பட்டாணி இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டாணி இராச்சியம் (மலாய் மொழி: Kerajaan Patani; ஆங்கிலம்: Sultanate of Patani} ஜாவி: كسلطانن ڤطاني ) என்பது 1400-ஆம் ஆண்டுகளில், தாய்லாந்தின் தென்பகுதியில் இருந்த முன்னாள் மலாய் இராச்சியம் ஆகும்.

இந்த இராச்சியம் இப்போதைய தாய்லாந்து மாநிலங்களான பட்டாணி மாநிலம் (Pattani), யாலா மாநிலம் (Yala), நராத்திவாட் மாநிலம் (Narathiwat); மற்றும் வடக்கு தீபகற்ப மலேசியாவின் பத்து குராவ்; கிரிக், பெங்காலான் உலு, லெங்கோங், சிக் மாவட்டம், பாலிங், பாடாங் தெராப் மாவட்டம் ஆகிய நிலப் பகுதிகளை உள்ளடக்கியது.[1]
2-ஆம் நூற்றாண்டு தொடங்கி - 15-ஆம் நூற்றாண்டு வரை தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியை ஆட்சி செய்த இலங்காசுகம்; 6-ஆம் நூற்றாண்டு தொடங்கி; 7-ஆம் நூற்றாண்டு வரை தீபகற்ப மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தை ஆட்சி செய்த பான் பான் இராச்சியம்; ஆகிய இரண்டு இராச்சியங்களின் வாரிசு இராச்சியமாக பட்டாணி இராச்சியம் உருவானதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
Remove ads
பொது
பட்டாணி இராச்சியம் 1400-ஆம் ஆண்டுகளில் உருவாகி இருந்தாலும், அரசர்கள் பலர் ஆட்சி செய்து இருந்தாலும், அந்த இராச்சியத்தை 1584-ஆம் ஆண்டில் இருந்து 1651-ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்த நான்கு பெண்களின் ஆட்சிக் காலத்தை ஒரு பொற்காலம் என வரலாறு கூறுகிறது.
பட்டாணி இராச்சியத்தின் நான்கு இராணிகளில் மூத்தவவரான பட்டாணி பச்சை இராணி (மலாய் மொழி: Ratu Ijau Patani; ஆங்கிலம்: Ratu Hijau (The Green Queen); தாய் மொழி: รายาฮิเยา) அரியணை ஏறிய பின்னர், பட்டாணி இராச்சியத்தின் பொற்காலம் தொடங்கியது என்று சொல்லப்படுகிறது. அவர் 1584-இல் அரியணை ஏறினார். இவரின் ஆட்சிக்காலம் (1584 - 1616).
அவரைத் தொடர்ந்து பட்டாணி நீல இராணி (மலாய் மொழி: Ratu Biru Patani; ஆங்கிலம்: Ratu Biru; தாய் மொழி: รายาบีรู) அரியணை ஏறினார். இவரின் ஆட்சிக்காலம் (1616–1624).
பட்டாணி நீல இராணியைத் தொடர்ந்து பட்டாணி ஊதா இராணி (மலாய் மொழி: Ratu Ungu Patani; ஆங்கிலம்: Ratu Ungu; தாய் மொழி: รายาอูงู) அரியணை ஏறினார். இவரின் ஆட்சிக்காலம் (1624–1635).
அவரைத் தொடர்ந்து, பட்டாணி மஞ்சள் இராணி (மலாய் மொழி: Ratu Kuning Patani; ஆங்கிலம்: Ratu Kuning (Yellow Queen); தாய் மொழி: ราชาสีเหลือง) இவரின் ஆட்சிக்காலம் (1635–1651).
Remove ads
சயாமிய படையெடுப்புகள்
அந்தக் காலக்கட்டத்தில், பட்டாணி இராச்சியத்தின் பொருளாதாரம்; மற்றும் இராணுவ ஆற்றல் உச்சத்தில் இருந்தன. நான்கு பெரிய சயாமிய படையெடுப்புகளை எதிர்த்துப் போராடும் அளவிற்கு பெரிதும் வலுவாக இருந்தன.
இது 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பட்டாணி இராச்சியம் வீழ்ச்சி அயடையத் தொடங்கியது. 1786-இல் சயாம் பட்டாணி இராச்சியத்தின் மீது படையெடுத்தது. இறுதியில் பட்டாணி இராச்சியத்தின் கடைசி அரசர் 1902-இல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் பட்டாணி இராச்சியம், சயாம் மன்னராட்சியுடன் இணைக்கப்பட்டது.
Remove ads
சயாம்
சயாம் என்பது தாய்லாந்து நாட்டின் பழைய பெயராகும். 1939-ஆம் ஆண்டு வரை தாய்லாந்து நாடு, சயாம் என்று அழைக்கப்பட்டது.[2]
1939 சூன் 24-ஆம் தேதி தாய்லாந்து என்பது சான்றுரிமை பெயராக மாற்றம் கண்டது. இருப்பினும் மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என அழைக்கப்பட்டு, மீண்டும் தாய்லாந்து எனும் சொல்லுக்கு மாற்றப்பட்டது.[3]
வரலாறு

பட்டாணி இராச்சியம் 1350 மற்றும் 1450-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நிறுவப்பட்டதாக அறியப்படுகிறது. இருப்பினும் 1500-க்கு முந்தைய அதன் வரலாறு தெளிவாக இல்லை.[4][5]
மலாய் வரலாற்றின் படி, சயாமிய இளவரசரான சௌ ஸ்ரீ வாங்சா (Chau Sri Wangsa), கோத்தா மாளிகையைக் (Kota Mahligai) கைப்பற்றி பட்டாணி இராச்சியத்தை நிறுவினார். அவர் இசுலாத்திற்கு மாறினார். 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக் காலக்கட்டத்தில் அவர் செரி சுல்தான் அகமத் சா (Sri Sultan Ahmad Shah) என்ற பட்டத்தைப் பெற்றார்.[6]
அயூத்தியா இராச்சியம்
15-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பட்டாணி இராச்சியம் இசுலாமிய இராச்சியமாக மாறியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சுல்தான் அகமத் சாவின் அதிகாரிகள் அனைவரும் மதம் மாற ஒப்புக்கொண்டனர். 1511-இல் போர்த்துகீசியர்கள் மலாக்காவைக் கைப்பற்றிய பிறகு, முசுலீம் வர்த்தகர்கள், மாற்று வணிகத் துறைமுகங்களை நாடியதால் பட்டாணி இராச்சியம் முக்கியத்துவம் அடைந்தது.[5]
பெரும்பாலான வணிகர்கள் சீனர்கள் என்று டச்சு சான்றுகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் 1540-களில் , 300 போர்த்துகீசிய வணிகர்களும் பட்டாணியில் குடியேறி உள்ளனர்.[5] செரி சுல்தான் அகமத் சாவுக்குப் பிறகு சுல்தான் முதபர் சா (Mudhaffar Shah) ஆட்சிக்கு வந்தார்.
அயூத்தியா அரசர் மகா சக்கராபாத்
அந்தக் காலக் கட்டத்தில் பர்மா, அயூத்தியா இராச்சியத்தின் மீது போர் தொடுத்தது. இரண்டாவது முறையாக 1563-ஆம் ஆண்டில் பர்மா, அயூத்தியா இராச்சியத்தின் (Burmese–Siamese War) (1563–1564) மீது போர் தொடுத்தது. அந்தப் போர் ஓர் ஆண்டு காலம் நீடித்தது. அயூத்தியாவின் அரசர் மகா சக்கராபாத் (Maha Chakkraphat) பர்மிய அரசர் பாயினாவுங் (Bayinnaung) என்பவரிடம் சரண் அடைந்தார்.[7][8]
அந்தக் கட்டத்தில் பட்டாணி இராச்சியத்தின் சுல்தானாக இருந்த சுல்தான் முதபர் சா, அயூத்தியாவைத் தாக்கினார். அயூத்தியாவின் அரசர் மகா சக்கராபாத் தப்பிச் சென்று விட்டார். இரண்டு மாதங்களுக்கு அரசர் மகா சக்கராபாத் திரைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அதன் பின்னர் பட்டாணி சுல்தான் முதபர் சா தன் இராச்சியத்திற்குத் திரும்பினார். இருப்பினும் அவர் பட்டாணிக்குத் திரும்பும் வழியில் 1564-இல் திடீரென காலமானார்.[9]
சுல்தான் மன்சூர் சா
அவரின் சகோதரர் சுல்தான் மன்சூர் சா (1564-1572) பட்டாணியின் ஆட்சியாளரானார். மன்சூர் சா ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரின் மரணத்திற்குப் பிறகு, பட்டாணி இராச்சியத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன. அரசியல் பிரச்சினைகள் மற்றும் வன்முறைகள் நிறைந்த ஒரு காலகட்டத்தை, பட்டாணி இராச்சியம் எதிர்நோக்கியது. அதன் ஆட்சியாளர்களில் இருவர் வாரிசு சண்டையில் அவர்களின் உறவினர்களால் கொல்லப்பட்டனர். அந்தக் கொந்தளிப்பில் பட்டாணி இராச்சியத்தின் நான்கு ஆண் வாரிசுகள் பதின்ம வயதிலேயே கொல்லப்பட்டனர்.
Remove ads
பட்டாணி பச்சை இராணி
பட்டாணி இராச்சியத்தின் நான்கு இராணிகளில் மூத்தவவரான பட்டாணி பச்சை இராணி (Ratu Hijau (The Green Queen) 1584-இல் அரியணை ஏறினார். பட்டாணி இராச்சியத்தில் இருந்த ஆண் வாரிசுகள் அனைவரும் கொந்தளிப்பான காலக்கட்டத்தில் கொல்லப்பட்ட பின்னர், பட்டாணி இராச்சியத்தில் ஆண் வாரிசுகள் இல்லாததன் விளைவாக, பட்டாணி பச்சை இராணி முதல் இராணி ஆனார்.
பட்டாணி இராச்சியத்தின் மீதான சயாமிய அதிகாரத்தை பட்டாணி பச்சை இராணி ஏற்றுக்கொண்டார். அத்துடன் சயாமிய அரச பதவியான பெரசாவ் (Peracau) என்ற பட்டப் பெயரையும் ஏற்றுக்கொண்டார். அவரின் ஆட்சியின் தொடக்கத்தில், அவரைக் கொலை முயற்சிகள் நடந்தன். அவருடைய பிரதமர் பெண்டகாரா காயூ கிலாட் Bendahara Kayu Kelat என்பவர் பட்டாணி பச்சை இராணியைக் கொலை முயற்சி செய்தார். அந்தத் திட்டத்தை பட்டாணி பச்சை இராணி முறியடித்தார். அதன் பின்னர் பட்டாணி இராச்சியத்தை நல்ல முரையில் ஆட்சி செய்யத் தொடங்கினார்.
Remove ads
வர்த்தக மையமாக எழுச்சி
பட்டாணி பச்சை இராணி ஆட்சிக்கு வந்த போது பட்டாணி இராச்சியத்தில் நீர் பற்றாக்குறை இருந்தது. பட்டாணி இராச்சியத்திற்கு நீர் வழங்குவதை உறுதி செய்ய ஒரு பெரிய ஆற்றைத் தடுத்து ஒரு பெரிய அணையைக் கட்டினார். அந்த அணையுடன் ஒரு பெரிய கால்வாய் தோண்டவும் உத்தரவிட்டார். சிறிது காலத்திலேயே வேளாண்மை சிறப்பு பெற்றது.
அவர் 32 ஆண்டுகள் ஆட்சி செய்தார். தன் இராச்சியத்தில் கணிசமான அளவிற்கு அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டு வந்தார். அவரின் ஆட்சியின் போது, வெளிநாட்டு வணிகம் அதிகரித்தது, அதனால் பட்டாணி இராச்சியமும் செழித்தது.
பட்டாணி நீல இராணி
பட்டாணி ஒரு பிராந்திய வர்த்தக மையமாக எழுச்சி பெற்றதற்கு சீன வணிகர்கள் மிக முக்கிய பங்கு வகித்தார்கள். சீன, மலாய் மற்றும் சயாமிய வணிகர்கள் பட்டாணி பகுதி முழுவதும் வர்த்தகம் செய்தனர். அதே போல் பெர்சியர்கள், இந்தியர்கள் மற்றும் அரேபியர்கள். அவர்களுடன் மற்ற நாட்டினரும் இணைந்து கொண்டனர். 1516-இல் போர்த்துகீசியர்கள், 1592-இல் ஜப்பானியர்கள், 1602-இல் டச்சுக்காரர்கள், 1612-இல் ஆங்கிலேயர்கள் உட்பட பலர் இணைந்தனர்.
பட்டாணி பச்சை இராணி ஆகத்து 28, 1616-இல் காலமானார். அவருக்குப் பிறகு அவரின் சகோதரி பட்டாணி நீல இராணி (Ratu Biru Patani) ஆட்சிக்கு வந்தார். இவர் பதவிக்கு வந்தபோது வயது 50. இவர் காலத்தில் கிளாந்தான் சுல்தானகம் பட்டாணி இராச்சியத்துடன் இணைந்தது.[10]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads