இரண்டு சீனாக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டு சீனாக்கள் என்ற சொற்பயன்பாடு (Two Chinas,எளிய சீனம்: 两个中国; மரபுவழிச் சீனம்: 兩個中國; பின்யின்: liǎng gè Zhōngguó/liǎng ge Zhōngguó) சீனா என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இரண்டு அரசியல் நிலப்பகுதிகளைக் குறிக்கின்றது:[1]
சீன மக்கள் குடியரசு (PRC), பொதுவாக "சீனா" என அறியப்படுவது, 1949இல் நிறுவப்பட்டது, பெருநிலச் சீனாவையும் ஆங்காங், மக்காவு எனப்படும் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளையும் ஆள்கின்றது.
சீனக் குடியரசு (ROC) - இது பெருநிலச் சீனாவை அது 1911/1912இல் நிறுவப்பட்டதிலிருந்து 1949வரை ஆண்டது. 1949இல் சீன உள்நாட்டுப் போரில்,பெருநிலச் சீனாவின் கட்டுப்பாட்டை இழந்தது. தற்போது சீனக் குடியரசு தாய்வான் தீவையும் அருகிலுள்ள சில தீவுக் கூட்டங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இது பொதுவாக "தாய்வான்" என அறியப்படுகின்றது.

Remove ads
பின்னணி
1912ஆம் ஆண்டில் சீனப் புரட்சி காரணமாக பேரரசர் சுவாங்டோங் பதவி துறந்தார். சுன் இ சியன் தலைமையிலான புரட்சியாளர்கள் நாஞ்சிங்கில் சீனக் குடியரசை நிறுவினர். அதேவேளையில் கிங் அரச வம்ச படைத்தளபதி யுவான் ஷிக்காய் தலைமையிலான பெயாங் அரசு பெய்ஜிங்கில் செயல்பட்டது. இந்த அரசு சட்டபூர்வமானதாக இல்லை என சீனத் தேசியவாத கட்சி, குவோமின்டாங் கட்சியின் நாஞ்சிங் அரசு எதிர்த்தது.
1912 முதல் 1949 வரை போர்த்தளபதிகள் ஆட்சியும் சப்பானியர்களின் படையெடுப்பும் சீன உள்நாட்டுப் போரும் சீனாவை சீர்குலைத்து வந்தன. இந்த கொந்தளிப்பான காலத்தில் சீனாவில் குறைந்த காலமே ஆண்ட பல அரசுகள் உருவாகி மறைந்தன. யுவான் ஷிக்காயின் பெயாங் அரசு (1912-1928), சீனப் பொதுவுடமைக் கட்சி நிறுவிய சீன சோவியத் குடியரசு (1931-1937),[2] ஃபுஜியான் மக்கள் அரசு (1933-1934), மஞ்சுகோ பொம்மையாட்சி (1932-1945), வாங் ஜிங்வெயின் சப்பானியராதிக்க பொம்மை அரசு (1940-1945) ஆகியன இவற்றில் சிலவாகும்.
1949இல் சீன உள்நாட்டுப் போர் முடிவடைந்த நிலையில் சீன பொதுவுடமைவாதிகள் மா சே துங் தலைமையில் சீன மக்கள் குடியரசை நிறுவினர். இந்த அரசு பெருநிலச் சீனாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. சங் கை செக் அரசுத் தலைவராகவிருந்த சீனக் குடியரசு தாய்வானுக்குப் பின்வாங்கியது.
அடுத்த பல ஆண்டுகளுக்கு சண்டை தொடர்ந்தாலும் கொரியப் போரின் போது இருவரும் கட்டுப்படுத்தும் நிலப்பகுதிகள் தெளிவாயின: பொதுவுடமைவாதிகள் நிர்வகித்த சீன மக்கள் குடியரசு பெய்ஜிங்கிலிருந்து பெருநிலச் சீனாவின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்த, சீனக் குடியரசு தற்போது தாய்பெயிலிருந்து, தாய்வான் தீவையும், சுற்றியுள்ள தீவுகளையும் புஜியான் மாகாண கடலோரத் தீவுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கொரியப் போர் தொடங்கியபோது தாய்வானை ஆக்கிரமிக்கவிருந்ததை தடுக்க உதவிய அமெரிக்க ஐக்கிய நாடு இந்த நிகழ்நிலை அமைப்பை உறுதி செய்தது.

சீன மக்கள் குடியரசை சட்டபூர்வ சீன அரசாக ஏற்கும் நாடுகள்.
சீன மக்கள் குடியரசை சட்டபூர்வ சீன அரசாக ஏற்கும் அதேவேளையில் சாதாரணத் தொடர்பை தாய்வானுடன் பேணும் நாடுகள்
சீனக் குடியரசை சட்டபூர்வ சீன அரசாக ஏற்கும் நாடுகள்.
தற்சமயம் எந்நிலையும் அறிவிக்காத நாடுகள்.
பல்லாண்டுகளாக இரு அரசுகளும் தாங்களே உண்மையான சீனா அரசாக உரிமை கோரி வந்தன. நேரடிச் சண்டை குறைந்து அயல்நாட்டு உறவுகளைப் பேணுவதன் மூலம் இது நிலவி வந்தது. 1970களுக்கு முன்பாக பல நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் சீனக் குடியரசை பெருநிலச் சீனாவையும் தாய்வானையும் உள்ளடக்கிய சீனாவின் உண்மையான அரசாக ஏற்றிருந்தன. ஐக்கிய நாடுகள் அவையின் நிறுவன உறுப்பினராக சீனக் குடியரசு இருந்து வந்தது; பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராகவும் ஏற்கப்பட்டிருந்தது. 1971ஆம் ஆண்டில் சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மாற்றாக சீன மக்கள் குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1970களுக்கு முன்னர் வெகுசில நாடுகளே சீன மக்கள் குடியரசை ஏற்றிருந்தன. முதலில் ஏற்ற நாடுகளில் சோவியத் கூட்டாட்சி நாடுகள், கூட்டுசேரா இயக்க நாடுகள், மற்றும் ஐக்கிய இராச்சியம் (1950) ஆகியன உள்ளடங்கும். 1971இல் மாற்றத்திற்கான காரணியாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சங் கை செக்கின் அரசை சீனப் பிரதிநிதியாக இருப்பதற்கு மறுத்து வெளியேற்றியதே ஆகும்.சீன மக்கள் குடியரசிற்கு விரைவிலேயே அமெரிக்க ஐக்கிய நாடு உள்ளிட்ட பல நாடுகளின் ஏற்பு கிடைத்தது. சீனக் குடியரசு தொடர்ந்து தன்னை சீனாவின் சட்டபூர்வ பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட சீன மக்கள் குடியரசுடன் போட்டியிட்டு வருகின்றது.
1990கள் முதல் தாய்வானின் விடுதலைக்கான முறையான ஏற்பைக் கோரி அரசியல் இயக்கங்கள் நடைபெற்றன. இது சீனாவின் சட்டபூர்வ அரசு என்பதற்கு மாறான விவாதமாக அமைந்துள்ளது. தாய்வானின் கண்ணோட்டத்தில் சீனக்குடியரசு மற்றும் சீன மக்கள் குடியரசு இரண்டுமே இறையாண்மையுள்ள நாடுகள்; இவை "இரண்டு சீனாக்கள்" அல்லது "ஒரு சீனா, ஒரு தாய்வான்". முன்னாள் சீனக் குடியரசுத் தலைவர் சென் ஷூயி-பியன் பிடிவாதமாக இந்த நிலையை ஆதரித்தார். சென் தலைமையிலான சீனக் குடியரசாட்சி தங்கள் கட்டுபாட்டிலுள்ள பகுதிகளுக்கு மட்டும் —தாய்வானும் சுற்றுத் தீவுகளுக்கு— ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராக ஏற்கக் கோரியது. தற்போதைய தாய்வானின் தலைவர் மா யிங்-ஜியோ இதற்கான முனைப்பை நிறுத்தி வைத்துள்ளார்.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads