கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
Remove ads

கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 11, 1908 - செப்டம்பர் 19, 1980)[1] தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.[2][3][4]

விரைவான உண்மைகள் கே. பி. சுந்தராம்பாள்K.B.Sundarambal, பிறப்பு ...
Remove ads

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

சுந்தராம்பாள் சென்னை மாகாணத்தில் கோயமுத்தூர் மாவட்டத்தில் (தற்போதைய ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு) கொடுமுடியில் கிருஷ்ணசாமி–பாலாம்பாள் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்குக் கனகசபாபதி என்ற சகோதரர் மற்றும் சுப்பம்மாள் என்ற சகோதரி இருந்தனர். சுந்தராம்பாள் இளம்வயதிலேயே தந்தையை இழந்தார் மற்றும் தனது சகோதரர் ஆதரவால், குடும்பத்தைத் தாயார் நடத்தி வந்தார். இவர் கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி கற்றார். குடும்ப வறுமைநிலை காரணமாக இவர் ரயில்களில் பாடி பிச்சை எடுத்து வந்ததாகவும், அப்போது ஒரு நாள் நடேசையர் என்பவர் இவரது பாடும் திறமையைக் கண்டு இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டதாகவும் சுந்தராம்பாள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.[5] மற்ற ஆதாரங்களின்படி, பாலாம்பாளுக்கு அறிமுகமான கிருஷ்ணசுவாமி ஐயர் என்ற போலீஸ் அதிகாரி சுந்தராம்பாளின் திறமையைக் கண்டறிந்து, நாடகக் கலைஞர்களில் ஒருவரான பி.எஸ்.வேலு நாயருக்கு அறிமுகப்படுத்தினார்.[6]

1927-ஆம் ஆண்டு சுந்தராம்பாள் சக நாடக நடிகரான கிட்டப்பாவை திருமணம் புரிந்து கொண்டார். 1933 டிசம்பர் 2-இல் 28 வயதில் கிட்டப்பா காலமானார். அப்போது சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலை கட்டத்தொடங்கினார் மற்றும் எந்தவொரு ஆண் நடிகருடனும் சோடியாக நடிப்பதில்லை எனச் சபதம் மேற்கொண்டார், அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். கே.பி. சுந்தராம்பாள் செப்டம்பர் 1980-இல் காலமானார்.

Remove ads

நாடக வாழ்வு

Thumb
இள வயதில் சுந்தராம்பாள்

வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தைச் சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். பசிக்குதே! வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். இதைத் தொடர்ந்து இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் மற்றும் சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார். சுந்தராம்பாள் 1917−இல் கொழும்பு சென்று நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகங்கள் அரங்கேறின. 1920−இல் சுந்தராம்பாள் மீண்டும் நாடு திரும்பினார். இவர் வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் பல புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.

சுந்தராம்பாள் 1926−இல் மீண்டும் கொழும்பு சென்றார். அக்காலத்தில் கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்றுப் புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் சுந்தராம்பாளுடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார். 1926-ஆம் ஆண்டு சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. பல்வேறு இசைத் தட்டுகளில் சுந்தராம்பாள் பாடிய பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின. 1933−இல் அவருடைய கணவர் கிட்டப்பாவின் இறப்புக்குப் பின்னர், நீண்டகாலமாகப் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த சுந்தராம்பாள் 1934−இல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். பின்னர் தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். இவைகளில் பெரும்பாலும் இவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.

Remove ads

திரைப்படத் துறை

1935−இல் சுந்தராம்பாள் பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். படத்தில் மொத்தம் இருந்த 41 பாடல்களில் சுந்தராம்பாள் 19 பாடல்களைப் பாடி இருந்தார். அடுத்ததாக மணிமேகலை திரைப்படத்தில் நடித்தார். 1938−இல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−இல் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார். சுந்தராம்பாள் தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார். தொடர்ந்து அவ்வையார் என்ற திரைப்படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−இல் வெளிவந்தது. படத்தில் மொத்தம் இருந்த 48 பாடல்களில் சுந்தராம்பாள் 30 பாடல்களைப் பாடி இருந்தார். இவற்றில் 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. 1964 பூம்புகார் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தைச் சுந்தராம்பாள் ஏற்று நடித்திருந்தார். பின்னர் மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973), மணிமேகலை உள்ளிட்ட 12 படங்களில் சுந்தராம்பாள் பாடி நடித்தார்.

அரசியல்

காங்கிரஸ் பிரச்சாரங்களில் சுந்தராம்பாள் ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவை தொடர்பாகப் பாடல்களையும் பாடி வந்தார். காமராசர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8]

விருதுகளும் சிறப்புகளும்

சில திரைப்படப் பாடல்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads