எச். எம். ஜி. எஸ். பலிகக்கார

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஹேவா மாத்தர கமகே சிறிபால பலிகக்கார (Hewa Matara Gamage Siripala Palihakkara, பிறப்பு: 1947) இலங்கையின் முன்னாள் அரச சேவையாளரும், தூதுவரும், முன்னாள் வட மாகாண ஆளுநரும் ஆவார்.

விரைவான உண்மைகள் எச். எம். ஜி. எஸ். பலிகக்காரH. M. G. S. Palihakkaraஇவெசே, வட மாகாணத்தின் 4வது ஆளுநர் ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

மாத்தறையைச் சேர்ந்தவரும், பௌத்தரும் ஆன பலிகக்கார[1] 1947 ஆம் ஆண்டில் பிறந்தவர்.[2] பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.[2][3] திருமணம் புரிந்துள்ள பலிகக்காரவுக்கு ஒரு பிள்ளை உள்ளார்.[1][2]

பணி

1979 ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்த பலிகக்கார 1980 இல் ஆத்திரேலியாவில் பயிற்சி எடுத்தார்.[2][3] பின்னர் இவர் லுண்ட் பல்கலைக்கழகம் ராவுல் வலென்பெர்க் கல்விக்கழகத்தில் பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மானுடவியல் சட்டம் பயின்றார்.[2][3]

பலிகக்கார ஐநா செனீவா அலுவலகத்தில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாகவும், நியூ யார்க்கில் இலங்கையின் ஐநா திட்டத்தின் அதிகாரியாகவும் பணியாற்றினார்.[1] 2001 முதல் 2004 வரை தாய்லாந்தில் (கம்போடியா, லாவோஸ், வியட்நாம் உட்பட) இலங்கைத் தூதராகவும் பணியாற்றினார்.[1][2] அத்துடன் ஆசியா பசிபிக் நாடுகளுக்கான ஐநா பொருளாதார சமூக ஆணையத்தின் இலங்கைப் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார்.[2] 2004 ஏப்ரல் 20 முதல் 2006 டிசம்பர் 31 வரை வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றினார்.[1][2] அமைதித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்துள்ளார்.[1][3]

2008 ஆகத்தில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இச்சேவையில் அவர் 2009 ஆகத்து வரை பணியாற்றினார்.[2][4] ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் "போர் பிரகடனப் படுத்தப்படாத பகுதிகளில்" எவ்வித ஆயுதத் தாக்குதல்களும் நடடத்தப்படவில்லை என இலங்கை ஆயுதப் படையினருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் உரையாற்றினார்.[5][6]

2010 மே மாதத்தில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் ஓர் உறுப்பினராக பலிகக்காரவை நியமித்தார்.[7][8] ஈழப்போரின் போது இரு தரப்பின் மீதும் போர்க்குற்றங்கள் சாட்டப்பட்ட வேளையில், பலிகக்கார ஐநா சபையில் இலங்கைப் படையினருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தார் என்ற அடிப்படையில் இவரது நியமனத்துக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன.[9][10][11][12]

2015 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசுத்தலைவரான மைத்திரிபால சிறிசேன 2015 சனவரி 27 இல் பலிகக்காரவை வட மாகாண ஆளுநராக நியமித்தார்.[13][14] 2016 பெப்ரவரியில் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகினார்.[15]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads