சந்திரயான்-1
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரயான்-1 (Chandrayaan-1) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் சந்திரயான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலாப் பயணக்கலம் ஆகும்.[6][7] இது 2009 ஆகத்து வரை இயக்கத்தில் இருந்தது. இத்திட்டத்தில் ஒரு நிலா வட்டணைக்கலமும் ஒரு தரையிறக்க நிலா மொத்தல் கலமும் அடங்கியிருந்தன . இந்தியா இந்த விண்கலத்தினை முனைய ஏவூர்தி(PSLV-XL) ஐப் பயன்படுத்தி 2008 அக்தோபர், 22 இல் ஆந்திரப் பிரதேசம் சிறி அரிகோட்டா, சத்தீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது.[8] இது இந்திய விண்வெளி நிகழ்ச்சிநிரலில் பேருந்தாற்றலை அளித்தது.[9] ஏனெனில் இதன் வழி இந்தியா நிலாத் தேட்டத்துக்கான தொழில்நுட்பத்தை ஆய்வுவழி தானே தனித்து உருவாக்கியது.[10] சந்திரயான்-1 விண்கலம் 2008 நவம்பர் 8 இல் நிலா வட்டணையில் செலுத்தப்பட்டது.[11]
நிலா மொத்தல் கலம் சந்திரயான் வட்டணைக்கலத்தில் இருந்து பிரிந்து கட்டுப்பாடான பாணியில் இறங்கி, 2008 நவம்பர் 14 இல் நிலாவின் தென் முனையில் குதித்து மொத்தியது. எனவே இந்தியா நிலாவில் ஒரு பொருளை வைத்து வெற்றிகண்ட நான்காம் நாடாகியது.[12] மொத்தல் கலம் சேக்கிள்டன் குழிப்பள்ளத்தில் 15.01 ஒபொநே நேரத்தில் மோதியது.[13][14][15][16] மொத்திய இடம் சவகர் புள்ளி எனப்பெயரிடபட்டது.[17]
இதன் முதன்மையான நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு கனிமங்கள், தனிமங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பருமான வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முனையச் செயற்கைக்கோள் ஏவுகலமான முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவி வட்டணையில் செலுத்தும். பின்னர் விண்கலம் தன்னகத்துள்ள முற்செலுத்த அமைப்பின் துணைகொண்டு 100 கி.மீ முனைய வட்டணையில் நிலவைச்சுற்றிவரும்படி நிலைநிறுத்தவும் திட்டமிடப்பட்டது.
இப்பணித்திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.திட்ட மதிப்பீட்டுத் தொகை 386 கோடி உரூபா ஆகும்.[18]
இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.
இரண்டாண்டுகளுக்குள் நிலா மேற்பரப்பு முழுவதும் அளக்கையிட்டு மேற்பரப்பில் அமையும் வேதிம உட்கூற்களின் முழு தரைப்படத்தையும் அதன் நிலப்பொதிவியல் முப்பருமான உருவரையையும் பதிவு செய்ய கருதப்பட்டது. நிலா முனனை வட்டாரங்களில் பனிவடிவில் நீர் உறைய வாய்ப்புள்ளதால் அவை ஆர்வத்தோடு அலசப்பட்டன.[19]
ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர், திறன்குன்றிய வெப்பக் கவசம், விண்மீன் தடங்காணி உட்பட பல தொழில்நுட்பக் கோளாறுகளை வட்டணைக்கலம் உணரத் தொடங்கியது; சந்திரயான்-1 தன் தகவல் பரிமாற்றத்தினை 2009 ஆகத்து 28 அன்று 20:00 ஒபொநே மணி நேரத்தில் நிறுத்தியது. உடனே இந்திய விண்வேளி ஆய்வு நிறுவனம் சந்திரயான்-1 இன் பணி நிறைவுற்றதாக அறிவித்தது. சந்திரயான்-1 இரண்டாண்டுகளுக்குப் பதிலாக 312 நாட்களே இயங்கியது; என்றாலும், இத்திட்டம் நிலாத் தண்ணீர் உட்பட பெரும்பாலான தன் அறிவியல் நோக்கங்களை வென்றெடுத்தது.[5][20][21][22]
இந்த தேட்ட முனைவின் பல்வேறு சாதனைகளில் நிலா மண்ணில் பரவலாக நீர்மூலக்கூறுகள் பொதிந்துள்ளதைக் கண்டறிந்தமை சிறப்பானதாகும்.[23]
இயக்கத்தை நிறுத்திய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, நாசா தன் தரை வீவாணி அமைப்புகளைக் கொண்டு 2016 ஜூலை 2 இல் சந்திரயான்-1 இன் இருப்பை நிலா வட்டணையில் நிலாவைச் சுற்றிக்கொண்டிருப்பதை மீளக் கண்டறிந்தது.[24][25] தொடர்ந்து மும்மாத நோக்கிடுகளுக்குப் பின்னர் துல்லியமாக இரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை குத்துயரத்தில் 150 கி.மீ. முதல் 270 கி.மீ. வரை மாறும் அதன்வட்டணை இயக்கத்தை நாசா கண்டறிந்தது.[26]
Remove ads
வரலாறு
அன்றைய இந்திய முதன்மை அமைச்சரான அடல் பிகாரி வாஜ்பாய் 2003 ஆகத்து 15 இல் விடுதலை நாளன்றைய பேச்சில் சந்திரயான்-1 திட்டத்தை அறிவித்தார்.[27] இந்தத் திட்டம் இந்திய விண்வெளி நிகழ்நிரலுக்கு ஓரு மாபெரும் உந்துதலை அளித்தது.[9] நிலாவுக்கான இந்திய அறிவியல் திட்டம் சார்ந்த எண்ணக்கரு 1999 ஆம்ஆண்டு இந்திய அறிவியல் கல்விக்கழகக் கூட்டத்தில் முதலில் எழுப்பப்பட்டது. இந்திய விண்ணியக்கக் கழகம் இந்த எண்ணக்கருவை 2000 ஆம் ஆண்டுக்குக் கொண்டுசென்றது. விரைவிலேயே தேசிய நிலாத் திட்டச் செயலாண்மைக் குழு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை அமைத்தது. மேலும் அது இசுரோ இந்திய விண்வெளித் திட்டங்களுக்கான, குறிப்பாக நிலாப் பயணத்துக்கான தொழில்நுட்ப வலுவுள்ளதெனவும் முடிவெடுத்து அறிவித்தது. 2003 ஆம் ஆண்டு ஏப்பிரலில் 100 பெயர்பெற்ற கோள் அறிவியல், விண்வெளி அறிவியல், புவி அறிவியல், இயற்பியல், வேதியியல், வானியல், வானியற்பியல், பொறியியல், தொடர்பியல் புலங்களைச் சார்ந்த இந்திய அறிவியலாளர்கள் ஒன்றுகூடி விவாதித்து, செயலாண்மைக் குழுவின் நிலாவுக்கு விண்கலத்தை அனுப்பும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தன. ஆறு மாதங்களுக்குப் பிறகு, நவம்பரில் இந்திய அரசு நிலாப் பயணத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.[28][29]
Remove ads
நோக்கங்கள்
இந்தத் திட்டம் பின்வரும் நோக்கங்களை அறிவித்தது.[30]
- நிலா வட்டணையில் சுற்றிவரும் விண்கலத்தை வடிவமைத்தல், உருவாக்குதல், இந்திய ஏவூர்தி வழியாக அதை விண்ணில் ஏவுதல்
- விண்கலத்தில் அமையும் அறிவியல் கருவிகளைக் கொண்டு செய்முறைகளைச் செய்து பின்வரும் தரவுகளைப் பெறுதல்:
- நிலா அண்மை, சேய்மைப் பக்கங்கள் இரண்டுக்குமான (5–10 m or 16–33 அடி உயரம் வரை உயர்வெளிப் பிரிதிறன் உள்ள) முப்பருமான நிலப்படத்தை உருவாக்குதல்
- முழு நிலா மேற்பரப்பையும் உயர்வெளிப் பிரிதிறனுடன் வேதிம, கனிமவியல் நிலப்படம் உருவாக்குதல்; குறிப்பாக, மகனீசியம், அலுமினியம், சிலிக்கான், கால்சியம், இரும்பு, டிட்டானியம், இரேடான், யுரேனியம், தோரியம் ஆகிய வேதித் தனிமங்களுக்கான நிலப்படம் உருவாக்குதல்
- அறிவியல் அறிவைப் பெருக்குதல்
- நிலாப்பரப்பில் ஒரு மொத்தல் துணைக்கலத்தை விடுவித்து எதிர்கால மென்மையான தரையிறங்குதல் திட்டங்களுக்கான அடிப்படைகளை ஆராய்தல்
திட்ட இலக்குகள்

திட்ட நோக்கங்களை எய்த பின்வரும் திட்ட இலக்குகள் வரையறுக்கப்பட்டன.
- நிலையாக நிழலில் உள்ள நிலாத் தென்முனை வட்டாரங்களின் உயர்பிரிதிறத்தில் கனிமவியல், வேதிமப் படிமமாக்கல்
- நிலாப் பரப்பிலும் அடிபரப்பிலும் உள்ள நிலாத் தண்ணீர்ப்பனி நிலவுதலைத் தேடல், குறிப்பாக நிலாமுனைகளில் தேடல்
- நிலா உயர்சமவெளிப் பாறைகளின் வேதிமங்களை இனங்காணல்
- நிலாப்புறணி வேதிம அடுக்கியலைப் பெருமொத்தல் குழிகளின் நடுவே உயர்சமவெளியிலும் தென்முனை ஐத்கன் வட்டாரங்களிலும்(நிலா அகப்பொருள் உள்ளதாக எதிர்பார்க்கப்படும் பகுதி) தொலைவுணர்தல் வழி கண்டறிதல்
- நிலா மேற்பரப்பு உயர வேறுபாட்டுக் கூறுபாடுகளை வரைதல்
- 10 கிலோமின்னன் வோல்ட்டைவிடக் கூடுதலான X-கதிர் சார்ந்த கதிர்நிரலையும் 5 m (16 அடி) பிரிதிறனுடன் நிலாப் பரப்பின் பெரும்பகுதி மண்ணடுக்கியலையும் நோக்கீடு செய்தல்
- நிலாவின் தோற்றமும் படிமலர்ச்சியும் குறித்த புரிதலுக்கான புதிய கணிப்புகள்
Remove ads
வடிவமைப்புக் குறிப்பீடுகள்
- பொருண்மை
- ஏவும்போது 1,380 kg (3,042 lb); நிலா வட்டணையில் 675 kg (1,488 lb) ;[31] மொத்தல் கலத்தை நிலாவில் எறிந்த பின் 523 kg (1,153 lb).
- அளவுகள்
- தோராயமாக, 1.5 m (4.9 அடி) ஆரப் பருங்கோளகம்
- தொடர்பாடல் முறை
- அறிவியல் தரவுக்கு எக்சு அலைப்பட்டை அலைவெண்ணில் இயங்கும் 0.7 m (2.3 அடி) விட்டமுள்ள இரட்டை வலயப் பரவளைய உணர்கிண்ணம் பயன்படுகிறது; தொலையளவி, தடக்கண்காணிப்பு, கட்டளைக்குமானத் தொடர்பாடல் எசு. அலைப்பட்டை அலைவெண்ணில் நிகழ்கிறது.
- மின்திறன்
- விண்கலம் முதன்மையாக சூரியக்கல அணி வழி மின்திறனைப் பெருகிறது. இதில் மொத்தமாக, 2.15 × 1.8 m (7.1 × 5.9 அடி) பரப்பளவு உள்ள ஒரு சூரியக்கலப் பலகம் 750 வாட் உச்ச மின் திறனை 36 ஆம்பியர் மணி கொள்ளவுள்ள இலித்தியம்- இயனி மின்கல அடுக்கில் ஒளிமறைப்புகளின்போது பயன்படுத்த தேக்கி வைக்கிறது.[32]
- செலுத்தம்
- விண்கலம் நிலா வட்டணையை அடையவும், நிலாவைச் சுற்றிவரும்போது வட்டணை, குத்துயர நிலைப்பைப் பேணவும், ஒருங்கிணைந்த இரட்டைச் செலுத்துபொருள் உள்ள செலுத்த அமைப்பைப் பயன்படுத்தல். இதற்கானத் திறன் தொகுதியில் 440 நி உந்துபொறி ஒன்றும் எட்டு 22 நி உந்துபொறிகளும் பயன்படுத்தல். எரிபொருளும் ஆக்சிடைசரும் ஒவ்வொன்றும் 390 லிட்டர்கள் (100 US gal) கொள்ளளவுள்ள இரு தொட்டிகளில் தேக்கப்படல்.[31][32]
- கலம் இயக்குதலும் கட்டுபாடும்
- விண்கலம் மூவச்சு நிலைப்பு உடையது. இதில் இரண்டு விண்மீன் உணரிகளும், கொட்புநோக்கிகளும் நான்கு சமனுருள்களும் உள்ளன..[31][32]
ஆய்வுக் கருவிகள்
இத்திட்டத்தின் கீழ் பின்வரும் இந்தியாவின் கருவிகள் ஐந்தும், அயல்நாட்டுக் கருவிகள் ஆறுமாக 90 கிகி மொத்தப் பொருண்மையுள்ள ஆய்வுக்கருவிகள் விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியக் கருவிகள்
- நிலப்பரப்பு படவரைவு நிழற்படக் கருவி: 5 மீ துல்லியமும் அனைத்துநிறப் பட்டையில் 40 கி.மீ வீச்சும் கொண்ட நிலப்பட வரைவு ஒளிப்படக் கருவி (The Terrain Mapping Camera (TMC)) ஆகும்.[33] இந்தக் கருவியின் குறிக்கோள் நிலாவின் நிலக்கிடப்பியலை முழுமையாக வரைதலாகும். இந்த ஒளிப்படக் கருவி மின்காந்தக் கதிர்நிரலின் கட்புலப் பகுதியில் இயங்கி, கருப்பு, வெள்ளைப் பருநிலைப் படிமங்களைப் பிடிக்கும். நிலா ஒருங்கொளி நெடுக்கக் கருவியின்(Lunar Laser Ranging Instrument-LLRI) தரவுகளோடு இணைத்துப் பயன்படுத்தும்போது இது நிலா ஈர்ப்புப் புலத்தையும் நன்கு புரிந்துகொள்ள உதவும். TMC அகமதாபாதில் உள்ள இசுரோ விண்வெளிப் பயன்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்டது.[34] இது 2008 அக்தோபர் 29 இல் ISTRAC கட்டளைகள் வழியாக ஓர்வு செய்யப்பட்டது.[35]
- மீ நிறமாலை படிமமாக்கி: 400 - 900 நேனோமீட்டர் பட்டையில் 15 நேனோமீட்டர் நிறமாலைப் பிரித்துணர்வுடனும், 80 மீ இடப் பிரித்துணர்வுடனும் கனிமவியல் வரைபடமாக்கல் புரியும் மீ நிறமாலை படிமமாக்கி (Hyper Spectral Imager (HySI).
- லேசர் நிலவு நில அளவீட்டுக் கருவி: மேற்பரப்பு இடவிவரங்களைத் தீர்மானிக்கும் லேசர் நிலவு நில அளவீட்டுக் கருவி (Lunar Laser Ranging Instrument (LLRI)).
- எக்ஸ்-கதிர் ஒளிர்வு நிறமாலைமானி: (X-ray Fluoresence Spectrometer).இது பின்வரும் மூன்று உறுப்புகளைக் கொண்டிருக்கும்:
- குறைந்த ஆற்றல் எக்ஸ்-கதிர் நிறமாலைமானி: 10 கி.மீ நிலப் பிரித்துணர்வுடன் 0.5 - 10 கி.எ.வோ அளவீடுகளுக்கான குறைந்த ஆற்றல் எக்ஸ்-கதிர் நிறமாலைமானி (Low Energy X-ray Spectrometer (LEX)).இது Si, Al, Mg, Ca, Fe மற்றும் Ti ஆகியவற்றின் பரவலை வரைவு செய்யும்.
- உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர் / காம்மா கதிர் நிறமாலைமானி: 20 கி.மீ நிலப் பிரித்துணர்வுடன் 10 - 200 கி.எ.வோ அளவீடுகளுக்கான உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர் / காம்மா கதிர் நிறமாலைமானி (High Energy X-ray / Gamma ray Spectrometer (HEX)).இது U, Th, 210Pb, 222Rn உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களை அளவிடும்.
- சூரிய எக்ஸ்-கதிர் கண்காணிப்புக் கருவி: 2 - 10 கி.எ.வோ அளவிலான சூரியப் பாயத்தைக் கண்டறியும் சூரிய எக்ஸ்-கதிர் கண்காணிப்புக் கருவி (Solar Flux Monitor (SXM)).இது சூரியப் பாயத்தைக் கண்காணித்து LEX மற்றும் HEX-இன் முடிவுகளை நெறிப்படுத்தும்.
- நிலா மொத்தல் கலம் (Moon Impact Probe (MIP) ஒன்று.இது சந்திராயன் - I கலத்தால் எடுத்துச்செல்லப்படும் ஒரு செயற்கைக்கோள். கலமானது நிலவைச் சுற்றிய 100 கி.மீ சுற்றுப்பாதையை அடைந்ததும் இச்செயற்கைக்கோள் வெளித்தள்ளப்பட்டு நிலவின்மீது மோதவிடப்படும். MIP ஆனது அதிக துல்லியத்துடன்கூடிய நிறை நிறமாலைமானி, எஸ்-பட்டை உயர அளவி, கண்ணுரு படமாக்கக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்..[36] இது 2008 நவம்பர் 14 இல் 14:30 UTC நேரத்தில் கலத்தில் இருந்து வெளியேர்றப்பட்டது. திட்டமிட்டபடி, ந்லா மொத்தல் கலம் நிலாவின் தென்முனையை 15:01 UTC நேரத்தில் 2008 நவம்பர் 14 இல் தொட்டது. எனவே இசுரோ தான் நிலவை ஐந்தாவதாகத் தொட்ட நிறுவனமாகும். ஏற்கெனவே நிலவைத் தொட்ட தேசிய விண்வெளி முகைமைகளில் சோவியத் ஒன்றியம் தான் முதன்முதலில் 1959 இல் நிலவை அடைந்தது;[37] ஐக்கிய அமெரிக்கா 1962 இல் நிலவைத் தொட்டது;[38] யப்பான் 1993 இல் நிலவைத் தொட்டது;[39] ஈசா 2006 இல் நிலவைத் தொட்டது.[40][41][42]
அயல்நாட்டுக் கருவிகள்


- C1XS எனும் 1 முதல் 10 கி.மி.வோ வரையளவுள்ள எக்சுக்கதிர் உடனொளிர்வு கதிர்நிரல்மானி நிலாப் பரப்பில் 25 கி.மீ. பிரிதிறனுடன் மகனீசியம் அலுமினியம்,சிலிக்கான், கால்சியம், டிட்டானியம், இரும்பு ஆகியவற்றின் கனிமச் செறிவை படம்பிடித்தது; சூரியக் காற்றுப் பெருக்கை கண்காணித்தது.[43] இது இசுரோவும் எசாவும் ஐக்கிய அரசு உரூதர்போர்டு ஆப்பிள்டன் ஆய்வகமும் இணைந்து உருவாக்கிய கருவியாகும். இது 2008 நவம்பர் 23 இல் செயல்படுத்தப்பட்டது.[44]
- SARA, எனும் குறை-கிலோமின்னன்வோல்டு அணு எதிரொளிர்வுப் பகுப்பாய்வி எனும் ஐரோப்பிய விண்வெளி முகமை(ESA), நிலாப்பரப்பு உமிழ்ந்த தாழ் ஆற்றல் நொதுமல்நிலை அணுக்களைக் கொண்டு கனிம உட்கூற்றை வரைந்தது.[45][46]
- M3 எனும் பிரவுன் பல்கலைக்கழகமும்தாரைச் செலுத்த ஆய்வகமும் நிலாப் பரப்புக் கனிம உட்கூற்றை வரைய உருவாக்கிய படிம முறை கனிமக் கதிர்நிரல்மானியான, நிலாக் கனிமவியல் வரைவி (நாசா நிதியளித்தது) 2008 திசம்பர் 17 இல் செயல்படுத்தப்பட்டது.[47]
- அகச்செங்கதிர்மானி-2 (SIR-2) எனும் மாக்சு பிளாங்கு சூரியக் குடும்ப ஆராய்ச்சி நிறுவனமும் போலந்து அறிவியல் கல்விக்கழகமும், பெர்கென் பல்கலைக்கழகமும் இணைந்து செய்த ஐரோப்பிய விண்வெளி முகமையின் அகச்சிவப்பணுக்க்க கதிர்நிரல் வரைவி, அகச்சிவப்பு வரிப்பட்டை கதிர்நிரல்மானியால் நிலாப்பரப்புக் கனிமவியல் பரவலை வரைந்தது. Smart-1 என்பது தொகுவில்லை வீவாணி கருவியைப் போன்றதே.[48][49] இது 2008 நவம்ப்பர் 19 இல் செயல்படுத்தப்பட்டது; அறிவியல் நோக்க்கீடுகள் 2008 நவம்பர் 20 இல் தொடங்கின.[44]
- நாசா வடிவமைத்து, கட்டியமைத்து ஓர்வு செய்த சிறு-தொகுவில்லை வீவாணி மிகப் பெரிய குழுவால் உருவாக்கப்பட்டதாகும். இக்குழுவில் நாவாய் வான்போர் மையமும், ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தின் பயன்முறை இயற்பியல் ஆய்வகமும் இரைத்தியோன், நார்த்திரோப் குரூமன் சார்ந்த சாந்தியா தேசிய ஆய்வகங்களும் இசுரோவின் வெளி உதவியோடு இணைந்தன. சிறு-தொகுவில்லை வீவாணி என்பது நிலாத் தண்ணீரையும் பனிநீரையும் கண்டறிவதற்கான தொகுத்த பொருள்வில்லை வீவாணி செயல்முனைவு அமைப்பாகும். இந்தக் கருவி 2.5 கிகா எர்ட்சு அலைவெண் முனைவுற்ற கதிர்வீச்சு அலைகளைச் செலுத்தி, இடது, வலது புறம் சிதறிய முனைவுற்ற கதிர்வீச்சைக் கண்கானித்தது. [[பிரெனல் எதிரொளிர்மை, வட்ட முனைவுறல் விகிதம்(CPR) ஆகிய முதன்மை அளபுருபன்கள் இச்செய்முறைகளில் இருந்து கொணரப்பட்டன. பனியின் ஒருங்கிய பின்சிதறல் எதிர்வு விளைவால் எதிரொளிர்வும் வட்ட முனைவுறல் விகிதமும்(CPR) மேம்படும்; எனவே, நிலாவின் முனையப் பகுதிகளின் நீர் உள்ளடக்கத்தை மதிப்பிடலாம்.[50][51][52]
- கதிரளவுகாணி-7 (RADOM-7) எனும் பல்கேரிய அறிவியல் கல்விக்கழகத்தின் கதிர்வீச்சு அளவு கண்காணிப்புச் செய்முறை நிலவைச் சுற்றியுள்ள கதிர்வீச்சு சூழலைப் படம் வரைந்தது.[53] இது 2008 நவம்பர் 16 இல் ஓர்வு செய்யப்பட்டது.[54][55]
Remove ads
திட்டக் காலநிரல்

முதன்மை அமைச்சர் மன்மோகன்சிங் காலத்தில், சந்திரயான் திட்டத்துக்கு பெருந்துதல் கிடைத்தது. அறுதியாக சந்திரயான்-1 2008 அக்தோபர்22 இல் 00:52 ஒபொநே நேரத்தில் சத்தீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து இசுரோவின் 44.4-மீட்டர் (146 அடி) உயர, நான்கு-கட்ட PSLV C11 ஏவூர்தி வழியாக விண்ணில் ஏவப்பட்டது.[56] சந்திரயான்-1 நேரடியான பயணத் தடம் வழி நிலாவுக்கு ஏவப்படவில்லை; மாறாக 21 நாட்களில் தொடர்ந்து புவி இயக்க வட்டணையை உயர்த்தும் முற்சிகளால் நிலாவைச் சென்றடைய வைக்கப்பட்டது.[57] ஏவிய கட்டத்தில் விண்கலம் முதலில் புவிநிலைப்பு மற்றுநிலை வட்டணையில் நிலைநிற்த்தப்பட்டது. அப்போது விண்கலச் சேய்மைத் தொலைவு 22860 கி.மீ. ஆகவும் அதன் அண்மைத் தொலைவு 255 கி.மீ. ஆகவும் இருந்தது. ஏவிய பிறகு, இந்தச் சேய்மைத் தொலைவு 13 நாட்களில் தொடர்ந்த ஐந்து வட்டணை எரிப்புகளால் 380,000 கி.மீ. அளவுக்கு உயர்த்தப்பட்டது.[57]
திட்டக் காலம் முழுவதும், பங்களூரு, பீன்யாவில் அமைந்த இசுரோவின் தொலையளவி, தடக் கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையம் (ISTRAC) சந்திரயான் -1 வின்கலத் தடத்தைக் கண்காணித்துக் கட்டுபடுத்தியது.[58] சந்திரயான்-1 ஏவிய பிறகு 100 நாட்கள் முடிந்த்தும், இந்தியா, ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாட்டு அறிவியலாளர்கள் குழுமி ஓர் உயர்மட்ட மீள்பார்வைக் கூட்டத்தை நடத்தினர்.[59]
புவி வட்டணை வெளியேற்றம்
- முதல் வட்டணை எரிப்பு
சந்திரயான்-1 விண்கல முதல் வட்டணை உயர்த்தும் முயற்சி 2008, அக்தோபர் 23, 03:30 ஒபொநே நேரத்தில் பங்களூரு, பீன்யா விண்வெளி கட்டுபாட்டு மைய (ISTRAC) கட்டளையால் விண்கலத்தின் 440 நியூட்டன் நீர்மப் பொறியை 18 மணித்துளிகள் எரியவிட்டு மேற்கொள்ளப்பட்டது. இதனால் சந்திரயான் -1 விண்கலச் சேய்மை 37,900 கி.மீ. ஆகவும் அண்மை 305 கி.மீ. ஆகவும் உயர்ந்தது. இந்த வட்டணையில் சந்திரயான்-1 விண்கலம் புவியை ஒருமுறைச் சுற்றிவர 11 மணி நேரம எடுத்துகொண்டது.[60]
- இரண்டாம் வட்டணை எரிப்பு
சந்திரயான்-1 விண்கல இரண்டாம் வட்டணை உயர்த்தும் முயற்சி 2008, அக்தோபர் 25, 00:18 ஒபொநே நேரத்தில் பங்களூரு, பீன்யா விண்வெளி கட்டுபாட்டு மையக் (ISTRAC) கட்டளையால் விண்கலப் பொறியை 16 மணித்துளிகள் எரியவிட்டு மேற்கொள்ளப்பட்டது. இதனால் சந்திரயான் -1 விண்கலச் சேய்மை 74, 714 கி.மீ. ஆகவும் அண்மை 336 கி.மீ. ஆகவும் உயர்ந்து பயணத்தின் 20% பகுதியை முடித்தது. இந்த வட்டணையில் சந்திரயான்-1 விண்கலம் புவியை ஒருமுறைச் சுற்றிவர 25.5 மணி நேரம் எடுத்துகொண்டது. இது தான் முதன்முறையாக இந்திய விண்கலம் உயர் புவிநிலைப்பு வட்டணையில் 36,000 கி.மீ. உயரமாகச் சென்றதும் தன் உயரத்தில் இருமடங்காக உயர்ந்ததுமான நிகழ்வாகும்.[61]
- மூன்றாம் வட்டணை எரிப்பு
சந்திரயான்-1 விண்கல மூன்றாம் வட்டணை உயர்த்தும் முயற்சி 2008, அக்தோபர் 26, 01:38 ஒபொநே நேரத்தில் விண்கலத்தின் பொறியை 9.5 மணித்துளிகள் எரியவிட்டு விண்கல புவிச் சேய்மை 1,64,000 கி.மீ. ஆகவும் புவி அண்மை 348 கி.மீ. ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த வட்டணையில் சந்திரயான்-1 விண்கலம் புவியை ஒருமுறைச் சுற்றிவர 73 மணி நேரம் எடுத்துகொண்டது.[62]
- நான்காம் வட்டணை எரிப்பு
நான்காம் வட்டணை உயர்த்தும் முயற்சி 2008, அக்தோபர் 29, 02:08 ஒபொநே நேரத்தில் நிகழ்ந்தது. அப்போது விண்கலப் பொறியை மூன்று மணித்துளிகள் எரியவிட்டு, விண்கல புவிச் சேய்மை 2,67,000 கி.மீ. ஆகவும் புவி அண்மை 465 கி.மீ. ஆகவும் உயர்த்தப்பட்டது. இது வட்டணைத் தொலைவை நிலாத் தொலைவில் அரைப்பகுதிக்கும் மேலாக உய்ர்த்தியது. இந்த வட்டணையில் விண்கலம் புவியை ஒருமுறைச் சுற்றிவர 6 நாட்களை எடுத்துகொண்டது.[63]
- இறுதி வட்டணை எரிப்பு
ஐந்தாம் இறுதி வட்டண உயர்த்தும் முயற்சி 2008 நவம்பர் 3, 23:26 ஒபொநே நேரத்தில் விண்கலப் பொறியை 2.5 மணித்துளிகள் எரியவிட்டு, புவிச் சேய்மையை 3,80.000 கி.மீ. ஆக உயர்த்தி, சந்திரயான்-1 விண்கலம் நிலாப் பெயரும் பயணத் தடவழிக்குள் செலுத்தப்பட்டது.[64]
நிலா வட்டணை நுழைவு
சந்திரயான்-1 நிலா வட்டணை நுழைவை 2008, நமபர் 8 இல் 11:21 ஒபொநே நேரத்தில் முடித்தது. இம்முயற்சியில் நீர்மப் பொறி 817 நொடிகள் (கிட்டதட்ட 13.5 மணித்துளிகள்) எரியவிடபட்டது. அப்போது விண்கலம் நிலாவை 500 கி.மீ. தொலைவில் கடந்தது. செயற்கைக்கோள் நீள்வட்டனையில் இறுத்தப்பட்டு நிலாமுனைப்பகுதிகலைக் கடந்து சுற்றிவரலானது. அப்போதைய நிலாச் சேய்மை7,502 km (4,662 mi) ஆகவும் நிலா அண்மை 504 km (313 mi) ஆகவும் அமைய, நிலாவை ஒருமுறை சுற்றிவர 11 மணி நேரமும் ஆனது. இந்நிகழ்வு வெற்றியோடு முடிவுற்றதும் இந்தியா குத்துநிலை நிலா வட்டணையில் விண்கலத்தைச் செலுத்திய ஐந்தாம் நாடானது.[11]
- முதல் வட்டணை குறைப்பு
சந்திரயான்-1 விண்கல முதல் வட்டணை குறைப்பு 2008, நவம்பர் 9 14:33 ஒபொநேC நேரத்தில் நடந்தது. இம்முயர்சியில் விண்கலப் பொறி 57 நொடிகள் எரிய விடப்பட்டது.இம்முயற்சியில் விண்கலப் பொறி 57 நொடிகள் எரிய விடப்பட்டது. இதனால், நிலா அண்மை 200 கி.மீ. ஆகக் குறைந்து நிலாச் சேய்மை 7,502 கிமறாக மாறாமல் இருந்தது. இந்த நீள் வட்டணையில், விண்கலம் நிலாவை ஒருமுறை சுற்றிவர10.5 மணி நேரம் எடுத்துகொண்டது.[65]
- இரண்டாம் வட்டணை குறைப்பு
சந்திரயான்-1 விண்கல இரண்டாம் வட்டணை குறைப்பு 2008, நவம்பர் 10 16:28 ஒபொநே நேரத்தில் நடந்தது. இதனால், நிலாச் சேய்மை வேகமாக 255 கி.மீ. ஆகக் குறைந்து நிலா அண்மை 187 கி.மீ. ஆக மாறியது. இதற்கு விண்கலப் பொறி 866 நொடிகள் (கிட்டதட்ட 14.5 மணித்துளிகள்) இயக்கப்பட்டது. இந்த நீள் வட்டணையில், விண்கலம் நிலாவை ஒருமுறை சுற்றிவர 2மணியும் 16 மணித்துளிகள் எடுத்துகொண்டது.[66]
- மூன்றாம் வட்டணை குறைப்பு
சந்திரயான்-1 விண்கல மூன்றாம் வட்டணை குறைப்பு 2008, நவம்பர் 11 13:00 ஒபொநே நேரத்தில் நடந்தது. இதனால், நிலாச் சேய்மை 255 கி.மீ. ஆக மாறாமல் இருக்க, நிலா அண்மை 101 கி.மீ. ஆக மாறியது. இதற்கு விண்கலப் பொறி 31 நொடிகள் இயக்கப்பட்டது. இந்த நீள் வட்டணையில், விண்கலம் நிலாவை ஒருமுறை சுற்றிவர 2மணியும் 9 மணித்துளிகள் எடுத்துகொண்டது.[67]
- இறுதி வட்டணை
சந்திரயான்-1 விண்கலம் 2008 நவம்பர் 12 இல் நிலாப் பரப்புக்கு மேலாக 100 கி.மீ. தொலைவில் திட்டமிட்ட நிலா முனைய வட்டணையில் வைக்கப்பட்டது.[68][69] In the final orbit reduction manoeuvre, Chandrayaan-1's aposelene and periselene were both reduced to 100 km.[69] இந்த வட்டணையில், விண்கலம் நிலாவை ஒருமுறை சுற்றிவர 2மணி நேரம் எடுத்துகொண்டது. இந்நிலையில் 11 அறிவியல் கருவிகளில், நிலப்பட வரைவு ஒளிப்படக் கருவியும் (TMC) கதிர்வீச்சு அளவுக் கண்காணிப்பியும்(RADOM) செயல்படுத்தப்பட்டன. நிலப்பட வரைவு ஒளிப்படக் கருவி புவி, நிலா இரண்டன் படிமங்களையும் எடுத்தது.[69]
நிலாப் பரப்பில் மொத்தல் கலம் தாக்குதல்
நிலா மொத்தல் கலம் நிலாப்பரப்பை 2008, நவம்பர், 15:01 ஒபொநே நேரத்தில் தென்முனையின் சேக்கிள்டன் குழிப்பள்ளதுக்கு அருகில் மொத்தியது.[68] இது சந்திரயான்-1 கலத்தில் இருந்த 11 அறிவிவியல் கருவிகளில் ஒன்றாகும்.[70]
நிலா மொத்தல் கலம் நிலா மேற்பரப்பில் இருந்து 100கி.மீ. தொலைவில் இருந்தபோது தாய்க்கலத்தில் இருந்து பிரிந்து தனது இறங்கலை 14:36 UTC நேரத்தில் தொடங்கி இயக்கத்தை கட்டற்ற வீழ்ச்சியாக 30 மணித்துளிகள் தொடர்ந்தது.[68] அது விழுந்ததும் தகவலைத் தாய்க்கலத்துக்கு அனுப்ப, தாய்க்கலம் அதைப் புவிக்கு அனுப்பியது.அடுத்து குத்துயர அளவி சந்திரயான் -2 திட்டத்தில் நிலாத்தரையில் தரையூர்தியை இறக்க ஆயத்தப்படுத்துவற்கு தேவப்படும் அளவீடுகள் எடுக்கத் தொடங்கியது.[71]
நிலா மொத்தல் கலத்தை விடுவித்ததும், பிற அறிவியல் கருவிகள் இயங்கத் தொடங்கி நிலாத் திட்ட அடுத்த கட்டப்பணியில் இறங்கின.[70]
நிலா மொத்தல் கலப் பகுப்பாய்வுகள் கிடைத்ததும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலா மண்ணில் தண்னீர் இருப்பதை உறுதிப்படுத்தியது அன்றைய இசுரோவின் தலைவர் ஜி. மாதவன் நாயர் தான் பேசிய கருத்தரங்கு ஒன்றில் வெளியிட்டார்.
விண்கல வெப்பநிலை உயர்வு
இசுரோ 2008 நவம்ப்பர் 25 இல் நிலா வட்டண்னைக்கல வெப்பநிலை இயல்பு அள்விவில் இருந்து 50 செ. ஆகா உயர்ந்ததை அறிவித்தது.[72] அறிவியலாளர்கள் இது நிலா வட்டணையின் வெப்பநிலை எதிர்பார்த்தை விட உயர்வாக இருந்ததால் ஏற்பட்டதாகக் கூறினர். விண்கலத்தை 20 பாகைகள் சுழற்றியும் சில அறிவியல் கருவிகளின் இயக்கத்தை நிறுத்தியும் கலத்தின் வெப்பநிலை 10 செ. அள்வுக்குக் குறைக்கப்பட்டது.[72] பிறகு இசுரோ 2008 நவம்பர்27 இல் விண்கல இயல்பான வெப்பநிலைகளில் இயங்குவதாக அறிவித்தது.[73] பின்னரான அறிக்கைகளில் இசுரோ, இன்னமும் விண்கலம் இயல்பு வேப்பநிலையை விட உய்ர்வான வெப்பநில்லைகளிலேயே இயங்கி வருவதால், 2009 ஜனவரி வரை, அதாவது நிலா வட்டணை வெப்பநிலை நிலைப்படையும் வரை, ஒவ்வொரு கருவியாக இயக்க முடிவு செய்ததாக அறிவித்தது.[74] முதலில் விண்கல்ம் உயர் வெப்பநிலையை சூரியக் கதிர்வீச்சாலும் நிலாத்தரை எடிரொளிரச் செய்யும் அகச்சிவப்புக் கதிர்களால் ஏற்படுவதாகக் கருத்ப்பட்டது.[75] என்றாலும் விண்கலத்தின் வெப்பநிலை உயர்வு நே.மி-நே.மி அலைமாற்றிகளின் ஒழுங்கற்ற வெப்பநிலைக் கட்டுபாட்டல் விளைவதாகக் கருதப்பட்டது.[76][77]
கனிமங்களின் நிலப்பட வரைவு
நிலா மேற்பரப்பின் கனிம உள்ளடக்கத்தைச் சந்திரயான்-1 வட்டணை விண்கலத்தில் அமைந்த நாசாவின்நிலா கனிமவியல் வரைவி (M3) எனும் கருவி வரைந்தது. இரும்பின் நிலவல் மீள உறுதிபட்டதோடு, பாறை மாற்றங்களால் கனிம உட்கூறும் மாற்வதும் இனங்காணப்பட்டது. நிலாவின் கிழக்குப் பகுதியின் நிலப்பட வரையப்பட்டு, அங்கு பைராக்சீன் போன்ற இரும்புக் கனிங்கள் செறிந்த்திருப்பதும் இனங்காணப்பட்டது.[78]
M3 கருவியின் அகச்சிவப்புத் தரவுகள் 2018 இல் மீள்பகுப்பாய்வு செய்தபோது, நிலாவின்முனையப் பரந்த வெளிகளில் தண்ணீர் நிலவுவது உறுதி செய்யப்பட்டது.[79]
அப்பொல்லோ தரையிறக்கக் களங்களின் நிலப்பட வரைவு
இசுரோ 2009 ஜனவரியில் வட்டணைக்கலம் பல அறிவியல் கருவிகளின் உதவியால் அப்பொல்லோ திட்ட தரையிறக்கக் களங்கல் படம்பிடித்ததாக அறிவித்தது. இவற்றில் அப்பொல்லோ 15, அப்பொல்லோ 17 திட்டங்களிந்தரையிறக்கக் களங்களும் உள்ளடங்கும்.[80]
படிமங்களைப் பெறுதல்
விண்கலம் 3000 வட்டணைகள் சுற்றிவந்து, நிலாப்பரப்பின் 70,000 படிமங்களைப் பதிவுசெய்தது.[81][82][83]> இது, பிற நாடுகளின் நிலாப்பறப்பு அடைவுகளோடு ஒப்பிடும்போது மிக அரிய பதிவு ஆக அமைகிறது. இசுரோ அலுவலர்கள் சந்திரயானின் ஒளிப்படக்கருவி 535 படிமங்கள் வீதம் 75 நாட்களில் 40,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட படிமங்களை அனுப்பியுள்ளது. இவை முதலில் பங்களூருக்கு அருகில் உள்ள பயலாலு இந்திய ஆழ் விண்வெளி வலைப்பிணையத்துக்கு அனுப்பப்பட்டன; பிறகு இவை இசுரோவின் பங்களூரு, இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனத்தின் தொலையளவி, தடக்கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையத்துக்கு(ISTRAC) அனுப்பட்டன.
இவற்றில் சில படிமங்கள் 5மீ பிரிதிறனுடையவை; கூர்திற, தெளிவுடைய நிலாப்பரப்பின் படஙகளைத் தருவன; பிற திட்டவழி பெற்ற பல படிமங்கள் 100 மீ பிரிதிறனே உள்ளனவாக அமைகின்றன.[84] ஒப்பீடாக கருதிப் பார்க்க, நிலா வெள்ளோட்ட வாட்டணைக்கல ஒளிப்படக் கருவி 0.5 மீ பிரிதிறன் கொண்டுள்ளது.[85]
தரை நிலப்பட ஒளிப்படக்கருவி 2008 அக்தோபரில் செயல்படுத்தப்பட்டது; இது நவம்பர் 26 இல் மொத்தல் குழிகளின் படிமங்களையும் அவற்ரின் உச்சிகளையும் படமெடுத்தது.[86]
X-கதிர்க் குறிகைகளைக் கண்டுபிடித்தல்
C1XS X-கதிர்ப் படக்கருவிகள் அலுமினியம் மகனீசியம் சிலிக்கான் ஆகிய தனிமங்களின் X-கதிர் குறிகை அலைகளைப் பதிவு செய்தன. இந்தக் குறிகைகள், எக்சுக்கதிர் உடனொளிர்வு நிகழ்வை உருவாக்கும் சூரியத் தணல்வீச்சின்போதே பதிவாகின. வெண்சுடர்வைத் தந்த தணல்வீச்சு, C1XS X-கதிர்ப்பட மிகத் தாழ்நிலை உணர்திற நெடுக்கத்தில் இருந்தன.[87][88][89]
புவியின் முழுப்படிமம்

புவியின் முழுமையான முதற்படிமங்களை 2009, மார்ச்சு 25 இல் புவிக்கு அனுப்பியது. இவை TMC கருவியால் எடுக்கப்பட்டன. முதைய படப்பிடிப்பு புவியின் பகுதிப் படிமங்களையே அனுப்பியது. புதிய படிமங்கள் இந்தியாவை நடுவில் வைத்து ஆசியா, ஆத்திரேலியா கண்டங்களைக் காட்டுகின்றன.[90][91]
நிலா வட்டணையை 200 கி.மீ. க்கு உயர்த்தல்
முதன்மையான திட்ட நோக்கங்களை முடித்ததும், 2008 நவம்பரில் இருந்து நிலாப்பரப்பில் 100 கி.மீ. உயர வட்டணையில் இருந்த சந்திரயான்-1 விண்கலம், 200 கிம்மி ஆக உயர்த்தப்பட்டது. வட்டணை உயர்த்தல், 2009, மே 19 இல் 3:30முதல் 04:30 UTC நேரம் வரை மேற்கொள்ளப்பட்டது. கூடுதலான உயர விண்கல வட்டணை வட்டணையின் சிற்றலைவுகள், நிலாவின் ஈர்ப்புப் புல வேறுபாடு, அகல்விரிவான ந்லாப்பரப்புப் படிம வரைவு போன்ற ஆய்வுகளைச் செய்ய உதவியது.[92] பின்னர், இந்த வட்டணை உயர்த்தல் விண்கல வெப்பநிலையைக் குறைக்கவே நிகழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[93] "...நிலாப்பரப்பில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் உள்ளபோது, விண்கலத் துணை அமைப்புகளின் வெப்பநிலை 75 செ. ஆக இருந்தது எனக் கருதப்பட்டது; என்றாலும், அந்த வெப்பநிலை 75 செ. அளவுக்கும் கூடி, புதிய சிக்கல்கள் வரத் தலைப்பட்டதால், வட்டணையை 200 கி.மீ.க்கு உயர்த்தவேண்டியதாகிவிட்டது."[94]
திசைவைப்பு உணரி பொய்த்தல்
விண்கல இயக்கப்பாங்கையும் திசைவைப்பையும் கட்டுபடுத்தும் கருவியான விண்மீன் தடங்காணி, ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் பொய்த்தது. பிறகு, சந்திரயானின் திசைவைப்பு, பின்னணிக் கருவியான ஈரச்சுச் சூரிய உணரியைக் கொண்டு புவியின் ஒரு தரைநிலையத்தின் திசைக்கோணத்தோடு ஒப்பிட்டு கட்டுபடுத்தப்பட்டது. இம்முறை விண்கல இயக்கங்களைக் கட்டுபடுத்தும் மூவச்சு கொட்புநோக்கிகளை சரிப்படுத்த பயன்பட்டது.[81][82][83] இந்த இரண்டாவது பொய்த்தல் மே 16 இல் கண்டறியப்பட்டது; இது கூடுதலான சீரியக் கதிர்வீச்சால் எற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[95]
வீவாணி அலகீடுகள்
நாசாவும் இசுரோவும் இணைந்து நிலாவில் பனிநீரைக் கண்டறிய, சந்திரயான்-1 விண்கலத்திலும் நிலா வெள்ளோட்ட வட்டணைக்கலத்திலும் உள்ள சிறு சார் வீவாணிகளைப் பயன்படுத்தி இருநிலைப்பு வீவாணிச் செய்முரைகளை 2009, ஆகத்து 21 இல் நிகழ்த்தின.[96][97] இந்த முயற்சி தோலியுற்றது; சந்திரயான்-1 இன் வீவாணிகள் செய்முறையின்போது நிலாவை நோக்கி அமையவில்லை.[98]
சிறு சார் கருவி நிலாவில் நிலையாக நிழலில் மறைந்துள்ள வட, தென்முனைப்பகுதிகளின் வாட்டரங்களைப் படிமம் எடுத்தது.[99] சந்திரயான்-1 வட்டணைக்கலத்தில் உள்ளசிறு சார் கருவி, 2010 மாச்சில், நிலாவின் வடமுனையில் நிலையாக இருட்டில் உள்ள 40 மொத்தல்குழிகளில் 600 மில்லியன் பதின்ம டன் பனிநீர் அமைவதான மதிப்பீட்டு அறிக்கையைஅறிவித்துள்ளது.[99][100] வீவாணியின் உயர் CPR கருவி பரப்பின் கரட்டுநிலையையோ பனிநீரையோதனித்தன்மையோடு கண்டறியவில்லை; அறிவியல் குழு, இந்த உயர் CPR கருவியின் குறிகைப்பதிவுச் சூழலையும் அதன் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இக்கருவி அடையாளங்காண, குறைந்தது சில மீ தடிப்புத் தூய பனியடுக்கு தேவையாகும்.[99]
மதிப்பீடு செய்யப்பட்ட பனிநீர் அளவு முந்தைய நிலா வளத்தேட்டக்கலத் திட்ட நொதுமித் தரவுகளின் மதிப்பீடுகளோடு ஒப்பிடக் கூடியதாக இருந்தது.[99] மேலும், இம்முடிவுகள் சந்திரயான் -1 விண்கல நாசா நிலாக் கனிமவியல் வரைவியின் நிலாமுனையபகுதிகளில்கண்டுபிடித்த நீர்மூலக்கூறுகளோடும் அதே நேரத்தில் நிலாக்குழிப் பள்ள நோக்கீட்டு, உணர்திறச் செயற்கைக்கோள் அல்லது LCROSS கருவி நீரின் ஆவியைக் கண்டறிந்ததோடும் பொருந்தியது.[99])என்றாலும் இந்த நோக்கீடு, நிலா மேற்பரப்பின் சில மீட்டர் அடிப்பகுதியில் தூய பனிநீரின் தடித்த படுவடுக்கு உள்ளதெனும் கருத்தோடு பொருந்தவில்லை; ஆனால், நிலாத் தரையின் மண்படிவத்தில் சிற்றளவு(10 செமீ அளவு) பனிநீர் கலந்த பகுதிகள் நிலவுவதை மறுக்கமுடியாது.[101]
Remove ads
திட்ட நிறைவு
சந்திரயான் -1 திட்டம் 2008, அக்தோபர் 22 இல் விண்ணில் ஏவப்பட்டது. இது தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும், 2009, ஆகத்து 28 20:00 UTC நேர அளவில் விண்லத்துடனான தொடர்பாடல் திடீரென நின்றது. விண்கல்ம் 321 நாட்கள் இயங்கியது. விண்கலம் மேலும் தோராயமாக 1000 நட்கலா வரை வட்டணையில் இயங்குமென எதிர்பார்க்கட்டது. அதற்குப் பிறகு நிலா மேற்பரப்பில் 2012 ஆம் ஆண்டிறுதியில் மோதி வீழும் எனக் கருதப்பட்டது;[102]. இது 2016 இலும் வட்டணையில் இன்னமும் இருந்தது அறியப்பட்டது.[25]
சந்தியயான் -1 அறிவியல் அறிவுரைக் குழும உறுப்பினர் ஒருவர் கலத் தொடர்பிழப்புக்கான காரணங்களை உறுதிபடுத்துவது அரிது எனக் கூறியுள்ளார்.[103] இசுரோவின் தலைவரான மாதவன் நாயர், மிகவு விறார்ந்த சூரியக் கதிர்வீச்சால், கலத்தின் கணினியை இயக்கும் இருமின்வழங்கல் அணிகள் துண்டிக்கப்பட்டு தொடர்பாடல் இணைப்பு செயலிழந்தது எனக் கூறினார்.[104] என்றாலும், பின்னர் வெளியிட்ட தகவல் ஒன்று, MDI அணி வழங்கிய மின்வழங்கல் மிகைச் சூடாக்கத்தால் பொய்த்ததாகக் கூறியது.[93][94][105]
திட்டம் செயல்படுமெனக் கருதிய இரண்டாண்டுகளில் 10 மாதங்களுக்கும் குறைவான காலமே செயல்பட்டாலும்,[9][104][106] a அறிவியலாளர்களின் மீள்பார்வை திட்டம் வெற்றிபெற்றதாகவும் கிட்டதட்ட 95% முதன்மையான நோக்கங்கள் எட்டப்பட்டு விட்டதாகவும் அறிவித்தது.
Remove ads
முடிவுகள்
சந்திரயானின் நிலாக் கனிமவியல் வரைவி எனும் நாசாவின் கருவி, ஒரு காலத்தில் நிலா முழுவதும் உருகிய நீர்ம வடிவில் இருந்ததாகக் கூறும் கற்குழம்புக்கடல் கருதுகோளை உறுதிப்படுத்தியது.[107]
சந்திரயான்-1 கலத்தில் அமைந்த நிலப்பட வரைவு ஒளிப்படக் கருவி, 70,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட முப்பருமானப் படிமங்களை எடுத்ததோடு, ஐக்கிய அமெரிக்க அப்பொல்லோ-15 விண்கலம் தரையிறங்கிய இடப் படிமங்களையும் பதிவு செய்தது.[108][109]
இசுரோவின் TMC, HySI ஆகிய அறிவியல் கருவிகள் 70% நிலா மேற்பரப்பையும், M3 கருவி 95% அளவுக்கும் கூடுதலான மேற்பரப்பையும் படம்பிடிக்க, SIR-2 கருவி நிலாக் கனிமவியல் சார்ந்த உயர்பிரிதிறக் கதிர்நிரல் தரவுகளை அனுப்பியது.
இசுரோ, நிலா ஒருங்கொளி வீவாணிக் கருவி(LLRI),உயர் ஆற்றல் X-கதிர்கையக்க கதிர்நிரல்மானி(HEX), ஐக்கிய அமெரிக்க சிற்றளவு தொகுபொருள்வில்லை வீவாணி(Mini-SAR) ஆகிய கருவிகள் ஆர்வமூட்டும் நிலா முனைப் பகுதிகளின் தரவுகளை அனுப்பியதாக அறிவித்தது.
நிலா ஒருங்கொளி வீவாணிக் கருவி(LLRI) நிலா முனைப் பகுதிகளோடு, ஆர்வம் மிக்க கூடுதல் வட்டாரங்களையும் பதிவு செய்ய, உயர் ஆற்றல் X-கதிர் இயக்க கதிர்நிரல்மானி(HEX) நிலாவின் வடக்கு, தெற்கு முனைகளை 200 வட்டணைகள் சுற்றிவர, ஐக்கிய அமெரிக்க சிற்றளவுத் தொகுபொருள்வில்லை வீவாணி(Mini-SAR) நிலாவின்வடக்கு, தெற்கு முனைகளை முழுமையாகப் பதிவு செய்தது.
ஐரோப்பிய விண்வெளி முகமையின் அறிவியல் கருவியான சந்திரயானின் படிமமாக்க X-கதிர் இயக்க கதிர்நிரல்மானி (C1XS) திட்ட நேரத்தில் நேர்ந்த 24 (இரு டசன்) சூரிய தணல் வீச்சுகளைக் கண்டறிந்தது. பல்கேரிய அறிவியல் கருவியானகதிர்வீச்சு அளவுக் கண்காணிப்பி(RADOM) ஏவிய நாளன்றே செயல்படுத்தப்பட்டு திட்ட இறுதிவரை இயங்கிவந்தது.
இசுரோ, இந்திய அறிவியலாளர்களும் பங்கேற்பு முகமைகளும் சந்திரயான் -1 இன் செயல்திறனும் அது அனுப்பிய தரவுகளின் உயர்தரமும் நிறைவளிப்பதாகக் கூறியதை வெளியிட்டுள்ளது.
திட்டத்தில் பெற்ற தரவுத் தொகுப்புகளை வைத்து அறிவியல் திட்டங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். அடுத்த சில மாதங்களில், நிலாக் கிடப்பியலைப் பற்றிய ஆர்வமூட்டும் முடிவுகளும், நிலாவிம் கனிமங்கள், வேதிமங்கள சார்ந்த உள்ளடக்கங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுறது.[110]
சந்திரயான்-1 அறிவியல் கருவிகள், காந்தப் புலமில்லாத கோள்பொருளான நிலா மீது சூரியக் காற்றின் ஊடாட்டங்கள் விளைவிக்கும் முடிவுகளை ஆய்வுசெய்ய, வழிவகுத்துள்ளன.[111]
நிலாவைப் பத்து மாதங்கள் சுற்றிவந்த சந்திரயான்-1 இன் X- கதிர் இயக்க கதிர்நிரல்மானி(C1XS) டிட்டானியத்தைக் கண்டுபிடித்தது; கால்சியம் இருப்பதை உறுதிசெய்தது; நிலா மேற்பரப்பின் மகனீசியம், அலுமினியம், இரும்பு சார்ந்த மிகத் துல்லியமான அளவீடுகளைத் திரட்டியது.[112]
நிலாத் தண்ணீர் கண்டுபிடிப்பு


நிலா மொத்தல் கலம், சந்திரயான்-1 இலிருந்து 2008 நவம்பர் 18 இல் 100 கி.மீ. உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதன் 25 மணித்துளி இறங்குதலின்போது, சந்திராவின் குத்துயரத் தேட்டக் கருவி பதிவுசெய்த 650 நிறைக்கதிர்நிரல் படவிவரங்கள் நிலாவில் நீர்நிலவுதலுக்கான சான்றாக விளங்குகின்றன.[113]
நிலாக் கனிமவியல் நிலப்படக் கருவி(M3) நிலா மேற்பரப்பில் 2.8 முதல் 3.0 μமீ ஆழ நீர் உறிஞ்சல் கூறுபாடுகளைக் கண்டுபிடித்தது. சிலிக்கேட் கனிமங்களின் இந்தக் கூறுபாடுகள் ஐதராக்சில்- , நீர்-ஏந்துபொருட்கள் உள்ளமைக்கு சான்றாகின்றன. நிலாவில், இந்தக் கூறுபாடு குளிர்ந்த உயர் அகலாங்குகளில் பல புதிய பெல்சுபார் மொத்தல் குழிகளிலும் முனையப் பகுதிகளிலும் பரவலாக பரவிய வலிமையான கூறுபாடாகவும் காண்ப்படுகிறது. சூரிய ஒளிபடும் பகுதிகளில் இந்தக் கூறுபாடு நிலாக் கனிம வரைவு தரவுகளிலும் நொதுமி கதிர்நிரல் H செறிவுத் தரவுகளிலும் காணப்படுவதில்லை என்பது OH, H2O ஆகியவர்ரின் உருவாக்கமும் தேக்கமும் ஒரு தொடர்நிகழ்வாக உள்ளமை தெரியவருகிறது. OH/H2 உருவாதல் நிகழ்வுகளே முனையத் தண்-நீர்பிடிப்புக்கும் நிலா மண்படிவ ஆவியாகு பொருட்கள் நிலவும் வாயில்களாவதற்கும் காரணமாகலாம். நிலா கனிம வரைவி எனும் கதிர்நிரல் படிமமாக்கி (M3) வாட்டணக்கல 11 கருவிகலுல் ஒன்றாகும். இது 2009 ஆகத்து 28 இல் மிக விரைவில் செயலிழந்தது.[114]
நிலாக் கனிம நிலப்பட வரைவி(M3) முழு நிலாப்பரப்பின் முதல் கனிமஇயல் நிலப்படத்தினை உருவாக்கும் குறிக்கோள் உடையது. M3 கருவியின் தரவுகள் சில ஆண்டுகள கழித்து மீள்பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இத்தரவுகளே, நிலாவின் வட, தென் முனைப்பகுதிகளுக்கு அருகில் உள்ள தொடர்ந்து நிழலில் ஐயும் பகுதிகளில் நீர் நிலவுதற்கு "மிகவும் உறுதியான சான்றுகளாக இதுநாள் வரை" அமைகின்றன".[79]
நிலா அறிவியலாளர்கள் பல பத்தான்டுகளாகவே நிலாவில் நீர்வைப்பிடங்கலுக்கான வாய்ப்பைப் பற்றி விவாதித்து வந்துள்ளனர்ரவைகள் இப்போது உறுதியாக " பல பத்தான்டு விவாதம் முற்றுபெற்றுவிட்டதென நம்புவதாக" ஓர் அரிக்கை கூறுகிறது. " நிலா, உண்மையில், அனைத்துவகை இடங்களிலும் நீரைப் பெற்றுள்ளது; கனிமங்களில் பொதிந்துள்ள மட்டுமன்றி, பல சிதறுண்ட நிலா முழுவதுமான மேற்பரப்புகளின் ஆழப்பகுதிகளில், பனிப்பாளங்கலாகவோ பனித் தட்டுகளாகவோ நீரைப் பெற்றுள்ளது சந்திரயான் திட்ட முடிவுகளும் கூட " அகல்விரிவான நீர்க் குறிகைகல அளித்துள்ளன."[115][116]
இது ஓர் சுவையான கண்டுபிடிப்பு, அவ்வளவே -- நருலிகர்
பதும விபூசன் விருதாளரும் நன்கறியப்பட்ட இந்திய அண்டவியலாளரான சயந்து நருலிகர் கூறுகையில், நிலவில் நீர் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு ஒரு முக்கிய திருப்புமுனை அல்ல என்றும் பொதுசன மனிதனும் இதில் ஆர்வத்துடன் இருப்பதால் இது ஓரு சுவையான கண்டுபிடிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.[117]
நிலாத் தண்ணீர் உருவாக்கம்
ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) அறிவியலாளர்களின் கூற்றுப்படி, நிலா மண்படிவ அடுக்குகளை (நிலா மேற்பரப்பில் படிந்து திரளும் ஒழுங்கற்ற தளர்வான தூசு மணிகள்) சூரியக் காற்று நீரக அணுக்கருக்களை உறிஞ்சுகின்றன. இந்தத் தூசு மணிகளில் உள்ள உயிரகமும்(O2) நீரக அணுக்கருவும் வினைபுரிந்து ஐதராக்சில் (HO-), நீர்(H2O) ஆகிய இரண்டையும் உருவாக்குவதாக கருகப்படுகிறது.[118]
எசாவும் இசுரோவும் உருவாக்கிய சாரா(SARA) எனும் குறை கி.எ.வோ அணு எதிரொளிர்வு பகுப்பாய்வி நிலாப்பரப்பின் வேதி உட்கூறையும் சூரியக் காற்று இடைவின விளைவுகளையும் கண்டறிய வடிவமைக்கப்பட்டது. சாரா கருவி முடிவுகள் வியப்புதருவனவாக உள்ளன. சூரியக் காற்றால் ஒவ்வொரு நீரகக் கருவும் உறிஞ்சப்படுவதில்லை; மாறாக, ஐந்தில் ஒன்று விண்வெளிக்கே மீள அனுப்பப்பட்டு, தனி நீரக அணுவாக இணைகிறது.[தெளிவுபடுத்துக][சான்று தேவை] நீரகம், நிலா மென் ஈர்ப்பால் சிறிதும் கவரப்படாமல், 200 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டு வெளியேறித் தப்பிக்கிறது. இந்த அறிவு, அறிவன் கோளுக்கு அனுப்பும் விண்கலத்தில் சாரா போன்ற இருகருவிகளை அனுப்பவிருப்பதால், எசா விண்வெளி மைய அறிவியல் அறிஞருக்கு மிகவும்உதவியாகவிருக்கும்.
நிலாக் குகைகள்
சந்திரயான்-1 நிலாக் கால்வாய் ஒன்றைப் படம்பிடித்துள்ளது. இது தொல் அனற்குழம்பு பாய்வால் ஏற்பட்ட குலைவுறாத நிலா அனற்குழம்புக் குழல் பகுதியாகும். கிட்டதட்ட இது நிலா மேற்பரப்பின் கீழ் அமைந்த ஒரு வகைமைப் பெருங்குகையாகும்.[119] நிலா நடுவரையில் நிலத்தடியில் உள்ள இந்தச் சுரங்கம் 2 கி.மீ. நீளமும் 360 மீ அகலமும் கொண்ட வெற்றிட எரிமலைக் குழாயாகும்மகமதாபாது விண்வெளிப் பயன்பாட்டு மையத்தைச்(SAC) சேர்ந்த ஏ. எசு. ஆரியா கூற்றுப்படி, இது நிலாவில் மாந்தர் தங்குவதற்கு ஏற்ற களமாகும்.[120] இதற்கு முன்பு யப்பானிய காகுவா எனும் நிலா வட்டணைக்கலமும் நிலாவில் வேறுபிற குகைகள் உள்ளதர்கான சான்றைப் பதிவு செய்துல்ளது.[121]
நிலா மேலோட்டுத் தட்டு நகர்வு
சந்திரயான்-1 இன் நுண்ணலை உணரியின்(microwave sensor-Mini-SAR) ENVI எனும் படிமப் பகுப்பாய்வு மென்பொருள் ஆய்வு செய்து பெற்ற தரவுகளின்படி, நிலாவில் கடந்தகாலத்தில் நிலா மேற்பரப்பில் மேலோட்டுத் தூண்டத் தட்டுகளின் நகர்வு செயல்பாடுகள் நிலவியுள்ளன என்பது வெளிப்படுகிறது.[122] ஆராய்ச்சியாளர்கள்கடந்தகால் மேலோட்டுத் தட்டு நகர்வு, விண்கற்களின் மொத்தல்களோடு இணைந்து நிலாவில் காணப்படும் பிளவுகளும் முறிவுகளும் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.[122]
Remove ads
விருதுகள்
- அமெரிக்க காற்றியக்க, விண்ணியக்க நிறுவனம்(AIAA) இசுரோ சந்திரயான் -1 விண்வெளி முனைவை 2009 ஆண்டிற்கான AIAA விண்வெளி விருதுக்குத் தேர்வு செய்தது. இவ்விருது இத்திட்டத்தின் விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்துக்கு வழங்கிய பங்களிப்புகளுகாக வழங்கப்பட்டது.[123]
- பன்னாட்டு நிலாத் தேட்டப் பணிக்குழு சந்திரயான் -1 இன் பணிக்குழுவுக்கு பன்னாட்டுக் கூட்டுறவு விருதை 2008 இல் வழங்கியது. இது இத்திட்டத்தில் கொண்டுசென்ற ஏற்புச் சுமையிலமிதுவரை நிகழாத வகையில் 20 நாடுகளின் பன்னாட்டு அறிவியல் கருவிகளைக் கொண்டு சென்றமைக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்நாடுகளில் இந்தியா உட்பட்ட ஐரோப்பிய விண்வெளி முகமையின் 17 நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, பல்கேரியா ஆகிய நாடுகள் அடங்கும்.[124]
- ஐக்கிய அமெரிக்க தேசிய விண்வெளிக் கழகமறிவியல், பொறியியல் பங்களிப்புக்கான 2009 ஆம் ஆண்டின் விண்வெளி முன்முனைவு விருதைச் சந்திரயான் -1 திட்டத்துக்காக இசுரோவுக்கு வழங்கியது.[125][126]
Remove ads
திட்டப் பணிக்குழு
சந்தியான் -1 திட்ட வெற்றிக்கு பின்வருபவர்கள் வித்திட்டனர்:[127][128][129]
- ஜி. மாதவன் நாயர் – தலைவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
- டி. கே. அலெக்சு – இயக்குநர், ISAC ( இசுரோ செயற்கைக்கோள் மையம்)
- மயில்சாமி அண்ணாதுரை – திட்ட இயக்குநர், சந்திரயான்-1
- எசு. கே. சிவக்குமார் – இயக்குநர் – தொலையளவியல், தடக்கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையம்
- எம். பிச்சைமணி – செயல்முறைகள் இயக்குநர், சந்திரயான்-1
- இலியோ சாக்சன் ஜான் – விண்கல இயக்கங்கள் மேலாளர், சந்திரயான்-1
- கே.இராதாகிருழ்சிணன், இயக்குநர், விக்ரம் சாரபாய் விண்வெளி மையம்(VSSC)
- ஜார்ஜ் கோழ்சி – திட்ட இயக்குநர், முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி(PSLV-C11)
- சிறீனிவாச எஃதே – திட்ட இயக்குநர், சந்திரயான்-1
- ஜீதேந்திரநாத் கோசுவாமி – இயற்பியல் ஆய்வக இயக்குநர், சந்திரயான்-1 முதன்மை அறிவியல் ஆய்வாளர்
- மாதவன் சந்திராதரன் – தலைவர், ஏவுதல் அதிகார வாரியம், சந்திரயான்-1 [130]
தரவுகளைப் பொதுமக்களுக்கு அறிவித்தல்
சந்திரயான் -1 திரட்டியய தரவுகளைப் பொதுமக்களுக்கு முதற்பகுதி 2010 ஆண்டின் முடிவுக்குள்ளும் இரண்டாம் பகுது 2011 ஆம் ஆண்டு இடைப்பகுதிக்குள்ளும் அறிவிக்கப்படவுள்ளன. இதில் நிலாப்படங்களும் நிலா மேற்பரப்பின் வேதிம, கனிமத் தரவு வரைவுகளும் அடங்கும்.[131]
தொடர்செயல் முனைவுகள்
இதன் தொடர்முனைவான சந்திரயான்-2 2019 ஜூலை 22 இல் விண்ணில் ஏவபட்டது.[132] இந்த திட்டத்தில் ஒரு நிலா வட்டணைக்கலமும் ஒரு விக்ரம் எனும் தரையிறங்கியும் பிரக்யான் எனும் தரையூர்தியும் அடங்கும். தரையூர்தி நிலாப்பரப்பில் ஆறு சக்கரங்களின்மீது இயங்கும். இது கள வேதிப் பகுப்பாய்வைச் செய்யும். கிடைக்கும் தரவுகளை நிலவைச் சுர்றிக்கொண்டிருக்கும் சந்திரயான் -2 வட்டணைக்கலம் வழியாகப் புவிக்கு அனுப்பும்.[133] சந்திரயான்-3 திட்டம் தற்காலிகமாக 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் என திட்டமிடப்பட்டது.[134][135]
Remove ads
நிலா நிலையம்
சந்திரயானின் படிமக் காட்சியைப் பயன்படுத்தி நாசா தனது ஆர்வ மேலீட்டூ நிலாப் பகுதிகளை நிலா வெள்ளோட்ட வட்டனைக்கலம் வழியாக விரிவாகத் தேடிக் காணலாம். இந்த ஆர்வம் நிலாத் தண்ணீர் உள்ள பகுதிகளை எதிர்காலப் பயனுக்காக , நிலா நிலையத்தை அமைத்தலுக்காக இணங்காண்பதில் மிகுந்துள்ளது. சந்திரயனில் அமைந்த நாசாவின் சிறு சார் கருவி(Mini-SAR) நிலாவில் நீரும் பணியும் அமைதலைத் தீர்மானிக்கும் கருவியாகும்.[136]
மேலும் காண்க
- நிலாத் தென்முனை
- நிலாத் தேட்டம்
- சந்திரயான் திட்டம்
- நிலாவில் தரையிறக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையம்
- நிலாத் தண்ணீர்
- சந்திரயான்-2
- சந்திரயான்-3
- மென்மையான தரையிறக்கம்
- வன் தரையிறக்கம்
- ககன்யான் திட்டம் – விண்வெளித் திட்டத்தில் இந்தியர்
- சுக்ராயன்-1 – இந்திய வெள்ளித் தேட்டத் திட்டம்
- செவ்வாய் சுற்றுகலன் திட்டம் – இந்தியச் செவ்வாய்த் தேட்டத் திட்டம்
- ஆதித்யா-எல்-1 – இந்தியச் சூரிய நோக்கீட்டுத் திட்டம்
- நாவிக் - கோளக இடஞ்சுட்டி அமைப்புக்கு மாற்றான இந்தியச் செயல்திட்டம்
- இந்திய விண்வெளி நிலையம்
- இந்திய செவ்வாய்த் தேட்டத் திட்டங்கள்
- இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads