வால்மீகி (திரைப்படம்)
சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வால்மீகி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. எஸ். பாலையா, டி. ஆர். ராஜகுமாரி [2]மற்றும் பலரும் நடித்திருந்தனர். நாரதராக என். சி. வசந்தகோகிலம் நடித்திருந்தார்.[3][4]
Remove ads
திரைக்கதை
வால்மீகி முனிவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. வால்மீகி ஒரு கொள்ளைக்காரனாகத் தொடங்கி, இறுதியில் ஒரு மதவாதியாக ஆன்மீக மாற்றத்திற்கு உள்ளாகிறார்.[5]
ராஜகுமாரி சந்திரலேகா (யூ. ஆர். ஜீவரத்தினம்) காட்டில் கூடாரமடித்துத் தங்கியிருக்கும்போது ரட்சன் (ஹொன்னப்ப பாகவதர்) தன் கொள்ளைக் கூட்டத்துடன் வந்து அவளை வளைத்துக் கொள்ளுகிறான். ராஜகுமாரியின் ஆபரணங்களுடன் அவள் காதலையும் கொள்ளை கொண்டு தப்பிச் செல்ல முயலும் சமயம் காவலர்களால் கைது செய்யப்பட்டு அரசன் முன் கொண்டு செல்லப்படுகிறான். அரசனால் மரணதண்டனை விதிக்கப்பட்டுக் கொலையாளிகள் கையிலிருந்து தப்பிச் செல்லும் போது, காயமடைந்து ஆற்றில் விழுகிறான். அச்சமயம் ஆற்றில் படகோட்டி விளையாடிக் கொண்டிருந்த இன்னொரு கொள்ளைக்கூட்டத் தலைவனின் (டி. பாலசுப்பிரமணியம்) மகள் ரத்தினமாலா (டி. ஆர். ராஜகுமாரி) இரட்சனைக் காப்பாற்றுகிறாள். அவளது அன்புப் பணியில் குணமடைந்த ரட்சனும் மாலாவும் காதலிக்கின்றனர். அந்தக் கூட்டத்திலிருக்கும் வீரசிம்மனுக்கு (டி. எஸ். பாலையா) மாலாவைத் தானே மணந்து கூட்டத்தினருக்குத் தலைவனாகலாமென்ற நம்பிக்கை.
சந்திரலேகா தன் தோழியைத் துணை கொண்டு இரட்சனைத் தேடிப் பிடிக்கிறாள். ஆனால் இரட்சன் அவளை ஏற்கத் தயாராக இல்லை. தன் மேல் கொண்ட காதலை மறந்து விடும்படி இரட்சன் ராஜகுமாரியுடன் வாதாடுகிறான். அது பலிக்காமல் போகவே மாலாவுடன் சூழ்ச்சி செய்து, ராஜகுமாரியின் கையால் மாலாவைக் கொன்றதாக ஒரு நாடகம் நடிக்கிறான். ராஜகுமாரி நிஜமாகவே கொலை செய்து விட்டதாக நம்பி சுய நினைவை இழந்து அரண்மனைக்குத் திரும்புகிறாள். சந்திரலேகா காதல் ஏக்கமும் கொலைப் பிரமையுமாக கடும் வியாதிக்குள்ளாகிறாள்.
கொள்ளைக் கூட்டத் தலைவன் மாலாவை இரட்சனுக்கு மணமுடித்து அவனையே கூட்டத் தலைவனாக்க முடிவு செய்கிறான். மணத்தினன்று அரசரே அங்கு வந்து ராஜகுமாரியைக் காப்பாற்றும்படி இரட்சனை வேண்டுகிறார். இரட்சன் சந்திரலேகாவைக் காப்பாற்றி விட்டு வந்து மாலாவை மண முடிப்பதாக உறுதி கூறிப் போகிறான்.
வீரசிம்மன் மாலாவைத் தூக்கிச் சென்று மணந்து கொள்ள ஏற்பாடு செய்கிறான். ஆனால் இரட்சன் சமயத்தில் திரும்பி வந்து வீரசிம்மனைப் போரில் கொன்று மாலாவை மணக்கிறான். மாலா இறக்கவில்லையென்பதை நேரில் கண்ட ராஜகுமாரி சந்திரலேகா கோபமடைந்து "நீ என்னைக் கை விட்டது போல் நீ விரும்பியடைந்த மனைவியும் உன்னைச் சமயத்தில் கை விடுவாள் என்று இரட்சனைச் சபித்து விட்டுப் போகிறாள்.
ஒருநாள் மாலா விண்ணில் ஒளி வீசி மின்னும் விண்மீனைப் போன்ற மணிமாலை ஒன்று வேண்டுமென்று கேட்கிறாள். அதைத் தேடிக் கொண்டு வரப் புறப்படுகிறான் இரட்சன். ஊர் ஊராகக் கொள்ளையடித்துத் தேடுகிறான். காட்டிலுள்ள நாகங்களைப் பிடித்து அவற்றைக் கொன்று நாகரத்தினத்தைத் தேடுகிறான். வைகுந்தத்தில், ஆதிசேஷன் மகாவிட்டுணுவிடம் "இரட்சனால் நாககுலமே அழிகிறது." என்று முறையிடுகிறான். விட்டுணு, "அவன் வருண தேவனின் புதல்வன். சனகாதி முனிவர் சாபத்தால் இப்படி வெறியாக அலைகிறான். அவனால் உலகத்திற்கே நன்மை வரப்போகிறது" என்று சமாதானம் செய்கிறார். அதை மறைந்திருந்து கேட்ட நாரதர் (என். சி. வசந்தகோகிலம்) ஒரு அபூர்வமான நாகரத்தின் மாலையுடன் இரட்சனிருக்கும் காட்டிற்கு வருகிறார். அவன் அவரைப் பிடித்துக்கொண்டு கொள்ளையடிக்க முயலும்போது "இந்த மாலையை எடுத்துக் கொள். நீ அடிக்கும் கொள்ளையின் பலனைப் பெறும் உன் மனைவி மக்கள் நீ செய்யும் பாவங்களிலும் பங்கு பெறுவார்களா? என்று கேட்டுப்பார்" என்கிறார்.
இரட்சன் தன் மனைவி மக்களிடம் வந்து நாரதர் சொன்னபடி. கேட்கிறான். எல்லோரும், “உன் பாவம் உன்னோடு, எங்களுக்கு அதில் சம்பந்தமில்லை" என்கிறார்கள். இரட்சனின் ஞானக் கண்கள் திறக்கின்றன. நாரதரிடம் திரும்பி வந்து காப்பாற்ற வேண்டுமென்று கை கூப்புகிறான். அவர் உபதேசித்த நாராயண மந்திரத்தை சபித்துக் கொண்டு ஒரு மரத்தடியில் தவத்தில் அமருகிறான்.
இரட்சன் போன பிறகு மாலாவுக்கும் அறிவு பிறக்கிறது. ராஜகுமாரியின் சாபத்தாலேயே தன் கணவனைச் சமயத்தில் கை விட்டதாக உணர்ந்து அவனிடம் வருகிறாள். அவன் எதிலும் மாறாத மனஉறுதியுடன் தவத்திலமர்ந்து விட்டதைக் கண்டு தானும் அவனருகிலேயே இருந்து நாராயண மந்திரத்தை சபித்து மோட்சமடைகிறாள்.
வைகுந்தத்தில் பகவான் தான் பூவுலகில் ராமனாகப் பிறக்கப் போகும் இரகசியத்தை இலட்சுமிக்குச் (ஆர். மாலதி) சொல்லிக்கொண்டிந்ததை, மறைந்திருந்து கேட்ட நாரதர் அந்த இரகசியத்தை உலகத்திற்கு வெளியிடப் புறப்படுகிறார். ஆனால் மகாவிட்டுணுவின் சாபத்தால் அதைச் சொல்ல யாருமகப்படாமல் இரட்சனை மூடியிருந்த புற்றிடம் வந்து அதைச் சொல்லுகிறார். அதைக் கேட்ட இரட்சன் நாராயண மந்திரத்திற்குப் பதிலாக நாரதர் சொன்ன ம.ரா என்ற நாமத்தை சபிக்கத் தொடங்குகிறான். அதுவே அவதாரத் திருப்பெயரான ராம ராம என்று மாறுகிறது. இரட்சனின் சபத்தைக் கேட்டு தேவர்களெல்லாம் புற்றருகில் வந்து அதைக் கலைக்கிறார்கள். உள்ளே தன்னை மறந்திருந்த இரட்சனை பிரும்ம தேவர் வால்மீகி (புற்றினால் மூடப்பட்டவனே) என்று அழைக்க அதுவே இரட்சனின் பெயராகிறது.
வால்மீகி ராம நாமத்தை சபித்துக் கொண்டு திரியும்போது, மகாவிட்டுணு ஒரு வேடனாக வந்து சோடியாக விருந்த கிரௌஞ்சப் பறவைகளில் ஒன்றை அம்பாலடிக்கிறார். அந்தக் கொடுமையைக் காணச் சகிக்காத வால்மீகி கோபத்தினால் வேடனைக் கடிந்து ஒரு செய்யுள் இயற்றுகிறார். மகாவிட்டுணு சுய வடிவில் தோன்றி இந்தச் செய்யுளையே முதல் பாட்டாகக் கொண்டு நமது ராமாவதாரக் கதையைக் காவியமாகப்பாடு" என்று அருள் புரிகிறார். வால்மீகி சரசுவதி தேவியின் அருள் பெற்று இராமாயணக் காவியம் இயற்றுகிறார். அதன் சுவையில் மகிழ்ந்த மகாவிட்டுணு வால்மீகி இயற்றிய கதைப்படியே ராமாவதாரத்தில் செய்து முடிப்பதாக வரமளிக்கிறார்.
Remove ads
நடித்தவர்கள்
இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் பற்றிய தகவல்கள் வால்மீகி பாட்டுப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது:[5]
நடிகர்கள்
இவர்களுடன் எம். எம். ஏ. சின்னப்பா தேவர், எஸ். ஆர். கிருஷ்ணய்யங்கார், சங்கரமூர்த்தி, எம். சுவாமிநாதன், இன்னும் பலரும் நடித்திருந்தனர்.[5]
நடிகைகள்
Remove ads
தயாரிப்புக் குழு
- இயக்கம்: சுந்தர்ராவ் நட்கர்ணி
- கதை: இளங்கோவன், சுந்தர்ராவ் நட்கர்ணி
- வசனம்: ஏ. எஸ். ஏ. சாமி
- பாடல்கள்: பாபநாசம் சிவன்
- இசை: எஸ். வி. வெங்கிடராமன்
- நடனம்: கே. ஆர். குமார், ஹீராலால்
- இசைக்குழு: சென்ட்ரல் ஸ்டூடியோ
- ஒளிப்பதிவு: பி. ராமசாமி, டி. முத்துசுவாமி
- ஒலிப்பதிவு: ஏ. கோவிந்தசுவாமி
- ஓவியம்: எச். சாந்தாராம்
- ஒப்பனை: சங்கர்ராவ்
பாடல்கள்
பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களுக்கு எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார்.[3] கீழேயுள்ள பட்டியலில் உள்ள பாடல்கள் வால்மீகி பாட்டுப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads