செவ்வாய் சுற்றுகலன் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (Mars Orbiter Mission), அல்லது மங்கள்யான் (Mangalyaan)[9][10] என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் 2013 நவம்பர் 5 அன்று வெற்றிகரமாக ஏவிய ஆளில்லாத விண்கலம் ஆகும்.[11][12][13][14][15]
இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் வட்டணையில் வெற்றிகரமாக இணைந்தது. இதனால், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்குச் செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.[16][17][18][19] இத்திட்டத்திற்காக முப்பத்து நான்காவது பன்னாட்டு விண்வெளி மேம்பாட்டு மாநாட்டின்போது சிறந்த விண்வெளி முன்னோடி விருதினை இசுரோவிற்கு தரவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
செவ்வாய் சுற்றுக்கலன் முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (PSLV) சி25 வழி ஆந்திரப் பிரதேசம், சிறீ அரிகோட்டாவில் இருந்து 2013 நவம்பர் 5 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.[20] இக்கலன் புவியின் வட்டணையில் வட்டணை உயர்த்த, ஒரு மாதம் வரை தங்கியிருந்த பின்னர், 2013 நவம்பர் 30 இல் செவ்வாயை நோக்கிச் செலுத்தப்பட்டது.[21]
இத்திட்டம் இந்தியாவின் முதலாவது கோளிடைத் திட்டமாகும். சோவியத், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுக்கு அடுத்ததாகச் செவ்வாயை அடைந்த நான்காவது விண்வெளி நிறுவனம் என்ற பெருமையை இசுரோ பெற்றது.[22][23] விண்கலம் தற்போது பெங்களூரில் உள்ள இசுரோவின் விண்கலக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இந்திய ஆழ்வெளி வலைப்பிணைய (IDSN) உணர்நீட்சி வழியாகக் கண்காணிக்கப்படுகிறது.[24]
Remove ads
வரலாறு

ஆளில்லா செவ்வாய் சுற்றுகலத் திட்டம் பற்றி 2008 நவம்பர் 23 இல் பொதுவெளியில் இசுரோ தலைவர், ஜி. மாதவன் நாயர் முதலில் அறிவித்தார்.[25] சந்திரயான்-1 திட்டம் வழி 2008 இல் நிலாச் செயற்கைக்கோள் ஏவப்பட்டதும், 2010 இல் இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் செவ்வாய் சுற்றுகலத் திட்டத்துக்கான இயலுமை ஆய்வைத் தொடங்கியதும் செவ்வாய் சுற்றுகலத் திட்டக் (MOM) கருத்துப்படிமம் தோன்றிவிட்டது. பிறகு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சுற்றுகலத்துக்கான முதனிலை ஆய்வுகளை முடித்ததும் இந்திய முதன்மை அமைச்சர் மன்மோகன் சிங் 2012 ஆகத்து 3 இல் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.[26][27][28] இத்திட்டத்தின் மொத்தச் செலவு 454 கோடி உரூபா என மதிப்பிடப்பட்டது.இதில் செயற்கைக்கோளுக்கான செலவு மட்டும் 153 கோடி உரூபா ஆகும். எஞ்சிய திட்டத் தொகை, தரைநிலையம், தகவல் அஞ்சல் மேம்பாடுக்கும் தொடர்புள்ள பிற இசுரோவின் திட்டங்களுக்கும் ஆனதாகும்.[29]
விண்வெளி முகமை விண்கல ஏவுதலை முதலில் 2013 அக்தோபர் 28 ஆகத் திட்டமிட்டது. ஆனால், இது இசுரோவின் விண்கல கண்காணிப்புக் கப்பல்கள் முன் தீர்மானித்த இருப்புகளில் நிலைகொள்ள, பசிபிக் கடல் வானிலையால் காலத்தாழ்த்தம் ஏற்பட்டதால், நவம்பர் 5 அன்றைக்குத் தள்ளிப்போடப்பட்டது.[5] ஏவும்போது எரிபொருளைச் சேமிக்க உதவும் ஓகுமான் பெயர்வு வட்டணை 26 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே அமைவதால் இப்போது விட்டால் அடுத்த நேர்வுகள் 2016, 2018 இல் தாம் அமைகின்றன.[30]
ஏவூர்தி PSLV-XL,C25 இன் கட்டமைப்புக்கான பூட்டுதல் பணி 2013 ஆகத்து 5 இல் தொடங்கியது.[31] இதில் ஐந்து அறிவியல் கருவிகளின் கட்டமைப்புகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனச் செயற்கைக்கோள் மையம், பெங்களூரு, விண்கலத்தில் ஏற்றி முடித்து 2013 அக்தோபர் 2 அன்று, விண்கலத்தைச் சிறீ அரிகோட்டாவில் ஏவூர்தியில் ஒருங்கிணைக்க அனுப்பியது.[31] சந்திரயான்-2 திட்ட வன்பொருட்களை ஓரளவுக்கு மீளமைத்து, செயற்கைக்கோள் உருவாக்கத்தை வேகமாகக் கண்கானித்து 15 மாதங்களுக்குள் கல வன்பொருள் பணி முடிக்கப்பட்டது.[32][33]
ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசு அரசுப் பணிகளை 2013 இல் நிறுத்தி வைத்திருந்தபோதும், நாசா 2013 அக்தோபர் 5 அன்று, தங்களது "ஆழ் விண்வெளி வலைப்பிணையத்தின்" வழியாக இத்திட்டத்துக்கான தொலைத்தொடர்புக்கும் கல இயக்கத்துக்கும் ஒத்துழைப்பைத் தரும் என மீளுறுதி வழங்கியது.[34] நாசாவும் இசுரோவும் 2014 செப்டம்பர் 30 அன்றைய கூட்டத்தில் எதிர்காலச் செவ்வாய்க் கூட்டுத் திட்டங்களுக்கான வழிமுறையை நிறுவும் உடன்பாட்டில் கையெழுத்திட்டன. பணிக்குழுவின் நோக்கங்களில் ஒன்றாக, மாவென் சுற்றுகலன், செவ்வாய் சுற்றுகலன்கள் வழியாக, நடப்பு, எதிர்காலச் செவ்வாய்த் திட்டங்களில் ஒருங்கிணைவான கூட்டு நோக்கீடுகளும் அறிவியல் பகுப்பாய்வும் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்கப்பட்டது.[35]
திட்டமிடப்படாத 2022 ஏப்பிரலில் நிகழ்ந்த நீண்ட ஒளிமறைப்புக் காலத்துக்குப் பின்னர், சுற்றுகலன் 2022 அக்தோபர் 2 அன்று மீளவியலாத முறையில் புவியுடனான தொடர்பை இழந்தது. தொடர்பிழந்த நிலையில், அது மின் வழங்கலை இழந்ததா அல்லது தவறுதலாக, அதன் புவிநோக்கிய உணர்சட்டம், தன்னியக்க மேலாளுகையில் திசைதிருப்பப் பட்டுவிட்டதா என்பதை அறிய முடியவில்லை.
அறிவியல் தொழிநுட்பக் குழு
திட்டத்தில் கீழ்வரும் அறிவியலாளரும் பொறியியலாளரும் முனைவாகச் செயல்பட்டனர்:[36]
- கே. இராதாகிருழ்சிணன் தலைவர், இசுரோ.
- மயில்சாமி அண்ணாதுரை திட்ட இயக்குநர், நிதிப் பாதீடு மேலாண்மை, விண்கல உருவமைப்பு, பணித்திட்டம், வளங்களுக்கான வழிகாட்டுதல்.
- எசு. இராமகிருழ்சிணன், இயக்குநர், முனையச் செயற்கைக்கோள் நீர்மச் செலுத்த அமைப்பு ஏவூர்தி வடிவமைப்பு.
- பி. குனிகிருழ்சிணன் திட்ட இயக்குநர், PSLV திட்டம்; திட்ட இயக்குநர், PSLV-C25/செவ்வாய் சுற்றுகலன் திட்டம்.
- மவுமிதா தத்தா திட்ட மேலாளர், செவ்வாய் சுற்றுகலன் திட்டம்.
- நந்தினி அரிநாத், விண்கல இயக்க இணை செயல் இயக்குநர்.
- இரீது கரிதாள் சிறீவத்சவா, விண்கல இயக்க இணை செயல் இயக்குநர்.
- பிஎசு கிரண், துணைத் திட்ட இயக்குநர், கலப் பறப்பு இயங்கியல்.
- வி கேசவ இராஜு, இயக்குநர், செவ்வாய் சுற்றுகலன் திட்டம்.
- வி கோட்டீசுவர இராவ், இசுரோ அறிவியல் செயலாளர்.
- சந்திரதத்தன், இயக்குநர், நீர்மச் செலுத்த அமைப்பு.
- ஏ. எசு. கிரண் குமார், இயக்குநர், செயற்கைக்கோள் பயன்பாடுகள் மையம்.
- எம். ஒய். எசு. பிரசாத் இயக்குநர், சத்தீசு தவான் விண்வெளி மையம்; தலைவர், ஏவுதல் சான்றளிப்புக் குழுமம்.
- எசு. கே. சிவக்குமார், இயக்குநர், இசுரோ செயற்கைக்கோள் மையம்; திட்ட இயக்குநர், ஆழ்விண்வெளி வலைப்பிணையம்.
- சுப்பையா அருணன், திட்ட இயக்குநர், செவ்வாய் சுற்றுகலன் திட்டம்.
- பி ஜயகுமார், துணைத்திட்ட இயக்குநர், PSLV திட்டம், ஏவூர்தி அமைப்புகளின் ஓர்வு.
- எம் எசு பன்னீர்செல்வம், தலைமைப் பொது மேளாளர், சிறீ அரிகோட்டா ஏவுதளம், ஏவுதல் காலநிரல்கள் பேணுதல்.
Remove ads
திட்டச் செலவு
2008 ஆம் ஆண்டில் சந்திரயான்-1 நிலாப் பயணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து 2010 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இயலுமை ஆய்வுடன் மங்கள்யான் திட்டப்பணி தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் சுற்றுக்கலனின் ஆய்வுக்காக ரூ.4.54 பில்லியன் ($74 மில்லியன்) செலவிலான ஆய்வுப் பணிகளை முடித்ததை அடுத்து, 2012 ஆகத்து 3 இல் இந்திய அரசு இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.[37] திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.4.54 பில். ($74 மில்.) ஆகும்.[12][38].[39][40] இதில் ஐந்து ஆய்வுக் கருவிகளுடன் கூடிய செயற்கைக்கோளுக்கான செலவு ரூ.1.53 பில்லியன் ($25 மில்லியன்) ஆகும்.[41] உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் என இது புகழ்பெற்றுள்ளது.[42][43][44].[45] திட்டத்தின் குறைவான செலவுக்குக் காரணமாக இசுரோ தலைவர் கே. இராதா கிருழ்சிணன் பல காரணிகளைக் கூறலாம் என்கிறார். ஒன்று இதன் "பெட்டக அணுகுமுறை", அடுத்தது குறைந்த தரைநிலை ஓர்வுகள்,மேலும் அறிவியலாளரின் (18 முதல் 20 மணிநேர) நீண்ட பணிநாள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.[46] பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவன ஜொனாதன் அமோசு குறைந்த தொழிலாளர் சம்பளம், உள்நாட்டில் உருவாக்கும் தொழில்நுட்பங்கள், எளிய வடிவமைப்பு, நாசாவின் மேவன் திட்டத்தை விட சிக்கலற்ற அறிவியல் கருவிச் சுமை போன்ற காரணிகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
Remove ads
திட்ட நோக்கங்கள்

முதன்மை நோக்கம் கோளிடைப் பயணத்தை வடிவமைத்தலும் திட்டமிடலும் மேலாளுதலும் இயக்குதலும் சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்குதல் ஆகும். இரண்டாம் நோக்கம் உள்நாட்டு அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி, செவ்வாய் மேற்பரப்புக் கூறுபாடுகள், புறவடிவியல், கனிமவியல், செவ்வாய் வளிமண்டலம் ஆகியவற்றை ஆய்தல் ஆகும்.[47]
பின்வரும் அரும்பெரும்பணிகளை உள்ளடக்கிய கோளிடைப் பயணத்தை வடிவமைத்தலும் திட்டமிடலும் மேலாளுதலும் இயக்குதலும் முதன்மை நோக்கங்களாகும்:[48]:42
- விண்கலத்தினை புவிமைய வட்டணையில் இருந்து கதிர்மையத் தடவழிக்கும் பின்னர் செவ்வாய் வட்டணை ஈர்ப்பு வெளிக்கும் பெயர்த்து கொண்டு செல்லும் வட்டணை முயற்சிகளை மேற்கொள்ளல்
- வட்டணை இயக்க விசை படிமங்களை உருவாக்கலும் அவற்றுக்கான கணினிநிரல்களை வகுத்தலும்; விண்கலத் திசைவைப்புப் பாங்கு கணித்தலும் பகுத்தாய்தலும்
- அனைத்துக் கட்டங்களிலும் கலத்தைச் சரிவர இயக்குதல்
- திட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் விண்கலத்தைப் பேணுதல்
- இயக்க மின்திறன், தொலைத்தொடர்புகள், வெப்ப, ஏற்புச் சுமைத் தேவைகளைச் சந்தித்தல்
- வருநிகழ்வு சூழல்களைச் சந்திக்கவல்ல தன்னியக்கக் கூறுபாடுகளை அமைத்தல்
அறிவியல் நோக்கங்கள்
அறிவியல் நோக்கங்கள் பின்வரும் பாரியக் கூறுபாடுகளில் கவனம் செலுத்தும்:[48]:43
- புறவடிவவியல், நிலக்கிடப்பியல், கனிமவியல் ஆய்வுவழி செவ்வாய் மேற்பரப்புக் கூறுபாடுகளின் தேட்டம்
- தொலைவுணர்வு நுட்பங்களைப் பயன்படுத்தி செவ்வாய் வளிமண்டலத்தின், மீத்தேன், CO2 உள்ளடங்கிய உட்கூறுகளை ஆய்தல்
- செவ்வாயின் மேல் வளிமண்டல இயங்கியலையும் சூரியக் காற்று, கதிர்வீச்சு விளைவுகளையும் ஆவியாகும் பொருட்கள் புறவெளிக்குத் தப்பி வெளியேறுதலையும் ஆய்தல்
திட்டம் செவ்வாய் நிலாக்களை, குறிப்பாக, போபோசு நிலா நோக்கீடுகளைச் செய்தல், செவ்வாய்க்குப் பெயரும் தடவழிச் சிறுகோள்களின் வட்டணைகளை இனங்கண்டு மீள்மதிப்பீடு செய்தல் போன்ற பல வாய்ப்புகளை கொண்டுள்ளது.[48]:43
ஆய்வுகள்
இந்திய அறிவியலாளர்களுக்கு 2015 , மே முதல் ஜூன் வரை புவியும் செவ்வாயும் சூரியனின் இருபுறமும் எதிரெதிராக இணைவாக உள்ள நிலையில் சூரிய ஒளிமுகட்டை ஆய்வு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த தருணத்தில் செவ்வாய் சுற்றுகலன் உமிழ்ந்த S அலைகற்றையின் அலைகள், விண்வெளியில் பல மில்லியன் கி.மீ. வரை விரிந்து பரந்த சூரிய ஒளிமுகட்டின் வழியாகச் செலுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சி, சூரிய மேற்பரப்பையும் வெப்பநிலை உடனடி மாறும் வட்டாரங்களையும் ஆய்வு செய்ய வழிவகுத்தது.[49]
Remove ads
விண்கல வடிவமைப்பு
- பொருண்மை: செலுத்த எரிபொருளின் பொருண்மை 852 kg (1,878 lb) உட்பட, ஏவுதல் நேரப் பொருண்மை 1,337.2 kg (2,948 lb) ஆகும்.
- விண்கலத் தொகுதி: திட்ட விண்கலத் தொகுதி, திருத்தபட்ட சந்திரயான் -1 இன் I-1 K கட்டமைப்பாகும். இதில் 2008 முதல் 2009 வரை இயங்கிய சந்திரயான்-1 ஐப் போன்ற செலுத்த வன்பொருள் உருவமைப்பும் நிலாச் சுற்றுகலனும் செவ்வாய் திட்டத்துக்கு ஏற்ப திருத்தியமைத்த மேம்பாடுகளும் உயர்தர அமைப்புகளும் அமைந்தன.[47] செயற்கைக்கோள் கட்டமைப்பு அலுமினியத்தாலும் கூட்டு நாரிழை வலுவூட்டிய நெகிழியாலும்(கரிம-நாரிழை-வலுவூட்டப் பலபடி-CFRP) ஆன அடுக்குக் கட்டுமானம் உடையதாகும்.[50]
- மின் திறன் வாயில்: செவ்வாய் வட்டணையில் மொத்தமாக 840 வாட் பெரும மின்னாக்கம் செய்யவல்ல ஓவ்வொன்றும் 1.8 m × 1.4 m (5 அடி 11 அங் × 4 அடி 7 அங்) அளவும் (7.56 m2 (81.4 sq ft) )மொத்தப் பரப்பும் உள்ள மூன்று சூரியப் பலக அணிகள் மின் வழங்கல் வாயிலாக அமைந்துள்ளன. மின்சாரம் 36 Ah இலித்தியம்-இயனி மின்கல அடுக்கில் தேக்கப்படுகிறது.[2][51]
- செலுத்தம்: வட்டணை உயர்த்தலுக்கும் செவ்வாய் ஈர்ப்பில் நுழைக்கவும் 440 newtons (99 lbf) உந்துவிசையுள்ள ஒரு நீர்ம எரிபொருள் பொறி பயன்படுகிறது. சுற்றுகலனிலும் எட்டு 22-newton (4.9 lbf) உந்துவிசை கொண்ட பொறிகள் விண்கலத் திசைவைப்புப் பாங்கு கட்டுபாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளன.[52] இதன் ஏவுதல் நேர எரிபொருள் பொருண்மை 852 kg (1,878 lb) ஆகும்.[2]
- கலத்திசைப் பாங்கு, வட்டணைக் கட்டுபாட்டு அமைப்பு: தடவழி இயக்க அமைப்பில் MAR31750 16 பிட் நுண்செயலி மின்னனியல் கருவி, இரு விண்மீன் உணரிகள், ஒரு சூரிய அணியின் சூரிய உணரி, வழித்தட ஒப்புமைச் சூரிய உணரி, நான்கு சமனுருள்கள், முதன்மை செலுத்த அமைப்பு ஆகியன அமைகின்றன.[2][53]
- உணர்சட்டங்கள்: தாழ் ஈட்ட உணர்சட்டம், இடைநிலை ஈட்ட உணர்சட்டம், உயர் ஈட்ட உணர்சட்டம் என மூன்று உணர்சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[2]
Remove ads
அறிவியல் கருவிகள்
15 கிகி எடையுள்ள ஏற்புச்சுமையாகப் பின்வரும் ஐந்து அறிவியல் கருவிகள அமைகின்றன:[4][55][56]
- வளிமண்டல ஆய்வுகள்
- இலைமன்-ஆல்பா ஒளிமானி (LAP) – இந்த ஒளிமானி இலைமன் ஆல்பா உமிழ்வுகளில் இருந்து மேல் வளிமண்டலத்தின் நீரகம், இருநீரகம் ஆகியவற்றின் சார்புச் செறிவை அளக்கிறது. இருநீரகம்/நீரகம் விகிதத்தை அளந்து, புறவெளியில் இழக்கப்படும் நீர் அளவை மதிப்பிடலாம். இந்தக் கருவியின் நோக்கங்கள் பின்வருமாறு:[48]:56,57
- இருநீரக/நீரக(D/H) விகித மதிப்பீடு
- H2 ஒளிமுகட்டின் தப்பிப்பு ஒளிப் பெருக்க(ஒளிப் பாய) மதிப்பீடு
- ஒளிமுகட்டில் நீரக, இருநீரகத்தின் ஆக்க விவரங்கள்.
- செவ்வாய் மீத்தேன் உணரி (MSM)): இது செவ்வாய் வளிமண்டல மீத்தேனை அளந்து, அதன் வள இருப்பைத் துல்லியமாக, அதாவது பில்லியனில் பத்து பகுதி வரை வரைய உதவுகிறது.[4] செவ்வாய் வட்டணையில் நுழைந்ததும், அது நன்கு பணிபுரியும் நிலையில் இருந்தாலும், அதில் வடிவமைப்புப் பிழை உள்ளமை கண்டறியப்பட்டது; அதனால் செவ்வாய் மீத்தேனைப் பிரித்துணர முடியவில்லை. ஆனால் இது 1.65 நுண்மீ அளவுக்குத் துல்லியமாக செவ்வாயின் அல்பிடோவை வரைய முடிந்தது.[54][57]
- செவ்வாய் மீத்தேன் உணரி (MSM) வடிவமைப்புக் குறை:இந்த உணரி செவ்வாய் வளிமண்டலௌ மீத்தேனை அளக்கும் என எதிர்பார்க்கப்பது; புவியில் அமையும் மீத்தேன் உயிர்வாழ்க்கைத் தொடர்புடையதாகும். என்றாலும், இது செவ்வாய் வட்டணையில் நுழைந்ததும், தரவுகளைக் கையாள்வதிலும் திரட்டுவதிலும் சிக்கல் உள்ளது உணரப்பட்டது. இது மீத்தேன் போன்ற பல்வேரு கதிர்நிரல் பட்டைகளை அளக்கவல்லது. இது கதிரல்களைத் திருப்பி அனுப்புவதற்கு மாறாக, கதிநிரல் பதக்கூறுகளின் ஒட்டு மொத்தத்தையும் அனுப்பியதோடு பதக்கூற்று வரிகளின் இடையில் உள்ள இடைவெளிகளையும் சேர்த்து அனுப்பியது. இவற்றுக்கிடையிலான வேறுபாடு மீத்தேன் குறிகையாகும் எனக் கருதப்பட்டது. ஆனால், கரி ஈராக்சைடு போன்ற பிற, மாறும் கதிர்நிரல் செறிவுகளோடு அமைவதால், உண்மையான மீத்தேன் செறிவைக் கண்டறிய முடியவில்லை. எனவே, கருவியின் நோக்கம் அல்பிடோவை வரைதலாக மாற்றப்பட்டது.[58]
- இலைமன்-ஆல்பா ஒளிமானி (LAP) – இந்த ஒளிமானி இலைமன் ஆல்பா உமிழ்வுகளில் இருந்து மேல் வளிமண்டலத்தின் நீரகம், இருநீரகம் ஆகியவற்றின் சார்புச் செறிவை அளக்கிறது. இருநீரகம்/நீரகம் விகிதத்தை அளந்து, புறவெளியில் இழக்கப்படும் நீர் அளவை மதிப்பிடலாம். இந்தக் கருவியின் நோக்கங்கள் பின்வருமாறு:[48]:56,57
- சுற்றுச்சூழல் துகள் ஆய்வுகள்
- செவ்வாய் மேல் வளிமண்டல நொதுமல் உட்கூற்றுப் பகுப்பாய்வி (MENCA) என்பது ஒரு நான்முனையப் பொருண்மைப் பகுப்பாய்வி 1 முதல் 300 அணுப் பொருண்மை அலகுகள் வரையில் அமைந்த நொதுமல் துகள்கள் உட்கூற்றை அலகுப் பொருண்மைப் பிரிதிறனுடன் பகுத்தாய வல்லதாகும். இது சந்திரயான்-1 நிலா மொத்தல் ஆய்கலத்தின் சந்திரா கலத்திசைப் பாங்கு உட்கூற்றுத் தேட்ட அறிவியல் கருவி வழிவந்ததாகும். MENCA ஒரு மணிநேர நோக்கீட்டுக்குள் வட்டணையின் ஐந்து நோக்கீடுகளைச் செய்ய வல்லதாகும்.[48]:58
- மேற்பரப்புப் படிம ஆய்வுகள்
- வெப்ப அகச்சிவப்புக்கதிர் படிமமாக்கல் கதிர்நிரல்மானி (TIS): TIS வெப்ப உமிழ்வுகளை அளக்கும். மேலும் இது இரவிலும் பகலிலும் இயங்கும். செவ்வாயின் உட்கூற்றையும் கனிமவியலையும் வரையவல்லது. மேலும், இது வளிமண்டல CO2, குழம்புதிறம் (MSM தரவுகளின் திருத்தத்துக்கு இது தேவையாகும்) ஆகியவற்றையும் கண்காணிக்கும். வெப்ப உமிழ்வு அளவுகளில் இருந்து வெப்பநிலை, உமிழ்திறம் ஆகிய இயற்பியல் அளவுருக்களை மதிப்பிடலாம். பல கனிமங்களும் மண்வகைகளும் TIR பகுதி கதிர்நிரல் பான்மையைப் பெற்றுள்ளன. TIS மேற்பரப்பு உட்கூற்றையும் செவ்வாய்க் கனிமவியலையும் வரைய வல்லதாகும்.[48]:59
- செவ்வாய் வண்ண ஒளிப்படக் கருவி (MCC): இது மூவண்ண ஒளிப்படக் கருவியாகும். இது செவ்வாய் மேற்பரப்புக் கூறுபாடுகளையும் உட்கூற்றையும் பற்றிய தகவல்களைப் படிமமாக்க வல்லதாகும்.** செவ்வாய் வண்ண ஒளிப்படக் கருவி (MCC): இது மூவண்ண ஒளிப்படக் கருவியாகும். இது செவ்வாய் மேற்பரப்புக் கூறுபாடுகளையும் உட்கூற்றையும் பற்றிய தகவல்களைப் படிமமாக்க வல்லதாகும். இது தூசுப் புயல், வளிமண்டல கூழம்புதிறம் போன்ற செவ்வாயின் இயங்கியல் நிகழ்ச்சிகளையும் வானிலையையும் கண்காணிக்கும்மிது மேலும் போபோசு, தெய்மோசு எனும் இரண்டு செவ்வாய் நிலாக்களின் தேட்டத்துக்கும் உதவும். இது பிற அறிவியல் கருவிகளுக்கான தகவல்களையும் வழங்கும். MSM, TIS கருவிகளின் தரவுகளைப் பெறும்போதெல்லாம் MCC படிமங்களையும் எடுக்கவேண்டும். ஒவ்வொரு செவ்வாய் வட்டணையிலும் சேய்மைப் புள்ளியில் ஏழு முழுமையான செவ்வாய்க்கோள் படிமங்களையும் பல அண்மைப்புள்லிப் படிமங்களையும் எடுக்க திட்டமிடப்பட்டது.[48]:58
Remove ads
தொலைவளவியலும் தொலைக்கட்டளையும்
மேலும் அறிய, தொலைவளவியல், தொலைக்கட்டளை
இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையம் கலம் ஏவுதலுக்கான ச் சிறீ அரிகோட்ட, போர்ட் பிளேர், புரூனே, இந்தோனேசியாவில் உள்ள பயாக் ஆகிய தரை நிலையங்களில் இருந்து இயக்குதல், கண்காணித்தல் செயல்முறைகளைத் திறமையோடு நிறைவேர்றியது;[59] விண்கலச் சேய்மை 100,000 கி.மீ. இனும் உயர்ந்ததும், இந்திய ஆழ்வெளி வலைப்பிணையத்தின் 18 மீ, 32 மீ விட்ட உணர்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.[60] கலத்தின்18மீ கிண்னவடிவ உணர்சட்டம் 2014 ஏப்பிரை வரையும் பிறகு 32 மீ உணர்சட்டமும் தகவல் பரிமாற்றத்துக்குப்பயன்படுத்தப்பட்டன.[61]> நாசா ஆழ்வெளி வலைப்பிணயமும் மேடிரிடிலும் கான்பெராவிலும் அமெரிக்க மேற்கு கடற்கரையில் உள்ள கோல்குசுட்டோன் ஆழ்வெளித் தொடர்புகள் வளாகத்தில் அமைந்த மூன்று தரைநிலையங்கள் வழியாக கல இருப்புத் தரவுகளை இசுரோ வலைப்பிணையம் காட்சிபெற இயலாத காலத்தில் தந்துதவும் .[62] தென்னாப்பிரிக்க தேசிய விண்வெளி முகமை யின் (சான்சா-SANSA) கார்த்தெபீசுதோயெக் கதிரலை வானியல் நோக்கீட்டக (HBK) தரைநிலையமும் செயற்கைக்கோள் கண்கானிப்பு, தொலையளவியல், கட்டளைப் பணிகளை ஆற்றும்.[63]
தொலைத்தொடர்புகள்
தகவல்தொடர்புகள் இரண்டு 230-வாட் பயண அலைக் குழல் மிகைப்பிக்(TWTA) கருவிகளாலும் இரண்டு ஒருங்குறு செலுத்துவாங்கிகளாலும் கையாளப்படுகின்றன. உணட்சட்ட அணியில் ஒரு தாழ் ஈட்ட உணர்சட்டமும் ஒரு நடுத்தர ஈட்ட உணர்சட்டமும்] ஓர் உயர் ஈட்ட உணர்சட்டமும் அமைந்துள்ளன. உயர் ஈட்ட உணர்சட்ட அமைப்பு, S அலைக்கற்றையில் தரப்படும் ஊட்டம் வழி ஒளியூட்டபட்ட ஒற்றை 2.2 மீ தெறிப்பியால் ஆனதாகும். இது தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளைத் தரவுகளை இந்திய ஆழ்வெளி வலைப்பிணயம்| இந்திய ஆழ்வெளி வலைப்பிணயத்தில் இருந்து செலுத்தவும் பெறவும் செய்கிறது.[2]
Remove ads
விண்கல இயக்குதல் விவரங்கள்
செவ்வாய் சுற்றுகலன் திட்ட அசைவூட்டம்
Remove ads
கலம் ஏவலும் இயக்குதலும்
ஏவுதல்


இசுரோ முதலில் செவ்வாய் சுற்றுகலனைப் புவி ஒத்தியங்கு ஏவூர்தியால்(GSLV) ஏவக் கருதியிருந்தது;[84] ஆனால், 2010 GSLV இருமுறை தனது தண்குளிர் ஏவூர்திப் பொறி இயக்கச் சிக்கலால் தோல்விகண்டது.[85] புதிய வடிவமைப்பு ஏவூர்தி அணிகளுக்காக காத்திருந்தால் விண்கலத்தை ஏவுதலுக்கு குறைந்தது மேலும் மூன்று ஆண்டுகளுக்குக் காத்திருக்க நேரிடும்.[86] எனவே இசுரோ குறைவான திறனுள்ள முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தியால்(PSLV) ஏவ மறுமுடிவெடுத்தது. இதனால், நேரடி செவ்வாயின் தடவழியில் செவ்வாய் சுற்றுகலனை முடியாததால், விண்கலம் உயர் நீள்வட்ட புவிமைய ஒத்தியங்கு வட்டணையில் ஏவி, விண்கல உந்திகளையே பயன்படுத்திப் பன்முறைச் புவிச்சேய்மை பொறியை எரியூட்டி ஓபெர்த் விளைவு வழியாக செவ்வாய் பெயரும் வட்டணையில் அல்லது செவ்வாய் செல்லும் தடவழியில் நுழையச் செய்யவும் கருதியது.[84]
இசுரோ தலைவர் கே. இராதாகிருழ்சிணன் 2013 அக்தோபர் 19 அன்று தொலயளவியல் கப்பல் பிஜித் தீவை இன்னமும் சென்றடையாததால் மேலும் ஒரு வாரத்துக்கு ஏவுதல் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் ஏவுதல் [5] இசுரோவின் PSLV-XL ஏவூர்தி வழியாக செயற்கைக்கோளை புவி மைய வட்டணையில் 2013, நவம்பர் 5 அண்று 09:50 ஒபொநெ நேரத்தில்;[28] 264.1 புவியண்மைப்புள்ளியிலும் 23,903.6 புவிச்சேய்மைப்புள்ளியிலும் நிலவுமாறு, 19.20 பாகைச் சாய்வுடன் ஏவ மீள்திட்டமிடப்பட்டது [64] இப்போது இரு உணர்சட்டங்களும்மூன்று சூரியப் பலக அணிகளும் இணைந்து செயல்படும்.[87] முதல் மூன்று வட்டணை உயர்த்தல்களிலும் இசுரோ விண்கல அமைப்புகளை உரிய ஓர்வுகளால் சரிபார்க்கும்.[70]
ஈர்ப்புதவி முறை வேகம் உயர்த்தல்
மங்கள்யான் உயரே சென்றடைந்தபோது அதன் வேகம் மணிக்கு சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர். மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்க புவி ஈர்ப்பு விசை உதவியது. புவியை வட்டவடிவப் பாதையில் சுற்றும்படி மங்கள்யானைச் செலுத்தினால், அதன் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்பதால், நீள் வட்டப் பாதையில் அதைச் செலுத்தினர். புவியை அது ஆறாவது தடவை சுற்றி முடித்தபோது, மங்கள்யானின் வேகம் மணிக்கு சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தது. இவ்விதம் (புவி உள்பட்ட) ஒரு கோளின்ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை அதிகரிக்கும் நுட்பத்துக்கு ஈர்ப்பு உதவி முறை என்று பெயர். கடந்த காலங்களில், "பயனீர்', "வாயேஜர்' ஆகியவிண்கலங்களை அனுப்பியபோது, நாசா இந்த நுட்பத்தைப் பயன்படுத்தியது.[88]
ஒளிப்படம்
செவ்வாய்க் கோளை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக் கோள், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஏலன் புயலை புகைப்படம் எடுத்து அனுப்பியது[89][90]
திட்டத்தில் பயன்படுத்திய படிமங்கள்:[91]
கோள் தடங்காட்டி | DE-424 |
செயற்கைக்கோள் தடங்காட்டி | MAR063 |
ஈர்ப்புப் படிமம் (புவி) | GGM02C (100x100) |
ஈர்ப்புப் படிமம் (நிலா) | GRAIL360b6a (20x20) |
ஈர்ப்புப் படிமம் (செவ்வாய்) | MRO95A (95x95) |
புவி வளிமண்டலம் | இசுரோ: DTM 2012 JPL : DTM 2010 |
செவ்வாய் வளிமண்டலம் | மார்சுகிராம் 2005 |
DSN நிலையத் தட்டியக்கம் | ITRF1993 சட்டகம், தட்டியக்கக் காலவகை 01-Jan-2003 00:00 ஒபொநே |
Remove ads
வட்டணை உயர்த்தும் முயற்சிகள்
பல வட்டணை உயர்த்தல் இயக்குதல்கள் பெங்களூரு, பீன்யாவில் உள்ள இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையம் (இசுட்டிராக்), விண்கலக் கட்டுபாட்டு மையத்தால் (SCC) நவம்பர் 6, 7, 8, 10, 12, 16 ஆகிய நாட்களில் விண்கலச் செலுத்த அமைப்பைப் பயன்படுத்தி தொடர் புவியண்மைப்புள்ளி பொறி எரியூட்டல்கள் வழி மேற்கொள்ளப்பட்டன. திட்டமிட்ட ஐந்து வட்டணை உயர்த்தல்களில் முதல் மூன்றும் இயல்பாக வரையளவின்படி நிகழ்ந்தேறின. ஆனால், நான்காம் நடவடிக்கை பகுதியளவே வெற்றி ஈட்டியது. என்றாலும், ஒரு பிந்தைய நிரப்பு நடவடிக்கையால் இயல்பாக நான்காம் நடவடிக்க்கையில் உயர்த்தக் கருதிய உயரத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. விண்கலம் புவிமைய வட்டணையில் இருந்தபோது ஆறு எரியூட்டல்கள் முடிக்கப்பட்டன; ஏழாவது எரியூட்டல் நவம்பர் 30 அன்று மேற்கொள்ளப்பட்டு, செவ்வாய் சுற்றுகலன் சூரிய மைய வட்டணைக்குச் செவ்வாய் நோக்கிப் பெயரும்படிச் செலுத்தப்பட்டது.[92]
முதல் வட்டணை உயர்த்தல் 20113 நவம்பர் 6 அன்று 19:47 ஒபொநே அளவில் நிகழ்த்தப்பட்டது. இதற்காக விண்கலத்தின் 440 நியூட்டன் நீர்ம எரிபொருள் பொறி 416 நொடிகள் எரியூட்டப்பட்டது. இந்நிகழ்வில் விண்கலம் 28,825 கி.மீ. புவிச்சேய்மைப்புள்ளியையும் 252 கி.மீ. புவியணமைப்புள்லியையும் உடைய நீள்வட்டணைக்கு உயர்த்தப்பட்டது.[65]
இரண்டாம் வட்டணை உயர்த்தல் வழியாக, 2013, நவம்பர் 7 அன்று 20:48 ஒபொநே அளவில், 570.6 நொடி எரியூட்டல் நேரத்தில் 40,186 கி.மீ. உயர புவிச்சேய்மைப்புள்ளிக்கு விண்கலம் கொண்டுசெல்லப்பட்டது.[66][67]
மூன்றாம் வட்டணை உயர்த்தல் வழியாக, 2013, நவம்பர் 8 அன்று 20:40 ஒபொநே அளவில், 707 நொடி எரியூட்டல் நேரத்தில் 71,636 கி.மீ. உயர புவிச்சேய்மைப்புள்ளிக்கு விண்கலம் கொண்டுசெல்லப்பட்டது.[66][68]
நான்காம் வட்டணை உயர்த்தல், 2013, நவம்பர் 10 அன்று 20:36 ஒபொநே அளவிவில் தொடங்கி, டெல்டா-v உந்தலாக, நொடிக்குத் திட்டப்படி135 மீ முடுக்கத்தை உருவாக்காமல் நொடிக்கு 35மீ முடுக்கத்தை மட்டுமே பொறியின் குறைந்த எரியூட்டலால் தர நேர்ந்தது.[69][93] இதனால், சேய்மைப்புள்ளியை திட்டப்படி, 1,00,000 கி.மீ. உயரத்துக்கு உயர்த்தவியலாமல், 78,276 கி.மீ. மட்டுமே உயர்த்தவியன்றுள்ளது.[69] செலுத்த அமைப்பின் கூடுதல் தேக்க நிலைமைகளை ஓர்வு செய்தபோது நிர்மப் பொறியின் பாய்வு நின்றுள்ளது. இதனால், விரைவுயர்த்தல் வீதம் குறைர்துவிட்டுள்ளது. நான்காம் வட்டணை உயர்த்தலுக்காக எரியூட்டும்போது, 440 நியூட்டன் நீர்மப்பொறியின்பாய்வுக் கட்டுபாட்டு ஓரதரின் மின்சுருட்டை சார்ந்த முதன்மைச் சுருளும் கூடுதல் தேக்கச் சுருளும் விண்கலத் திசைப்பாங்குனாமைப்பின் உந்தல் உயர்த்தும் கட்டுபாட்டு உந்திகளும் ஓர்வு செய்யப்பட்டன. திட்டமிட்ட முறைமைகளின்படி, ஒருங்கே முதன்மைச் சுருளுக்கும் கூடுதல் தேக்கச் சுருளுக்கும் ஆற்றலூட்டியபோது, பொறிக்குச் செல்லும் பாய்வு நின்றுவிட்டது. எதிர்காலத்தில் ஒருங்கே இருசுருள்கலையும் இயக்க முடியாது. என்றாலும், அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைமுறையில் இயக்கலாம்.[66][70][70] நான்காம் திட்டமிட்ட வட்டணை எரிப்பு குறைந்ததால், திட்டமிடாத கூடுதல் எரியூட்டலால் 2013 நவம்பர் 12 அன்று பொவிச்சேய்மைப்புள்ளி 1,18,642 கி.மீ.யாக உயர்த்தப்பட்டது; இது நான்காம் வட்டணையின் திட்டமிட்ட உயரத்தைவிட சற்றே கூடுதலானதே.[66][94] இறுதி வட்டணை உயர்த்தலின்போது 2013, நவம்பர் 15 அன்று, 19:57 ஒபொநே அளவில் புவிச்சேய்மைப்புள்ளி, 1,92,874 கி.மீ. க்கு கொண்டுசெல்லப்பட்டது.[66][94]
Remove ads
செவ்வாய் பெயரும் நுழைவு
மேலும் காண்க, செவ்வாய் பெயரும் நுழைவு
செவ்வாய் சுற்றுகலத்தின் புவியில் இருந்து விலகி, சூரியமைய வட்டணையூடாக செவ்வாய் நோக்கிய ஓகுமான் வட்டணைப் பெயர்தல், 2013 நவம்பர் 30 அன்று 19:19 ஒபொநே 23-மணித்துளிகளுக்குப் பொறியியக்கம் தொடங்கப்பட்டு நிகழ்த்தப்பட்டது. விண்கலம் 780,000,000 கிலோமீட்டர்கள் (480,000,000 mi) தொலைவைச் செவ்வாய் நோக்கிக் கடந்து சென்றுக் கொண்டிருந்தது.[95]
செவ்வாய்த் தடவழியில் திருத்தம்

மங்கள்யான் விண்கலம் சரியான திட்டமிட்ட பாதையில் செல்வதைக் கண்காணித்து தேவையெனில் நான்கு முறை வரையறுத்தப் பாதையை நோக்கி திருப்பிவிட திட்டமிடப்பட்டது.ஆனால், மூன்று தடவை மட்டுமே தடவழியைத் திருத்தவேண்டி நேர்ந்தது..[73]
- முதல் வரையறுக்கப்பட்ட தடவழித் திருப்பம் 2013 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 11 ஆம் நாள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொறி 40.5 நொடிகள் இயக்கப்பட்டு வரையறுத்தப் பாதையில் விண்கலத்தைத் திருப்பியது..[66][96]
- இரண்டாவது தடவழித் திருப்பம் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று திட்டமிடப்பட்டது. ஆனால் மங்கள்யான் விண்கலம் வரையறுக்கப்பட்ட தடவழியில் செல்வதால் அத்திருப்பம் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.
- மூன்றாவது தடவழித் திருப்பம் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தியதி திட்டமிடப்பட்டது.அதன் படி மங்கள்யானின் பொறி 16 நொடிகள் இயக்கப்பட்டு வரையறுத்த தடவழியில் திருப்பிவிடப்பட்டது.[97]
- நான்காம் தடவழித் திருப்பம் செப்டம்பர் மாதம் 22 அன்று 3.9 நொடிகள் நேரம் நிகழ்த்தத் திட்டமிடப்பட்டது..[82][98]
Remove ads
செவ்வாய்மைய வட்டணை நுழைவு

செவ்வாய் திட்ட விண்கலத்தை 2014, செப்டம்பர் 24 அன்று செவ்வாய்மைய வட்டணையில்,[8][99] நாசாவின் மாவன் சுற்றுகலன் செவ்வாய் வட்டணையை அடைந்த பிறகு, இருநாட்கள் கழித்து நுழைவிக்கத் திட்டமிடப்பட்டது.[100] உண்மையான வ ட்டணை நுழைப்புக்கு 41 மணி நேரத்துக்கு முன்பே 440-நியூட்டன் நீர்ம புவிச்சேய்மை ஓடி(மோட்டார்) 2014 செப்டம்பர் 22 அன்று வெள்ளோட்ட எரிப்புக்கு 30986 நொடிகளுக்கு உட்படுத்தப்பட்டது.[99][101][102]
மங்கள்யான் விண்கலம் சரியான திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தியதி இந்திய நேரப்படி காலை 7.41 மணிக்கு செலுத்தப்பட்டது. இவ்விண்கலனில் பொருத்தப்பட்டிருந்த எட்டு சிறிய பொறிகள் 24 மணித்துளிகள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய்க்கோள் வட்டணையில் நிலை நிறுத்தப்பட்டது.[103][104] விண்கலத்தின் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறும்போது விண்கலத்திற்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. பொறிங்கள் எரியூட்டப்பட்டு அதன் விறைவு ஒடுக்கப்படும் போது, செவ்வாய்க்கோள் விண்கலத்திற்கும் புவிக்கும் இடையே இருந்ததால் விண்கலமும் தரைக்கட்டுப்பாட்டு மையமும் எந்த விதக் குறிகைத் தொடர்பும் கொள்ளமுடியாத நிலையில் இருந்தன. மீண்டும் விண்கலம் புவியைத் தொடர்பு கொள்ளும்போது, 1099 மீட்டர்கள்/வினாடி குறிகை கிடைத்தது. இதன் மூலம் விண்கலம் செவ்வாய்மைய வட்டணையில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும்போது விண்கலத்திற்கும் புவிக்கும் இடையேயான தொலைவு 12.5 ஒளி மணித்துளிகள் ஆகும்.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும், விண்கலம் எதிர்நடவடிக்கை எடுத்து, ஒடுக்கத்தை மீட்டெடுத்து, செவ்வாய் வட்டணையில் நுழைந்தது.[83][105][106]
பயன்கள்

செவ்வாய் வட்டணை நுழைவு செவாய் சுற்றுகலனை மிக நீள்வட்ட வட்டணையில் 72 மணி, 51 மணித்துளி, 51 நொடி வட்டனை நேரத்துடன் 421.7 கி.மீ. அண்மைப்புள்ளியிலும் 76,993.6 சேய்மைப்புள்ளியிலும் நிலைநிறுத்தியது.[83] செவ்வாய் வட்டணை நுழைவு முடிந்ததும், ஆறுமாதத்தேவையான 20கிகி அளவுடன் ஒப்பிடுகையில்,விண்கலத்தில் 40 கிகி எரிபொருள் மிச்சமிருந்தது. இது அடுத்த ஓராண்டுக்குப் போதுமானதாகும்.[107]
செவ்வாய் சுற்றுகலனின் கட்டுபடுத்திகள் 2014 செப்டம்பர் 28 அன்று விண்கலத்தின் முதல் முழு செவ்வாய் க் காட்சியை வெளியிட்டது. இக்காட்சி செவ்வாய் வண்ண ஒளிப்படக் க்ருவியால் எடுக்கப்பட்டதாகும்.[108]
செவ்வாயின் அருகே அதன் பின்புறத்தே 2014 அக்தோபர்19 இல் வரவுள்ள C/2013 A1 எனும் வால்வெள்ளி சைடினப் சுப்பிரிங்குக்கு வழிவிட, இசுரோ 2014 அக்தோபர் 7 செவ்வாய் சுற்றுகலனின் வட்டணையை மாற்றியது. இந்த நடவடிக்கைக்கு விண்கலம் 1.9 கிகி எரிபொருளைப் பயன்படுத்தியது. இதனால், செவ்வாய் சுற்றுகல்னின் சேய்மைப்புள்ளி 72,000 கி.மீ.யாகக் குறைந்தது.[109] வால்வெள்ளி செவ்வாயைக் கடந்த பிறகு, இசுரோ செவ்வாய் சுற்றுகலன் நலமாக உள்ளதாக அறிவித்தது.[110]
இசுரோ 2015, மார்ச்சு 4 அன்று MSM கருவி இயல்பாகச் செயல்படுவதாகவும் செவ்வாய் மேற்பரப்பின் அல்பிடோவை( தெறிதிறத்தை ஆய்வு செய்வதாகவும் அறிவித்தது. செவ்வாய் வண்ண ஒளிப்படக் கருவியும் செவ்வாய் மேற்பரப்பின் புதிய படிமங்களை புவிக்கு அனுப்பிவந்தது.[111][112]
செவ்வாய் சுற்றுகலன் 2015 மார்ச்சு 24 அன்று திட்டப்படியான ஆறுமாதக் காலத்தை செவ்வாயைச் சுற்றி முடித்துவிட்டது. இசுரோ அடுத்த ஆறுமாதத்துக்கு திட்டத்தை நீட்டித்தது; விண்கலதில் 37 கிகி எரிபொருள் மிச்சமிருந்தது. ஐந்து அறிவியல் கருவிகளும் இயல்பான செயல்பாட்டில் சரிவர் இயங்கி வந்தன.[113] The orbiter can reportedly continue orbiting Mars for several years with its remaining propellant.[114]
செவ்வாய்க் கோள் வட்டணையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், வண்ணப் புகைப்படங்களை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது.[103] 2015 ஜூன் மாதம் 14 ஆம் திகதி துவங்கி இரண்டு வாரங்கள் பூமி, சூரியன் செவ்வாய் மூன்றும் இரண்டு ஆண்டுகளுக்கு (26 வாரங்கள்) ஒருமுறை நேர்கோட்டுக்கு வருவதால் மங்கள்யானின் புவியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.[115][116]
செவ்வாய் இயங்கும் வட்டணை புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்குப் பின்னால் அமைந்ததால், 17-நாள் தகவல் தொடர்பு, சூலை 2 அன்றில் இருந்து துண்டிக்கப்பட்டது.[48]:52
மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கோளின் ஓஃபிர் சஃசுமா என்ற பள்ளத்தாக்கின் முப்பருமானப் படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் இசுரோ 2015 ஆகத்து 18 அன்று வெளியிட்டது.[117]
செவ்வாய் சுற்றுகலன் வட்டணையில் முதல் ஆண்டில் திரட்டிய படிமங்களையும் தகவல்களையும் இசுரோ 2015 செப்டம்ம்பர் 24 இல் "செவ்வாய் அட்டவணைகள்", ஒரு 120 பக்க அறிவியல் நூலை வெளியிட்டது.[118]
செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் முதல் அறிவியல் முடிவுகளை 2016, மார்ச்சில் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கடிதங்களில்]', செவ்வாய் புறவளிக்கோளத்தை ஆய்வுசெய்த விண்கலத்தின் மென்சா கருவி அளவீடுகளைப் பயன்படுத்தி விளக்கி வெளியிட்டது.[119][120]
செவ்வாய் 2016 மே 30 அன்று, சூரியனுக்கும் புவிக்கும் நடுவில் வந்ததால்,தகவல் தொடர்பு ஒளிவழித் தடங்கல் ஏற்பட்டது. உயர் சூர்யக் கதிர்வீச்சால், விண்கல்த்துக்குக் கட்டளை அனுப்புவதும் கல் அறிவியல் கருவிகளின் இயக்கமும் நிறுத்திவைக்கப்பட்டன.[121]
செவ்வாய் சுற்றுகலன் 2017, மே 19 அன்று வரை செவ்வாயை 1000 நாட்களுக்குச்(973 சோல்கள்) சுற்றிவந்துள்ளது. இந்தக் காலத்தில் விண்கலம் 388 வட்டணைகளைச் சுற்றிவந்து 715 படிமங்களுக்கும் மேலாகப் புவிக்கு அஞ்சல் செய்துள்ளது. இசுரோ அலுவலர்கள் விண்கலம் நன்னலத்தோடு இருப்பதாக அறிவித்துள்ளனர்.[122]
செவ்வாய் சுற்றுகலனின் இயக்கக் காலம் திட்டப்படி ஆறு மாதங்கள் என்றாலும், 2018 செப்டம்பர் 24 அன்று வரை செவ்வாய்மைய வட்டணையில் 4 ஆண்டுகளை முடித்துவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் செவ்வாய் வண்ண ஒளிப்படக் கருவி 980 படிமங்களைப் பிடித்தது; அவை பொதுவெளியில் வெளியிடப்பட்டன. விண்கலமும் கருவியும் நன்னலத்தோடு இயல்பாக இயங்கிவருகின்றன.[123]
செவ்வாய் சுற்றுகலன் 2019 செப்டம்பர் 24 அன்று வரை செவ்வாய்மைய வட்டணையில் 5 ஆண்டுகளை முடித்துவிட்டது. இது டெராபைட்டுகள் படிமத் தகவல்களை அனுப்பியுள்ளது. மேலும், வட்டணையில் இயங்க ஓராண்டுக்குத் போதுமான எரிபொருளும் இருப்பில் இருந்தது.[124]
செவ்வாய் சுற்றுகலன் 2020 சூலை 1 அன்று 42,000 கி.மீ. தொலைவில் இருந்து போபோசு எனும் செவ்வாய் நிலாவின் ஒளிப்படத்தை எடுத்தது.[125]
செவ்வாய் வண்ண ஒளிப்படக் கருவி 2021 சூலை 21 அன்று 75,000 கி.மீ. உயரத்தில் இருந்தபடி 3.7 கி.மீ. பிரிதிறனுடன் செவ்வாயின் முழுக்கோளப் படிமத்தையும் பிடித்துள்ளது.[126]
இசுரோ 2022 அக்தோபரில், செவ்வாய் சுற்றுகலனுடனான தொடர்பை 2022 ஏப்பிரலில் இழந்ததை அறிவித்தது. இது வடிவமைப்பில் கருதப்படாத ஏழு மணி நேர நீண்ட ஒளிமறைப்புகளால் நேர்ந்துள்ளது. இசுரோ இந்நிலை விண்களச் செலுத்த எரிபொருள் தீர்ந்ததால் ஏற்பட்டதாகவும் மீட்கவியலாதது எனவும் அறிவித்தது.
காட்சிமேடை
- 2014 செப்டம்பர் 25 அன்று செவ்வாய் சுற்றுகலன் எடுத்த செவ்வாய்க்கான முதல் படிமங்கள்
- அர்சியா மோன்சின் மங்கள்யான் படிமம்
- மங்கள்யான் எடுத்த தார்சிசு, வால்லெசு மாரினெரிசு படிமங்கள்
- மங்கள்யானில் இருந்தான செவ்வாயின் காட்சி
- பெருஞ்சிர்ட்டிசு சமவெளி வட்டாரத்தின் செவ்வாய் சுற்றுகலன் திட்ட முச்சட்டக வண்ண ஒளிப்படக் கருவியின் கலவைக்காட்சி, 2015, செப்டம்பர் 24.
- செவ்வாய் வடமுனை
தகவேற்பு

சீனா 2014 இல் இந்தியாவின் வெற்றிகரமான செவ்வாய் சுற்றுகலன் திட்டம் "ஆசியாவின் பெருமிதம்" எனப் போற்றியுள்ளது.[127] செவ்வாய் சுற்றுகல்ன் திட்டம், ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தேசிய விண்வெளிக் கழகத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான விண்வெளி முன்னோடி விருதை அறிவியல், பொறியியல் வகைமையில் வென்றுள்ளது.இந்த விருதை முதல் முயற்சியிலேயே செவ்வாய் சுற்றுகலன் திட்டம் வெற்றிகரமாக செவ்வாயை சுற்றிவந்தமைக்காக இந்திய முகமைக்குத் தருவதாக தேசிய விண்வெளி மையம் அறிவித்துள்ளது; உயர் சேய்மைப்புள்ளியில் நீள்வட்ட வட்டணையில் இருந்த விண்கலம் தன் உயர்பிரிதிற ஒலிப்படக் கருவியால், செவ்வாயிம் முழுக்கோளப்படத்தையும் வண்ணப்படமாகப் பிடித்துள்ளது. கோளை நெருங்கும்போது மிகச் சில முழுக்கோலப் படங்களே கடந்த காலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. அவையும் கோளைக் கீழ்நோக்கியபடியே அருகாமைல் செல்லும்போது எடுத்துள்ளன. இந்தப் படிமங்கள் கோள் அறிவியலாருக்கு மிகவும் பயன்மிக்கதாக அமைகின்றன.[128][129][130] செவ்வாய் சுற்றுகலன் திட்ட விண்கலம், இந்தியாவின் புதிய காந்தி தொடர் 2000 உரூவா வங்கித்தாளின் பின்புறத்தில் வெளியிடப்பட்டுள்ளது.[131] செவ்வாய் சுற்றுகலன் திட்ட விண்கலம் எடுத்த படிமத்தை நேசனல் ஜியாகிரபி இதழ் தன் அட்டைப்படத்தில் தனது "செவ்வாய்: சிவப்புக் கோள் செல்லும் போட்டி" எனும் கட்டுரைக்காக வெளியிட்டுள்ளது.[132][133]
செவ்வாய் சுற்றுகலன்-2
இசுரோ 2014 இல் ஒரு செவ்வாய் சுற்றுகலனை கூடுதல் அறிவியல் கருவிகளோடு தொடர்ந்து செவ்வாய் சுற்றுகலன்-2 (மங்கல்யான்-2) எனும் திட்டம் வழி உருவாக்கி ஏவ திட்டமிட்டுள்ளது.[134][135][136] இந்தச் சுற்றுகலன் தனது தொடக்க வட்டணையில் இருந்து, அறிவியல் கருவிகளின் நோக்கீட்டுக்கு உகந்த உயரச் சேய்மைப்புள்ளி வட்டணைக்குப் பெயர, காற்றுவழி ஒடுக்கத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.[137]
மக்கள் பண்பாட்டில்
- மிசன் மங்கள் எனும் 2019 ஆண்டு இந்தி திரைப்படம் செவ்வாய் திட்டத்தை ஓரளவே சார்ந்ததாக விளங்கியது.[138]
- மிசன் ஓவர் மார்சு எனும் சின்னத்திரைத் தொடரும் செவ்வாய் திட்டத்தை ஓரளவே சார்ந்ததாக விளங்கியது.[மேற்கோள் தேவை]
- 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டவிண்வெளி மோம்சு இந்திய செவ்வாய்த் திட்டத்தைச் சார்ந்த் படமாகும்.[மேற்கோள் தேவை]
- 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டமிசன் மார்சு குறும்படம் இந்திய செவ்வாய்த் திட்டத்தைச் சார்ந்த் படமாகும் .[மேற்கோள் தேவை]
மேலும் காண்க
- சந்திரயான் திட்டம்
- நிலாவில் தரையிறக்கம்
- சந்திரயான்-1
- சந்திரயான்-2
- சந்திரயான்-3
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
- மென்மையான தரையிறக்கம்
- வன் தரையிறக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் திட்டங்களின் பட்டியல்
- ககன்யான் திட்டம் – விண்வெளித் திட்டத்தில் இந்தியர்
- சுக்ராயன்-1 – இந்திய வெள்ளித் தேட்டத் திட்டம்
- செவ்வாய் சுற்றுகலன் திட்டம் – இந்தியச் செவ்வாய்த் தேட்டத் திட்டம்
- ஆதித்யா-எல்-1 – இந்தியச் சூரிய நோக்கீட்டுத் திட்டம்
- நாவிக் - கோளக இடஞ்சுட்டி அமைப்புக்கு மாற்றான இந்தியச் செயல்திட்டம்
- இந்திய விண்வெளி நிலையம்
- இந்திய செவ்வாய்த் தேட்டத் திட்டங்கள்
- இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டம்
- வட்டணைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads