ஈரோடு மாநகராட்சி
இந்தியாவின் தமிழகத்தின் 21 மாநகராட்சிகளில், ஏழாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈரோடு மாநகராட்சி இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தின் கொங்கு மாநிலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரான ஈரோடு மாநகரை நிர்வாகிக்கும் உள்ளாட்சி அமைப்பு ஆகும்.[1] ஈரோடு நகரம் 1871ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்படத் துவங்கியது. அதன்பின் 01.01.2008 முதல் மாநகராட்சி நிலைக்கு உயர்ந்து செயல்படுகின்றது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 161 கோடி ரூபாய் ஆகும்.
ஈரோடு கோட்டையைச் சுற்றி 8.4 ச.கி.மீட்டரில் உருவான இந்நகரம், 2011ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டு 109.52 ச.கி.மீட்டரில் பரந்து விரிந்த மாநகரமாக அமையப்பெற்றுள்ளது. ஈரோடு மாநகரானது கோயம்புத்தூருக்கு கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் காவிரிப் படுகையில் அமைந்துள்ளது.
Remove ads
ஈரோடு மாநகராட்சி
Remove ads
வரலாறு
ஈரோடு கோட்டையைச் சுற்றி 8.4 ச.கி.மீட்டரில் கோட்டை, பேட்டை என இரு பகுதிகளாக அமைந்திருந்த இவ்வூரானது, 1871ஆம் ஆண்டில் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1917ஆம் ஆண்டு ஈரோட்டின் நகரசபைத் தலைவராக இருந்த தந்தை ஈ. வெ. இராமசாமி பெரியார், நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நகராட்சியை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டார். அதன்படி ஈரோட்டுடன் அண்டைய ஊராட்சிகளான வீரப்பன்சத்திரம், வைராபாளையம் மற்றும் பெரியசேமூர் பகுதளை இணைக்க, தீர்மானமும் நிறைவேற்றினார். ஆனால் அது அரசின் நிர்வாகக் கவனத்திற்குச் செல்லாமல் கிடப்பிலேயே போடப்பட்டது.
பின்னர் 1980ஆம் ஆண்டு அதே 8.4 ச.கி.மீட்டரில் எந்த விரிவாக்கமும் செய்யப்படாமல் சிறப்பு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர், மக்கள்தொகைப் பெருக்கமும் நகரமயமாதலும் அதிகப்படியாக இருந்ததால், 2004 ஆம் ஆண்டு ஈரோடு நகராட்சியைச் சுற்றியிருந்த வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி, காசிபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.
அதன்பின் 2007ஆம் ஆண்டின் அரசு அறிவிப்பைத் தொடர்ந்து 01.01.2008 முதல், ஈரோடு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டபோது, அப்போதைய நகராட்சி எல்லையான 8.4 ச.கி.மீட்டர் பகுதியை மட்டும் உள்ளடக்கி செயல்படத் துவங்கியது. பிறகு, 2010ஆம் ஆண்டு தனி அதிகாரி மூலம் பழைய நகர்ப்பகுதியை ஒட்டியிருந்த வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி, காசிபாளையம் ஆகிய நகராட்சிகளையும், பிராமணபெரிய அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளையும், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், முத்தம்பாளையம், 46-புதூர், லக்காபுரம் ஆகிய ஊராட்சிகளையும் இணைக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும், அப்போதைய சூழலில் லக்காபுரம் மற்றும் 46-புதூர் ஊராட்சிகள் இதற்கு ஒப்புதல் அளிக்காததால், இவ்விரண்டு பகுதிகளும் நீக்கப்பட்டு ஏனைய பகுதிகளை உள்ளடக்கி 2011 முதல் ஈரோடு மாநகராட்சியானது 109.52 ச.கி.மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் சுமார் 5,21,000 மக்கள் வசிக்கின்றனர்.
Remove ads
மண்டலங்கள்
மண்டலம்-1 : சூரியம்பாளையம்
சூரியம்பாளையம், இராமநாதபுரம் புதூர், வாசவி கல்லூரி, ஐ.ஆர்.டி.டி கல்லூரி, ராயபாளையம், சித்தோடு நால்ரோடு, குமிலன்பரப்பு, சுண்ணாம்பு ஓடை, பி.பெ.அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், வைராபாளையம், கருங்கல்பாளையம் பகுதிகள்.
மண்டலம்-2 : பெரியசேமூர்
பெரியசேமூர், கங்காபுரம், கொங்கம்பாளையம், மாமரத்துப்பாளையம், எல்லப்பாளையம், ஈ.பி.பி நகர், மாணிக்கம்பாளையம், வெட்டுக்காட்டுவலசு, சம்பத் நகர், அகில்மேடு, மூலப்பட்டறை, மத்திய பேருந்து நிலையம், கோட்டை, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம்பூங்கா பகுதிகள்.
மண்டலம்-3 : சூரம்பட்டி
சூரம்பட்டி, திண்டல், வில்லரசம்பட்டி, பழையபாளையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆசிரியர் குடியிருப்பு, அணைக்கட்டு, அரங்கம்பாளையம், முத்தம்பாளையம், பெரியார் நகர், காசிபாளையம் பணிமனை, சிட்கோ தொழிற்பேட்டை, கே.கே நகர் பகுதிகள்.
மண்டலம்-4 : காசிபாளையம்
மூலப்பாளையம், கொல்லம்பாளையம், ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம், ரயில்வே டீசல், மின்சார பணிமனை, சாஸ்திரி நகர், பெரியசடையம்பாளையம், செட்டிபாளையம், வெண்டிபாளையம், மோளக்கவுண்டன்பாளையம், கருங்கல்பாளையம் பழைய மயானம், சித்தர் கோவில், வெளிவட்டசாலை காவிரி பாலம், சோலார் பகுதிகள்
மாநகராட்சி விரிவாக்கம்
மேலும் நகரின் தொடர் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2016ல் மாநகரை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த பகுதிகளான காலிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி, சித்தோடு பேரூராட்சி, லக்காபுரம் ஊராட்சி மற்றும் 46 புதூர் ஊராட்சி ஆகிய உள்ளாட்சிகளை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்ததால் இந்த இணைப்பு செயல்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது புறநகர்ப்பகுதிகளாக உள்ள இந்தப்பகுதிகளில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 60,000 மக்கள் வசிக்கின்றனர்.
Remove ads
ஈரோடு மாநகராட்சி தேர்தல், 2022
22 பிப்ரவரி 2022 அன்று ஈரோடு மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 48 வார்டுகளையும், அதிமுக 6 வார்டுகளையும், சுயேச்சைகள் 6 வார்டுகளையும் கைப்பற்றினர். 4 மார்ச் 2022 அன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் மேயராக நாகரத்தினம் மற்றும் துணை மேயராக செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.[3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads