இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2015 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் (Sri Lankan Presidential elections) இலங்கையின் ஏழாவது சனாதிபதியைத் தேர்ந்தெடுக்க 2015 சனவரி 8 ஆம் நாளன்று நடைபெற்றது. முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக் காலம் 2016 ஆம் ஆண்டில் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு 2014 நவம்பர் 21 ம் நாள் அறிவிக்கப்பட்டது.[1][2] இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2014 டிசம்பர் 8 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.[3] மகிந்த ராசபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார்.[4][5] அதேவேளையில் ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட எதிர்க்கட்சியினர் ராசபக்சவின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து, ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்தனர்.[6][7][8][9].
மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகள் பெற்றதை அடுத்து 2015 சனவரி 9 ஆம் நாளன்று புதிய அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார். ராஜபக்ச 47.58% வாக்குகள் பெற்றார்.[10][11][12][13]
மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேன கொழும்பு, கம்பகா, கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், பதுளை, பொலன்னறுவை ஆகிய 12 மாவட்டங்களில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார். ராசபக்ச களுத்துறை, மாத்தளை, காலில், மாத்தறை, அம்பாந்தோட்டை, குருணாகல், அனுராதபுரம், மொனராகலை இரத்தினபுரி, கேகாலை ஆகிய 10 மாவட்டங்களில் முதலாவதாக வந்தார்.[10]
Remove ads
காலக்கோடு
- 2010
- செப்டம்பர் 20: ராசபக்சவின் ஐமசுகூயின் பெரும்பான்மை நாடாளுமன்றம், அரசமைப்புக்கு 18வது திருத்தத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் அரசுத்தலைவர் ஒருவரின் அதிகபட்ச இரண்டு பதவிக்காலங்கள் முறை நீக்கப்பட்டது. இதன் மூலம் ராசபக்ச மூன்றாம் முறையும் போட்டியிட சட்டப்படி அனுமதி கிடைத்தது.[14]
- 2014
- 20 அக்டோபர்: 2015 சனவரியில் அரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உறுதிப்படுத்தினார்.[15]
- 5 நவம்பர்: மகிந்த ராஜபக்ச தான் மூன்றாம் தடவையும் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமுள்ளதா என அறிவிக்கும் படி உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கோரினார்.[16]
- 20 நவம்பர்: ராஜபக்ச மூன்றாம் தடவை போட்டியிடப் போவதாக அறிவித்தார்.[17]
- 21 நவம்பர்: 2014 டிசம்பர் 8 இல் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், 2015 டிசம்பர் 8 இல் தேர்தல் இடம்பெறும் எனவும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்தார்.[18]
- 8 டிசம்பர்: 19 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தனர். அனைவரதும் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.[19]
- 23 - 24 டிசம்பர்: அஞ்சல் மூல வாக்களிப்பு இரண்டு நாட்களுக்கு இடம்பெற்றன.[20][21]
- 2015
- 8 சனவரி: தேர்தல் நாள். நாடெங்கும் வாக்களிப்பு நிலையங்கள் இலங்கை நேரம் 07:00 க்கு ஆரம்பித்து 16:00 மணிக்கு முடிவடைந்தது.[22][23]
Remove ads
பின்னணி
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் படி, அரசுத்தலைவர் ஒருவரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். ஆனாலும், பதவியில் இருக்கும் ஒருவர் தனது பதவிக்காலத்தின் நான்கு ஆண்டுகளின் பின்னர் தேர்தலைக் கோரலாம்.[24] 2009 மே மாதத்தில் அரசுப் படைகள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த வெற்றியை அடுத்து, 2009 நவம்பரில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார்.[25] 2010 சனவரி 26 இல் இடம்பெற்ற தேர்தலில் ராசபக்ச இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றார். எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார்.[26][27] ஆனாலும் ராசபக்சவின் இரண்டாவது பதவிக்காலம் 2010 நவம்பரிலேயே தொடங்கும் என 2010 பெப்ரவரியில் உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து அவர் 2010 நவம்பர் 19 இல் பதவியேற்றார்.[28][29][30]

Remove ads
வாக்கெடுப்பு முறை
இலங்கை அரசுத்தலைவர் (ஜனாதிபதி) விருப்பு வாக்கு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வாக்காளர்கள் அதிக பட்சம் மூவருக்குத் தமது விருப்பு வாக்குகளை இடலாம். குறைந்தது 50% இற்கும் அதிகமான வாக்குகள் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முதற்கட்ட வாக்கெடுப்பில் எவரும் 50% இற்கும் அதிகமான வாக்குகள் பெறத் தவறினால், அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படுவர். இரண்டாம் கட்டப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து 2-ஆம், 3-ஆம் விருப்பத் தெரிவாக இரண்டாம் கட்டப் போட்டியில் நிற்கும் இரண்டு வேட்பாளர்களுக்குமுரிய வாக்குகள் எண்ணப்பட்டு அவர்களின் முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு, அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றியாளராகத் தீர்மானிக்கப்படுவார்.[31]
வாக்களிப்பு
15,044,490 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.[32][33] அஞ்சல் மூலமான வாக்களிப்பு 2014 டிசம்பர் 23, 24 ஆகிய நாட்களில் இடம்பெற்றது.[34][35] 2015 சனவரி 8 இல் நாடெங்கும் வாக்கெடுப்பு நடைபெற்றது.[36]
வேட்பாளர்கள்
19 வேட்பாளர்களின் நியமனப் பத்திரங்கள் தேர்தல் திணைக்களத்தினால் 2014 டிசம்பர் 8 இல் பெறப்பட்டு, தேர்தல் ஆணையாளரினால் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.[37][38] இவர்களில் 17 பேர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்தும், இருவர் சுயேட்சைகள் ஆகவும் போட்டியிடுகின்றனர்.[39]
மகிந்த ராசபக்ச
தற்போதைய அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச ஐமசுகூ வேட்பாளராக தொடர்ந்து மூன்றாவது தடவையாக போட்டியிடுகிறார்.[40][41] இவருக்குஇதொகா,[42] கம்யூனிஸ்டுக் கட்சி,[43] லங்கா சமசமாஜக் கட்சி,[44] தேசிய சுதந்திர முன்னணி,[45] தேசிய ஊழியர் சங்கம்[46], மலையக மக்கள் முன்னணி[47] ஈபிடிபி ஆகிய சிறிய கட்சிகள் தமது ஆதரவைத் தெரிவித்தன. ஜாதிக எல உறுமய கட்சி ஆளும் கூட்டணியில் இருந்து 2014 நவம்பர் 18 அன்று விலகியதோடு, ராசபக்சவிற்கான ஆதரவையும் விலக்கிக் கொண்டது.[48][49]
2014 டிசம்பர் 8 இல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திஸ்ஸ அத்தநாயக்க, ஜயந்த கேட்டகொட ஆகியோர் ராசபக்சவின் கூட்டணிக்குக் கட்சி மாறினர்.[50][51] அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.[52][53]
மைத்திரிபால சிறிசேன
2014 நவம்பர் 21 இல் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்ட போது, ஆளும் கட்சியின் மூத்த அமைச்சரும், இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியினால் அறிவிக்கப்பட்டார்.[54][55][56] முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா, மற்றும் ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய துமிந்த திசாநாயக்க, ராஜித சேனாரத்தின போன்றவர்களின் ஆதரவும் இவருக்குக் கிடைத்தது.[57][58] சிறிசேனாவின் அமைச்சுப் பதவி, செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டு கட்சியில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட்டார்.[59][60] இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (துமிந்த திசாநாயக்க, ராஜித சேனரத்தின உட்பட நால்வர் ஆளும் கட்சியில் இருந்து விலகி எதிரணியில் இணைந்தனர்.[61] நவம்பர் 30 இல் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆளும் கட்சியில் இருந்து விலகி சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.[62] டிசம்பர் 10 இல் பழனி திகாம்பரம், வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகிய இரண்டு பிரதிமைச்சர்கள் அரசில் இருந்து விலகி சிரிசேனவிற்கு ஆதரவளித்தனர்.[63][64]
தாம் பதவிக்கு வந்தால், 100 நாட்களுக்குள் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாகவும், சர்ச்சைக்குரிய 18ஆம் திருத்த சட்டமூலத்தைத் திரும்பப் பெறப்போவதாகவும், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பார் என்றும் வாக்குறுதி அளித்தார்.[65][66] டிசம்பர் 1 இல் சிறிசேன 36 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.[67][68][69] டிசம்பர் 28 அன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசில் இருந்து விலகி மைத்திரிபாலவிற்குத் தமது ஆதரவைத் தெரிவித்தது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.[70] 2014 டிசம்பர் 30 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிசேனவிற்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக அறிவித்தது.[71]
மைத்திரிபால சிறிசேன புதிய சனநாயக முன்னணியின் வேட்பாளராக அவர்களது அன்னச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டார்.[72]
ஏனைய வேட்பாளர்கள்
- விமல் கீகணகே, இலங்கை தேசிய முன்னணி, மகிந்த ராசபக்சவின் மாற்று வேட்பாளர்[73]
- ஐதுருஸ் எம். இலியாசு, சுயேட்சை
- சிறிதுங்க ஜெயசூரியா, ஐக்கிய சோசலிசக் கட்சி
- ஜெயந்தா குலதுங்க, ஐக்கிய இலங்கை பாரிய பேரவை, மகிந்த ராசபக்சவின் மாற்று வேட்பாளர்[73]
- ஏ. எஸ். பி. லியனகே, இலங்கை தொழிற் கட்சி, மகிந்த ராசபக்சவின் மாற்று வேட்பாளர்[73]
- சுந்தரம் மகேந்திரன், நவ சமசமாஜக் கட்சி, மைத்திரிபால சிறிசேனவின் மாற்று வேட்பாளர்[73]
- சரத் மனமேந்திரா, புதிய சிங்கள மரபு
- மௌலவி இப்ராகிம் முகம்மது மிஸ்லார், ஐக்கிய அமைதி முன்னணி
- துமிந்த நகமுவ, முன்னிலை சோசலிசக் கட்சி
- ருவாந்திலகே பேதுரு, ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி
- அநுருத்த பொல்கம்பொல, சுயேட்சை
- பிரசன்னா பிரியாங்கரா, சனநாயக தேசிய இயக்கம்
- நமால் அஜித் ராஜபக்ச, நமது தேசிய முன்னணி
- பத்தரமுல்ல சீலாரத்தன, ஜன செத்த பெரமுனை
- இரத்திநாயக்கா ஆராச்சிகே சிறிசேன, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி
- முத்து பண்டார தெமினிமுல்ல, அனைவரும் குடிமக்கள், அனைவரும் அரசர்கள் இயக்கம்
- பானி விஜேசிறிவர்தன, சோசலிச சமத்துவக் கட்சி
இவர்களில் பலர் முக்கிய இரண்டு வேட்பாளர்களின் "மாற்று வேட்பாளர்களாகக்" கருதப்படுகின்றனர். இவர்களைக் களமிறக்குவதால், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம். அத்துடன், தேசியத் தொலைக்காட்சிகளில் கட்டணமற்ற நேர ஒதுக்கீடு, மற்றும் வாக்களிக்கும் நிலையம், வாக்குகள் எண்ணும் நிலையங்களில் ஒவ்வொன்றிலும் இரண்டு முகவர்களை வைத்திருத்தல் போன்ற நன்மைகளையும் பெறமுடியும்.[74]
Remove ads
வன்முறைகளும் முறைகேடுகளும்
ஜாதிக எல உறுமய கட்சி ஆளும் ஐமசுகூ கூட்டணியில் இருந்து விலகிய இரு நாட்களில் கொழும்பின் பொறளை புறநகரில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரருக்கு சொந்தமான பௌத்த விகாரை ஒன்று 2014 நவம்பர் 20 அன்று தாக்கப்பட்டது.[75][76][77] 2014 நவம்பர் 21 அன்று மாலை ஐமசுகூ உறுப்பினர்கள் சிலர் எதிரணிக்குத் தாவியதற்கு ஆதரவாக இடம்பெற்ற நிகழ்வுகளின் போது ஐதேக உறுபினர் ஒருவர் பயகலை என்ற இடத்தில் வைத்து சுடப்பட்டார்.[78] நவம்பர் 25 இல் ஐதேக உறுப்பினர் எம். எச். ஏ. அலீமின் அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.[79] நவம்பர் 29 அன்று மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருக்குச் சொந்தமான பாரவுந்து ஒன்று மரந்தககமுல்ல என்ற இடத்தில் தாக்கப்பட்டது.[80]
டிசம்பர் 17 காலையில் காலிக்கு அருகில் சிறிசேன பயன்படுத்தவிருந்த பிரசார மேடை ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. மூன்று தொழிலாளிகள் கடத்தப்பட்டனர்.[81] கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஎட்டிகம விடுவித்தார்.[82] அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவர் டிசம்பர் 26 இல் சிங்கப்பூர் சென்றார்.[83] டிசம்பர் 28 இல் இவர் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டாலும், அடுத்த நாள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.[84]
2014 டிசம்பர் 24 அன்று ஐதேக தலைமையகம் சிறீகொத்தா தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி உறுப்பினர்களால் தாக்கப்பட்டது. பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் இரு தரப்பிலும் 30 பேர் வரை காயமடைந்தனர்.[85]
Remove ads
முடிவுகளும் பதவியேற்பும்
51.28% வாக்குகள் பெற்றதை அடுத்து சிறிசேன வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ராசபக்ச 47.58% வாக்குகளைப் பெற்றார்.[10] இறுதி முடிவுகள் வெளிவர முன்னரேயே ராசபக்ச தனது தோல்வியை ஒப்புக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சுமுகமான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாக அறிவித்தார்.[86][87] அதன் பின்னர் ராசபக்ச தனது அதிகாரபூர்வ இருப்பிடமான அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.[88][89]
மைத்திரிபால சிறிசேன இலங்கையின் 6வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி க. சிறீபவன் முன்ன்லையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் 2015 சனவரி 9, 18.20 மணிக்கு பதவியேற்றார்.[90][91] பொதுவாக புதிய அரசுத்தலைவர் ஒருவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையிலேயே பதவியேற்பார். ஆனாலும் முன்னாள் தலைமை நீதிபதியை ராசபக்ச அரசு சட்டபூர்வமற்ற வகையில் பதவியிறக்கம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறிசேன பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய மறுத்தார்.[92][93] எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார்.[94][95]
தேசிய மட்ட முடிவுகள்
மாவட்ட முடிவுகள்
மாவட்ட வாரியாக அதிகாரபூர்வமான முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன
மைத்திரிபால சிறிசேன
மகிந்த ராசபக்ச
சிறிசேன வெற்றி பெற்ற மாவட்டங்கள் |
ராசபக்ச வெற்றி பெற்ற மாவட்டங்கள் |
Remove ads
வரைபடங்கள்
- தேர்தல் தொகுதிகள் வாரியாக பெரும்பான்மை
- தேர்தல் மாவட்டங்கள் வாரியாக பெரும்பான்மைமைத்திரிபால சிரிசேனமகிந்த ராசபக்ச
- 2015 அரசுத்தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads