இலித்தியம் பெர்குளோரேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலித்தியம் பெர்குளோரேட்டு (Lithium perchlorate) என்பது LiClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மையாகவோ அல்லது நிறமற்றோ படிக உப்பாகக் காணப்படும் இச்சேர்மம் பல கரைப்பான்களில் கரையக்கூடிய தன்மையைப் பெற்றிருப்பதால் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. நீரிலியாகவும் முந்நீரேற்றாகவும் இது இயற்கையில் காணப்படுகிறது.
Remove ads
பயன்பாடுகள்
கனிம வேதியியல்
வேதி ஆக்சிசன் மின்னாக்கிகள் சிலவற்றில் ஆக்சிசன் மூலமாக இலித்தியம் பெர்குளோரேட்டு பயன்படுகிறது. இலித்தியம் பெர்குளோரேட்டு 400 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து இலித்தியம் குளோரைடையும் ஆக்சிசனையும் கொடுக்கிறது :[3]
- LiClO4 → LiCl + 2 O2.
இலித்தியம் பெர்குளோரேட்டின் நிறையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் ஆக்சிசனாக வெளியேற்றப்படுகிறது. நடைமுறையில் பயன்படும் எல்லா பெர்குளோரேட்டு உப்புகளைக் காட்டிலும் ஆக்சிசன், நிறை மற்றும் ஆக்சிசன், கன அளவு இரண்டிலும் இப்பெர்குளோரேட்டு மட்டுமே அதிக விகித மதிப்பைக் கொண்டுள்ளது.
கரிம வேதியியல்
டை எத்தில் ஈதர் உட்பட பெரும்பாலான கரிமக் கரைப்பான்களில் LiClO4 நன்றாகக் கரைகின்றது. இக்கரைசல்கள் டையீல்சு ஆல்டர் வினைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு இச்சேர்மம் டையீனோபில்களின் மீதுள்ள இலூயிசு கார தலங்களுடன் இலூயிசு அமில Li+ ஆகப் பிணைந்து வினையை முடுக்கிவிடுகிறது [4].
α,β-நிரைவுறா கார்பனைல்கள் ஆல்டிகைடுகளுடன் வினைபுரியும்போது ஓர் இணை வினையூக்கியாகவும் இலித்தியம் பெர்குளோரேட்டு பயன்படுகிறது. இவ்வினை பேலிசு-இல்மேன் வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது [5].
மின்கலங்களில்
இலித்தியம் பெர்குளோரேட்டு சேர்மம் இலித்தியம்-அயனி மின்கலன்களில் மின்பகுளியாகப் பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் எக்சாபுளோரோ பாசுபேட்டு அல்லது இலித்தியம் டெட்ராபுளோரோபோரேட்டு போன்ற மின்பகுளிகளுக்கு மாற்றாக இலித்தியம் பெர்குளோரேட்டு தெரிவு செய்யப்படுகிறது. ஏனென்றால் மேம்பட்ட மின் தடுப்பு, கடத்துதிறன், நீர்நாட்டப் பண்பு மற்றும் நேர்முனை நிலைப்புத்தன்மை போன்ற பண்புகள் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக சிறப்புத்தன்மையை கொண்டிருக்கிறது [6] இருப்பினும் இந்த நன்மைகள் யாவும் இம்மின்பகுளியின் வலுவான ஆக்சிசனேற்றும் பண்புகளால் திசைதிருப்பப்படுகின்றன, இதனால் அதிக வெப்பநிலை அல்லது உயர் மின்னோட்ட வலிமைகளில் அதன் கரைப்பானுடன் அதிஅக் வினை புரியும் தன்மையைப் பெறுகின்றன. இந்த ஆபத்துகளால் இம்மின்கலம் பொதுவாக தொழில்துறை பயன்பாடுகளுக்கு தகுதியற்றதாக கருதப்படுகிறது [6].
உயிர் வேதியியல்
இலித்தியம் பெர்குளோரேட்டு சேர்மத்தின் அடர்த்தியான கரைசல்கள் (4.5 மோல்/ லிட்டர்) புரதங்களின் இயல்பு திரிதலுக்கு உதவும் முகவராக பயனாகிறது.
Remove ads
உற்பத்தி
சோடியம் பெர்குளோரேட்டுடன் இலித்தியம் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து இலித்தியம் பெர்குளோரேட்டு பேரளவில் தயாரிக்கப்படுகிறது. இலித்தியம் குளோரேட்டை 20 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையில் மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தியும் தயாரிக்கிறார்கள்[7].
பாதுகாப்பு
பெர்குளோரேட்டுகள் பெரும்பாலும் கரிமச் சேர்மங்களுடன் சேர்க்கப்படும்போது வெடிக்கும் கலவைகளாக மாறுகின்றன[7].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
