தி. அ. இராமலிங்கம்

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருப்பூர் அங்கப்ப இராமலிங்கம் செட்டியார் (T. A. Ramalingam Chettiar, பி. மே 18, 1881 - இ.1952) ஒரு தமிழக வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர். சென்னை மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக இருந்தவர். மேலும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினரும் இவரே.

வாழ்க்கைக் குறிப்பு

1881ல் திருப்பூரில் அங்கப்ப செட்டியார்-மீனாட்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இராமலிங்கம் இளவயதிலேயே கல்வி கற்க கோயம்புத்தூருக்கு அனுப்பபட்டார். இவரது தந்தை அங்கப்ப செட்டியார் செல்வச் செழிப்பு மிக்க பருத்தி வர்த்தகர். பள்ளிப்படிப்பை முடித்தபின்னர் இராமலிங்கம் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து 1904ம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் அங்கு வழக்கறிஞர் குழுமத்தின் தலைவராக இருந்தார். 1911ல் கூட்டுறவு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சென்னை மாகாணத்தில் அவ்வியக்கம் பரவ பாடுபட்டார். தமிழ்நாடு கூட்டுறவு கூட்டமைப்பைத் தோற்றுவித்து “கூட்டுறவு” என்ற இதழையும் நடத்தினார். கோவையில் ஒரு கூட்டுறவுப் பயிற்சிப் பள்ளியினையும் நிறுவினார். கோவையில் மத்தியக் கூட்டுறவு வங்கி, நகர்ப்புற வங்கி, நில வளர்ச்சி வங்கி, பால் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு அச்சகம் ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார்.

அரசியலில் ஈடுபட்ட இராமலிங்கம் கோவை மாவட்ட மன்றம் (ஜில்லா போர்டு) துணைத் தலைவராகவும், தலைவராகவும் பதவி வகித்தார். பின்னர் கோவை மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றினார். சில காலம் நீதிக்கட்சியிலும் பின்பு காங்கிரசிலும் உறுப்பினராக இருந்தார். 1921ல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். 1946ல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 பொதுத் தேர்தலில் காங்கிரசு சார்பில் கோவை மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இராமலிங்கம் செட்டியார் 1952ல் மரணமடைந்தார். அவரது குடும்பத்தார் அவரது நினைவாக கல்வி அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அது கோவையில் தி. அ. இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, அங்கப்ப செட்டியார் மெட்ரிக்குலேசன் பள்ளி, அங்கப்பா கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களை நிருவகித்து வருகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads