பொன் மாணிக்கவேல்

இந்திய காவல் அதிகாரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பொன் மாணிக்கவேல் (A.G. Ponn Manickavel, பிறப்பு: 25 நவம்பர் 1958) என்பவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரியாவார்.[1][2] தமிழகத்தில் திருடுபோன பழமையான கோயில் சிலைகள் மீட்புப்பணி தொடர்பான விசாரணைக்கு அறியப்படுகிறார். சேலம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்பி), உளவுப்பிரிவு காவல்துறைத் துணைத்தலைவர் (டிஜஜி), சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைத் துணைத்தலைவர் எனப் பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.[3]

விரைவான உண்மைகள் பொன் மாணிக்கவேல், பிறப்பு ...
Remove ads

பணிக்காலம்

1989 ஆம் ஆண்டு காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகத் தமிழகக் காவல்துறையில் சேர்ந்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் இந்தியக் காவல் பணி அதிகாரியாகத் தேர்வானார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதில் திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெற்றார்.[3] 2012 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைத் துணைத்தலைவராகக் கூடுதல் பொறுப்பேற்றார். 50 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட இராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி ஐம்பொன் சிலைகளை குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்தும், நடராஜர் சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்தும் மீட்டுள்ளார்.[3][4][5] இந்து சமய அறநிலையத் துறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி சில அதிகாரிகளைக் கைதுசெய்தார்.[6] தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 201 உலோகச் சிலைகள், 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள் மற்றும் 212 ஓவியங்கள் என மொத்தம் 1146 கோயில் சிலைகளை ஏழாண்டுகளில் மீட்டுள்ளார்.[7] தமிழகக் கோயில்களில் திருடுபோன 155 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை மீட்டு, சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்துள்ளார். சிலை கடத்தல் பிரிவில் 33 வழக்குகள் உட்பட தமிழகம் முழுவதும் 455 வழக்குகள் பதிவுசெய்துள்ளார்.[8] இவர் விசாரித்துவரும் வழக்குகளை தமிழக அரசின் மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற முயன்ற போது சென்னை உயர் நீதிமன்றம் அதற்குத் தடைவிதித்து நிலுவையிலுள்ள விசாரணை நிறைவு பெற இவருக்கு ஓராண்டு பணி நீடிப்பு வழங்கியது.[9] பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலை பறிமுதல் போன்ற நடவடிக்கை இவரின் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.[10] கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலிருந்து 1982-இல் திருடப்பட்டு, ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் இருந்த 700 ஆண்டு தொன்மையான பஞ்சலோக நடராஜர் சிலையை மீட்டெடுத்து 13 செப்டம்பர் 2019 அன்று தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தவர்.[11] [12]

Remove ads

சர்ச்சைகள்

இந்து சமய அறநிலையத் துறையின் மீது களங்கம் சுமத்த வேறு சில மத அமைப்புகளின் தூண்டுதலால் செயல்படுகிறார் என்று இந்து சமய அறநிலையத்துறை கூட்டமைப்பினர் குற்றம்சாட்டிப் போராட்டம் நடத்தினர்.[13]

திரைப்படம்

  • இவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.[14]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads