இலங்காசுகம்
மலாய் தீபகற்பத்தில் 1-15 ஆம் நூற்றாண்டு இந்து-பௌத்த இராச்சியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்காசுகம் அல்லது இலங்காசுகா (மலாய் மொழி: Langkasuka; ஆங்கிலம்: Langkasuka; தாய் மொழி: อาณาจักรลังกาสุกะ; ஜாவி: لڠكاسوكا; சீனம்: 狼牙脩) என்பது தீபகற்ப மலேசியாவின் ஒரு பண்டைய இந்து - பௌத்த இராச்சியம் ஆகும்.[1][2] 200 முதல் 1500 வரை தீபகற்ப மலேசியாவின் பழைமையான இராச்சியமாக இலங்காசுகம் உச்சம் பார்த்தது.
இந்த இராச்சியம் மகா அசோகரின் வழித்தோன்றல்களால் நிறுவப்பட்ட இராச்சியம் என நம்பப்படுகிறது.[3]
இலங்காசுகம் எனும் பெயர் ஒரு சமசுகிருதச் சொல் ஆகும். இலங்கா என்றால் பளபளப்பான நிலம்[4]; சுகம் என்றால் மகிழ்ச்சி என்று பொருள்.[5] மலாய் தீபகற்பத்தில் நிறுவப்பட்ட பழைமையான இராச்சியங்களில் பழைய கெடாவுடன் இந்த இராச்சியமும் ஒரு பழைமை இராச்சியமாக அறியப்படுகிறது.
Remove ads
பொது
இலங்காசுக இராச்சியம் தோற்றுவிக்கப்பட்ட மிகச் சரியான இடம், இன்றும் சில சர்ச்சைகளுக்கு உட்பட்டதாக உள்ளது. எனினும், தாய்லாந்தின் பட்டாணி நகரத்திற்கு அருகிலுள்ள யாராங் (Yarang) எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் வழியாக ஓர் உறுதியான இடம் தற்போது பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
அந்த இடத்தில், 1-ஆம் நூற்றாண்டில், கி.பி 80; மற்றும் 100-க்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் இலங்காசுக இராச்சியம் நிறுவப்பட்டு இருக்கலாம் என முன்மொழியப்பட்டு உள்ளது,[6]
Remove ads
வரலாறு

கெடா மநிலத்தில், கெடா துவா எனும் நிலப் பகுதி, இலங்காசுகம் (Langkasuka) என்று முன்பு அழைக்கப் பட்டது. எனினும், கி.பி. 2-ஆம் நூற்றாண்டில், பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) எனும் ஓர் இந்திய வம்சாவளி அரசு தோன்றுவதற்கு முன்னரே கெடா துவா (Kedah Tua) உருவாகி விட்டது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.[7]
கெடா துவா உருவான காலக் கட்டத்தில்தான் இலங்காசுகம் இராச்சியமும் உருவாகி இருக்கலாம் எனும் மற்றொரு கருத்தும் நிலவுகிறது. இந்த இலங்காசுகம் கெடா மாநிலத்தின் மேற்கு கரையில் தான் முதன்முதலில் தோற்றுவிக்கப் பட்டது. பின்னர் சன்னம் சன்னமாகத் தாய்லாந்தின் பட்டாணி மாநிலம் வரை பரந்து விரிந்து படர்ந்து போய் இருக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது..
கெடா வரலாற்றுப் பதிவேடுகள்
கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals); மாறன் மகாவம்சன் பதிவேடுகள் என (Hikayat Merong Mahawangsa) அழைக்கப்படுகிறது. அந்தப் பதிவேடுகளில் கொடுக்கப்பட்ட புராணப் பதிவுகளின் படி, இலங்காசுக இராச்சியம் மாறன் மகாவம்சன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது என்றும்; அவர்தான் இலங்காசுகம் என பெயரிட்டார் என்றும் அறியப்படுகிறது.
இலங்காசுகம் எனும் பெயர் இலங்கா (Langkha); மற்றும் அசோகா (Ashoka) எனும் பெயர்களில் இருந்து பெறப்பட்டு இருக்கலாம் எனும் மற்றொரு முன்மொழிவும் உள்ளது. அசோகர் என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தை பொ. ஊ. மு. 268 முதல் பொ. ஊ. மு. 232 வரை ஆட்சி செய்தவர். பண்டைக் கால ஆசியா முழுவதும் பௌத்த சமயத்தைப் பரப்பியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
தீபகற்ப மலேசியாவின் தொடக்கக்கால இந்தியக் குடியேற்றக்காரர்கள் அவரின் நினைவாக இலங்காசுகம் என்று பெயரிட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.[8]
Remove ads
வரலாற்றுப் பதிவுகள்
இலங்காசுகத்தின் வரலாற்றை, கிடைக்கக்கூடிய சுருக்கமான வரலாற்று பதிவுகளில் இருந்து ஓரளவிற்குத் தீர்மானிக்க முடியும். கிபி 2-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த இராச்சியம் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. 3-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பூனான் விரிவாக்கம் காரணமாக இலங்காசுகம் வீழ்ச்சியடைந்து இருக்கலாம்.
பூனான் என்பது கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தென்கிழக்காசியா மீகோங் சமவெளியை (Mekong Delta) மையமாகக் கொண்டு ஆட்சி செய்த ஒரு பண்டைய இராச்சியம்; மேலும் பண்டைய இந்துக் கலாசாரத்தைக் கடைபிடித்த இராச்சியம் ஆகும். [9]
இராசேந்திர சோழனின் படையெடுப்பு
6-ஆம் நூற்றாண்டில் இலங்காசுகம் ஒரு மறுமலர்ச்சிக் காலத்தை அனுபவித்தது; மற்றும் சீனாவிற்குத் தூதர்களை அனுப்பத் தொடங்கியது. கி.பி. 515-இல், இலங்காசுக மன்னர் பகதத்தன், இலங்காசுகம் (Bhagadatta Langkasuka) சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.[10] பின்னர் 523, 531, 568-ஆம் ஆண்டுகளில் சீனாவிற்குத் தம் தூதர்களை அனுப்பினார்.[11]
8-ஆம் நூற்றாண்டில் இலங்காசுகம், வளர்ச்சிப் பெற்ற செரி விஜய பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கலாம். 1025-ஆம் ஆண்டில், செரி விஜயத்திற்கு எதிரான தம் தென்-கிழக்கு ஆசியா மீதான படையெடுப்பில், இராசேந்திர சோழனின் படைகளால் இலங்காசுகம் தாக்கப்பட்டது.[12]
இறுதிக் காலம்
12-ஆம் நூற்றாண்டில், இலங்காசுகம், செரி விஜய பேரரசின் துணை இராச்சியமாக இருந்தது. இலங்காசுக இராச்சியத்தின் ஆளுமை எப்படி முடிவிற்கு வந்தது என்பது இன்று வரையிலும் தெளிவாகத் தெரியவில்லை. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப்பட்ட பாசாய் பதிவேடுகள் (Pasai Annals), 1370-இல் இலங்காசுகம் அழிவுற்றதாகக் குறிப்பிடுகிறது.
செரி விஜய பேரரசின் கட்டுப்பாட்டிலும், செல்வாக்கிலும் 14-ஆம் நூற்றாண்டு வரை இலங்காசுக இராச்சியம் இருந்ததாகவும்; பின்னர் மஜபாகித் பேரரசால் கைப்பற்றப் பட்டதாகவும்; வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். 15-ஆம் நூற்றாண்டில் இலங்காசுக இராச்சியம் பட்டாணி இராச்சியத்தால் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனினும், இலங்காசுக இராச்சியம் 1470-ஆம் ஆன்டுகள் வரை நீடித்து இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் பலர் நம்புகின்றனர்.[13]
Remove ads
மேலும் காண்க
- கோத்தா கெலாங்கி
- பூஜாங் பள்ளத்தாக்கு
- கங்கா நகரம்
- நக்கோன் சி தாமராத் இராச்சியம்
- கடாரம்
- கெடா துவா
- கெடா சுல்தானகம்
- சுங்கை பத்து அகழ்வாராய்ச்சித் தளம்
மேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads