கு. கலியபெருமாள்

தமிழ்ப் போராளி From Wikipedia, the free encyclopedia

Remove ads

புலவர் கு. கலியபெருமாள் (04 மார்ச் 1924 - 16 மே 2007) தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட்டம் என வாழ்ந்த போராளியாவார்.

விரைவான உண்மைகள் புலவர்கு. கலியபெருமாள், பிறப்பு ...
Remove ads

பிறப்பு

இன்றைய கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சௌந்திரசோழபுரத்தில் அஞ்சலை - குஞ்சான் இணையருக்கு இரண்டாவது மகனாக 4 மார்ச் 1924 அன்று பிறந்தார் கலியபெருமாள். இவர் தம்பியின் பெயர் மாசிலாமணி.[1]

கல்வி

சௌந்திரசோழபுரத்தில் தொடக்கக் கல்வியும், பெண்ணாடத்தில் பள்ளிக் கல்வியையும் பெற்றார். புதுமுக வகுப்பை விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் கற்றார். இக்கால கட்டத்தில் "பெரியார்" ஈ. வெ. இராமசாமி தலைமையில் செயல்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் அறிமுகம் கிடைத்து. சுயமரியாதை நூல்களையும், துண்டறிக்கைகளையும் கொண்டுவந்து பிற மாணவர்களுக்கு வழங்கிவந்தார்.

பின் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் படிப்பைக் கற்க இணைந்தார். அக்கல்லூரியில் சாதி வேறுபாடு மிகுதியாகக் காணப்பட்டது. பார்ப்பன மாணவர்களின் விடுதியில் பிற மாணவர்கள் நுழையக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன. அதை எதிர்த்த கலியபெருமாள், 'புத்துலக சிற்பகம் (திராவிடர் மாணவர் கழகம்)’ என்னும் மாணவர் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களை திரட்டிப் போராடி அங்கு இருந்த பாகுபாட்டை ஒழித்தார்.[2]

Remove ads

ஆசிரியப்பணி

கல்வியை முடித்தப்பின் ஆசிரியராக வாழ்க்கையைத் துவக்கினார்.

தனி வாழ்க்கை

1949-இல் வாலாம்பாள் என்பவரைத் திருமணம் செய்தார் கலியபெருமாள். இவ்விணையருக்கு வள்ளுவன், சோழ நம்பியார், தமிழரசி, கண்ணகி, அஞ்சுகம் ஆகிய பிள்ளைகள் பிறந்தனர்.[1]

செயல்பாடுகள்

சாரு மஜூம்தாரை சந்தித்தல்

இந்திய அளவில் நக்சலைட் இயக்கத்தைத் தொடங்கிய சாரு மஜூம்தார் தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவரைப் பெண்ணாடம் அருகில் உள்ள முந்திரிக் காட்டுக்கு வரவழைத்து இரகசியக் கூட்டம் நடத்தினார் கலியபெருமாள். மஜூம்தார் தலைமையிலான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) (இ.பொ.க. (மா.லெ)) தமிழ்நாட்டில் வேரூன்றக் காரணமாக இருந்தவர்களுள் முதன்மையானவர் கலியபெருமாள்.

போராட்டங்கள்

ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, பெரும் நிலக்கிழார்களின் நிலங்களுக்குத் தனது தோழர்களுடனும், பொதுமக்களுடனும் திரண்டு சென்று அதிரடியாக அறுவடை நடத்தி நெல் மூட்டைகளைக் கடத்தி வந்து கிராமத்தினருக்குப் பகிர்ந்து கொடுத்தார். பெண்ணாடம் பகுதி சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தலைமையேற்று நடத்தினார்.

வெடிவிபத்து

22 பிப்ரவரி 1970 அன்று செளந்திரசோழபுரத்தில் உள்ள தனது தோப்பில் கணேசன், காணியப்பன், சர்ச்சில் ஆகிய மூன்று இளைஞர்கள் இவர் முன்னிலையில் தற்காப்புக்காக வெடிகுண்டு தயாரித்த பொழுது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து மூன்று இளைஞர்களும் அதே இடத்தில் சிதறிப்போனார்கள். அருகில் இருந்த கலியபெருமாளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இறந்து போன மூன்று இளைஞர்களின் உடல்களையும் அருகிலேயே புதைத்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார் கலியபெருமாள்.

மரண தண்டனை

1971-ல் கலியபெருமாளும்,அவரது மகன்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை உளவாளி ஐயம்பெருமாள் கொலை வழக்கில் 1972-ஆம் ஆண்டு கடலூர் நீதிமன்றத்தில் கலியபெருமாளுக்கும் அவரது மூத்த மகன் வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனையும், இளைய மகன் சோழ நம்பியார், கலியபெருமாளின் ஒன்றுவிட்ட தம்பிகள் மாசிலாமணி, இராசமாணிக்கம், ஆறுமுகம், கலியபெருமாளின் மனைவியின் தமக்கை அனந்தநாயகி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் மதராசு உயர்நீதிமன்றத்தில் வள்ளுவனுக்கு ஆயுள் தண்டனை என்றும் மற்றவர்களுக்கு அதே தண்டனை என்றும் உறுதிசெய்யப்பட்டது.[3] கலியபெருமாளை மரணதண்டனையிலிருந்து காக்க பலரும் போராடி, கையெழுத்து இயக்கம் நடத்தி இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த வி. வி. கிரி-க்கு அனுப்பினர். இதன் தொடர்ச்சியாக 1973-இல் கலியபெருமாளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார் குடியரசுத் தலைவர்.

சிறைவாழ்வுக்கு முடிவு

1981-இல் தில்லியைச் சேர்ந்த ஊடகர் கன்ஷியாம் பர்தேசி, சிறையிலிருந்த கலியபெருமாளையும் அவர் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்துப் பின் மனித உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அவர்கள் அனைவரையும் 1983-இல் விதிகளற்ற நீண்டகால சிறைவிடுப்பில் மீட்டு வந்தார். சில ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தண்டனையில் இருந்து அவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர். இக் காலகட்டத்தில் பெருஞ்சித்திரனாரின் அரசியல் பார்வையை உள்வாங்கிய கலியபெருமாள் பிறகு தமிழ்த் தேசியராக மாறினார் .[4] பொன்பரப்பி தமிழரசன் உள்ளிட்ட இளைஞர்கள் இவர் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டனர்.

Remove ads

மறைவு

கலியபெருமாள் 16 மே 2007 அன்று காலமானார். அவரின் உடல், சௌந்திரசோழபுரத்தில், கணேசன், காணியப்பன், சர்ச்சில் ஆகியோர் உயிரிழந்த அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அவ்விடம் ''தென்னஞ்சோலை செங்களம்'' என அழைக்கப்படுகிறது.

தன்வரலாற்று நூல்

கலியபெருமாள் தனது வாழ்க்கை வரலாறை மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் (2006) என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

பரவலர் பண்பாட்டில்

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆன மேதகு 2 -வில் (2022) ஒரு காட்சியில் கலியபெருமாளின் பாத்திரத்தை சோழ நம்பியார் ஏற்று நடித்துள்ளார். கலியபெருமாள், தன்னோடு சிறையிலிருந்த பிரபாகரனுக்குக் கருத்தியல் ஆலோசனை வழங்குவதாக இக்காட்சி அமைந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பகுதி 1 (2023) திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்த "பெருமாள் வாத்தியார்" பாத்திரம், கலியபெருமாளை ஒத்துள்ளது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads