திருப்பூர்
இந்தியாவின் தமிழ்நாட்டில், ஆறாவது மிகப்பெரிய மற்றும் 'ஏற்றுமதி வருமான மாநகரம்' From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருப்பூர் (Tiruppur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருப்பூர் மாவட்டத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது 160 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது.[5] இம்மாநகரம் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. பின்னலாடை தொழிலில் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்நகரையே நம்பி உள்ளன. கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகரம் ஆரம்ப காலத்தில் சிறு கிராமமாக இருந்து, இன்று தேசிய அளவில் பின்னலாடை தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது.
தமிழகத்தில் ஆறாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களில் இதுவும் ஒன்று. திருப்பூர் மாநகராட்சியுடன் வேலம்பாளையம், எஸ்.நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகன்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தனம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் முக்கியச் சாலைகளாகக் குமரன் சாலை, அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, காங்கேயம் சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட சாலைகள் விளங்குகின்றன.
Remove ads
திருப்பூரின் சிறப்புகள்
- தமிழகத்தின் "டாலர் சிட்டி" என்று அழைக்கப்படும் ஓர் நகரமாக திருப்பூர் உள்ளது.
- உலக நாடுகள் தங்களது ஆடை உற்பத்திக்கு முதலில் தேர்வு செய்யும் ஓர் நகரமாக திருப்பூர் விளங்குகிறது.
- கொங்கு மண்டலத்தின் மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி இதுவே ஆகும்.
- சென்னையைப் போலவே வெளிமாநில, வெளிமாவட்ட, வெளிநாட்டினரை சகஜமாக காண முடியும்.
- ஆசிய கண்டத்திலேயே அதிக பெண்கள் பயிலும் பள்ளியாக திருப்பூர் ஜெய்பாவாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இங்கு தான் அமைந்துள்ளது.
- சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த திருப்பூர் குமரன் உயிர்விட்ட மண் ஆகும்.
Remove ads
சொற்பிறப்பு
திருப்பூர் என்ற பெயர் மகாபாரத காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. புராணக்கதைகளின்படி, பாண்டவர்களின் கால்நடைகள் திருடர்களால் திருடப்பட்டன, பின்னர் அர்ஜுனனின் படைகளால் அது மீண்டும் இவ்வூரிலிருந்து கைப்பற்றப்பட்டது. அதனால் இதற்கு திருப்பூர் (திருப்பு: திரும்பவும் மற்றும் ஊர்: தமிழில் இடம்) என்று பெயர் வந்தது. அதாவது திருப்பித் தரப்பட்ட இடம் என்று பொருள்.[6] திருப்பையூர் என்பது இதன் பழைய பெயரெனக் கருதப்படுகிறது.[7]
Remove ads
வரலாறு
திருப்பூர் ஆனது சங்க காலத்தில் சேரர்களால் ஆளப்பட்ட கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இப்பகுதி இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளை இணைக்கும், ஒரு முக்கிய ரோமானிய வர்த்தக பாதையின் ஒரு பகுதியாக இருந்தது.[8][9][10] பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்கள் கொங்கு நாட்டை கைப்பற்றினர்.
பின்னர் இப்பகுதி 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் பாளையக்காரர்கள், மதுரை நாயக்கர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர்.[11] பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மதுரை நாயக்கர்களுடன் தொடர்ச்சியான போர்களைத் தொடர்ந்து, இப்பகுதி மைசூர் இராச்சியத்தின் கீழ் வந்தது. ஆங்கிலோ-மைசூர் போர்களில், திப்பு சுல்தானின் தோல்விக்குப் பின்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 1799இல், இப்பகுதியை சென்னை மாகாணத்துடன் இணைத்தது. திருப்பூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11.1075°N 77.3398°E ஆகும்.[12] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 295 மீட்டர் (968 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருப்பூர் மாநகராட்சியின் மக்கள்தொகை 444,352 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 227,311, பெண்கள் 217,041 ஆகவுள்ளனர். இம்மாநகரத்தின் எழுத்தறிவு 87.81% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 969 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.05%, இசுலாமியர்கள் 10.36%, கிறித்தவர்கள் 3.33% மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர்.[15]
2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின், மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 473,637 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 9,63,173 ஆகவும் உள்ளது.
Remove ads
திருப்பூரின் தொழில் வளம்
தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர்.[சான்று தேவை] தென்மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள். ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் 35 இருக்கின்றன. ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகள் உற்பத்தியாகின்றன. பனியன் தொழில் வளர்ச்சிக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உற்பத்திச் செய்கிறது. இதில் 5000 உறுப்பினர்கள் உள்ளனர்.[சான்று தேவை]
அகில இந்திய காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனம், கையால் செய்யப்படும் காகிதம் மற்றும் சுத்தமான எண்ணெய் தயாரிக்கும் தொழிலும் திருப்பூரில் நடைபெறுகிறது. திருப்பூர் காதி வஸ்திராலயத்தின் தலைமையிடமாக திருப்பூர் இருக்கிறது.
திருப்பூருக்கு மேலும் சிறப்பு செய்யும் தொழிலாக வெளிநாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தொழில் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது.
Remove ads
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
திருப்பூர் மாநகரமானது, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிகள் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். திருப்பூர் மாநகரை உள்ளாட்சி அமைப்பின்படி திருப்பூர் மாநகராட்சி நிர்வகிக்கிறது.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த கே. சுப்பராயன் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், க. நா. விஜயகுமார் என்பவர் அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதியிலிருந்தும் மற்றும் கே. செல்வராஜ் என்பவர் திமுக சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Remove ads
போக்குவரத்து
பேருந்து நிலையங்கள்
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் கோவில் வழி பேருந்து நிலையம் என மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன.
திருப்பூர் கோவில்வழி பேருந்து நிலையம்: தாராபுரம் சாலையில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கம்பம், போடி, சிவகாசி, நாகர்கோவில், ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் பல தென் மாவட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
திருப்பூர் பழைய பேருந்து நிலையம்: இந்த பேருந்து நிலையம் திருப்பூர் மாநகராட்சியில் மையத்தில் அமைந்துள்ள ஒரு பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திலிருந்து தான் மாவட்டத்தின் அனைத்து நகராட்சி மற்றும் முக்கிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக காங்கேயம், தாராபுரம்,உடுமலைப்பேட்டை, அவினாசி, பல்லடம், வெள்ளக்கோயில் என முக்கிய நகரங்களுக்கு பேருந்து சேவைகளை அளிக்கிறது. மேலும் பொள்ளாச்சி, பெரிய நெகமம், காமநாயக்கன்பாளையம், குடிமங்கலம், பொங்கலூர், வால்பாறை, சிவன்மலை, கொடுவாய், சென்னிமலை, குன்னத்தூர், சத்தியமங்கலம், பெருமாநல்லூர், ஊத்துக்குளி, நம்பியூர், பெருந்துறை, கோயம்புத்தூர், சூலூர், காரணம் பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பழநி, திருச்செங்கோடு, சென்னை, குளித்தலை ஆகிய முக்கிய பகுதிகளுக்கும், மாநகரப் பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தினமும் 20,000 மேற்பட்டோர் பேருந்தில் பயணம் செய்கின்றனர். தினமும் 50,000 மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை கடந்து செல்கின்றனர். தற்போது பழைய பேருந்து நிலையம் புதுபிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம்: இந்த பேருந்து நிலையம் திருப்பூர் மாநகராட்சியில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பேருந்து நிலையம் ஆகும். இந்த புதிய பேருந்து நிலையம் தான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். இங்கு முழுவதும் வெளி மாவட்டத்தைச் சார்ந்த பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும். இங்கிருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, மேட்டுப்பாளையம், ஈரோடு, சத்தியமங்கலம், திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், பெரியகுளம், இராஜபாளையம், கோவில்பட்டி, வேளாங்கண்ணி, கடலூர், சிதம்பரம், ஜெயங்கொண்டம் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தாராபுரம் ஒட்டன்சத்திரம் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர், மணப்பாறை, திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, பெங்களூர், ஆலங்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை, முசிறி, விழுப்புரம் என தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநில மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவிழா மற்றும் முக்கிய தினங்களில் பேருந்து நிலையம் நிரம்பி வழியும், காரணம் வெளி மாவட்ட மக்கள் இங்கு அதிகளவில் வசிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிலையங்களில் பயணம் செய்கின்றனர்.
Remove ads
திருப்பூரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் பின்வருமாறு
- மாநில நெடுஞ்சாலை 19: பல்லடம் - திருப்பூர் - அவிநாசி
- மாநில நெடுஞ்சாலை 37: திருப்பூர் - தாராபுரம்
- மாநில நெடுஞ்சாலை 196 மற்றும் 81: திருப்பூர் - கோபிசெட்டிபாளையம்
- மாநில நெடுஞ்சாலை 169: திருப்பூர் - சோமனூர்
- மாநில நெடுஞ்சாலை 172: திருப்பூர் - காங்கேயம்
- : திருப்பூர் - உடுமலைப்பேட்டை
- : திருப்பூர் - பழனி
- : திருப்பூர் - கோயம்புத்தூர்
- : திருப்பூர் - பொள்ளாச்சி
- : திருப்பூர் - குருவாயூர்
- : திருப்பூர் - சென்னை
- : திருப்பூர் - பெங்களூர்
- : திருப்பூர் - மேட்டுப்பாளையம்
- : திருப்பூர் - ஈரோடு
- : திருப்பூர் - சேலம்
இங்கிருந்து கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தொடருந்து நிலையம்
இந்நகரில் இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது முழுமையாக மின்மயமாக்கப்பட்ட வழிதடங்கள் ஆகும். இந்த இரயில் நிலையமானது ஈரோடு - கோயம்புத்தூரை நன்கு இணைக்கின்றது.
இந்நகரிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள கோயம்புத்தூர் வானூர்தி நிலையம், அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும்.
வானிலை மற்றும் காலநிலை
Remove ads
திருப்பூரின் சுற்றுலாத் தலங்கள்
- திருப்பூர் பூங்கா,
- திருப்பூர் குமரன் நினைவிடம்
- சுக்ரீஸ்வரா் கோவில் (2500 ஆண்டுகள் பழமையானது), சர்க்கார் பெரியபாளையம்.
- அமராவதி அணை
- திருமூர்த்தி அணை
திருப்பூரில் உள்ள இறை வழிபாடு தலங்கள்
- சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீசுவரர் கோயில்
- திருப்பூர் திருப்பதி
- கைலாசநாதர் திருக்கோயில்
- திருமுருகன் பூண்டி திருக்கோயில்
- பெருமாள் கோயில், அழகு மலை
- ஜோசப் தேவாலயம்
- அவிநாசி பெரிய கோவில்
- அருள்மிகு கொண்டத்துகாளியம்மன் திருக்கோவில்
- காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீசுவரர் கோவில்
- முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில்
- திருப்பூர் பெரிய பள்ளிவாசல்[17]
திருப்பூர் ஆறுகள்
- நொய்யல் ஆறு
- நல்லாறு
- கெளசிகா நதி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads