இராகுல் காந்தி
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராகுல் காந்தி (Rahul Gandhi, பிறப்பு: ஜூன் 19, 1970) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார்.[2] இவர் இந்தியப் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் நேரு குடும்பத்தைச் சார்ந்தவர், இது இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம் ஆகும். காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார். அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினைக் கொண்டுவர முயற்சி என இவரது பணிகள் தொடர்கிறது.[3] இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமரும் வாய்ப்பினை மறுத்துவிட்டு அடித்தளம் வரை கட்சியினை பலப்படுத்தும் பணியினை மேற்கொண்டார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போது வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் சிறப்புமிக்க முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். அவருடைய முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தனித்துவம் வாய்ந்த தலைவரான மோதிலால் நேரு ஆவார்.
இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புது தில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார்.[4] இவரது தந்தை ராஜீவ் காந்தி அவரது தாயார் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் இந்தியாவின் பிரதம மந்திரியானார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர்.[5] 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள இஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார்.[6] 1991 ஆம் ஆண்டில் இவரது தந்தை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு சென்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.[7] மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.[8] இவர் 1995 ஆம் ஆண்டு திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜில் ஆய்வியல் நிறைஞர் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார்.[9]
Remove ads
பணித்துறை
ஆரம்பகால வாழ்க்கை
ராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.[10] இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002 - இன் பிற்பகுதியில் மும்பை திரும்பினார்.[11]
அரசியல் வாழ்க்கை
2003 ஆம் ஆண்டில் இவர் தேசிய அரசியலுக்கு வரப்போவதாக ஊடகங்கள் பரவலாக செய்திகள் வெளியிட்டன. ஆனாலும் இவர் அதை உறுதிப்படுத்தவில்லை.[12] இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.[12] பதினான்கு வருட இடைவேளைக்குப்பின் நல்லெண்ணப் பயணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் காண இவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன் பாகிஸ்தானுக்கு சென்று வந்தார்.[13]
இவர் தன் தந்தையின் முன்னாள் தொகுதியும் தன் தாயின் அப்போதைய தொகுதியுமான அமேதிக்கு சனவரி 2004-இல் சென்றிருந்தபோது இவர் மற்றும் இவருடைய சகோதரியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆருடங்கள் பலமாக வலம் வந்தன. அரசியல் பிரவேசம் பற்றிய தீர்மானமான முடிவை சொல்ல நிராகரித்து விட்டாலும் தான் அரசியலை வெறுக்கவில்லை என்று பதிலளித்தார். "தான் உண்மையாகவே எப்பொழுது அரசியலில் நுழைவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" என்றும் பதிலளித்தார்.[14]
ராகுல்காந்தி அவர்கள் அரசியலில் தனது வருகையை மார்ச்சு 2004ல் அறிவித்தார். இந்தியாவின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையான லோக்சபாவிற்கு மே 2004 இல் நடைபெற்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான உத்திரப்பிரதேசத்தில் உள்ள அமேதியில் தான் போட்டியிடப்போவதாக மார்ச்சு 2004ல் அறிவித்தார்.[15] இவர் தந்தைக்கு முன்பே, அவரது சித்தப்பா சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறப்பதற்கு முன்பு வரை அமேதியின் பிரதிநிதியாக இருந்தார். இவரது தாயாரும் ரேபரேலி தொகுதிக்கு மாறும் வரை அமேதி தொகுதியில் பதவியில் இருந்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி எண்பது தொகுதி கொண்ட உத்திரப் பிரதேசத்தில் வெறும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது.[14] இவரது சகோதரியான பிரியங்கா காந்தியின் அதிக வசீகரம் கூடுதலான வெற்றியைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்த அரசியல் விமர்சகர்களுக்கு காங்கிரசின் இந்த நிலை பெரும் வியப்பை உண்டாக்கியது. கட்சி பிரமுகர்களிடம் ஊடகங்களுக்கு அளிப்பதற்கு தேவையான தன்விபர பட்டியல் இல்லை. இவ்வாறு அவரின் பிரவேசம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த அரசியல் குடும்பத்தின் இளம் உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை இந்தியாவின் இளைய தலைமுறையில் ஒருவராக இருந்து சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணலால் அறியலாம்.[16] அதில் இந்தியாவின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றதோடு, அரசியல் பிளவுகளுக்கு கண்டனமும் தெரிவித்தார். மேலும், சாதி மற்றும் மதப்பிரிவினைகளால் ஏற்படும் பதற்றத்தை குறைக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.[15] அவருடைய குடும்பத்தின் ஈடுபாடு அத்தொகுதியில் நீண்ட காலமாக இருப்பதைக் கண்ட அத்தொகுதி உள்ளூர்வாசிகள் அவர் வேட்பாளர் ஆனதும் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.[14]
ராகுல் தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.[17] அவருடைய தேர்தல் பிரச்சாரம் அவரது சகோதரி பிரியங்கா காந்தி மேற்கோள்படி வழி நடத்தப்பட்டது. [மேற்கோள் தேவை] 2006 வரையிலும் அவர் வேறு எந்த துறையிலும் கவனம் செலுத்தாமல் தனது தொகுதி பிரச்சினைகளிலும், உத்திரப் பிரதேச அரசியலிலும் மட்டுமே கவனம் செலுத்தினர். மேலும் இதனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் சோனியா காந்தி இவரை வருங்காலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மாற்ற தயார் படுத்தி வருவதாக ஊகங்களை தெரிவித்தனர்.[18]
சனவரி 2006 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ஹைதராபாத் மாநாட்டில் ராகுல் காந்தி அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பேற்று நடத்திட வேண்டும் எனவும் மற்றும் பிரதிநிதிகளை அறிமுகம் செய்யுங்கள் எனவும் ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன் பின் பேசிய அவர் "உங்களின் உணர்வுகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை கைவிட்டு விடப்போவதில்லை என்று உறுதி கூறுகின்றேன்". ஆனால் உடனடியாக கட்சியின் உயர் பதவியை ஏற்றுக்கொள்ளவதை மறுத்துவிட்டு அனைவரையும் அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டார்.[19]
2006ல் ரேய்பரேலி தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில் இவரது தயார் போட்டியிட்டபோது, ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் தங்களது தாயாருக்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக இத் தேர்தலில் தங்களது தாயார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றார்.[20]
2007ல் உத்திரபிரதேச சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரசின் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி 8.53% வாக்குகளைப்பெற்று வெறும் 22 இடங்களில் மட்டுமே வென்றது. இத்தேர்தலில், தாழ்த்தப்பட்ட இந்திய மக்களின் பிரதிநிதிக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி முதல் முறையாக தனிப்பெரும்பான்மை பெற்று பதினாறு ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைத்தது.[21]
24 செப்டம்பர் 2007ல் காங்கிரஸ் கட்சியின் செயல் அலுவலகத்தில் நடந்த கட்சியின் மறுசீரமைப்பில் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டார்.[22] இச் சீரமைப்பிலேயே இவர் இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கும், இந்திய தேசிய மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.[23]
இவர் இளைய தலைவராக தன்னை நிரூபித்துக்கொள்ளும் முயற்சியாக நவம்பர் 2008 ஆம் ஆண்டில் புது டெல்லியில் 12, துக்ளக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேர்காணல் நடத்தி குறைந்த பட்சம் 40 நபர்களை தேர்வுசெய்து இந்திய இளைஞர் காங்கிரசை வழி நடத்தும் ஆலோசகர்களாக நியமித்தார். இவர் 2007 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.[24]
இவர் திசம்பர் 16, 2017 அன்று இந்திய தேசிய காங்கிரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
2009 ஆம் ஆண்டு தேர்தல்
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நபரை 3,33,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் அமேதி தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் ராகுல் காந்தியே ஆவார்.[25] இவர் ஆறு வாரங்களில் 125 பிரச்சார பொது கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.
இவருடைய கட்சி வட்டாரத்தில் இவர் ஆர் ஜி என அறியப்படுகிறார்.[26]
2019 ஆம் ஆண்டு தேர்தல்
பதினேழாவது மக்களவைத் தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வழக்கமாக போட்டியிடும் அமேதியில் இசுமிருதி இரானியிடம் 292973 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அங்கு அவர் 413394 வாக்குகளும், இசுமிருதி இராணி 468514 வாக்குகளும் பெற்றனர். எனினும், வயநாட்டில் 706367 வாக்குகள் பெற்று இந்திய பொதுவுடமை கட்சியின் சுனீரை தோற்கடித்தார். சுனீர் பெற்றவாக்குகள் 274597 ஆகும்.
2024 ஆம் ஆண்டு தேர்தல்
பதினெட்டாவது மக்களவைத் தேர்தலில் ரே பரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றிபெற்றார்.
வயநாட்டில் இராகுல் காந்தியிடம் தோற்ற ஆனி இராசா இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராசாவின் மனைவி ஆவார்
ஒன்றுக்கு மேற்பட்ட மக்களவைத்தொகுதியில் உறுப்பினராக இருக்கமுடியாது என்பதால் வயநாடு, ரே பரேலி ஆகிய இரு தொகுதிகளில் இராகுல் காந்தி வெற்றிபெற்றதாலும் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட (யூன் 4) 14 நாட்களுக்குள் ஒரு தொகுதி உறுப்பினர் பதவியை விடவேண்டும் என்பதாலும் வயநாடு மக்களவைத்தொகுதி உறுப்பினர் பதவியை துறந்து விட்டு ரே பரேலியை தக்க வைத்துக்கொள்கிறார். [27] வயநாட்டில் காங்கிரசு சார்பாக இராகுலின் சகோதரி பிரியங்கா வதேரா போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது [28] [29]
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவி
கடந்த 19 ஆண்டுகளாக சோனியா காந்தி வகித்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சமீபத்தில் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக 2013 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றிய இவர் 2017 ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பினை ஏற்றார். புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான விழாவில் இந்தப் பொறுப்பினை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார்.[2] இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரசு கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக முறைப்படி அறிவித்துள்ளார்.[30]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் சென்றார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.[31][32]
விமர்சனம்
2006 ஆம் ஆண்டு இறுதியில் நியூஸ் வீக் என்ற பத்திரிக்கை இவர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தது. இவர் ஹார்வர்ட் மற்றும் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்று பார்வையாளர் குழு கூறியது. ராகுல் காந்தியின் சட்ட ரீதியான அறிக்கைக்கு பின்னர் நியூஸ் வீக் தனது முந்தைய குற்றச்சாட்டை மறுத்து கருத்து வெளியிட்டது.[33]
1971 இல் பாகிஸ்தானை இரண்டாக பிரித்ததை தனது குடும்பத்தின் சாதனையாக கூறினார். இவர் கூறிய இந்த கருத்து இந்திய அரசியல் பிரமுகர்களிடம் மட்டுமல்லாது பாகிஸ்தானின் ஒரு சில முக்கியமான மக்களாலும் அந்நாட்டு வெளியுறவு தொடர்பு அதிகாரியாலும் விமர்சனத்திற்கு உள்ளானது.[34] மிக பிரபலமான வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப் அவர்கள் இந்த கருத்து பங்களாதேஷ் புரட்சியை அவமதிப்பதாக உள்ளது என்று கூறினார்.[35]
2007இல் உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய இவர் "காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவர் அரசியலில் இருந்திருந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காது" என்று கூறினார். இக்கருத்து 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போதைய பிரதமராக இருந்த திரு.பி.வி.நரசிம்மராவ் அவர்களை தாக்கி பேசியதாகவே கருதப்பட்டது. ராகுலின் இந்த அறிக்கை பாஜகவின் சில உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்தை உண்டு பண்ணியது. சமாஜ்வாடி கட்சியும் இடது சாரிகளும் கூட இவரது கருத்தை "இந்து-முஸ்லிம்களுக்கு எதிரானது" என்றனர்.[36] இவர் சுதந்திரப்போரட்டவீரர்கள் மற்றும் காந்தி-நேரு குடும்பத்தைப்பற்றி கூறிய கருத்துக்களுக்கு எதிராக பாஜக தலைவரான திரு.வெங்கையா நாயுடு அவர்கள் "அவசரநிலை பிரகடனத்திற்காக காந்தியின் குடும்பம் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா" என்ற கேள்வியை எழுப்பி விமர்சித்தார்.[37]
2008இன் பிற்பகுதியில் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட, அவமதிப்பின் பலனாக அவருக்கு இருந்த செல்வாக்கு வெளிப்பட்டது. காந்தி மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக சந்திர சேகர் ஆசாத் விவசாய பல்கலைகழக மண்டபத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அரசியல் காரணங்களின் விளைவாக முதல் அமைச்சர் செல்வி. மாயாவதி அவர்களால் இது தடை செய்யப்பட்டது.[38] இதைத் தொடர்ந்து அப் பல்கலைக்கழக துணை வேந்தர் திரு. வி.கே. சூரி அவர்கள், அம்மாநில கவர்னரும், அப் பல்கலைக்கழக வேந்தரும், காந்தி குடும்பத்தின் ஆதரவாளரும், திரு. சூரி அவர்களை நியமித்தவருமான திரு.டி.வி.ராஜேஸ்வர் அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[39] இந்நிகழ்ச்சி கல்வி, அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமைந்ததைத் தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியாவில் "அரச குடும்ப சம்பந்தமான கேள்விகளுக்கு ராகுல் காந்தியின் அடிவருடிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளன" என்று அஜித் நினன் என்பவர் கேலிச்சித்திரம் வரைந்திருந்தார்.[40]
தூய ஸ்டீபன் கல்லூரியில்இவருக்கு இருந்த துப்பாக்கி சுடும் திறமையை அடிப்படையாகக் கொண்டு அக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது சர்ச்சைக்குரிய விஷயமானது.[5] ஒரு வருடம் கல்வி கற்ற பின் 1990 ல் அக்கல்லூரியிலிருந்து வெளியேறினார்.
தூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் தங்கியிருந்த ஒரு வருட கால அனுபவத்தை பற்றி கூறுகையில் அங்கு கேள்விக் கேட்கும் மாணவர்களை "ஏற-இறங்க" பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை கண்டிப்புடன் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார். தூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் படித்த நாட்களை நினைவு கூறுகையில், வகுப்பறையில் கேள்வி கேட்பது என்பது நல்ல விஷயமாக இருந்ததில்லை என்றும், நீங்கள் நிறைய கேள்வி கேட்டீர்களானால் உங்களை ஏற இறங்க பார்ப்பார்கள், என்றும் கூறினார். இவரின் கருத்தைப்பற்றி அக்கல்லூரியின் ஆசிரியர்கள் கூறும்போது, "அவரின் சொந்த அனுபவத்தை பொறுத்து" அவர் கூறிய கருத்துக்கள் சரியானவையே என்றும் தூய. ஸ்டீபன் கல்லூரியின் பொதுமையாக்கப்பட்ட கல்வி சூழ்நிலைக்கானது அல்ல என்றனர்.[41]
சனவரி 2009இல் பிரித்தானிய நாட்டின் அயல் நாட்டு செயலாளர் டேவிட் மிலிபான்ட் அவர்களுடன், உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் தன்னுடைய நாடாளுமன்ற தொகுதியான அமேதிக்கு அருகாமையில் ஒரு கிராமத்தில் காந்தி மேற்கொண்ட எளிய சுற்றுலாவிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அடுத்ததாக திரு. மிலிபான்ட் அவர்களின் தேவையற்ற ஆலோசனைகளும், தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் பற்றிய கருத்துக்களும், திரு. முகர்ஜி மற்றும் பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்களுடன் நடத்திய ரகசிய சந்திப்பு முறைகளும், பின்னடைவாகக் கருதப்பட்டது.[42]
Remove ads
அவதூறு வழக்கில் தண்டனையும், பதவி பறிப்பும்
2019 இந்தியப் பொதுத் தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி, திருடர்கள் எல்லாம் தங்கள் பெயருக்குப் பின் மோடி என்ற பெயர் வைத்துள்ளனர் என்று கர்நாடகாவில் பேசினார்.[43] இது மோடி என்ற குலப்பெயரைப் பெயரைக் கொண்ட சமூகத்தவர்களை அவமதிப்பு செய்வதாக உள்ளது என சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கை குஜராத் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பூர்ணேஷ் மோடி என்பவர் வழக்கு பதிவு செய்தார். 23 மார்ச் 2023 அன்று சூரத் நீதிமன்றம், அவதூறு வழக்கில் குற்றத்தை உறுதி செய்து, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.[44]
மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு
24 மார்ச் 2023 அன்று மக்களவை தலைவர் ஓம் பிர்லா, குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இராகுல் காந்தி மக்களவை உறுப்பினராகத் தகுதி அற்றவர் எனக்காரணம் காட்டி, இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 102ன் கீழ் இராகுல் காந்தி மக்களவை உறுப்பினராக நீடிப்பதிலிருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.[45][46] மேலும் மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும்[47], வயநாடு மக்களவைத் தொகுதி[48] காலியாகயுள்ளதாகவும் அறிவித்தது.[49]
இராகுல் காந்திக்கு கீழமை நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றமும் 7 சூலை 2023 அன்று உறுதி செய்தது.[50]
சாவர்க்கரை விமர்சித்த குற்றவியல் வழக்கில்
2022ஆம் ஆண்டில் பாரத் ஜோடா யாத்திரையின் போது, மஹாராஷ்டிராவின் அகோலா நகரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கரை பிரித்தானியர்களின் பணியாள் என்றும், அதற்காக ஓய்வூதியம் பெற்றார் என்றும் விமர்சித்தார்.
இந்த அவதூறு பேச்சிற்காக இந்திய உச்ச நீதிமன்றம், இந்தியாவின் வரலாறு, புவியியல் பற்றி எதுவுமே தெரியாத நிலையில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி தவறாகப் பேசுவது சரியல்ல என்று எச்சரிகை விடுத்தது. மீண்டும் ஒருமுறை ராகுல் காந்தி அவதூறாகப் பேசினால், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும்' என்றும் தெரிவிக்கப்பட்டது.[51]
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads