தண்டியலங்காரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும்.[1]. இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இஃது உரைதருநூல்களில் ஒன்று. இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார். தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலமாகும் (946-1070)
அமைப்பு
தண்டி அலங்காரம்
- பொதுவியல் (25 நூற்பாக்கள்)
- பொருளணியியல்(64 நூற்பாக்கள்)
- சொல்லணியியல் (35 நூற்பாக்கள்)
என மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. ஆயினும் அவற்றுள் மொத்தம் 124 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அணி வகைகளுக்கான இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.
பொதுவியல்
பொதுவியல்,
- முத்தகச் செய்யுள்,
- குளகச் செய்யுள்,
- தொகைநிலைச் செய்யுள் (8 வகைப்படும்)
- தொடர்நிலைச் செய்யுள் (2 வகைப்படும்)* சொல் தொடர்நிலைச் செய்யுள் * பொருள் தொடர்நிலைச் செய்யுள்
எனும் நான்கு வகையான செய்யுள்கள் பற்றி விளக்குகிறது. தொடர்நிலைச் செய்யுள் வகை பற்றிக் கூறும்போது அதன் வகைகளான பெருங்காப்பியம், காப்பியம் என்பவற்றின் இலக்கணங்கள் பற்றி இந்நூல் விளக்குகின்றது.
பொருளணியியல்
பொருளணியியலில்,
- தன்மையணி
- உவமையணி
- உருவகவணி
- தீவக அணி
- பின்வருநிலையணி
- முன்னவிலக்கணி
- வேற்றுப்பொருள் வைப்பணி
- வேற்றுமையணி
- விபாவனை அணி
- ஒட்டணி
- அதிசய அணி
- தற்குறிப்பேற்ற அணி
- ஏதுவணி
- நுட்ப அணி
- இலேச அணி
- நிரல்நிறை அணி
- ஆர்வமொழியணி
- சுவையணி
- தன்மேம்பாட்டுரை அணி
- பரியாய அணி * புலவர்தான் கருதியதைக் கூறாது, அப்பொருள் தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது
- சமாகிதவணி * முன்பெடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பயனை அளிக்காவிடினும், எண்ணியது தானே நடைபெற்ற பாங்கினை உரைப்பது
- உதாத்தவணி * செல்வ மிகுதியையும் மேம்பட்ட உள்ளத்தின் மிகுதியையும் வியந்து கூறுவது
- அவநுதியணி * ஒரு பொருளின் இயற்கையான குணத்தினை மறைத்து பிரிதொன்றாக உரைத்தலாகும்
- மயக்க அணி * ஒரு பொருளினது அழகை மிகவும் அதிகப்படியான கற்பனைத்திறன் கலந்து, கேட்போர் வியக்கும்படி அழகாக வர்ணித்துக்குக் கூறுவது
- சிலேடையணி
- விசேட அணி
- ஒப்புமைக் கூட்டவணி
- ஒழித்துக்காட்டணி * ஒரு பொருளின் தன்மையினை உரைத்து அதுவல்ல என்று ஒழித்துக்காட்டும் அழகாகும்.
- விரோதவணி * ஒரே செய்யுளுக்குள் மாறுபட்ட சொற்களையோ, பொருளையோ கொண்டிருப்பது
- மாறுபடுபுகழ்நிலையணி * தான் கருதிய பொருளை மறைத்து, அதனைப் பழிப்பதன் பொருட்டு வேறொன்றைப் புகழ்வது
- புகழாப்புகழ்ச்சி அணி * ஒன்றைப் பழிப்பது போன்ற முறையில், அதன் மேன்மை தோன்றக் கூறுவது
- நிதரிசன அணி * இயற்கையாக நிகழும் நிகழ்ச்சிகளின் பயன், வேறு ஒரு பொருளுக்கு நன்மையோ, தீமையோ தோன்றுமாறு இருப்பதாகச் சொல்லுவது
- புணர்நிலையணி * வினையாலும், பண்பாலும் இரண்டு பொருளுக்கு ஒரு சொல்லே முடிக்கும் சொல்லாகப் பொருந்துமாறு சொல்லுவது
- பரிவருத்தனை அணி * ஒரு பொருளைக் கொடுத்து, வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக் கொள்ளும் செய்தியைச் சொல்லுவது
- வாழ்த்தணி * இன்ன தன்மையை உடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவிகள் தாம் கருதியதனை விதிப்பது , வாழ்த்துவது.
- சங்கீரணவணி * பல்வேறு அணிகளை ஒரு செய்யுளுக்குள்ளே வைத்துப்புனைவதாகும்
- பாவிக அணி * தொடர்நிலைச் செய்யுள் என்று கூறப்படும் ஒரு பெரிய காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்கும் கருத்தையோ, நீதியையோ பற்றிக் கூறுவது.
ஆகிய 37 அணிகளுக்கான இலக்கணம் கூறப்பட்டுளளது.
சொல்லணியியல்
சொல்லணியியல், மடக்கு, சித்திரக் கவி, வழுக்களின் வகைகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
Remove ads
தண்டியலங்காரத் தனிச்சிறப்புகள்
தண்டியாசிரியர், நூற்பாவும் செய்து, உரையும் உதாரணமும் எழுதினார்’ என்று கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிரயோகவிவேகம் என்னும் நூல் குறிப்பிடுகின்றது. தண்டியலங்கார உதாரணப் பாடல்கள் இலக்கணக் கருத்துக்குப் பொருத்தமானவை ; எளிமையானவை.
காப்பிய இலக்கணம் பற்றிப் பல அரிய செய்திகளை இது எடுத்துரைக்கின்றது.நூலில் காணப்படும் சோழன் பெயரில் அமைந்த எடுத்துக்காட்டு வெண்பாக்களான 45 பாடல்களில் அனபாயன் என்னும் பெயரைக் குறிப்பிடுபவை 6 பாடல்களாகும். அனபாயன் என்னும் பெயர், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரசுபுரிந்த இரண்டாம் குலோத்துங்க சோழனைக் குறிப்பதாகும். இந்நூல் அனபாயன் அவையில் அரங்கேற்றப் பட்டது எனவும் சிறப்புப்பாயிரம் குறிப்பிடுகின்றது
கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி.ஈ.சீனிவாச ராகவாச்சாரியார், தண்டியலங்காரக் கருத்துகளைத் தொகுத்து, ‘தண்டியலங்கார சாரம்’ என்னும் வசன உரைநடை நூலை எழுதியுள்ளார்.இவை இந்நூலின் தனிச்சிறப்புகளாகும்.
Remove ads
தண்டியலங்கார உரையும் பதிப்பும்
தண்டியலங்காரத்திற்குப் பழைய உரைஒன்று சுப்பிரமணிய தேசிகரால் இயற்றப்பட்டது. இதனை அடியொற்றியே பிற உரைகளும் பதிப்புகளும் தோன்றின.
சிறப்புப் பாயிரத்தில் ஆசிரியர் கூறும் செய்திகள்:
சிறப்புப் பொருந்திய வடதிசையாகிய இமயமலையில் வாழ்ந்தவர் அகத்தியர். அவர் அங்கிருந்து புறப்பட்டு நிலவு தவழ்கின்ற அளவிற்கு உயர்ந்து வளர்ந்த உச்சியை உடைய தென்மலையாகிய பொதிகை மலையில் வந்து தங்கினார். அவ்அகத்திய மாமுனிவரிடம் அரிய தமிழ்மொழியை உணர்ந்து கற்ற புலவர் பன்னிருவர், அவர்களுள் முதல் மாணவராகச் சிறந்து விளங்கியவர் தொல்காப்பியர். அவரால் இயற்றப்பட்டது தொல்காப்பியம். அத்தொல்காப்பியத்திலும் வேறுவகைப்பட்ட இலக்கியங்களிலும் அணி இலக்கணம் நுட்பமாக இடம்பெற்றிருந்தது. அதனை ஆராய்ந்து தேர்ந்ததோடு வடமொழியில் கூறப்பட்ட அணியிலக்கண மரபுகளையும் வழுவாமல் போற்றி இயற்றப்பட்டது தண்டியலங்காரம் என்னும் நூலாகும். இது வடக்கே வேங்கட மலை, தெற்கே குமரிக்கடல், கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகக் கொண்டு விளங்கும் தமிழ்மொழி வழங்கும் செந்தமிழ் நாட்டிற்குரிய அணியிலக்கணமாகும். இந்நூல் வடமொழி நூல்கள் கூறும் நாட்டியம், நிருத்தியம், நிருத்தம் என்னும் தழுவி நிற்கும் தன்மை கொண்டதாகும். மூன்று கூறுகளையும் தழுவி நிற்கும் தன்மை கொண்டதாகும்.
தமிழகத்தை ஆட்சி செய்த முடியுடை மூவேந்தர்களுள் மேம்பட்ட புகழை உடைய மணிமுடியைச் சூடியவன் சோழர். அவனுடைய அவைக்களத்தில் அரங்கேற்றப்பட்டது தண்டியலங்காரம் ஆகும். இது தொகை, விரி, தொகைவிரி என்னும் யாப்பால் அமைக்கப்பட்டது. பொன்னாலாகிய நாடக அரங்கத்தில் நடிக்கப்படும் கூத்தினைப் பயில்வதற்குரிய இலக்கணத்தைக் கூறுபவை வடமொழி நுல்களாகும். அவற்றைக் கற்று உணர்ந்ததோடு தமிழ் நூல்களிலும் ஆழங்கால் பட்ட புலமை பெற்றவன் அம்பிகாபதி, பூக்கள் மிகுந்த குளிர்ந்த சோலைகளை உடைய காவிரி நாடே அவனுக்குரிய நாடாகும். அவன் நறுமணம் வீசும் மலர்மாலையைச் சூடியவன். அவனுடைய சிறப்புப் பொருந்திய தவத்தால் மகனாகத் தோன்றியவரும் மேன்மேலும் புகழை உடையவருமாக விளங்கியவரே தண்டியலங்காரத்தை இயற்றிய தமிழ்த் தண்டியடிகள் ஆவார்.
இவற்றையும் பார்க்கவும்
- காவிய தர்சனம் (கவிதைக் கண்ணாடி)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads