மன்மோகன் சிங்

13வது இந்திய பிரதமர் From Wikipedia, the free encyclopedia

மன்மோகன் சிங்
Remove ads

மன்மோகன் சிங் (Manmohan Singh; 26 செப்டம்பர் 1932 26 திசம்பர் 2024) ஓர் இந்திய அரசியல்வாதியும் பொருளியலாளரும் கல்வியாளரும் ஆவார். இவர் 2004 முதல் 2014 வரை 13-ஆவது இந்தியத் தலைமையமைச்சராகப் பணியாற்றினார். சவகர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோதிக்குப் பிறகு நீண்ட நாட்களுக்கு தலைமையமைச்சராகப் பதவியில் இருந்தவர்.[1] இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான மன்மோகன் சிங், இந்தியாவின் முதல் சீக்கியத் தலைமையமைச்சரும் ஆவார்.[2] சவகர்லால் நேருக்குப் பிறகு முழு ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த பிறகு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைமையமைச்சரும் இவரே.[3][4]

விரைவான உண்மைகள் மன்மோகன் சிங்Manmohan Singh, 13-ஆவது இந்தியப் பிரதமர் ...

இன்றைய பாக்கித்தானின் கா நகரில் பிறந்த மன்மோகன் சிங், 1947 இந்தியப் பிரிவினையின் போது குடும்பத்துடன் இந்தியாவுக்குக் குடி பெயர்ந்தார். சிங் ஆக்சுபோர்டில் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, 1966-1969 காலக்கட்டத்தில் ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றினார். லலித் நாராயண் மிஸ்ரா அவரை வணிக, தொழில்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக நியமித்தார். சிங் இந்திய அரசாங்கத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (1972-1976), ரிசர்வ் வங்கியின் ஆளுநர் (1982-1985), திட்ட ஆணைக்குழுவின் தலைவர் (1985-1987) போன்ற பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

1991 இல், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, ​​புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ், அரசியல்வாதியல்லாத மன்மோகன் சிங்கைத் தனது அமைச்சரவையில் நிதியமைச்சராகச் சேர்த்துக்கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில், கடுமையான எதிர்ப்பையும் மீறி, சிங் இந்தியாவின் பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கும் பல கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இந்த நடவடிக்கைகள் நெருக்கடியைத் தவிர்ப்பதில் வெற்றிகரமாக இருந்த போதிலும், சீர்திருத்த எண்ணம் கொண்ட பொருளாதார வல்லுநராக உலகளவில் சிங்கின் நற்பெயரை உயர்த்திய போதிலும், காங்கிரசுக் கட்சி 1996 பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து, சிங் 1998-2004 அடல் பிகாரி வாச்பாய் அரசாங்கத்தின் போது இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

2004 இல் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, ​​அதன் தலைவர் சோனியா காந்தி எதிர்பாராதவிதமாக தலைமையமைச்சர் பதவியை சிங்கிடம் விட்டுக்கொடுத்தார். அவரது முதல் அமைச்சரவை தேசிய ஊரக சுகாதார இயக்கம், தனித்துவ அடையாள ஆணையம், ஊரக வேலை உறுதித் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றியது. 2008 இல், இடது முன்னணிக் கட்சிகள், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கையெழுத்திட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடிசார் அணுவாற்றல் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது சிங்கின் அரசாங்கத்தைக் கிட்டத்தட்ட வீழ்ச்சியடையச் செய்தது.[5] இவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது.[6][7]

2009 பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூடுதல் இடங்களுடன் ஆட்சிக்கு வந்தது. சிங் தன் தலைமையமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில், சிங்கின் இரண்டாவது அமைச்சரவையின் அரசாங்கம் 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஆகியவற்றில் பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. அவரது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, 2014 பொதுத் தேர்தலின் போது அவர் தலைமையமைச்சர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகினார்.[8] சிங் ஒருபோதும் மக்களவை உறுப்பினராக இருந்ததில்லை. ஆனால், 1991 முதல் 2019 வரை அசாம் மாநிலத்தின் சார்பாகவும், 2019 முதல் 2024 வரை இராசத்தான் மாநிலத்தின் சார்பாகவும், மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[9][10]

Remove ads

இளமையும் கல்வியும்

மன்மோகன் சிங் 1932 செப்டம்பர் 26 அன்று, பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபில், கா என்ற ஊரில், குர்முக் சிங் கோலி, அம்ரித் கௌர் என்கிற கத்ரி பின்னணி கொண்ட பஞ்சாபி சீக்கிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார்.[11][12] இளமையிலேயே தாயார் இறந்துவிட்டார்.[13][14] தந்தைவழிப் பாட்டி ஜம்னா தேவி இவரை வளர்த்தார். சிங் தன் பாட்டியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.[11][14] சிங்கின் தொடக்கப் பள்ளிப் படிப்பு உருது மொழியில் இருந்தது. அதன் பிறகு அவர் பெசாவரில் உள்ள மேனிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.[11][15] பல ஆண்டுகளுக்குப் பிறகு, தலைமையமைச்சராக இருந்தபோதும், சிங் தனது இந்தி உரைகளை உருது எழுத்தில் எழுதியே படித்து வந்தார். இருப்பினும், சில சமயங்களில் அவர் தனது தாய் மொழியான பஞ்சாபியை எழுதும் குர்முகி எழுத்தையும் பயன்படுத்துவார்.[16]

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, சிங்கின் குடும்பம் இந்தியாவின் அல்துவானிக்குக் குடிபெயர்ந்தது.[13] 1948 இல் அவர்கள் அமிர்தசரசுக்கு இடம் பெயர்ந்தனர். சிங், அங்குள்ள இந்துக் கல்லூரியில் படித்தார்.[13][17] பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில்[18][19][20] பொருளியல் படித்து, 1952, 1954 இல் முறையே இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். அவர் எப்போதும் படிப்பில் முதலிடத்தில் இருந்தார். 1957 இல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் தனது பொருளியல் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.[21]

கேம்பிரிச்சுக்குப் பிறகு, சிங் இந்தியாவுக்குத் திரும்பி, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[22] 1960 இல், அவர் முனைவர் பட்டப்படிப்பிற்காக ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு, இயன் லிட்டில் என்கிற பேராசிரியரின் மேற்பார்வையில் ஆய்வு செய்து, "இந்தியாவின் ஏற்றுமதி செயல்திறன், 1951-1960, ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் கொள்கை தாக்கங்கள்" என்று தலைப்பிடப்பட்ட தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை வழங்கினார்.[23]

Remove ads

பணி அனுபவம்

Remove ads

அரசியல்

  • இவர் 1982 முதலே இந்திய ரிசர்வ் வங்கி மேலாளராக பொறுப்பில் இருந்த போதே அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவியும், இந்திய பிரதமருமான இந்திரா காந்தி காலகட்டத்திலேயே காங்கிரஸ் கட்சியில் திட்ட ஆலோசகராகவும், அக்கட்சியின் முன்னேற்றத்திற்கு சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டதை தொடர்ந்து மன்மோகன் சிங் பிரதமர் இந்திரா காந்தியின் அபிமானம் பெற்ற நம்பிக்கையான நபராக உருவானார்.
  • பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் கட்சியின் நம்பிக்கை பெற்ற சகாக்களில் ஒருவரானார்.
  • மேலும் காங்கிரஸ் கட்சியில் (1982–1991) வரையிலான காலகட்டத்தில் ராஜ்ய சபா உறுப்பினராகவே தொடர்ந்தார்.
  • மேலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சந்திரசேகர், நரசிம்ம ராவ் போன்ற பிரதமர் மந்திரிகளின் அமைச்சரவையில் பல ஆலோசனை வழங்கும் திட்டக்குழு தலைவராகவும் செயல்பட்டார்.
  • மேலும் அப்போது பிரதமர் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக யாரை நியமிக்கலாம் என்று அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசனை கேட்ட போது கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழகத்தை சேர்ந்த அன்றைய அதிமுக கட்சியின் தலைவியும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் மன்மோகன் சிங் பெயரையே பரிந்துரை செய்தார்.
  • மேலும் 1991ல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் இந்திய பொருளாதார பெரும் பின்னடைவில் இருந்த போது இந்தியாவில் அதுவரை இல்லாத விலையேற்றம் போன்ற சிக்கல்களில் இருந்து மீட்டெடுத்ததே அன்றைய இந்திய நிதித்துறை அமைச்சரவையில் இருந்த திரு. மன்மோகன் சிங் தான் என்பதை யாராலும் மறக்க முடியாது.
  • மேலும் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இல்லாத போதிலும் சிறந்த எதிர்கட்சி தலைவராகவே செயல்பட்டுள்ளார்.
  • காங்கிரஸ் கட்சியின் (1991-1996) ஆட்சி காலத்தில் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகவும் பக்கபலமாக இருந்து இந்திய பொருளாதார சிக்கலை மேம்படுத்தியதில் மன்மோகன் சிங்க்கு பெரும் பங்கு உண்டு. இதனாலே அக்காலகட்டத்தில் நரசிம்ம ராவ்வின் நம்பிக்கை பெற்றவரில் ஒருவராக திகழ்ந்தார்.
  • பிறகு 2004, 2009 ஆகிய இரண்டு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற போதிலும் பிரதமராக திகழ்ந்த மன்மோகன் சிங் அவர்கள் தனது ஆளுமையை நேரடியாக செலுத்த முடியாமல் போனதற்கு காரணமே அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தான் என்ற குற்றச்சாட்டு எழுந்து காங்கிரஸ் கட்சியின் ஒரு கறையாகவே இன்றளவும் நீடிக்கிறது.
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கையும் இறப்பும்

மன்மோகன் சிங் 1958 இல் குர்சரன் கவுர் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு உப்பீந்தர் சிங், தமன் சிங், அம்ரித் சிங் என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.[24] உப்பீந்தர் சிங் அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.[25] தமன் சிங் ஓர் எழுத்தாளர்.[26] அம்ரித் சிங் ஒரு சட்டவாளர்.[27]

மன்மோகன் சிங், பல முறை இதய அறுவை சிகிச்சைகளுக்கு ஆளாகியிருந்தார்.[28] மே 2020 இல், அவர் உட்கொண்ட மருந்தின் எதிர்மறை விளைவு காரணமாக, புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[29] அக்டோபர் 2021 இல், சிங் பலவீனம், காய்ச்சல் காரணமாக மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.[30]

2024 திசம்பர் 26 அன்று, இதய நோய், முதுமை தொடர்பான பிரச்சனைகளின் காரணமாக, சிங், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.[31][32][33] மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மன்மோகன் சிங் தனது 92-ஆவது அகவையில் இறந்தார்.[34][35][36]

மன்மோகன் சிங்கின் இறப்பைத் தொடர்ந்து, தலைமையமைச்சர் நரேந்திர மோதி மன்மோகன் சிங்கை "இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவர்" என்று கூறி நாடுதழுவிய துயரத்தை அறிவித்தார்.[35] குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் சா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் எச். டி. தேவகௌடா ஆகியோரும் சிங்கின் தலைமையைப் பாராட்டி அறிக்கைகளை வெளியிட்டனர்.[37]

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads