காப்பியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர் [1] அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஓர் ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. நான்கு பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்.

தமிழின் பழைய இலக்கியங்கள் தனிப்பாடல் திரட்டுக்களாகவே உள்ளன. தமிழ் மொழியில் 3 அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள தனிப்பாட்டுகளே சங்க இலக்கியமாக உள்ளன. தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ் இலக்கியத்தின் தோற்றமாகும்.

சங்கப் பாடல்களில் நாட்டியக் கலையில் நன்கு தேர்ந்த விறலியர், கூத்தர், பொருநர் என்போர் பற்றிய குறிப்புகள் உள. ஆயினும் சங்க காலத்தில் கதை தழுவிய நாடகங்களும் கதைகளும் பல இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தக் கதைகள் திரண்டு வளர்ந்து காப்பியங்களாக உருவம் கொள்ளவில்லை. கற்றறிந்த புலவோர் அந்தக் கதைகளை எழுதிப் போற்ற மனம்கொள்ளாதது காரணமாக இருக்கலாம்.

Remove ads

காப்பியம், சொல்விளக்கம்

காப்பு + இயம் = காப்பியம் ஆகியது. பழமரபுகளைக் குறிப்பாக இலக்கண மரபுகளைக் காத்து நிற்பது காப்பியம் என்ற பொருளில் தமிழில் இச்சொல் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

'இயம்பு' என்பது 'சொல்' எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு.[2] பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் 'குறும்பல்லியத்தன்' எனப் போற்றப்படுகிறான்.[3] பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர்.[4] தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் 'காப்பியம்' என்னும் சொல் உள்ளது. தொல்+காப்பு+இயம் என்பது தொல்காப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் 'காப்பியம்' என்பது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.

Remove ads

பாகுபாடு

காப்பியத்தை ஐம்பெருங்காப்பியங்கள் என்றும் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்றும் பிற்காலத்தில் பாகுபாடு செய்துள்ளனர். இந்தப் பாகுபாடு தோன்றிய காலம் கருத்தில் கொள்ளத்தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். இவர் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே. தமிழில் தோன்றிய முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன.

'ஐம்பெருங்காப்பியம்' என்னும் தொடரை 14-ம் நூற்றாண்டு மயிலைநாதர் குறிப்பிடுகிறார். தணிகையுலா நூல் வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்தப் பாகுபாடு தோன்றியது.[5]

Remove ads

தமிழ் மரபு காப்பியங்கள்

காப்பியம் என்றாலே தமிழர்களுக்குச் சிலப்பதிகாரம், சிந்தாமணி முதலான ஐம்பெருங் காப்பியங்களும், சூளாமணி, நீலகேசி முதலான ஐஞ்சிறு காப்பியங்களுமே நினைவுக்கு வரும். தொடர்ந்து பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான பலவும் நம் நினைவுக்கு வருவதுண்டு. 20-ஆம் நூற்றாண்டில் பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, புலவர் குழந்தையின் இராவண காவியம், கண்ணதாசனின் ஏசு காவியம் போன்றனவும் காப்பியங்களாகவே எண்ணப்படுகின்றன

தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரிய புராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவை சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.[6]

அடிக்குறிப்பு

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads