உலா (இலக்கியம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ் இலக்கியத்தில் உலா (ஒலிப்பு) என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். யானை, குதிரை, தேர் போன்றவற்றில் ஏறி, இசைக் கருவிகளை இசைப்போர் முன்னே வர, மக்கள் புடைசூழ நகர வீதிகளில் வருவது உலா என்னும் சொல்லால் குறிக்கப்படும். இறைவனோ அரசனோ இவ்வாறு உலா வருதலையும், அவ்வாறு உலா வருபவரைக் கண்டு மகளிர் காதல் கொள்வதையும் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படுவதே உலா இலக்கியம் ஆகும். தொல்காப்பியத்திலும் [1], சங்க இலக்கியங்களிலும் கூட உலா பற்றிய கருத்தாக்கங்கள் காணப்பட்டாலும், உலா என்பது ஒரு தனி இலக்கிய வகையாக உருவானது பிற்காலத்திலேயே ஆகும். பிற்காலத்துப் பாட்டியல் நூல்கள் உலா இலக்கியத்துக்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும்[2] உலாவரும் தலைவனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு வருந்தும் நிலையைக் கலிவெண்பாப் பாட்டினால் கூறுவது என்பதே உலா இலக்கியத்துக்கு இந் நூல்கள் கூறும் இலக்கணம் ஆகும்[3].

Remove ads

பாகுபாடுகள்

பாட்டுடைத் தலைவன், ஏழு பருவப் பெண்கள் காமுறுதல், ஏழுநாள் உலா என்றெல்லாம் உலாநூல்களின் போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன. [4] [5]

இறைவன் உலா வருதலைக் கண்டு காதல் கொள்வது அருள்-காதல். இதனை ஞானக்காதல் என்றும் கூறுவர். [6] இறைவனின் அடியவர் உலா வரக் கண்டு காமுறுதலும் இந்த வகை. [7] அரசன் உலாவரக் கண்டு கற்புடைய மகளிர் காதல் கொண்டனர் எனப் பாடுவது தமிழ் மரபுக்கு ஒவ்வாதது. இவ்வாறு பாடப்பட்ட உலாவில் [8] காதல் கொண்டவர் பொதுமகளிர் என உரையாசிரியர்கள் அமைதி கண்டனர்.

உலா வரும் ஒரே நாளில் ஏழு பருவ மகளிர் கண்டு காமுற்றனர் எனப் பாடுவது பொது மரபு. மதுரை சொக்கநாதர் உலா இந்த மரபில் மாறுபடுகிறது. மதுரை சொக்கநாதன் ஏழு நாள் உலா வந்தான். முறையே தேர், வெள்ளை-யானை, வேதக்குதிரை, இடப-வாகனம், தரும-ரிஷபம், கற்பக-விருட்சம், சித்திர-விமானம் ஆகியவற்றின்மீது ஏறி ஏழு நாளும் உலா வந்தான் - என்று இந்த நூல் பாடுகிறது.

ஆதியுலா ஒரு தலத்தில் வந்த உலாவைப் பாடவில்லை. பல தலங்களின் மேலது.

Remove ads

உலாவின் பகுதிகள்

முன்னிலை

உலாவின் தொடக்கத்தில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழ ஊர்தியில் ஏறி வீதிக்கு வருதல் என்னும் இவற்றைக் கூறும் பகுதி முன்னிலை எனப்படும்[9].

பின்னெழுநிலை

இதன்பின் ஏழு பருவ மகளிரும் குழுமி நின்றும் தனித்தனியாக நின்றும் கூறுவன பின்னெழுநிலை எனப்படும்[9].

பருவ வயது

ஏழு பருவ-மகளிரின் அகவையைக் குறிப்பிடுவதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன.

மேலதிகத் தகவல்கள் பருவம், பன்னிரு பாட்டியல் ...

உலாக்கள்

உலா நூல்கள் அகர வரிசையில்:

  1. அப்பாண்டைநாதர் உலா
  2. அவிநாசி உலா - அருணாச்சலக்கவிராயர்
  3. அழகிய நம்பி உலா
  4. ஆளுடைபிள்ளையார் திருவுலாமாலை - நம்பியாண்டார் நம்பி
  5. ஆறுநாட்டான் உலா
  6. இராசராசன் சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
  7. உண்மையுலா
  8. ஏகாம்பரநாதர் உலா - இரட்டையர்
  9. கடம்பர் கோயில் உலா
  10. கயத்தாற்றரசன் உலா - அந்தகக் கவிவீர்ராகவ முதலியார்
  11. கனகசபை நாதன் உலா - அம்மையப்பர்
  12. காமராசர் உலா - அ.கு.ஆதித்தன்
  13. காளி உலா
  14. கீழ்வேளூர் உலா - அந்தக்கவி வீர்ராகவ முதலியார்
  15. குலசை உலா
  16. குலோத்துங்க சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
  17. குன்றக்குடி சண்முகநாதர் உலா - சிலேடைப்புலி பிச்சுவையர்
  18. கோடீச்சுர உலா - சிவக்கொழுந்து தேசிகர்
  19. சங்கர சோழன் உலா
  20. சங்கரன் நயினார் கோயில் சங்கரலிங்க உலா
  21. சிலேடை உலா - தத்துவராயர்
  22. சிவசுப்பிரமணியர் திருமுகவுலா - கபாலமூர்த்திப் பிள்ளை
  23. சிவத்தெழுந்த பல்லவராயன் உலா - படிக்காசுப் புலவர்
  24. சிறுதொண்டரை உலா
  25. செப்பறை உலா - அழகிய கூத்த தேசிகர்
  26. சேயூர் முருகன் உலா - சே றைக் கவிராசப்பிள்ளை
  27. சேனைத்தேவர் உலா -
  28. ஞான உலா - சங்கராச்சாரியார்
  29. ஞான உலா - சுவிசேடக்கவிராயர் வேதநாயக சாஸ்திரி
  30. ஞானவிநோதன் உலா - தத்துவராயர்
  31. தஞ்சைபெருவுடையார் உலா - சிவக்கொழுந்து தேசிகர்
  32. தருமை ஞானசம்பந்த சாமி உலா
  33. திருக்கடவூர் உலா - சுப்பிரமணியக் கவிராயர்.
  34. திருக்கழுக்குன்றத்து உலா - அந்தகக்கவி வீர்ராகவ முதலியார்
  35. திருக்காளத்திநாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
  36. திருக்குவளை தியாகராச சாமி உலா
  37. திருக்குற்றால நாதர் உலா - திரிக்கூடராசப்பக் கவிராயர்
  38. திருக்கயிலாய ஞான உலா - சேரமான் பெருமாள் நாயனார், கிபி 9ம் நூற்றாண்டு, இதுவே முதலாவது உலா இலக்கியம் எனக் கூறப்படுகிறது. இதனை ஆதி உலா எனவும் வழங்குவர்[9].
  39. திரிசிர கிரி உலா
  40. திருச்சிறுபுலியூர் உலா
  41. திருச்செந்தூர் உலா
  42. திருத்தணிகை உலா - கந்தப்பையர்
  43. திருப்பனந்தாள் உலா - எல்லப்பப் பூபதி
  44. திருப்புத்தூர் உலா -
  45. திருப்பூண நாதர் உலா - கந்தசாமிப்புலவர்
  46. திருவாரூர் - அந்தக்கவி வீரராகவ முதலியரர்
  47. திருவானைக்கா உலா - காளமேகப் புலவர்
  48. திருவிடை மருதூர் உலா - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  49. திருவலஞ்சிமுருகன் - பண்டாரக் கவிராயர்
  50. திருவெங்கை உலா - சிவப்பிரகாச சுவாமிகள், 17ம் நூற்றாண்டு
  51. திருவேங்கட உலா
  52. தில்லை உலா
  53. தென் தில்லை உலா - பின்னத்தூர் நாராயாணசாமி ஐயர்
  54. தேவை உலா - பலப்பட்டைச் சொக்கநாதப் புலவர்
  55. நடுத்தீர்வை உலா
  56. நெல்லை வேலவர் உலா - சரவணமுத்துப் புலவர்
  57. பரராசசேகரன் உலா
  58. புதுவை உலா
  59. பேரூர் உலா - அருணாசலக்கவிராயர்
  60. மதுரைச் சொக்கநாதர் உலா - புராணத்திருமலை நாதர்
  61. மயிலத்து உலா - வேலைய தேசிகர்
  62. மயூரகிரி உலா - சு.மு. சுப்பிரமணியன் செட்டியார்
  63. மருஙாகாபூரி உலா -வெறிமங்கைபாகக் கவிராயர்
  64. முப்பன் தொட்டி உலா
  65. வாட்போக்கி நாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
  66. விக்கிரம சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
  67. விருத்தாசல உலா
Remove ads

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads