தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance, TNA) என்பது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இது இலங்கைத் தமிழ் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இக்கூட்டணி மிதவாதத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் முன்னாள் போராளி இயக்கங்கள் சிலவும் இணைந்து 2001 அக்டோபரில் அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி ஆரம்பத்தில் இலங்கைத் தீவின் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற ஒரு தன்னாட்சி மாநிலத்தில் சுயநிர்ணயத்தை ஆதரித்தது. இலங்கையில் உள்நாட்டுப் போரைத் தீர்க்க ஆயுதப் போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை அது ஆதரித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகளாக பெரும்பான்மையினரின் மத்தியில் கருதப்பட்டாலும், அதன் தலைமை ஒருபோதும் தாம் புலிகளை ஆதரிக்கவில்லை எனவும், அரசாங்கத்தைப் போலவே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்து வந்தது.[1][2][3][4][5]
2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்து, விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூடமைப்பு தனியரசுக்கான கோரிக்கையைக் கைவிட்டு, பிராந்திய சுயாட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் ஏராளமான தாக்குதல்களுக்கு உள்ளாகினர், அதன் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கி. சிவநேசன், ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் அரசு ஆதரவுக் குழுக்களால் கொல்லப்பட்டனர்.[6][7][8]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.[9] இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 33 உள்ளூராட்சி சபைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் உள்ளார். இவர் செப்டம்பர் 2015 முதல் 2018 திசம்பர் வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.[10][11]
Remove ads
வரலாறு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001 அக்டோபரில் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு பொதுக் குடையின் கீழ் போட்டியிடுவதற்காக உருவாக்கப்பட்டது.[12] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (அ.இ.த.கா), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈபிஆர்எல்எஃப்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) ஆகிய கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.[13] இக்கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாததால், 2001 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மொத்தாம் 348,164 வாக்குகள் (3.89%) பெற்று நாடாளுமன்றத்தில் 225 இல் 15 இடங்களைக் கைப்பற்றியது.[14]
த.தே.கூ உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்தது. புலிகளின் "விடுதலைப் போராட்டத்தை" அங்கீகரித்து, அவர்களே இலங்கைத் தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் என அறிவித்தது.[15] இது அக்கூட்டமைப்புக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தியது. வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால், 2004 தேர்தலில் தமது சின்னத்தைப் பயன்படுத்த அனந்தசங்கரி நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பெற்றார்.[16] இதனால், கூட்டமைப்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை மீளக் கொண்டு வந்தார்கள்.[17] 2004 தேர்தலில், கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு, 633,654 வாக்குகளைப் (6.84%) பெற்று 22 இடங்களைக் கைப்பற்றியது.[18]
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களிலும், 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் அரசு-சார்பு தமவிபு துணை இராணுவக் குழுவின் அச்சுறுத்தலினால் கூட்டமைப்பு போட்டியிடவில்லை.[19][20][21][22]
2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவுக்கு வந்தது.[23] 40,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் இறுதிப் போரில் ஆயுதப் படைகளினால் கொல்லப்பட்டனர்.[24][25][26] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குரல் கொடுத்து வந்தது.[27][28][29]
2010 அரசுத்தலைவர் தேர்தலில் கூட்டமைப்பு பொது எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரித்தது.[30] 2010 மார்ச்சில், கூட்டமைப்பு தனிநாடு என்ற தனது கோரிக்கையைக் கைவிட்டு, வடக்கு, கிழக்கு மாகானங்களின் இணைப்புடனான கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்தது.[31][32] 2010 மார்ச்சில், தமிழ்க் காங்கிரஸ் தன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கினர்.[33][34] 2010 நாடாளுமன்ரத் தேர்தலில் கூட்டமைப்பு 233,190 வாக்குகளைப் (2.90%) பெற்று 14 இடங்களை மட்டும் கைப்பற்றியது.[35]
2013 மாகாணசபைத் தேர்தல்களில் வட மாகாணத்தில் கூட்டமைப்பு 80% வாக்குகளைப் பெற்று, 38 இடங்களில் 30 இடங்களை எடுத்து வட மாகாண சபையைக் கைப்பற்றியது.[36][37][38] கூட்டமைப்பின் க. வி. விக்னேஸ்வரன் வடமாகாணத்தின் முதலாவது முடஹ்லமைச்சரானார்.[39][40][41]
2015 அரசுத்தலைவர் தேர்தலில் கூட்டமைப்பு பொது எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது.[42][43] தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றார். ஆனாலும், அவரது அரசில் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை.[44][45][46]
2015 மார்ச்சில், கிழக்கு மாகாண சபையில் முசுலிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.[47][48][49] இரண்டு கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.[50][51]
2015 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு 515,963 வாக்குகளைப் (4.62%) பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியது.[52][53] ஆர். சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார்.[54][55]
Remove ads
கூட்டமைப்பில் உள்ள கட்சிகள்
2020 நிலவரப்படி பின்வரும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன:
தேர்தல் வரலாறு
நாடாளுமன்றத் தேர்தல்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads