இராணி மங்கம்மாள்

From Wikipedia, the free encyclopedia

இராணி மங்கம்மாள்
Remove ads

இராணி மங்கம்மாள் (இறப்பு: அண். 1705) பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி ஆவார்.[1] மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத் துணையாகக் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை ஆண்டவர். திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது.

விரைவான உண்மைகள் இராணி மங்கம்மாள், ஆட்சி ...
விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

இராணி மங்கம்மாள், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் (1659 -1682) தளபதியாக இருந்த தப்பகுள லிங்கம நாயக்கரின் மகளாவார்.[2] சொக்கநாத நாயக்கர் மங்கம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். ஆயினும் அவரை இராணியாகப் பட்டம் சூட்டவில்லை. தஞ்சாவூரை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்ய சொக்கநாத நாயக்கர் நினைத்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. 1682 ஆம் ஆண்டில் சொக்கநாத நாயக்கர் இறந்தபோது அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாத குழந்தை. எனவே, தன் மகனைக் காக்க வேண்டி உடன் கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பினை காப்பாளராக ஏற்றார்.

Remove ads

அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்

மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு சின்னமுத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்வித்தார். அதன் பிறகு அவருக்கு முடி சூட்டினார். அன்னையின் உதவியோடும் அறிவுரைகளோடும் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார் . தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றை போரிட்டு மீட்டார். ஏழாண்டு காலம் நல்வழியில் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் பெரியம்மை நோயால் 1688ஆம் ஆண்டில் காலமானார். கணவர் இறந்த சிறிது நாளிலேயே ஆண்மகனைப் பெற்றெடுத்த சின்ன முத்தம்மாள் கணவரின் பிரிவு தாங்காமல் குளிக்க பயன்படுத்தும் பன்னீர் கலந்த நீரை அளவுக்கு அதிகமாக குடித்து ஜன்னி கண்டு உயிரிழந்தார். அம்மன்னரின் மகனான விஜயரங்க சொக்கநாதருக்குப் பெயரளவில் பட்டம் சூட்டப்பட்டது. அவர் சார்பில் அவருடைய பாட்டியும், சொக்கநாத நாயக்கரின் மனைவியுமான மங்கம்மாள் காப்பாட்சியராக பதவி ஏற்றுக்கொண்டு, இராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1706 வரை ஆட்சி நடத்தினார்.

Remove ads

இராணி மங்கம்மாளின் ஆட்சி

மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லை. இவர் அண்டையில் உள்ள அரசுகளிடம் நட்புறவையே விரும்பினார். ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களால் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது. மிகத்திறமையான இராச தந்திரியாகவும் தேர்ந்த அரசியல் அறிவும் பெற்ற மங்கம்மாள் இப்பகைகளை மிகத்திறமையுடன் முறியடித்தார். ஆட்சி காலத்தில் நல்ல பல திட்டங்களைத் தீட்டி மதுரையைச் சிறப்பாக ஆண்டார்.

முகலாயர்களுடனான உறவு

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தக்காணம் வரை தனது பேரரசை விரிவு செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திக்கொண்டிருந்தார். செஞ்சிக் கோட்டையில் பதுங்கி இருந்த மராத்திய மன்னன் இராசாராமைக் கைது செய்ய, தம் தளபதி 'சல்பீகார் அலிகான்' என்பவரை அனுப்பினார். சல்பீகார் அலிகான் சுமார் ஏழாண்டு காலம் செஞ்சிக்கொட்டையை முற்றுகையிட்டான். முற்றுகை நடந்து கொண்டிருக்கும் போதே மற்ற தமிழக அரசுகளைப் பணிய வைத்துத் திறைப்பொருளைச் செலுத்த படைகளை அணுப்பினான். மைசூர் மன்னரும் தஞ்சை மராத்தியரும் பணிந்து திறை செலுத்தினர்.

இராணி மங்கம்மாளும் முகலாயர் படை வலிமையையும் தன் படை வலிமையியும் நன்குணர்ந்து முகலாயருக்குப் பணிந்துபோக முடிவு செய்தார். விலையுயர்ந்த பொருள்களை தளபதி சல்பீகார் அலிகானுக்கு அன்பளிப்பாக அனுப்பி போரைத் தவிர்த்தார். பின் முகலாயர்களின் உதவியால், மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார். உடையார்பாளையச் சிற்றரசர் கைப்பற்றியிருந்த மதுரையின் பகுதிகளையும் மீட்டார்.

Remove ads

திருவிதாங்கூர்ப் போர்

மதுரை நாயக்க அரசுக்கு உட்பட்ட சிற்றரசாக அப்போது திருவிதாங்கூர் அரசு இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் இரவி வர்மா, மதுரை நாயக்க அரசுக்கு செலுத்த வேண்டிய திறைப்பொருள்களைச் செலுத்தவில்லை. மேலும் கல்குளம் பகுதியில் இருந்த நாயக்கர் படையையும் தாக்கி அழித்தான். எனவே, தளவாய் நரசப்பையா என்பவர் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்தது. திறைப்பொருளாக பொன், பீரங்கி முதலிய பொருள்களையும் பெற்றுத் திரும்பியது.

Remove ads

தஞ்சைப் போர்

தஞ்சையை ஆண்ட மராத்தியருக்கும் மதுரை நாயக்கர்களுக்குமிடையில் நல்லுறவு நிலவவில்லை. தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜி, மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிப் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டார். இராணி மங்கம்மாள் தளவாய் நரசப்பையரை படைகளுடன் அனுப்பி அப்பகுதிகளை மீட்டார். அப்படை தஞ்சையை அச்சுறுத்தியது. எனவே தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதர் இராணி மங்கம்மாளின் படைகளுக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பினார்.

மைசூர்ப் போர்

முகலாய அரசு தக்கானத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.

சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே தற்போது கண்ணம்பாடி அணை (Krishna Raja Sagar - KRS) உள்ள பகுதியில் அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினான். அப்போது மங்கம்மாள் 1700ஆம் ஆண்டில் தஞ்சையுடனான பகையை மறந்து அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது.

Remove ads

ராமநாதபுரம் போர்

இராணி மங்கம்மாளின் முதலும் கடைசியுமான மிகப்பெரிய தோல்வியாக இராமநாதபுரம் போர் இருந்தது. மதுரைக்கு எதிராகவும் தஞ்சைக்கு ஆதரவாகவும் ராமநாதபுரம் மன்னர் ரகுநாத சேதுபதி இருந்ததால் 1702 ல் ரகுநாத சேதுபதிக்கு எதிராக இராணி மங்கம்மாள் தனது படைகளை அனுப்பினார். இந்த போரில் மதுரையின் தொடர் வெற்றிகளுக்குக் காரணமான தளவாய் நரசப்பைய்யா வீர மரணம் அடைந்தார். இது போரின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

Remove ads

மங்கம்மாளின் சமயப் பொறை

மதுரை நாயக்கர்களைப் போலவே மங்கம்மாளும் சமயப் பொறையைக் கடைப் பிடித்தார்." ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைப் கைக்கொண்டு வாழ்வதே தருமம் " என்ற கொள்கையைக் மங்கம்மாள் பின்பற்றினார். மதுரை மீனாட்சி அம்மனுக்கு பல்லக்கு மற்றும் பொன்னணிகள் பலவற்றை வழங்கினார். ஆனித்திங்களில் ஊஞ்சல் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் விழாக்கள் நடைபெறும்போது, இராணி மங்கம்மாள் தமது செங்கோலை அம்மனின் முன்வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சித்திரை முழுமதி நாளில் இராணி மங்கம்மாளும் இளவரசரும் தமுக்கம் அரண்மனையில் தங்கி, மீனாட்சி திருமணத்தைக் கண்டு களித்தனர். ஆற்றில் இறங்கும் கள்ளழகரை அவர்கள் இருவரும் வழிபட்டனர்.

தான் ஒரு இந்துவாக இருந்த போதும் கிறிஸ்துவர் மற்றும் இசுலாமியர்களையும் மதித்தார். கிறித்துவ மத குருமார்களை சமயப் பேருரை செய்ய அனுமதி அளித்தார். சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்டிருந்த 'மெல்லோ' பாதிரியாரை விடுதலை செய்ததோடு, 'போசேத்' என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.

இசுலாமியர்களுக்கும் மங்கம்மாள் மானியம் அளித்தார். 1701-ல் இசுலாமியர்களின் நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காகவும் திருச்சியிலுள்ள நிலங்களை மானியமாக வழங்கியது குறித்துக் கல்வெட்டு கூறுகிறது

இராணி மங்கம்மாளின் அறப்பணிகள்

இராணி மங்கம்மாள் மக்கள் நலம் பேணும் பல அறச் செயல்களைச் செய்தார். மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரம் அமைத்தார். அது 'மங்கம்மாள் சத்திரம்' என இன்றும் அழைக்கப்படுகிறது. புதிய சாலைகள் பலவற்றை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது[3]. குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க ஆணையிட்டார். பொது மக்களுக்காக குடிநீர் ஊருணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார். தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள் தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு ஆணையிட்டார். வெள்ளத்தால் அழிந்த கரையோரத்துச் சிற்றூர்களையும் சீரமைத்தார். தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக விளங்கும் தமுக்கம் அரண்மனையே இராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாகும்.[4] இதிலுள்ள தமுக்கம் மைதானத்தில் தான் அக்காலத்தில் யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் அரச விழாக்களும் நடைபெற்றன.

Thumb
இராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனை தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகம்
Remove ads

இறுதிக்காலம்

மிகத்திறமையாக ஆட்சி செய்த இராணி மங்கம்மாளால் தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன் நேரம் செலவழிக்க இயலாமல் போனது. எனவே, தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் இராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார். எனவே தனது பெயரனாலேயே அவர் சிறையிலிடப்பட்டார்.[5] ,[6] இதுவே அவரது வாழ்நாளின் இறுதியாயிற்று இராணி மங்கம்மாள் 1706- ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads