1958 இலங்கை இனக்கலவரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கை இனக்கலவரம், 1958 (1958 riots in Ceylon) என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும். இவ்வன்முறைகள் 1958 மே 22 முதல் மே 27 வரை இடம்பெற்றன. ஆனாலும், 1958 சூன் 1 இல் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வு பொதுவாக இனக்கலவரம் என அழைக்கப்பட்டாலும், சில இடங்களில் இனவழிப்பாகவே நடத்தப்பட்டது.[2] இவ்வழிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை[3] கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு 70 முதல் 300 வரையென அறிவிக்கப்பட்டது.[1] இக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள் ஆயினும், தமிழர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்த காரணத்தினால் சில சிங்களவர்களின் உடமைகளும் சேதமாக்கப்பட்டன. அத்துடன், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் பகுதிகளில் சிங்களவர்கள் சிலர் தமிழர்களால் தாக்கப்பட்டனர்.[2]
Remove ads
பின்புலம்
1956 ஆம் ஆண்டில் சாலமன் பண்டாரநாயக்கா பெரும்பான்மை சிங்களமயமாக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றினார். புதிய அரசு சிங்கள மொழியை நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக அறிவித்து தனிச் சிங்களச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இலங்கையின் கால்வாசிக்கும் அதிகமானோர் தமிழ் பேசுபவர்களாக இருந்தனர். இச்சட்டம் தமிழர்களிடையே எதிர்ப்பைத் தூண்டி விட்டது. தமது, மொழி, கலாச்சாரம், பொருளாதார நிலை இதனால் பாதிக்கப்படும் என அவர்கள் அஞ்சினர்.[4]
தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் அறப்போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் இனங்களுக்கிடையே முறுகல் நிலை அதிகரித்தது. இலங்கையின் கிழக்கே கல்லோயா நகரில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[1] இதனை அடுத்து பிரதமர் பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், இதன் மூலம் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் 1957 ஆம் ஆண்டில் பிரதமருக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழும் நிருவாக மொழியாக இருக்க உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும், சிங்களத் தேசியவாதிகள், மற்றும் பௌத்த துறவிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயவர்தனா தலைமையில் கண்டிக்கு நடைப் பயணம் மேற்கொண்டனர்.[4][5][6] இவ்வெதிர்ப்பை அடுத்து, பண்டாரநாயக்கா அரசு பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தது.
இதற்கிடையில், பிரித்தானியக் அரச கடற்படையினர் தமது திருகோணமலைத் தளத்தை மூடியதை அடுத்து 400 தமிழ்த் தொழிலாளர்கள் பணியிழந்தார்கள். இவர்களை சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பொலன்னறுவை மாவட்டத்தில் குடியமர்த்த அரசு திட்டமிட்டது. இந்நடவடிக்கை அம்மாவட்டத்தில் உள்ள சிங்களவர் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியது. சிங்களக் கும்பலகள் அங்கு உருவாகி அங்கு குடியேற வந்த தமிழர்களைத் தாக்கத் தொடங்கியது.[7]
Remove ads
1958 கலவர நிகழ்வுகள்
- மே 22 – இனக்கலவரம் ஆரம்பமானது. அடுத்த சில நாட்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
- மே 23 – மட்டக்களப்பில் தொடருந்து ஒன்று தடம் புரண்டது.[8]
- மே 24 – இலங்கையில் பொலன்னறுவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது.[8]
- மே 25 – பொலன்னறுவைவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.[8]
- மே 27 – இலங்கை முழுவதற்கும் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டு, ஊடகத் தணிக்கை அமுல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.[8]
- மே 27 – இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் தடை செய்யப்பட்டன.[8]
- மே 27 – இலங்கையின் தெற்கே பாணந்துறையில் சிங்களக் காடையர்களால் இந்துக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டு, கோவில் பூசகர் சுந்தரராஜக் குருக்கள் சித்திரவதை செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.[8] இவரது 25 வயது இளம் மனைவியும் அவரது 4 வயதுக் குழந்தையும் பின்னர் அகதிகளாக யாழ்ப்பாணம் வந்தனர்.[9]
- மே 28 – கல்கிசையில் தமிழருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டனர்.[8]
- மே 28 – கல்கிசை, ஓட்டல் வீதியில் தமிழர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.[8]
- மே 29 – யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு சிங்களவரும் கொல்லப்படவில்லை என அங்கு பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் குணசேன டி சொய்சா பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவிற்கு அறிவித்தார். யாழ்ப்பாணம் நாக விகாரை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.[8]
- மே 30 – இலங்கையின் தெற்கே கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக கொழும்பு றோயல் கல்லூரி, புனித பீட்டர் கல்லூரி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.[8]
- சூன் 1 – கலவரங்களில் பாதிக்கப்பட்ட 4,397 தமிழ் அகதிகள் கப்பல் மூலம் காங்கேசன்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து 2,100 சிங்களவர்கள் கொழும்பு கொண்டு வரப்பட்டனர்.[8]
- சூன் 5 – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.[8]
- சூன் 6 – மேலும் 5,029 தமிழர் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.[8]
- சூன் 8 – ஜாதிக விமுக்தி பெரமுன கட்சித் தலைவர் கே. எம். பி. ராஜரத்தினா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[8]
Remove ads
நெருக்கடிநிலை 56 - நூல்
"Emergency '58 : the story of the Ceylon race riots" என்ற நூல் தார்சி வித்தாச்சி என்ற ஊடகவியலாளரால் இந்தக் கலவரங்கள் பற்றி எழுதப்பட்டது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads