கமுந்திங்

From Wikipedia, the free encyclopedia

கமுந்திங்map
Remove ads

கமுந்திங் (மலாய்: Kamunting, சீனம்: 甘文丁, மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். தைப்பிங் நகரத்தின் பெரும் துணைநகரமாகவும் விளங்குகிறது. ஈப்போ மாநகரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் வடக்கே உள்ளது. மிக அருகாமையில் இருப்பது தைப்பிங் பெருநகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் கமுந்திங்Kamunting பேராக், நாடு ...

இந்த நகரத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இருப்பதால், இதை ஒரு தொழிற்துறைப் பூங்கா என்று அழைப்பதும் உண்டு.[1] இங்குதான் கமுந்திங் தடுப்பு மையம் உள்ளது. கமுந்திங் எனும் பெயரைச் சொன்னால், பொதுவாக மலேசியர்களின் நினைவிற்கு வருவது அந்தத் தடுப்பு முகாம் ஆகும்.[2] மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலர் அந்தத் தடுப்பு மையத்தில், காலவரையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.[3]

கமுந்திங் தடுப்பு மையத்தை மலேசியாவின் குவாந்தானாமோ எனும் அடைமொழியுடன் அழைப்பதும் உண்டு. கியூபாவில், அமெரிக்கா வைத்திருக்கும் குவாந்தானாமோ சிறைச்சாலையை ஒப்பிட்டு, இந்த முகாமை அவ்வாறு அழைக்கின்றனர்.

Remove ads

வரலாறு

1890ஆம் ஆண்டுகளில் கமுந்திங் ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. தைப்பிங் நகரம் ஈய உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கிய காலத்தில், அப்பகுதி வாழ் மக்கள், ஈய மூட்டைகளைச் சுமந்து செல்ல யானைகளைப் பயன்படுத்தினர். அக்கட்டத்தில் லாருட் எனும் பெயர் கொண்ட ஒரு யானை அருகாமையில் இருந்த காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டது.[4]

மூன்று நாட்கள் கழித்து அந்த யானையைப் பிடித்து வந்தார்கள்.[5] அதன் கால்களில் ஈய மண் ஒட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் யானை பிடிபட்ட இடத்திற்கு பொதுமக்கள் பெரும் திரளாகப் படை எடுத்தனர். கட்டுப்பாடு இல்லாத ஈய வேட்டை தொடங்கியது. `கெலியான் பாரு` என அழைக்கப்பட்ட அந்தக் காட்டுப் பகுதிதான், இப்போதைய கமுந்திங் ஆகும்.

மலாயாவில் அவசரகாலம்

முதன்முதலில் அப்பகுதியின் ஈயச் சுரங்க வேலைகளுக்கு சீனாவில்இருந்து ஹாக்கா இனத்தைச் சேர்ந்த சீனர்கள் கொண்டு வரப்பட்டனர். 1850களில் அவர்களின் எண்ணிக்கை 2000ஆக இருந்தது. 40 நீண்ட வீடுகளில் குடி அமர்த்தப்பட்டனர். மேலும் 200 பேர் கமுந்திங் காய்கறித் தோட்டங்களிலும் வேலை செய்தனர்.[6]

1948லிருந்து 1960 வரையில் மலாயாவில் அவசரகாலம் அமல் படுத்தப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் கமுந்திங்கில் பிரித்தானிய பொதுநலவாய இராணுவ முகாம் நிறுவப்பட்டது. பிரித்தானிய இராணுவ மருத்துவமனையும் கட்டப்பட்டது.

மலாயா அவசரகாலத்தில் பல ஆயிரம் பிரித்தானியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிஜி நாட்டுப் போர்வீரர்களும், கூர்கா வீரர்களும் இறந்து போயினர்.[7] மலேசியாவின் மிகப் பெரிய இராணுவ இடுகாடுகளில் ஒன்று, கமுந்திங்கில் இப்போதும் இருக்கின்றது.[8]

பல்நாட்டுத் தொழிற்சாலைகள்

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு காட்டுப் பகுதியாக இருந்த கமுந்திங், இப்போது தொழில் வளர்ச்சி பெற்ற நகரமாக இயங்கி வருகிறது. இதை தைப்பிங் பெருநகரத்தின், துணைக்கோள் நகரம் அதாவது Satellite Town என்று அழைக்கிறார்கள். அண்மைய காலங்களில் தைப்பிங் நகரை மேம்படுத்துவதற்கு, இடப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது.

அதனால், புதிய மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும், கமுந்திங் நகருக்கு திசை திருப்பப்படுகின்றன. இங்குள்ள பல்நாட்டுத் தொழிற்சாலைகளில், வங்காளதேசம், வியட்நாம், மியன்மார், இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப் பட்டு வேலைகளில் அமர்த்தப் படுகின்றனர்.

சனிக்கிழமை இரவுச் சந்தை

சில ஆண்டுகளுக்கு முன்னால் தைப்பிங் பெருநகரின் தலையாய பேருந்து நிலையம், கமுந்திங் நகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவீன மயமான இரயில் நிலையமும் இங்குதான் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஈப்போ மாநகரத்தில் இருந்து பட்டர்வர்த் நகரத்திற்கு இருவழி மின்இரயில் சேவை தொடங்கப்படவிருப்பதால், புதிதாக அமைக்கப்படும் இரயில் நிலையங்கள் அனைத்தும் நவீன மயமாக அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் கமுந்திங் இரயில் நிலையமும் உலகத்தரம் வாய்ந்த நிலையமாகக் காட்சி அளிக்கின்றது.

கமுந்திங் பேருந்து நிலையத்திற்கு அருகில், ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவுச் சந்தை நடைபெறுகிறது. உள்ளூர்க் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் போன்றவை மலிவான விலையில் கிடைக்கின்றன. மலாய், சீன, இந்திய உணவு வகைகளும் உள்ளன. மலாய், சீன சமூகத்தவர் இந்திய உணவை விரும்புகின்றனர். அதைப் போல இந்தியர்கள் மற்ற சமூகத்தவரின் உணவைகளையும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். கமுந்திங் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியில் ஏராளமான முள்நாரி, மங்கூஸ்தீன் பழக் கடைகளும் உள்ளன.

கமுந்திங் தமிழர்கள்

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை இணைக்கும் மத்திய நகரமாக கமுந்திங் விளங்குகின்றது. அதனால், இந்த நகரில் எல்லா நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும். ஈப்போ மாநகரத்தைக் காட்டிலும் இங்கு உணவுப் பொருட்களின் விலை சற்று அதிகமாகவே இருக்கின்றது. கமுந்திங் நகரிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழர்களின் நடமாட்டத்தைக் கூடுதலாகக் காண முடியும்.

முன்பு ஈயச் சுரங்கங்களிலும் தோட்டப்புறங்களிலும் வேலை செய்த தமிழர்கள், இப்போது சிறு சிறு வியாபாரிகளாக மாறி சொந்தத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். மளிகைக்கடைகள், புத்தகக்கடைகள், உணவகங்கள் போன்றவற்றின் முதலாளிகளாகவும் உள்ளனர்.

இங்குள்ள தமிழர்கள் அனைவருமே தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள். ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த இவர்கள் தங்களின் பாரம்பரிய அடையாளங்களைத் தற்காத்துக் கொள்வதில் தீவிரமான முயற்சிகளை எடுத்துக் கொள்கின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads