உயிர்ச்சத்து

விட்டமின்ஸ் From Wikipedia, the free encyclopedia

உயிர்ச்சத்து
Remove ads

உயிர்ச்சத்து (vitamin) என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும், ஆனால் மிக இன்றியமையாத கரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை, உண்ணும் உணவுமூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை[1][2].

Thumb
பழங்கள், காய்கறிகளில் பெருமளவு உயிர்ச்சத்துகள் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; எடுத்துக்காட்டாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் தேவையான அளவும் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை.

சில உயிர்ச்சத்துகளைச் சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும்: உயிர்ச்சத்து ஏ (A)-யை பீட்டா கரோட்டினில் இருந்தும், நியாசினை இரிப்டோஃபான் என்னும் அமினோக் காடியில் இருந்தும், உயிர்ச்சத்து டி யை (D-யை) தோல் மீது விழும் புற ஊதா ஒளிக்கதிர் மூலமும் உருவாக்கிக் கொள்ள இயலும்; இருப்பினும், உடலுக்குத் தேவையான அளவு இவற்றைப் பெற நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் கட்டாயம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவிய நோக்கில் அறியப்பட்டுள்ளது.

விட்டமின் (Vitamin) என்னும் ஆங்கிலச்சொல்லானது இலத்தீன் சொல்லான vita (உயிர்) + amine (அமைன்) போன்றவற்றின் சேர்க்கையால் உருவானது. நைதரசன் கொண்ட மூலக்கூறுகளே அமைன் என அழைக்கப்படுகிறது. அமைன் எனப்படும் பதம் பின்பு தவறானது எனத் தெரியவந்ததால் ஆங்கில “vitamine” என்னும் சொல் பின்னர் “vitamin” எனக் குறுக்கப்பட்டது.

Remove ads

உயிர்ச்சத்துச் சமகூறு

உயிர்ச்சத்துக்கள் அவற்றின் உயிர்வேதியல் செயற்பாடுகளுக்கமையவே பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன, அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து அல்ல. ஒவ்வொரு உயிர்ச்சத்தும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிர்ச்சத்துச் சமகூறுக்களைக் (vitamers) கொண்டிருக்கும். இவற்றின் தொழில், குறிப்பிட்ட ஒரு உயிர்ச்சத்துக்குரியதாக இருந்தாலும் அவற்றின் கட்டமைப்பு வேறுபடுகிறது. உயிர்ச்சத்து “B12” யினை (பி-12 இனை) எடுத்துக்கொண்டால் அதற்குச் சையனோகோபாலமின் , ஐதரொக்சோகோபாலமின், மெத்தைல்கோபாலமின், அடினோசையில்கோபாலமின் என நான்கு உயிர்ச்சத்துச் சமகூறுகள் உள்ளது, இவை அனைத்துமே உயிர்ச்சத்து “B12” உடைய தொழிலைப் புரியும்.

உயிர்ச்சத்துக்கள் உயிரினங்களில் நடக்கும் பல்வேறு வேதிய வினைத்தாக்கங்களுக்கு ஊக்கிகளாகவும், துணை நொதிகளாகவும், இயக்குநீராகவும் தொழிற்படுகிறது.

Remove ads

வரலாறு

முதன்மைக் கட்டுரை: உயிர்ச்சத்துக்களின் வரலாறு

உடல்நலத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டிருந்தது. பழங்கால எகிப்தியர், மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன்று உயிர்ச்சத்து ஏ (உயிர்ச்சத்து A) குறைபாடாக அறியப்பட்டுள்ளது.[3] ஊட்டச்சத்துபற்றிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக 1747 ஆம் ஆண்டு அமைகிறது, அன்று சித்திரசு (Citrus) குடும்ப பழவகைகளில் காணப்படும் ஏதோ ஒரு ஊட்டச்சத்து இசுகேவி (scurvy) என்னும் நோய் உருவாகுவதைத் தடுக்கிறது என்று இசுக்காட்லாந்து நாட்டு அறுவை மருத்துவர் ஜேம்சு லிண்ட் கண்டறிந்தார். 1753 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இசுகேவி பற்றிய ஆய்வு (Treatise on the Scurvy)” எனப்படும் கட்டுரையில் இசுகேவியைத் தடுப்பதற்கு எலுமிச்சம்பழம் அல்லது தேசிக்காய் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.[4] 1929இல் கோப்கின்சுக்கும் இக்மானிற்கும் பலவகை உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தமைக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[5] 1912இல் போலந்து நாட்டைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் கசிமிர்சு ஃபங்க் அதே பதார்த்தத்தைப் பிரித்தெடுத்து “வைட்டமைன்(Vitamine)” என்று பெயரிட முன்மொழிந்தார்.[6] 1920இல் “vitamine” என்னும் சொல்லில் இருந்து “e”யை அகற்றி “vitamin” வைட்டமின் என்று அழைக்க சாக் செசில் துருமொண்ட் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது.[7]

Remove ads

மனிதர்களில் உயிர்ச்சத்து

மனிதர்களுக்கு அடித்தேவையான 13 உயிர்ச்சத்துக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன, இவற்றுள் நான்கு கொழுப்பில் கரைபவை (ஏ, டி, ஈ, கே); ஒன்பது நீரில் கரைபவை (எட்டு வகை ‘பி’ உயிர்ச்சத்துகளும் உயிர்ச்சத்து ‘சி’யும் ). நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பெரும்பாலானவை உடலில் சேமிக்கப்படுவதில்லை; அளவுக்கு அதிகமானவை உடலிலிருந்து சிறுநீர் மூலம் அகற்றப்படுகின்றன, எனவே இவற்றின் தேவை மாந்த உடலிற்கு நாளாந்தமாகிறது. கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் குடலிலிருந்து கொழுப்புகளின் உதவியுடன் அகத்துறிஞ்சப்படுகிறது, அவை உடலில் சேமிக்கப்படுவதால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு உண்டாக்கும், இந்த நிலைமை மிகையுயிர்ச்சத்து நோய் (hypervitaminosis, ஐப்பர்விட்டமனோசிசு) என அழைக்கப்படுகிறது.

உயிர்ச்சத்து அட்டவணை [2][8]

மேலதிகத் தகவல்கள் உயிர்ச்சத்தின் பெயர், உயிர்ச்சத்தின் வேதியியற்பெயர் (உயிர்ச்சத்து சமகூறுக்கள்) ...

உயிர்ச்சத்துக்களின் முக்கியத்துவம்

ஒரு பலகல உயிரினத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உயிர்ச்சத்து விளங்குகின்றது. உயிரினத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் இருந்து இறுதிக்காலம் வரை தேவையானதாக விளங்கும் உயிர்ச்சத்து, முதன் முதலில் கருவாக இருக்கையில் தாயிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது, இந்த நிகழ்வில் மாற்றம் ஏற்படும் போது, அதாவது போதிய அளவு உயிர்ச்சத்துகளோ அல்லது கனிமங்களோ கிடைக்காதநிலையில் பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன் உலகில் தோன்றுகிறது. பெரும்பங்கு உயிர்ச்சத்துக்கள் உணவின் மூலம் பெறப்பட்டாலும், மனித குடலில் வசிக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் உயிர்ச்சத்து ‘கே’ மற்றும் பையோட்டின் போன்றவற்றை வழங்குவதன் மூலம் உதவி புரிகின்றன, இதே வேளையில் உயிர்ச்சத்து ‘டி’யானது சூரியனின் புற ஊதாக்கதிர்கள் மூலமாக மனித தோலில் தொகுக்கப்படுகிறது. மனித உயிரினம் சில உயிர்ச்சத்துக்களை அதன் மூலத்திலிருந்து தொகுக்கக்கூடியவாறு உள்ளது, உதாரணமாக, உயிர்ச்சத்து ‘ஏ’யானது பீட்டா கரோட்டினில் (மாம்பழம், பப்பாளி, காரட் போன்ற மஞ்சள் நிற உணவுவகைகள்) இருந்தும், நியாசின் இரிப்டோஃபானிலிருந்தும் (முட்டை வெள்ளைக்கரு, அவரை, வாழைப்பழம்) தொகுக்க முடியும்.

குறைபாட்டு நோய்கள்

ஒரு சிறிய அளவே (பொதுவாக நாள் ஒன்றுக்கு ஒரு மில்லி கிராமுக்கும் குறைவாக) தேவைப்படும் உயிர்ச்சத்தின் பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள் உயிரையே போக்கும் அளவுக்கு ஆபத்தானவை, எனவே மனிதருக்கு ஒழுங்கான உயிர்ச்சத்துப் பயன்பாடு தேவையாகிறது, கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் (ஏ, டி) உடலில் சேமிக்கப்பட்டாலும் நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பி12 உடலில் சேமிக்கப்படுகிறது.[9]

குறைபாட்டை உண்டாக்கும் பிற காரணிகள்

குடலில் அகத்துறிஞ்சாமை ஏற்படும் நிலையில் உயிர்ச்சத்துக்களும் உடலில் உள்ளெடுக்கப்படுவதில்லை. நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள் கூட உயிர்ச்சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது. இதனைவிட சில மருந்து வகைகளின் பயன்பாடு, புகைப்பிடித்தல், குடிவயமை அல்லது குடிவெறி போன்றனவும் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன.

அளவு மிகைப்பு விளைவும் பக்க விளைவும்

நாளாந்த உட்கொள்ளல் அளவினை விட அதிகமாகப் பயன்படுத்தும் போது உயிர்ச்சத்துக்கள் பக்கவிளைவுகளைத் தருகின்றன, எனினும் உண்ணும் உணவின் மூலம் ஏற்படும் உயிர்ச்சத்தின் பக்கவிளைவு இல்லையெனவே கூறலாம், மாறாக, செயற்கை உயிர்ச்சத்து மாற்றீடுகளான மாத்திரைகள் போன்றவை அதிகம் பயன்படுத்துதல் நச்சுத்தன்மை உருவாக்கலாம்.

'உயிர்ச்சத்து மாற்றீடுகள்'

சிறந்ததொரு உயிர்ச்சத்து மாற்றீடு உணவாகும். எனினும் உணவின் மூலம் பெற முடியாத சூழ்நிலை உள்ளபோது அல்லது வேறு சில நோய்களின் பாதிப்பால் உடல் நலத்தை ஈடுசெய்வதற்கு மருத்துவர்களால் உயிர்ச்சத்து மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படுகிறது.
Remove ads

உயிர்ச்சத்துப் பெயரிடல் முறை மாற்றங்கள்

உயிர்ச்சத்துக்கள், இலத்தீன் அகர எழுத்துக்களைக் கொண்டு A, B, C, D, E, K எனப் பெயரிடப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக உள்ள அகர எழுத்துக்கள், பின்னர் விடுபட்டு E இலிருந்து K இற்கு தாவி நிற்பதனை இங்கு அவதானிக்கலாம், காரணம் என்னவென்றால், இவற்றுள் F இலிருந்து J வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள் தற்பொழுது உயிர்ச்சத்துக்கள் இல்லையென்பதாலும் உயிர்ச்சத்து Bயின் உபபிரிவுகளிலும் அடங்குகின்றமையாலும் ஆகும்.

செருமானிய அறிவியலர்களால் உயிர்ச்சத்து 'கே'யானது பிரித்தெடுக்கப்பட்டு விபரிக்கப்பட்டபோது உயிர்ச்சத்து 'கே'யின் இரத்தவுறைதல் இயல்பு காரணமாக 'Koagulation' என்னும் சொல்லிலிருந்து எழுத்து 'கே'யானது எடுக்கப்பட்டு உயிர்ச்சத்து 'கே' (உயிர்ச்சத்து K) என அழைக்கப்பட்டது, இதே வேளையில் ஏற்கனவே உயிர்ச்சத்துக்கள் 'J' வரையில் பெயரிடப்பட்டதால், இச்சம்பவம் தொடர்ச்சியான பெயரீட்டு முறைக்கு வாய்ப்பாக அமைந்தது.[10][11]

மேலதிகத் தகவல்கள் முன்னைய பெயர், வேதியியற் பெயர் ...
Remove ads

உயிர்ச்சத்து எதிரிகள்

உயிர்ச்சத்து எதிரிகள் எனப்படும் வேதியற் கலவைகள் உயிர்ச்சத்துகளின் அகத்துறிஞ்சலை அல்லது தொழிற்பாட்டைத் தடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, முட்டையில் காணப்படும் அவிடின் எனும் புரதம் பையோட்டின் உயிர்ச்சத்தின் அகத்துறிஞ்சலைத் தடுக்கின்றது. [12] தயமினை (உயிர்ச்சத்து பி1) ஒத்த பைரிதயமின் எனும் வேதியற் பொருள் தயமினுக்குத் தேவையான நொதியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தயமினின் வளர்சிதை மாற்றத்தைத் தடை செய்கின்றது. .[13][14]

Remove ads

உசாத்துணைகள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads