வீ. ப. கா. சுந்தரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முனைவர் வீ. ப. கா. சுந்தரம் (செப்டம்பர் 5, 1915 – மார்ச் 9, 2003) மதுரையில் உள்ள பசுமலையில் வாழ்ந்தவர். மதுரையிலும், திருச்சிராப்பள்ளியிலும் தங்கி தமிழாய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவர் இயற்றிய தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்கு தொகுதிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.[1]
வாழ்க்கைக் குறிப்பு
சுந்தரம் மதுரை மாவட்டம் உத்தமபாளையத்துக்கு அருகே உள்ள கோம்பை என்னும் ஊரில் வீ. பரமசிவம்பிள்ளை, காமாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர். இளமையில் நாடகம் பார்ப்பதிலும், பாடல்கள் பாடுவதிலும் நாட்டம் கொண்டவர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வித்துவான், தமிழ் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பழந்தமிழ் இலக்கியத்தில் "இசையியல்" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பின் பின்னர் மதுரையில் பசுமலை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பதினேழு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின் மதுரையிலுள்ள அரசரடி இறையியல் கல்லூரியில் மேல்நாட்டு மாணவர்களுக்கு இசையும், கருவி இசையும் பயிற்றுவித்தார். மதுரை பசுமலையில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.[1]
மதுரைப் பசுமலையில் வாழ்ந்தபொழுது நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம் ஐந்தாண்டுகள் தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் கற்றார். மதுரையில் வாழ்ந்த சி. சங்கரசிவனார் என்னும் இசையறிஞரிடம் இசையியல், காலக்கணக்கியல், கஞ்சிரா முழக்கம் பற்றிப் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயின்றார்.[1]
Remove ads
எழுத்து
வீ.ப.கா.சுந்தரம் பல நிறுவனங்களில் பணிபுரிந்தார். பற்பல ஊர்களில் நடைபெறும் இசை ஆய்வரங்குகளில் உரையாற்றினார். ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் இசை ஆய்வு அறிஞராகப் பணியாற்றினார். தமிழிசைவளம் என்னும் இவரது கட்டுரைத் தொகுப்பு பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது.[1]
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, "தமிழிசைக் கலைக்களஞ்சியம்" என்னும் தொகுப்பு நூலை நான்கு பாகங்களாக வெளியிட்டார். இந்நூலை ஆக்குவதற்காக பன்னிரண்டு ஆண்டுகள் செலவழித்தார். மொத்தம் 2232 சொற்களும், பல ஆயிரம் கிளைச்சொற்களும் இநூலில் விளக்கப்பட்டுள்ளன.[1]
பாரதிதாசன் பல்கலைக்கழகப் பணி நிறைவடைந்ததும், மதுரையில் பசுமலையில் இசையாய்வுகள் நிகழ்த்திவந்தார்.
Remove ads
எழுதிய நூல்கள்
- தமிழிசைவளம் (1985) ம.கா.பல்கலைக்கழகம்
- பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்(1986) கழகம்
- மத்தளவியல்(Art Of drumming),(1988 ) ஆசியவியல் நிறுவனம்
- அருட்குறள்
- பைந்தமிழ்ப் பயிற்று முறை
- இன்றுள்ள இசைத்துறை வடசொற்களுக்குத் தமிழ்ச்சொல்
- சிறுவர் இன்பம்
- பஞ்சமரபு(1991) கழகம்
- தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள்(1994) உ.த.நி
- பழந்தமிழ் இலக்கியத்தில் தாளமுழக்கியல்(1995), செல்வி பதிப்பகம்
- ஆளுடைய பிள்ளையாரும் அருணகிரியாரும்
- தமிழிசைக் கலைக்களஞ்சியம்:
- முதல்தொகுதி (1992)
- இரண்டாம் தொகுதி (1994)
- மூன்றாம் தொகுதி (1997)
- நான்காம் தொகுதி (2000) பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியீடு.
இசைத்துறைப் பங்களிப்பு
புல்லாங்குழல் இசைப்பதில் இவர் வல்லவர். புல்லாங்குழல் தமிழரின் முதல் இசைக்கருவி என்பதும் முல்லைப் பண்ணே முதல் பண் எனவும் நிறுவினார்.[1] தாளக் கருவிகளை முழக்குவதில் ஈடுபாடு கொண்டவர்.
சில இசையாய்வு முடிவுகள்
வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் இசையாய்வு குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். பல கட்டுரைகளை வரைந்துள்ளார். பல ஆய்வரங்குகளில் உரை நிகழ்த்தியுள்ளார்.
பெற்ற சிறப்புகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக விளங்கிய முத்தையா செட்டியாரின் பிறப்புமங்கல பரிசிலான ரூபா ஐம்பதாயிரம் இவருக்கு அளிக்கப்பட்டது. சென்னைப் பண்ணாய்வு மன்றக் கூட்டங்களில் ஏழு ஆண்டுகள் இவர் ஆற்றிய உரைப்பொழிவுகள் விழாமலரில் இடம்பெற்றுள்ளன.
மறைவு
முறம்பு என்னும் ஊரில் அமைந்திருந்த பாவாணர் கோட்டத்தில் உரை நிகழ்த்தி வந்த சில நாளில் 2003 மார்ச் 9 இல் இவர் காலமானார். அவரது உடல் பசுமலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads