ரீதியாக பழமைவாத கருத்துகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்.[6][7][8]
ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் இளங்கலை பயின்ற போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக லிபரல் டெமாக்ராட்ஸின் தலைவராக இருந்தார். 1996 இல் பட்டம் பெற்ற பிறகு கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்தார்.[9] இவர் ஷெல் மற்றும் கேபிள் & வயர்லெஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார், அதன்பிறகு ரிஃபார்ம் எனப்படும் திங்க் டேங்க்கில் துணை இயக்குநராக இருந்தார். 2010 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்று டிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரானார். ஒரு பின்வரிசை உறுப்பினராக இருந்த இவர் குழந்தை பராமரிப்பு, கணிதக் கல்வி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல கொள்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.[10] இவர் பிரீ எண்டர்பிரைஸ் குரூப் ஆஃப் கன்சர்வேடிவ் எம்.பி. என்ற அமைப்பை நிறுவினார். மேலும் ஆஃப்டர் தி கோலிஷன் (2011) மற்றும் பிரிட்டானியா அன்செயின்ட் (2012) உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை தானாகவும் இணை ஆசிரியராகவும் எழுதியுள்ளார்.
2012 முதல் 2014 வரை குழந்தைகள் மற்றும் கல்விக்கான நாடாளுமன்ற துணைச் செயலாளராக டிரஸ் பணியாற்றினார்.[11] 2014 அமைச்சரவை மாற்றத்தில் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளராக பிரதமர் டேவிட் கேமரூனால் நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிக்க வேண்டும் என்ற பிரிட்டன் ஸ்ட்ராங்கர் இன் யூரோப் பிரச்சாரத்தின் ஆதரவாளராக இருந்தபோதிலும், வாக்கெடுப்பின் முடிவு வெளிவந்த பிறகு பிரெக்ஸிட்டை ஆதரித்தார்.[12] ஜூலை 2016இல் கேமரூன் பதவி விலகிய பிறகு, இவர் நீதித்துறைக்கான அரசு செயலாளராகவும், உயராட்சித் தலைவராகவும் பிரதமர் தெரசா மேவால் நியமிக்கப்பட்டார்.[13][14][15] 2017 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, டிரஸ் கருவூலத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[16] 2019இல் மே பதவி விலகிய பிறகு, கன்சர்வேடிவ் தலைவராகப் போட்டியிட்ட போரிஸ் ஜான்சனை டிரஸ் ஆதரித்தார். போரிஸ் பிரதமரானதும், பன்னாட்டு வர்த்தகத்திற்கான செயலாளராகவும், வர்த்தக வாரியத்தின் தலைவராகவும் டிரஸ்ஸை நியமித்தார், பின்னர் 2021இல் டொமினிக் ராப்க்கு மாற்றாக வெளியுறவு செயலாளராக டிரஸ்ஸை நியமித்தார். 19 டிசம்பர் 2021 அன்று லார்ட் பிரோஸ்ட்க்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் EU-UK பார்ட்னர்ஷிப் கவுன்சிலின் UK தலைவருடன் அரசாங்கத்தின் தலைமை பேச்சுவார்த்தையாளராக டிரஸ் நியமிக்கப்பட்டார்.[17]
போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சிக்கான தலைமைப் பதவிக்குத் தான் போட்டியிடவிருப்பதாக 2022 சூலை 10 இல் டிரசு அறிவித்தார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் நாளிலேயே வரிகளைக் குறைப்பதாக உறுதியளித்தார், "தேர்தலில் கன்சர்வேடிவ்வாகப் போராடி கன்சர்வேடிவ் ஆக ஆட்சி செய்வேன்" என்று கூறினார், மேலும் "வாழ்க்கைச் செலவைக் கையாள்வதற்கு மக்களுக்கு உதவ உடனடி நடவடிக்கை எடுப்பேன்" என்றும் கூறினார்.[18][19] 2022 சூலை 20 அன்று, டிரசும் முன்னாள் கருவூலக் காப்பாளர் இரிசி சுனக்கும் கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இறுதித் தலைமை வாக்கெடுப்புக்கு வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் இறுதி வாக்கெடுப்பில் சுனக்கு 137 வாக்குகள் பெற்று முதலிடத்தையும், டிரசு 113 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திதையும் பிடித்தனர்.[20][21] பின்னர் கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, டிரசு 57.4% வாக்குகள் பெற்று கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[21]
டிரசு ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக மகாராணி இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எலிசபெத் மகாராணி முன்னிலையில் பதவியேற்றார். வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் எரிபொருள் விநியோக நெருக்கடிக்கு மத்தியில், டிரசின் அரசாங்கம், வீடுகள், வணிகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்தும் விலை உத்தரவாதத்தை அறிவித்தது. இது நாட்டில் நிதி உறுதியற்ற தன்மைக்கு வழிவகுத்து, அரசாங்கம் பரவலாக விமர்சிக்கப்பட்டதை அடுத்து, பெரும்பாலான சலூகைகள் மீளப்பெறப்பட்டன. 2022 அக்டோபர் 20 அன்று, நிதி மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், 45 நாட்கள் பதவியில் இருந்த பிறகு, பிரதம மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக டிரசு அறிவித்தார், இது ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதம மந்திரியாக இவர் வரலாற்றில் இடம்பெற்றார்.[22][23]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads