ஐரோவாசியக் கழுகு ஆந்தை

பறவை இனம் From Wikipedia, the free encyclopedia

ஐரோவாசியக் கழுகு ஆந்தை
Remove ads

ஐரோவாசியக் கழுகு ஆந்தை (Eurasian eagle-owl) என்பது யூரேசியாவின் பெரும்பகுதியில் வசிக்கும் கழுகு ஆந்தை இனமாகும். மேலும் இது ஐரோப்பாவில் கழுகு ஆந்தை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.[4] இது ஆந்தையின் மிகப்பெரிய இனங்களில் ஒன்றாகும், மேலும் பெண் பறவைகள் 188 செமீ (6 அடி 2 அங்குலம்) சிறகு அகலம் கொண்டதாகவும், மொத்த நீளம் 75 செமீ (30 அங்குலம்) வரை வளரக்கூடியது. ஆண் பறவைகள் சற்று சிறியவையாக இருக்கும்.[5] இந்த ஆந்தையானது பெரியதாக உள்ள இவை நல்ல பழுப்பு மஞ்சள் நிறத்தில் அடர் பழுப்பு மற்றும் கருப்பு நிற அடர்த்தியான வரிகள் உடலில் காணப்படும். தலையின் மேல் கொம்புகள் போன்ற இறகுக் கற்றைகள் மேல்நோக்கி நீண்டிருப்பதால், கொம்பன் ஆந்தை என்ற காரணப்பெயர் ஏற்பட்டது. இதன் இறக்கைகளிலும், வாலிலும் வரிகள் காணப்படும். இதன் ஆரஞ்சு நிற கண்கள் தனித்துவமானவை.[6]

விரைவான உண்மைகள் ஐரோவாசியக் கழுகு ஆந்தை, காப்பு நிலை ...
Remove ads

சிறப்பு

இங்கு பல பறவையினங்கள் இருந்தாலும் இரவாடியான கொம்பன் ஆந்தையே முதன்மையான பறவையாகப் பார்க்கப்படுகிறது. வலுவான கால்கள், இரவிலும் ஊடுருவிப் பார்க்கும் திறன் கொண்ட கண்கள், இரையை வீழ்த்தும் திறன் பெற்ற நகங்கள், பலம் பொருந்திய அலகுகள் என தனது வேட்டைத் திறனைக் கொண்டு, தங்களைவிட பலத்தில் வலிமையான இரையைக் கூடப் பிடிக்கும் திறன் கொண்டிருப்பதால் கொம்பன் ஆந்தைகள், வான்வெளியின் புலிகளாகக் கருதப்படுகின்றன. இவை கூகையைப் போலச் சூரிய வெளிச்சத்தைக் கண்டு மிரளாது. [7]

Thumb
வான்வெளியின் புலி கொம்பன் ஆந்தை
Remove ads

உடலமைப்பு

56 செ.மீ. - குண்டான தோற்றம் கொண்ட இது பழுப்பு நிறமான உடலில் வெளிர் மஞ்சளும் நல்ல பழுப்புமான கோடுகளையும் புள்ளிகளையும் கொண்டது. பெரிய வட்ட வடிவமான ஆரஞ்சு நிறக் கண்களையும் தலையில் கருப்பு நிறத்தில் விறைத்து நிற்கும் கொம்புகளையும் கொண்டது. கண்கள் உருண்டு, பெரியதாக, மஞ்சள் நிறத்தில் காணப்படும், ஊர்ப்பருந்தை விட சற்று பெரியதாக காணப்படும் பெரிய ஆந்தைகள் இவை.

Thumb
கொம்பன் இணையுடன்

காணப்படும் பகுதிகள்

Thumb
கொம்பனின் கூர்மையான பார்வை

ஐரோவாசியக் கழுகு ஆந்தைகள் புதர் நிறைந்த பாறைகளோடு கூடிய மலைப்பக்கங்கள், காடுகள், பெரிய மாமரங்கள் வளர்ந்து நிற்கும் தோப்புகள் ஆகியவற்றில் காணப்படும் இது மாறாப் பசுங்காடுகளையோ நீரில் வளம் இல்லாத வறள் காடுகளையோ சார்ந்து திரிவதில்லை. பகலில் மறைந்திருக்கும் பாறை இடுக்குகளிள் வாழும். கூடுதலாக, இவை ஊசியிலைக் காடுகள், புல்வெளிகள் மற்றும் பிற பகுதிகளில் பல்வேறு உயரங்களில் வாழ்கின்றன. ஐரோவாசியக் கழுகு-ஆந்தைகள் எப்போதாவது விவசாய நிலங்கள் மற்றும் ஐரோப்பிய நகரங்களில் பூங்கா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன, அரிதாகவே சிலசமயங்களில் பரபரப்பான நகர்ப்புறங்களில் காணப்படுகின்றன.[6][8]

உணவு

ஐரோவாசியக் கழுகு ஆந்தைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் வேட்டையாடும். இவற்றின் உணவில் முதன்மையாக கொறித்துண்ணிகள் மற்றும் முயல்கள் போன்ற சிறிய பாலூட்டிகள் உள்ளன. ஆனால் இவை பெரிய பாலூட்டிகள் மற்றும் பல்வேறு அளவுகளில் உள்ள பறவைகளையும் வேட்டையாடுகின்றன. பிற இரண்டாம் நிலை இரைகளான ஊர்வன, நீர்நிலவாழிகள், மீன்கள், பெரிய பூச்சிகள் மற்றும் பிற வகையான முதுகெலும்பில்லாத உயிரினங்களையும் உண்கின்றன.[5][6][8][9]

Remove ads

இனப்பெருக்கம்

பொதுவாக ஐரோவாசியக் கழுகு ஆந்தைகள் கூடுகள் ஏதும் கட்டுவதில்லை. புதர் ஓரமான குழிகளிலும் மண்மேடுகளின் மீதும், நிழல் கவிழ்ந்த பாறைகளின் மேல் முட்டைகளை இடுகின்றன. சில நேரங்களில் பெரிய புதர் அல்லது மரத்தின் கீழேயோ கூட மறைவிடங்களில் முட்டையிடும். கூடு என்பது பொதுவாக இரண்டு - நான்கு முட்டைகளைக் கொண்ட ஒரு பள்ளம் ஆகும். எல்லா முட்டைகளும் ஒரே நாளில் இடப்படுவதில்லை. ஒருநாள்விட்டு ஒரு நாள் அவை முட்டையிடுவதால், குஞ்சுகள் வெவ்வேறு வளர்ச்சி நிலையில் இருப்பதை கண்டு அறியலாம்.[6][8] இனப்பெருக்க காலத்தில் இவை மிகவும் மூர்க்கமாக முட்டை இட்டுள்ள பகுதியைப் பாதுகாக்கும். ஓர் ஆந்தை அடைகாக்கும் வேளையில் மற்றொரு ஆந்தை அருகில் உள்ள மரத்திலோ அல்லது பாறையிலோ அமர்ந்து காவல் இருக்கும். வைரி போன்ற பறவைகளோ அல்லது மனிதர்களோ முட்டைகள் உள்ள பகுதியை அணுகும்போது தற்காப்பிற்காகத் தாக்க முற்படும். பெண் முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகளை பராமரிக்கிறது. குஞ்சுகள் சுமார் 33 அல்லது 35 நாட்களில் வெளிவரும் மேலும் ஆண் பறவை குஞ்சு பொரித்த பிறகு குஞ்சுகளுக்கும் உணவை வழங்குகிறது. குஞ்சுகள் பெற்றோர் இருவராலும் சுமார் ஐந்து மாதங்கள் பராமரிக்கபடுகின்றன.[8] ஐரோவாசிய கழுகு-ஆந்தையின் குறைந்தது 12 கிளையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.[10]

Thumb
முட்டையை பாதுகாக்கும் கொம்பன்
Remove ads

தற்காப்பு நடத்தை

பல நேரங்களில் இவைகள் தன் குஞ்சுகளுக்கு அருகில் வரும் மனிதர்கள் அல்லது மற்ற உயிரினங்களைத் திசை திருப்புவதற்காகவோ அல்லது அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் வேளையிலோ இறகு உடைந்து தன்னால் பறக்க இயலாமல் இருப்பதுபோல் இறக்கைகளை அடித்துக் கொண்டும், ஒலி எழுப்பிக் கொண்டும், தலையைத் தொங்கவிட்டுக் கொண்டும் இருக்கும், எதிரி நெருங்கி வந்தால் பறந்து விடும். ஆழ்ந்த தொனியில் ப்புஉப்.. பூஊ என விட்டு விட்டுக் கத்தும். கூட்டை நெருங்கினால் அலகை ஒன்றோடு ஒன்று தட்டி ஓசை எழுப்புவதோடுகூட, தூவிகளை புஸ்ஸென உப்பும்படி செய்தும் பயங்காட்டும்.

Thumb
தூவிகளை உயர்த்தி தற்காத்தல்

இளம் கொம்பனின் வாழ்க்கை முறை

குஞ்சுகள் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்தே பாதுகாத்து வளர்க்கின்றன. சில சமயங்களில் எலிகளைக் கொன்று எடுத்து வந்து குஞ்சுகளுக்குக் கொடுப்பதோடு உணவைச் சேமிப்பது போல் குஞ்சுகளின் அருகாமையில் வைக்கும். கொம்பன் ஆந்தைகள், தங்கள் குஞ்சுகளை நன்கு பாதுகாத்தாலும் அவைகள் வளர் நிலையில் தமது வாழிடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பிக்கும் போது பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்கின்றன. மனிதர்களாலும் மற்ற வேட்டையாடிப் பறவைகளாலும் நேரும் ஆபத்துகளை விடவும் அவை பாறைகளில் இருந்து கீழே விழுந்துவிடும் ஆபத்தே அதிகமாக உள்ளது. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அவை இருக்கும் பாறைகளின் மறைவிடங்களை விடவும் அளவில் பெரியதாகும் போது வேறு இடங்களுக்குச் செல்லத் தொடங்கும். அச்சமயங்களில் அவை நழுவி கீழே உள்ள நீர்நிலையில் விழுந்து விடும். அவ்வாறு நீரில் விழும் ஆந்தைக் குஞ்சுகள் சில சமயங்களில் கரையேறிவிடும். ஆனால் பலநேரங்களில் அவை நீரில் மூழ்கி இறந்து விடும்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads