இரா. சம்பந்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothayam Sampanthan, 5 பெப்ரவரி 1933 – 30 சூன் 2024) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும்,[1] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் ஆவார். 1977 முதல் 1983 வரையும் பின்னர் 2001 முதல் இறக்கும் வரையும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2015 செப்டம்பர் 3 முதல்[2][3][4] 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லீலாதேவி என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[5]
அரசியலில்

சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[6] 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு சூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதைகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்[7].
1989 நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். கூட்டணியின் வேட்பாளர் எவரும் இம்மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை.[8][9]
2001 ஆம் ஆண்டில் தவிகூ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத படியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்[10].
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டினை முன்னெடுத்தது. இந்நிலைப்பாட்டுக்கு தவிகூ தலைவர் வி. ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்துடன், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை.[11] இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004,[12] 2010[13], 2015,[14][15] 2020[16][17][18] நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
எதிர்க்கட்சித் தலைவர்
2015 தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][19]
இறப்பு
இரா. சம்பந்தன் 2024 சூன் 30 இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 91-ஆவது அகவையில் காலமானார்.[20][21]
தலைவர்கள் இரங்கல்
இரா. சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது இரங்கல் செய்தியில், தமிழ் இனத்தின் பாதுகாப்புக்காக இடைவிடாது போராடியவர் சம்பந்தன் என்று தெரிவித்தார்.[22] இலங்கை அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த இரங்கலில் "தேசியத் தலைவராக நாட்டில் பிளவுகளைக் குறைக்கப் பாடுபட்டவர் சம்பந்தன்" என்று கூறினார்.[23] தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது செய்தியில், "இறுதி மூச்சு வரை தமிழர் நலனுக்காகவே போராடியவர் சம்பந்தன்" எனத் தெரிவித்தார்.[24]
Remove ads
தேர்தல் வரலாறு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads