2025 கரூர் கூட்ட நெரிசல் விபத்து

2025இல் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட விபத்து From Wikipedia, the free encyclopedia

Remove ads

2025 கரூர் கூட்ட நெரிசல் விபத்து (2025 Karur crowd crush) என்பது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூர் நகரத்தில் தமிழ்த் திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மேற்கொண்ட அரசியல் பரப்புரையின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தபட்சமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர், 100-க்கும் அதிகமானோர் காயமாகியுள்ளனர்.[5][6][7][8]

விரைவான உண்மைகள் நாள், நேரம் ...
Remove ads

பின்னணி

Thumb
விஜய், தலைவர், தமிழக வெற்றிக் கழகம்

2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றிக் கழக கட்சியைத் தொடங்கிய தமிழ் நடிகர் விஜய், 2025 செப்டம்பர் 27 அன்று கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் செய்துவந்தார்.[9] சுமார் 10,000 பேர் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நேரில் பார்த்தவர்கள் கூட்டத்தை அந்த எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததாக கூறுகின்றனர்.[10][11][12] ஆரம்பத்தில் சுமார் 30,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் எதிர்பார்த்ததாக பின்னர் வந்த தகவல்கள் சுட்டிக்காட்டின. ஆனால், உள்ளூர் தகவல்கள் பேரணியில் 60,000 பேர் வரை கலந்து கொண்டதாக தெரிவித்தன.[13][14]

மதியம் முதல் அந்த இடத்தில் விஜய் ஆதரவாளர்கள் கூடத் தொடங்கினர். விஜய்யின் வருகை குறித்த நேரத்தை விட ஆறு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானது, அந்த நேரத்தில் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத வெப்பமான சூழ்நிலைகளிலும் கூட்டம் அதிகரித்தது.[15] பேரணி தொடங்குவதற்கு முன்பு மயக்கம், நீரிழப்பு மற்றும் அமைதியின்மை நிலவியதாக சாட்சிகள் பின்னர் தெரிவித்தனர். விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு அருகே பலர் கூடிய நிலையில் அங்கு நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.[10][12][16]

Remove ads

நேர்வு

விஜய்யின் பரப்புரை வாகனம் சுமார் ஆறு மணி நேரம் தாமதமாக வந்ததால் கூட்டத்தின் பெரும் பிரிவினர் மேடைத் தடுப்புகளை நோக்கி முன்னேறியபோது இரவு 7:40 மணியளவில் நெரிசல் ஏற்பட்டது.[14][17] ஏற்கனவே கூடியிருந்த சுமார் 4,000 பங்கேற்பாளர்களின் ஆரம்ப கூட்டத்துடன், விஜய்யுடன் வந்த ஆதரவாளர்களின் கூட்டமும் இணைந்தபோது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. ஆதாரங்களின்படி, விஜய்யின் பேரணி அவர் பேசுவதற்கு முன்னதாக சுமார் 27,000 பேர் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.[14] பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர், வெயிலில் பல மணிநேரங்கள் காத்திருந்தனர். சிலர் தாங்கள் இருக்கும் நிலைகளைத் தக்கவைத்துக்கொள்ள உணவைத் தவிர்த்தனர்.[18][19]

தவெக கட்சி உறுப்பினர்களும் விஜய்யின் ரசிகர்களும் விஜய்யுடைய பிரச்சார வாகனத்திற்கு முன்னும் பின்னும் வாகனக் குழுக்களை அமைத்து சாலைகளைத் தடுத்தனர்.[20] விஜய்யின் பிரச்சார வாகனம் அந்த இடத்திற்கு வந்தபோது, அவரைக் காண்பதற்காக மக்கள் முன்னேறியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.[21]

ஓர் ஈன்பொறி, ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்புச் சிற்றூர்தி இருந்த ஒரு கொட்டகைக்கு அருகே நெரிசல் ஆரம்பமானது. அங்கு மக்கள் தள்ளப்பட்டு பின்னர் மிதிக்கப்பட்டனர். மேடையைச் சுற்றி தாங்கல் பரப்பு இல்லாததால் மக்கள் முண்டியடித்து வந்தபோது நெரிசல் ஏற்பட்டது.[17] காவல்துறையினராலும் தன்னார்வலர்களாலும் அந்தக் கூட்டத்தினைக் கட்டுப்படுத்த முடியவில்லை, மேலும் நோயாளர் ஊர்தி நெரிசலான பகுதியில் செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டன. காயமடைந்தவர்களுக்கு பாதைகளை உருவாக்க தன்னார்வலர்கள் இறுதியில் மனிதச் சங்கிலிகளை உருவாக்கினர். சில குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்தனர், வெப்ப சோர்வு மற்றும் கூட்டத்தின் நெரிசல் காரணமாக பலர் மயக்கமடைந்தனர்.[18][19]

குழப்பத்தின் போது, விஜய் தனது உரையை நிறுத்தி கூட்டத்தினரிடையே உரையாற்றினார், தண்ணீர் பாட்டில்களை விநியோகித்தார், காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்துத் தருமாறு கூறினார். மோசமான திட்டமிடல், போதிய பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாதது மற்றும் போதிய கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை இந்தக் கூட்ட நெரிசலுக்கான முக்கிய காரணிகளாக உயிர் பிழைத்தவர்களும் சாட்சிகளும் கூறினர்.[22]

ஆரம்ப அறிக்கைகள் 10 பேர் இறந்ததாகக் கூறியது, ஆனால் எண்ணிக்கை விரைவாக 41 [5] ஆக உயர்ந்தது. இதில் ஓர் இரண்டு வயது குழந்தை, குறைந்தது 9 குழந்தைகள், 18 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் அடங்குவர்.[6][23] அவர்களில் பலர் பெண்கள், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்டவர்களாவர்.[24] குறைந்தது 83 பேர் எலும்பு முறிவு முதல் மூச்சுத் திணறல் வரையில் பாதிக்கப்பட்டனர். பலர் கரூர், அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.[25][26][27]

Remove ads

அரசு நடவடிக்கைகள்

விபத்து தொடர்பாக தமிழக அரசின் உயர் அலுவலர்களுடன் ஆலோசித்த முதலமைச்சர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து சாலை வழியாக கரூர் மருத்துவமனையை அதிகாலை 3.30 மணியளவில் அடைந்தார். அங்கு இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.[28] உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் பத்து இலட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.[29] இந்நிகழ்வு குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[30] இணையத்தில் வதந்தி பரப்பியதாக ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார் மேலும் 25 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.[31] சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வட மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையைத் தொடங்கியது.[32]

இதர நடவடிக்கைகள்

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,[33] பிரதமர் நரேந்திர மோதி,[34] தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். இரவி,[35] முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டனர். தவெக சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.[36] உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தம் ரூ.1 கோடி நிவாரணமும், பாஜக கட்சி சார்பில் தலா ஒரு லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டன.[37] தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஹேம மாலினி தலைமையில் 8 நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.[38]

Remove ads

குற்றச்சாட்டுகள்

அரசுத் தரப்பின் முதல் தகவல் அறிக்கையின்படி தவெக தலைவர் விஜய் காலதாமதமாக வந்தது காரணமாகப் பதியப்பட்டுள்ளது.[39] செந்தில் பாலாஜியும் காவல்துறையும் தான் இந்த விபத்திற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டி தவெக நிர்வாகியொருவர் தற்கொலை செய்து கொண்டார்.[40] தவெகவினர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தி சிபிஐ விசாரணை கோரியுள்ளனர்.[41][42] விஜய் வெளியிட்டுள்ள காணொளியில் ஆளும் அரசைக் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.[43][44]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads