பழைய நாடாளுமன்றக் கட்டிடம், புது தில்லி
இந்திய நாடாளுமன்றத்தின் முந்தைய இருக்கை From Wikipedia, the free encyclopedia
Remove ads
பழைய நாடாளுமன்றக் கட்டிடமானது (அதிகாரப்பூர்வமாக சம்விதன் சதன் அரசியலமைப்பு கட்டிடம்),[1][2] 18 சனவரி 1927 மற்றும் 15 ஆகத்து 1947 க்கு இடையில் இந்தியாவின் பேரரச சட்டமன்ற அவையின் இருக்கையாகவும், 15 ஆகத்து 1947 மற்றும் 26 சனவரி 1950 க்கு இடையில் இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் இருக்கையாகவும், 26 சனவரி 1950 மற்றும் 18 செப்டம்பர் 2023 க்கு இடையில் இந்திய நாடாளுமன்றத்தின் இருக்கையாகவும் இருந்தது.
இந்த கட்டிடம் பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களான எட்வின் லூட்டியன்சு மற்றும் எர்பெர்ட்டு பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது மற்றும் 1921 மற்றும் 1927 க்கு இடையில் கட்டப்பட்டது. இது சனவரி 1927 இல் பேரரச சட்டமன்ற அவையின் இருக்கையாக திறக்கப்பட்டது மற்றும் கவுன்சில் கட்டிடம் என்று அறியப்பட்டது.[3]
Remove ads
வரலாறு
புது தில்லியை வடிவமைத்த பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுனர்களான எட்வின் லூட்டியன்சு மற்றும் எர்பெர்ட்டு பேக்கர் ஆகியோரால் இவ்வளாகம் வடிவமைக்கப்பட்டது. இவ்வளாகத்தின் கட்டுமானத்திற்கான அடிக்கல்லை கன்னாட்டின் கோமகன், 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் நாட்டினார். ஆறு வருடங்களில், 83 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இதனை, அப்போதைய வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநருமான இர்வின் பிரபு, 1927ஆம் ஆண்டு சனவரி 18 அன்று திறந்து வைத்தார்.[4] ஜனவரி 19, 1927 அன்று மத்திய சட்டமன்ற அவையின் மூன்றாவது அமர்வு இவ்வளாகத்தில் கூட்டப்பட்டது.[5]
Remove ads
வளாக அமைப்பு

அசோகச் சக்கரத்தின் வடிவத்தை ஒட்டி இவ்வளாகம் வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அவை, மத்தியச் சட்டப் பேரவை, இளவரசர்களின் அவை என மூன்று தனி மண்டபங்கள் அமைக்கப்பட்டது.
வளாகத்தைச் சுற்றி பெரிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கல்லால் ஆன வளாகத்தின் வேலி மதில் சாஞ்சி பெரிய தூபியை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடுக் கூடம் / மத்திய மண்டபம்

நாடாளுமன்றத்தின் நடுக்கூடம் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூடத்தின் குவிமாடம் 98 அடி விட்டம் கொண்டுள்ள காரணத்தால், உலகின் பிரம்மாண்ட குவிமாடங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கூடத்தின் வரலாற்றுச் சிறப்பினை பின்வரும் காரணங்களால் உணரலாம்:
- 1947-இல் ஆங்கிலேய அரசு இந்திய அரசியல் அதிகாரத்தை நேரு தலைமையிலான அரசிடம் இக்கூடத்தினின்று வழங்கியது
- 1947 முதல் 1949 வரை இக்கூடத்தில் இருந்து தான் இந்திய அரசியல் சாஸனம் வடிக்கப்பட்டது.
அரசியலமைப்பு நிர்ணய மன்றம் செயல்படுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்டு புனரமைக்கும் முன், 1946 வரை, இக்கூடம் அப்போதைய மத்திய சட்ட சபைக்கும், மாநிலங்கள் அவைக்குமான நூலகமாகப் பயன்படுத்தப்பட்டது, அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இக்கூடத்தில், டிசம்பர் 9, 1946 முதல் நவம்பர் 26, 1949 வரை கூடி, இந்திய அரசியலமைப்பை வரைந்தது. தற்போது நடுக்கூடம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலுக்குப் பின் நிகழும் முதல் அமர்வின் போதும், ஒவ்வோர் ஆண்டின் முதல் அமர்வின் போதும், குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இக்கூடத்தினின்று உரை வழங்குவார். மேலும் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது அயல் நாட்டுத் தலைவர்கள் இரு அவைகளுக்கும் வழங்கும் உரையும் இங்கிருந்தே வழங்கப்படும்.
புதுக் கட்டிடத்திற்கான திட்டம்
தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டிடம், எண்பத்தைந்தாண்டு காலப் பழைமை வாய்ந்தது; பாரம்பரியச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது. இடப்பற்றாக்குறையையும், கட்டமைப்பு வலுவிழந்து வரும் காரணத்தையும் கருத்தில் கொண்டு புதிய வளாகம் ஒன்றை நிறுவ ஆலோசிக்கப்பட்டுள்ளது.[6]
இதன் பொருட்டு முன்னாள் மக்களவைத் தலைவரான திருமதி. மீரா குமாரின் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.[7]
Remove ads
2001 தீவிரவாத தாக்குதல்
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள இந்திய பாராளுமன்றம் கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர் . மற்றும் இந்த தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது[8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads