இடக்கழிநாடு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடக்கழிநாடு (Edakalinadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் செய்யூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி மன்றம் 21 உறுப்பினர்களைக் கொண்டது.[1]
Remove ads
அமைவிடம்
இடைக்கழிநாடு செங்கல்பட்டுக்கு கிழக்கே 98 கிலோ மீட்டர் தொலைவிலும், மேல்மருத்தூரிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலும், கல்பாக்கத்திலிருந்து 36 கிமீ தொலைவிலும், வங்காள விரிகுடா 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இடைகழிநாடு என்பது ஒரு சிறியநாடு ஆகும். தற்போதுள்ள முதலியார்குப்பம் கழிமுகப்பகுதிக்கும், வெண்ணாங்குப்பட்டு கழிமுகப்பகுதிக்கும், இடைப்பட்டதால் இது இடை-கழி-நாடு எனப்பெயர் பெற்றது. இது 24 கிராமங்களை உள்ளடக்கிய கடற்கரை பகுதி. சிறுபாணாற்றுப்படை இயற்றிய நல்லூர் நத்தத்தனார் பிறந்த நல்லூர், இடைகழிநாட்டில்தான் அமைந்துள்ளது. நல்லூர் நத்தத்தனாருக்கு தமிழக அரசு சார்பில் கிழக்கு கடற்கரை சாலை அருகே நினைவுத்தூண் அமைத்து சிறப்பித்துள்ளது. முக்கனியான மா, பலா, வாழை இங்கு அதிகமாக காணப்படுகின்றது. இப்பகுதியில் பனைமரங்கள் அதிகமாக பரவிக்காணப்படுகிறது, மரங்கள், கடற்கரை, கழிமுகங்கள் என இயற்கை எழில் மிகுந்துள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,734 வீடுகளும், 28,172 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.43% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]
வரலாறு
பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள 10 பாட்டு நூல்களுக்கும் நச்சினார்க்கினியர் இயற்றிய உரை ஒன்று உள்ளது. இதனை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் உ. வே. சாமிநாதையர் பதிப்பித்துள்ளார். [3] இந்த ஆராய்ச்சிக் குறிப்பில் சென்னைக்குத் தென்மேற்கில் இடைக்கழிநாடு என்னும் ஊர் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். [4] இவ்வூர்ப் பகுதியிலுள்ள கல்வெட்டுகளும் இதனை இடைக்கழிநாடு என்று குறிப்பிடுகின்றன.[5] சங்ககாலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்த இந்த ஊரின் பெயரால் அதனைச் சூழ்ந்திருந்த ஊர்கள் இடைக்கழிநாடு என்னும் அமைப்பின் கீழ் இருந்தன.[6] இந்த நாட்டில் நல்லூர் என்னும் ஊர் இருந்தது. செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் நல்லூர் என்னும் ஊர் உள்ளது.
இந்த ஊரில் வாழ்ந்த சங்ககாலப் புலவர் நத்தத்தனார். இவர் இப்பகுதியை அடுத்திருந்த ஓய்மானாட்டு நன்மாவிலங்கை வள்ளல் நல்லியக்கோடனைப் பாடியுள்ளார். பாடல் சிறுபாணாற்றுப்படை எனப் பெயர் பெற்றுள்ளது. புலவர் இந்த வள்ளலைக் காணச் சென்றபோது எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் [7] என்னும் ஊர்களைக் கடந்து சென்றதாகக் குறிப்பிடுகிறார்.
ஓய்மான் நல்லியாதன், ஓய்மான் வில்லியாதன் என்னும் அரசர்களும் இந்நாட்டை ஆண்ட சங்ககால அரசவள்ளல்கள். ஓய்மான் அரசர்கள் ஆண்டதால் இதனை 'ஓய்மானாடு' எனவும் வழங்கினர்.
ஆலம்பரை கோட்டை
கி.பி 18-ஆம் நூற்றாண்டில் முகமதியர்களால் கட்டப்பட்ட கோட்டை இப்பகுதியின் ஆலம்பரை குப்பம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு துறைமுகப்பட்டினமாகவும் திகழ்ந்துள்ளது, இக்கோட்டை சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கி.பி. 1735 நவாப் தோஸ்த் அலிகான் இக்கோட்டையை ஆண்டார். கி.பி. 1750-இல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய பிரெஞ்சு தளபதிக்கு சுபேதார் முசார்பர்ஜங் இக்கோட்டையைப் பரிசளித்தார். கி.பி. 1760 பிரெஞ்சுப் படையை வெற்றி கொண்ட ஆங்கிலேயப்படை இக்கோட்டையை கைப்பற்றி சிதைத்துள்ளது, நாம் தற்போது காண்பது அதன் எஞ்சிய பகுதிகளே. இக்கோட்டையின் கீழ்புறம் படகுத்துறை ஒன்று கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்க அமைக்கப்பட்டுள்ளது. படகுத்துறையின் நீளம் சுமார் 100 மீட்டராகும் அவற்றின் பகுதிகள் இன்றளவும் காணப்படுகின்றன. இன்று இக்கோட்டை தமிழக தொல்லியல்துறையால் பெயரளவில் பராமரிக்கப்படுகிறது. இன்று இப்பகுதிகளில் படப்பிடிப்பு அதிகமாக நடைபெறுகிறது. முகமதியர் காலத்தில் படப்பிடிப்பை மிஞ்சும் சாகசங்களும் நிகழ்ந்துள்ளன.
Remove ads
இடைக்கழிநாட்டின் சிறப்பு
இடைக்கழிநாடு பல விஷயங்களுக்கு பிரபலமானது. முக்கனியான மா , பலா , வாழை இங்கு அதிகமாக காணப்படுகின்றது . கடப்பாக்கம், ஆலம்பரைக்கோட்டை மற்றும் பனையூர் ஆகிய இடங்களில் இது அற்புதமான கடற்கரைகளைக் கொண்டுள்ளது. கடப்பாக்கத்திற்கு அருகே உள்ள சுற்றுலா தலமான ஆலம்பரைக்கோட்டை அரசு அங்கீகாரம் பெற்றது. இப்பகுதியில் உள்ள மக்கள் நிலத்தடி நீரை உபயோகிப்பார்கள், இடைக்கழிநாடு தண்ணீர் பற்றி பிரபலமான மேற்கோள் உள்ளது. அவர்கள் தண்ணீரை இளநீர் என்றே கூறுவர். கடப்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில், பராசக்தி அம்மன் கோயில் மற்றும் மீன் சந்தை அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோயில் பிரபலமானது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads