அமிர்தேசுவரர் கோயில், அமிர்தபுரம்

From Wikipedia, the free encyclopedia

அமிர்தேசுவரர் கோயில், அமிர்தபுரம்map
Remove ads

அமிர்தேசுவரர் கோவில் (Amrutesvara Temple) அல்லது "அம்ருதேசுவரர்" என்றும் உச்சரிக்கப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்திலுள்ள சிக்மகளூர் நகரத்திற்கு வடக்கே 67 கி.மீ. தொலைவில் அமிர்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அமிர்தபுரம் தேசிய நெடுஞ்சாலை 206 இல் ஹாசனிலிருந்து 110 கி.மீ. தொலைவிலும், சிமோகாவிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கோவில் போசள மன்னன் இரண்டாம் வீர வல்லாளன் காலத்தில் பொ.ஊ. 1196 இல் கட்டப்பட்டது.[1] ஒரு அகன்ற திறந்த மண்டபத்துடன்கூடிய இக் கோயில் போசளர் கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தென்னந் தோப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இக் கோயிலின், ஒரேயளவு இடைவெளிகளில் செதுக்கப்பட்டுள்ள வட்டவடிவச் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மதில் இன்றும் உள்ளது.

விரைவான உண்மைகள் அமிர்தேசுவரர் கோயில், அமிர்தபுரம், நாடு ...
Remove ads

அம்ருதேஸ்வரர் கோவில்

Thumb
அமிர்தேசுவரர் கோயில் பொ.ஊ. 1196 )
Thumb
அமிர்தேசுவரர் கோயிலில் தூண்களுடன் கூடிய திறந்த மண்டபம்
Thumb
அமிர்தேசுவரர் கோயில் விமானத்திலுள்ள கீர்த்திமுகங்கள்
Thumb
அமிர்தபுரத்தில் உள்ள அமிர்தேசுவரர் கோயிலிலுள்ள பழைய கன்னட கல்வெட்டு (பொ.ஊ. 1196).

போசளக் கட்டிடக்கலைப்படி கட்டப்பட்ட இந்த ஆலயம், பரந்த திறந்த மண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது.[2] கோயிலின் அசல் வெளிப்புற சுவருடன் சமமான இடைவெளியில் வட்ட வடிவ வேலைப்பாடுகள் உள்ளன. கோயிலில் ஒரு விமானம் உள்ளது. எனவே இது ஒரு ஏககூட தனி சன்னதியாகக் கட்டப்பட்டுள்ளது.[3] ஒரு மூடிய மண்டபம் உள்ளது, இது கருவறையை பெரிய திறந்த மண்டபத்துடன் இணைக்கிறது.

நடுத்தர அளவினதாகிய இக் கட்டிடம், மண்டப அமைப்பிலும் அளவிலும், பேளவாடியில் உள்ள விஜயநகரக் கோயிலான வீர நாராயண கோவிலைப் ஒப்பிடத் தக்கதாக உள்ளது. திறந்த மண்டபம் 29 தூண் இடைவெளிகளையும்[4], மூடிய பண்டபம் 9 தூண் இடைவெளிகளையும் கொண்டுள்ளன. இச் சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது. இது கீர்த்திமுகங்கள், சிறிய அலங்கார கோபுரங்கள் ஆகியவற்றின் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேற்கட்டுமானத்திற்கு கீழே, பொதுவாகக் காணப்படும் இந்து தெய்வங்களின் சிலைகள் இல்லை. சுவரின் அடிப்பகுதியில் ஐந்துவடிவமைப்புகள் உள்ளன. இது கலை விமர்சகர் போகேமாவின் கூற்றுப்படி "பழைய போசளர் பாணி" ஆகும்.[5] கருவறையை மூடிய மண்டபத்துடன் இணைக்கும் முன்மண்டபத்தின் மேல் உள்ள கோபுரத்தில்[6] சிங்கத்துடன் சண்டையிடும் "சாலா" என்ற அசல் போசளச் சின்னம் உள்ளது.[7][8]

தாழ்வாரத்திற்கு அருகில் உள்ள பெரிய கல்வெட்டு, இடைக்கால கன்னட கவிஞர் ஜன்னாவால் இயற்றப்பட்ட கவிதைகளைக் கொண்டுள்ளது.

இக் கோயில் கட்டிடத்தின் சிறப்பு மண்டபக் கூரையைத் தாங்கி நிற்கும் மினுமினுப்பான தூண்கள் ஆகும். மண்டபத்தின் கூரை கொடி வேலைப்பாடுகளுடன் கூடிய பல குழிந்த மாட அமைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. பெரிய மண்டபத்தின் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களில் 140 சிற்பப் பலகைகள் காணப்படுகின்றன. இவற்றில் இந்து இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. பல ஹோய்சாலக் கோயில்களில் காணும் நுண்ணிய சிற்பங்களைக் கொண்ட சிறிய சிற்பப் பலகைகள் போலன்றி இவை பெரியவையாக உள்ளன. தென் புறச் சுவரில் காணப்படும் 70 கற்பலகைகளில் இராமாயணத்தில் இருந்து காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறான முறையில் கதை நகர்வு வலமிருந்து இடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடபுறச் சுவரில் கதைத் தொடர்ச்சி இடமிருந்து வலமாகவே உள்ளது. மீதமுள்ளவற்றில் 25 பலகைகளில் கிருஷ்ணனுடைய வாழ்க்கைக் காட்சிகளும், 25 பலகைகளில் மகாபாரதக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன.

புகழ் பெற்ற ஹோய்சாலச் சிற்பியும் கட்டிடக் கலைஞருமான ருவாரி மலிதம்மா இக் கோயிலின் மண்டபக் கூரைச் சிற்பங்களில் பணிபுரிந்ததன் மூலமே தனது தொழிலில் காலடி வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

Remove ads

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads