முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் (Mustafa Kemal Atatürk - 19 மே 1881 – 10 நவம்பர் 1938) ஒரு துருக்கிய படை அலுவலரும், புரட்சிகர அரசியலாளரும், துருக்கிக் குடியரசின் நிறுவனரும் அதன் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார். கலிப்பொலி சண்டையின் போது பிரிவுக் கட்டளை அலுவலராகப் பணியாற்றிய காலத்தில் இவர் தன்னை ஒரு புத்திக் கூர்மையுள்ள மிகத் திறமையான படை அலுவலராக நிலைநிறுத்திக் கொண்டார்[1]. இவர் பின்னர் முதலாம் உலகப் போரில் கிழக்கு அனத்தோலியப் போர் முனையிலும், பாலஸ்தீனியப் போர் முனைப் பகுதியிலும் திறமையாகச் செயல் பட்டார். ஓட்டோமன் பேரரசு கூட்டணிப் படைகளிடம் தோல்வியடைந்ததையும் அதன் பிரிவினைக்கான திட்டங்களையும் தொடர்ந்து இவர் துருக்கியின் விடுதலைப் போராக மாறிய துருக்கிய தேசிய இயக்கத்தைத் தொடங்கி வழிநடத்தினார். அங்காராவில் ஒரு இடைக்கால அரசை அமைத்த இவர் நட்பு நாடுகளால் அனுப்பப்பட்ட படைகளைத் தோற்கடித்தார். இவரது வெற்றிகரமான படை நடவடிக்கைகள் நாடு விடுதலை பெறுவதற்கும் துருக்கிக் குடியரசு உருவாவதற்கும் வழி வகுத்தது.
நாட்டின் முதல் தலைவராக இவர் பெரிய அளவில் அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சீர்திருத்தத் திட்டங்களை நடைமுறைப் படுத்தினார். அறிவொளி இயக்கத்தின் ஆர்வலராக விளங்கிய இவர் ஓட்டோமான் பேரரசின் அழிபாடுகளிலிருந்து, நவீன மக்களாட்சி, மதச் சார்பற்ற, நாட்டின அரசு ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். இவரது ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டது.[2] அத்தாதுர்க்கின் சீர்திருத்தங்கள் குறித்த கொள்கைகள் கெமாலியம் என அழைக்கப்பட்டதுடன், இதுவே தற்காலத் துருக்கியின் அரசியல் அடிப்படையாகவும் விளங்குகிறது. தென்மேற்கு துருக்கியில் அதிகமான குர்து இன மக்கள் வாழ்ந்த போதும் துருக்கியை துருக்கி இன மக்கள் உள்ள நாடாக, தனி இனம் மட்டும் உள்ள நாடாக மாற்ற முயன்றார்.[3][4] [5][6] நவீன துருக்கி நாட்டை உருவாக்கயதற்காக துருக்கி நாடாளுமன்றம் இவருக்கு அத்தாதுர்க் என்ற பட்டத்தை 1934இல் வழங்கியது. அத்தாதுர்க் என்றால் துருக்கியின் தந்தை என்று பொருள்.[7]
Remove ads
தொடக்க வாழ்க்கை
முசுதபா கெமால் அத்தாதுர்க் 1881ஆம் ஆண்டு அலி ரிசா ஒகுலு முசுதபா என்ற பெயருடன் பிறந்தார். தற்போது கிரேக்கத்தின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ள தெசலோனக்கி நகரில் பிறந்தார்.[8] உதுப்மேனிய பேரரசின் படையில் அத்தாதுர்க்கின் தந்தை அலி ரிசா எப்பன்ட்டி அலுவலராக இருந்தார் மேலும் அவர் மர வணிகராகவும் இருந்தார். இவரது ஒரே தங்கை 1956இல் மறைந்தார், [9] ஆண்ட்ரூ மாங்கோ கருத்துப்படி இவரது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த துருக்கிய இசுலாமியவர்கள் ஆவர். [10] சில ஆசிரியர்கள் அத்தாதுர்க்கின் தந்தை அல்பேனியர் என கருதுகின்றனர்,[11][12][13] எனினும் பல ஆசிரியர்கள் அலி ரிசாவின் மூதாதையர்கள் துருக்கியர்கள் எனவும் அவர்கள் அயதின் மாகாணத்தின் அனத்தோலியாவிலிருந்து வந்தவர்கள் என கருதுகின்றனர்.[14][15][16][17][18][19] இவரது தாய் துருக்கிய இனத்தை சார்ந்தவர் என கருதப்படுகிறது.[12][13] குறிப்பிடத்தகுந்த யூதர்கள் உதுப்மேனிய பேரரசில் செலனிக் (தெசலோனக்கி) நகரில் இருந்ததால் பல இசுலாமிய எதிர்ப்பாளர்கள் அத்தாதுர்க் இசுலாமை தழுவிய யூத இனத்தவர் என்கின்றனர்.[20] அவரது தாத்தா-பாட்டியின் சொந்த ஊர் செலனிக் அல்ல. 10ஆம் நூற்றாண்டில் உதுப்மேனிய பேரரசின் மற்ற மாகாணத்திலிருந்து இங்கு வந்தவர்கள். அத்தாதுர்க்கின் தோலின் நிறம், பொன்நிற முடி, நீல நிற கண் ஆகியவற்றால் அவர் இசுலாவிய இனத்தை சார்ந்தவர் என சிலர் கருதுகின்றனர்.[21][22][23]
இவர் முசுதபா என்ற பெயருடன் பிறந்தார். இவரது கணித ஆசிரியர் கெமால் என்ற பெயரை இவருடன் இணைத்தார். இவரது திறமையையும் நடத்தையையும் மெச்சி கொடுத்தார் என சிலரும் [24][25] வகுப்பிலிருந்த மற்ற மாணவனில் இருந்து வேறுபடுத்தி காட்ட இப்பெயர் கொடுக்கப்பட்டது என சிலரும் கூறுகின்றனர்.[26] எனினும் இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆண்ட்ரூ மாங்கோ தேசிய புலவர் நாமிக் கெமால் நினைவாக இவரே இப்பெயரை சேர்த்துக்கொண்டார் என்கிறார்.[27] தொடக்கத்தில் இவரது அம்மா இவரை மத பள்ளியில் சேர்த்து படிக்கச்சொன்னார், பின்னர் இவரது தந்தை மத சார்பில்லாத தனியார் பள்ளியில் சேர்த்தார். இவரது பெற்றோர் இவரை வணிகம் கற்க விரும்பினர், ஆனால் இவர் அவர்களிடம் கூறாமல் 1893இல் செலனிய படைப்பள்ளிக்கு நுழைத்தேர்வை எழுதினார். 1896இல் மாண்டிர் படை உயர்நிலைப் பள்ளியில் இணைந்தார். 1899இல் [28] பங்கால்டியில் உள்ள ஒட்டாமான் படை அகாதமியில் சேர்ந்தார்.[29] 1905ஆம் ஆண்டு ஒட்டாமான் படைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[28]
Remove ads
இராணுவ வாழ்க்கை
தொடக்க காலம்
படைக்கல்லூரியில் பட்டம் பெற்ற சிறிது காலத்தில் மன்னராட்சிக்கு எதிராக செயல்பட்டதால் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் சிறையில் இருந்த பின் அவரது படித்த பள்ளியின் இயக்குநர் ரிசா பாசா மூலம் விடுதலை அடைகிறார்[30] விடுதலைக்கு பின்பு முசுதபா கெமால் உதுப்மேனிய பேரரசின் டமாஸ்கசில் உள்ள ஐந்தாம் இராணுவ படைப்பிரிவில் கேப்டனாக சேர்கிறார்.[28] அங்கு முசுதபா எல்வன் தலைமையிலான இரகசிய சிறிய சீர்திருத்த குழுவில் இணைகிறார். இவர்களின் குழு தாய்நாடும் விடுதலையும் என்னும் பொருள் படும் வாடான் வே கர்ரியத் எனப்படும். யூன் 1907இல் இவர் மூத்த கேப்டனாக பதவியுர்வு பெறுகிறார். அக்டோபர் 1907இல் மனாடிர் (பிடோலா) நகரில் உள்ள ஒட்டாமான் பேரரசின் மூன்றாம் படைப்பிரிவுக்கு அனுப்பப்படுகிறார்.[31] யூன் 1908இல் இவர் கிழக்கு ருமெலியாவில் (தற்போதுள்ள பல்கேரியாவின் வடபாகம் முழுவதும்) உள்ள உதுப்மானிய இருப்புப்பாதையின் ஆய்வாளராக பணி அமர்த்தப்படுகிறார்..[31] யூலை 1908இல் இளம் துருக்கியர்களின் புரட்சியில் பங்கு கொள்கிறார், இப்புரட்சியினால் பேரரசர் சுல்தான் இரண்டாம் அபுல்அமீதின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. மேலும் உதுப்மானிய பேரரசு அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசாக மாறுகிறது.

படையில் அரசியல் சார்பு இருக்கக்கூடாது என்ற இவரின் கருத்து புரட்சியாளர்களின் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு பிடிக்காததால் திரிபோலிடேனியாவிக்கு (தற்போது லிபியாவில் உள்ளது) பழங்குடிகளின் எதிர்ப்பை அடக்க என்ற பெயரில் 1918ஆம் ஆண்டின் இறுதியில் அனுப்பப்பட்டார்.[30] இவர் தன்னார்வமாகவே அப்பணியை ஏற்றார் என மிகுசு கூறுகிறார்.[32] அக்கிளர்ச்சியை அடக்கி விட்டு 1909இல் இசுதான்புல் திரும்புகிறார். ஏப்பிரல் 1909 சில படை வீரர்கள் எதிர் புரட்சி (மார்ச் 31 நிகழ்வு) செய்கிறார்கள். கெமால் அப்புரட்சியை அடக்குகிறார்.[33]
1910இல் முசுதபா கெமால் உதுப்மானிய மாகாணமான அல்பேனியாவுக்கு அழைக்கப்படுகிறார்.[34][35] அச்சமயத்திதல் இசா போலேட்டினி கொசாவா பகுதியில் அல்பேனிய கிளர்ச்சியை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.[36][37] 1910இல் இவர் எக்ரெம் வோலோரா என்ற அல்பேனிய பிரபுவை சந்திக்கிறார். அவர் அல்பேனிய விடுதலையை அறிவித்த பத்திரத்தில் கையொப்பமிட்டவர் மேலும் அவர் எழுத்தாளர், அரசியல்வாதி.[38][39] 1910இன் இறுதியில் பிரான்சில் பிகார்டி படை நகர்வை அவதானித்த உதுப்மானிய படை அலுவலர்களில் ஒருவராக இருந்தார்.[40] 1911இல் குறுகிய காலம் இசுதான்புல்லில் உள்ள படைத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார்.
இத்தாலிய-துருக்கி போர் (1911-12)
1911இல் உதுப்மேனிய திருபோலிடானியாவில் (தற்போது லிபியாவில் உள்ளது) இத்தாலிய-துருக்கி போருக்காக பணியமர்தப்பட்டார். குறிப்பாக பங்காசி, டெர்னா, துப்ருக் போன்ற நகரங்களுக்கு அருகில் 150,000 வீரர்கள் களமிருக்கப்பட்ட இத்தாலிய படையுடன் சண்டையிட.[41] இப்படையை 20,000 எண்ணிக்கையுடைய பேடியுன் (வட ஆப்பிரிக்காவிலுள்ள அரபு நாடோடிகள்) படையும் [42] 8,000 துருக்கியர்களும் எதிர்த்தார்கள்.[42] போரை இத்தாலி அறிவிக்கும் சிறிது காலம் முன்பு உதுப்மேனிய மாகாணமான யேமனிலில் ஏற்பட்ட புரட்சியை அடக்க நிறைய உதுப்மேனிய படைகள் சென்றிருந்ததால் லிபியா பகுதியில் உள்ள இத்தாலியர்களை எதிர்க்க படைகள் இல்லாமல் தவித்தது. 1882 ஓரேபி புரட்சிக்கு பின் பிரித்தானியர்களின் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தன்னாட்சி எகிப்து வழியாக லிபியாவுக்கு உதுப்மானிய படைகளை அனுப்ப பிரித்தானியா மறுத்ததால் ஆபத்து என்று தெரிந்தும் (பிரித்தானியர் கண்டறிந்தால் சிறை) வேறுவழியில்லாமல் அரபுக்கள் போல் உடையணிந்து கொண்டு லிபியாவுக்கு உதுப்மானிய படை வீரர்கள் சென்றனர். கடல் வழி செல்ல சில படகுகளே கிடைத்தன. சிறந்த கப்பற்படையுடைய இத்தாலியர்கள் திரிபோலிக்கு செல்லும் கடல் வழியை முழுவதும் கட்டுக்குள் வைத்திருந்தனர்.
Remove ads
புகைப்படங்கள்
- முசுதபா கெமால் தனது தாயுடனும்(நடுவில் உள்ளவர்) சகோதரியுடனும்
- உதுமானியப் பேரரசில் அத்தாதுர்க் பிறந்த வீடு தற்போது கிரேக்கத்தில் உள்ளது
- உதுப்மானியப் பேரரசில் அத்தாதுர்க்கின் தந்தை வழி தாத்தாவின் வீடு கோகசிக் சிற்றூரில் உள்ளது தற்போது மாசிடோனியாவில் உள்ளது இவ்வீடு
மேற்கோள்கள்
மற்ற வலைத்தளங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads