இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் (2020 Sri Lankan parliamentary election) இலங்கையின் 16-வது நாடாளுமன்றத்திற்காக (இலங்கைக் குடியரசின் 9-வது நாடாளுமன்றத்திற்காக) 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2020 ஆகத்து 5 இல் நடைபெற்றது.[1][2][3] 16,263,885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இவர்களில் 31.95% பேர் இளம் வாக்காளர்கள் ஆவர்.[4][5]
ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 145 இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.[6][7][8], எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 இடங்களையும் கைப்பற்றின.[9][10][11] முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் மிகப்பெரும் தோல்வியைக் கண்டது. இது ஒரேயொரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது.[12]
நாட்டில் பரவிய கொரோனாவைரசுப் பெருந்தொற்று காரணமாக தேர்தல்கள் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டு, இறுதியில் 2020 ஆகத்து 5 இல் நடத்தப்பட்டது.[13][14]
இத்தேர்தலில் 75% மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இது 2015 தேர்தலை விட சிறிது குறைவானதாகும்.[15]
2018 நவம்பரில், அன்றைய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தினார்.[16] பின்னர் மீயுயர் நீதிமன்றம் நாடாளுமன்றக் கலைப்பை இரத்துச் செய்து, அடுத்த தேர்தல் தேதியை 2020 இற்கு மீண்டும் தள்ளிப் போட்டது.[17] 2020 மார்ச் 2 இல் 15-வது நாடாளுமன்றம் புதிய அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டு, மார்ச் 12 முதல் 19 வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2020 ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கோவிடு-19 பெருந்தொற்று காரணமாக தேர்தலுக்கான நாள் பிற்போடப்பட்டு,[18][19] புதிய நாள் சூன் 20 என அறிவிக்கப்பட்டது. கொரோனாவைரசுத் தொற்று நீங்காதமையால், மீண்டும் 2020 ஆகத்து 5 இற்கு தேர்தல் தள்ளிப்போடப்பட்டது.[20][21]
Remove ads
காலக்கோடு
- 2018
- 9 நவம்பர் 2018 - அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து 2019 சனவரி 5 இற்குத் தேர்தல் தேதியை அறிவித்தார்.[22]
- 13 திசம்பர் 2018 - மீயுயர் நீதிமன்றம் அரசுத்தலைவரின் கட்டளை அரசியலமைப்புக்கு எதிரானதெனத் தீர்ப்பளித்து, நாடாளுமன்றத்தை மீண்டும் இயங்கச் செய்தது.[23]
- 16 திசம்பர் 2018 - மகிந்த ராசபக்ச பிரதமராகப் பதவியேற்றதை மீயுயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார்.[24][25]
- 2019
- 21 நவம்பர் 2019 – தேர்தல் நடத்துவதற்குரிய 2/3 பெரும்பான்மை இல்லாததால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி துறந்தார். அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது சகோதரர் மகிந்த ராசபக்சவை புதிய பிரதமராக நியமித்தார்.[26]
- 2020
- 30 சனவரி 2020 - ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.[27]
- 10 பெப்ரவரி 2020 - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய தேர்தல் கூட்டணியை அறிவித்தார்.[28]
- 17 பெப்ரவரி 2020 - சிறீலங்கா பொதுசன சுதந்திரக் கூட்டமைப்பு மகிந்த ராசபக்சவின் தலைமையில் புதிய அரசியல் கட்சியாகப் பதிவு செயப்பட்டது.[29]
- 2 மார்ச் 2020 - 15-வது நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச சிறப்பு வர்த்தமானி மூலம் அறிவித்தார்.[18] வேட்புமனுக்கள் 2020 மார்ச் 12 முதல் மார்ச் 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.[18]
- 3 மார்ச் 2020 - நாடாளுமன்றம் அரசுத்தலைவரினால் கலைக்கப்பட்டது. 2020 ஏப்ரல் 25 இல் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசி நாள் மார்ச் 18.[30]
- 19 மார்ச் 2020 - கோவிடு-19 தொற்றின் காரணமாக தேர்தல்கள் காலவரயறையின்றித் தள்ளிப்போடப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்.[31]
- 20 ஏப்ரல் 2020 - 2020 சூன் 20 ஐ புதிய தேர்தல் நாளாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்.[32][33]
- 6 மே 2020 - தேர்தல்கள் சூன் 20 இல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.[34]
- 9 மே 2020 - தேர்தல்கள் சூன் 20 இல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பிக்க ரணவக்க (ஜாதிக எல உறுமய), குமார வெல்கம ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.[35]
- 18 மே 2020 - சூன் 20 தேர்தல் நாளுக்கு எதிரான 8 மனுக்கள் மீதான வழக்குகள் மீயுயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.[36]
- 22 மே 2020 – தேர்தலுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணையின்றித் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் மீயுயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.[37]
- 2 சூன் 2020 – மீயுயர் நீதிமன்றம் தேர்தலுக்கு எதிரான வழக்குகளை விசாரணையின்றித் தள்ளுபடி செய்தது.[38]
- 10 சூன் 2020 – தேர்தலுக்கான புதிய தேதியாக ஆகத்து 5 ஐ தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.[39]
- 30 சூலை 2020 - தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் 2020 ஆகத்து 2 நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும் என தேர்தல் ஆணையகம் அறிவித்தது.[40]
- 6 ஆகத்து 2020 - வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 9:00 மணிக்கு நாடளாவிய அளவில் ஆரம்பமாயின.[41]
Remove ads
பின்னணி
2018 அரசியலமைப்பு நெருக்கடியின் போது, மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து, மகிந்த ராசபக்சவை பிரதமராக அறிவித்தார். ராசபக்ச தனது பெரும்பான்மையை wநாடாளுமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.[16]
ஆனாலும், நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து மீயுயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2018 திசம்பர் 13 இல், நாடாளுமன்றக் கலைப்பு சட்ட விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[42]
கோவிட்-19
2020 மார்ச் 19 இல், இலங்கையில் கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்திருந்தாலும், திட்டமிட்டபடி வேட்பு மனுக்கள் 2020 மார்ச் 18 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[43] வேட்பு மனுக்கள் தாக்கல் முடிவடைந்த அடுத்த நாள் மார்ச் 19 இல் தேர்தல்கள் ஆணையகம் தேர்தலை ஒத்தி வைத்தது.[44] 2020 ஏப்ரல் 25 தேர்தல் நாள் 2020 சூன் 20 இற்குத் தள்ளிப் போடப்பட்டது. கோவிட்-19 தாக்கம் குறையாததனால், மீண்டும் 2020 ஆகத்து 5 வரை தள்ளிப்போடப்பட்டது.
Remove ads
தேர்தல் விபரங்கள்
9-வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2019 ஆம் ஆண்டின் தேர்தல் வாக்காளர் பட்டியலிற்கமைய 16,263,885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இவர்களில் கம்பகா மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களும் (1,785,964), வன்னியில் அதி குறைந்த வாக்காளர்களும் (287,024) வாக்களிக்கத் தகுதி பெற்றனர். அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 வேட்பாளர்களும், சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 3,800 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.[45]
தேர்தல் முறைமை
பல-அங்கத்தவர்கள் கொண்ட 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் போட்டியிடும் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[46][47] ஏனைய 29 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் மூலம் கட்சிகள், மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரப்படி நியமிக்கப்படுகின்றனர்[48]
18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் சூன் 1 அன்று எந்த இடத்தில் சாதாரண வதிவாளராக இருக்கின்றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்ளலாம்.[49] தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமல்ல. ஒவ்வொரு வாக்காளரும் தத்தம் ஆளடையாளத்தை செல்லுபடியான ஆளடையாள ஆவணம் ஒன்றின் மூலம் நிரூபிக்க வேண்டும்.[49] வாக்காளர் ஒருவர் தமக்கு விருப்பமான ஒரு கட்சிக்கும், அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகக்கூடியது மூவருக்கு தனது விருப்பத்தேர்வுகளையும் இடலாம். ஆனாலும் வேட்பாளர் விருப்பத்தேர்வு கட்டாயமானது அல்ல.[49]
தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு
Remove ads
முடிவுகள்
அதிகாரபூர்வ முடிவுகள் 2020 ஆகத்து 6 மாலை முதல் வெளிவர ஆரம்பித்தன. முதலில் காலி மாவட்டத்திற்கான அஞ்சல்-வழி வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்தன.[51]
மகிந்த ராசபக்ச தலைமையிலான இலங்கை பொதுசன முன்னணி (இபொசமு) 59.09% வாக்குகளுடன் 145 இடங்களைக் கைப்பற்றி முதலாவதாக வந்தது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 23.9% வாக்குகளுடன் 54 இடங்களைக் கைப்பற்றியது.[52][53][54] இபொசமு வாக்கெடுப்பு மூலம் 128 இடங்களையும் தேசியப் பட்டியல் மூலம் 17 இடங்களையும் பெற்று 113 என்ற அறுதிப் பெரும்பான்மையை இலகுவாகக் கடந்து வென்றது.[55]
தேர்தல் முடிவுகள் இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தேவையான அரசியலமைப்பு மாற்றங்களைச் செயல்படுத்த தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய சிறிய தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஐந்து இடங்கள் மட்டுமே பொதுசன முன்னணிக்குத் தேவைப்படுகிறது. நாடாளுமன்றத்தினதும் பிரதமரினதும் பங்கை வலுப்படுத்துவது, நீதித்துறை நியமனங்கள், காவல்துறை, பொது சேவைகள் மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கு பொறுப்பான சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் போன்ற 2015 இல் இயற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களை முறியடிக்க இப்பெரும்பான்மை பயன்படுத்தப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.[56] முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை (தேசியப் பட்டியல் மூலமாக) மட்டுமே பெற்று வரலாற்றில் பெரும் தோல்வியைச் சந்தித்தது.[57][58] வட, கிழக்கில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பலத்த இழப்புகளை சந்தித்தது.சதே வேளையில் அரசு-சார்புக் கட்சிகள் சில இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது.
தேசிய வாரியாக முடிவுகள்
மாவட்ட வாரியாக முடிவுகள்
ஐக்கிய மக்கள் சக்தி வென்ற மாவட்டங்கள் |
இலங்கை பொதுசன முன்னணி வென்ற மாவட்டங்கள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்ற மாவட்டங்கள் |
Remove ads
பதவுயேற்பு
மகிந்த ராசபக்ச நான்காவது தடவையாக இலங்கைப் பிரதமராக 2020 ஆகத்து 9 ஆம் நாள் களனி ரஜ மகா விகாரையில் பதவியேற்றுக் கொண்டார்.[62][63]
பன்னாட்டுத் தாக்கங்கள்
நாடுகள்
இந்தியா – இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிரதமர் மகிந்த ராசபக்சவைத் தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.[64]
ஐக்கிய அமெரிக்கா – இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பொதுசன முன்னணியின் வெற்றிக்காக வாழ்த்துகளைத் தெரிவித்து அறிக்கை விட்டது. அமைதியான முறையிலும், சுமூகமாகவும் தேர்தல்கள் நடைபெற்றதற்கு தூதரகம் மகிழ்ச்சி தெரிவித்தது.[65]
குறிப்புகள்
- இது 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) பெற்ற இருக்கைகள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads