சிகாமட்
ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிகாமட் (மலாய்: Segamat; ஆங்கிலம்: Segamat; சீனம்: 昔加末); என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். ஜொகூர் மாநிலத் தலைநகரமான ஜொகூர் பாருவில் இருந்து 172 கி.மீ. வடக்கே உள்ளது. நெகிரி செம்பிலான், பகாங் ஆகியவை இதன் எல்லை மாநிலங்களாக அமைந்துள்ளன.[1]
இந்த நகரம் வேளாண்மைத் தொழிலைச் சார்ந்த நகரம் ஆகும். சுற்றியுள்ள நிலப் பகுதிகளில் (இ)ரப்பர், செம்பனை உற்பத்தி செய்யப் படுகின்றன. டுரியான் எனும் முள்நாறிப் பழத்திற்கு இந்த நகரம் பெயர் போனது.
கோலாலம்பூர், ஜொகூர் பாரு, சிங்கப்பூர் ஆகிய மூன்று மாநகரங்களுக்கும் நடு மையத்தில் சிகாமட் நகரம் அமைந்து இருக்கிறது. அண்மையில் இந்த நகரத்திற்கு ஒரு புதிய வரவேற்பு வாசகம் வழங்கப்பட்டது. Welcome to Segamat – The Land of King of Fruits எனும் பழங்களின் அரசன் சிகாமட்டிற்கு வருக, வருக! என்பதே அந்த வாசகம்.
Remove ads
வரலாறு
1511-ஆம் ஆண்டு அபோன்சோ டி அல்புகெர்க்கே தலைமையிலான போர்த்துகீசியர்களால் மலாக்கா தாக்கப்பட்டது. அதில் மலாக்கா சுல்தான் மகமுட் சா தோற்கடிக்கப்பட்டார். சுல்தான் மகமுட் சா மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்தார். அவருடன் மலாக்கா சுல்தானகம் ஒரு முடிவிற்கு வந்தது.
சுல்தான் மகமுட் சாவும் பெண்டகாரா தெப்போ (Bendahara Tepok) என்பவரும் மலாக்காவில் இருந்து தங்களின் குடிமக்களுடன் சிகாமட்டிற்கு அருகில் உள்ள பாகோ எனும் இடத்தில் வந்து குடியேறினார்கள். அங்கேயும் போர்த்துகீசியர்கள் தொடர்ந்து வந்து மகமுட் சாவைத் தாக்கினர். பின்னர் சுல்தான் மகமுட் சா, அங்கே இருந்து பெனாரிக்கான் எனும் இடத்திற்கு இடம் பெயர்ந்தார்.
பகாங் மாநிலத்திற்கு இடம் மாறிச் செல்வதே அவர்களின் நோக்கமாகும். அப்படி அவர்கள் இடம் மாறிப் போய்க் கொண்டிருக்கும் போது ஓர் இடத்தில் தங்கி ஓய்வு எடுத்தனர்.
செகார் மாட்
அப்போது சுல்தான் மகமுட் சாவின் டத்தோ பெண்டாகாராவிற்கு தாகம் எடுக்கவே குடிக்கத் தண்ணீர் கேட்டார். டத்தோ பெண்டாகாரா என்பவர் சுல்தானின் தலைமை நிருவாகி. அருகில் இருந்த ஓர் ஓடையில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார்கள். அதைப் பருகிய டத்தோ பெண்டாகாரா ‘தண்ணீர் நன்றாக - சுவையாக இருக்கிறது’ என்று நன்றிப் பெருக்குடன் சொன்னார்.
டத்தோ பெண்டாகாரா அப்போது சொன்ன மலாய்ச் சொற்கள். “Segar Amat”. தமிழில் ‘செகார் மாட்’. Amat என்பது சுல்தான் மகமுட் சாவின் சுருக்கப் பெயர் ஆகும். சுல்தான் மகமுட் சா மறுமொழி கூறாமல் புன்னகை மட்டும் செய்தார். அதன் பின்னர் அவர்கள் ஓய்வு எடுத்த அந்த இடத்திற்கு செகார் மாட் எனும் பெயர் வந்தது.
’செகார் மாட்’ எனும் சொல் காலப் போக்கில் சுருங்கி இப்போது ’சிகாமட்’ என்று அழைக்கப் படுகின்றது.[2] சிகாமட்டின் பழைய பெயர் ரந்தாவ் பாஞ்சாங். 20 ஆம் நூற்றாண்டு தொடக்க காலம் வரை ரந்தாவ் பாஞ்சாங் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது.
Remove ads
சிகாமட் மாவட்டம்
சிகாமட் மாவட்டம் 11 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துணை மாவட்டத்தையும் ஒரு மாவட்ட அதிகாரி நிருவகிக்கிறார். சிகாமட் மாவட்டத்தின் துணை மாவட்டங்கள்:
- சிகாமட் நதி துணை மாவட்டம் - சிகாமட் நகரத்தின் முக்கால் பகுதி
- கெமெரே துணை மாவட்டம் - சிகாமட்டின் ஆகச் சிறிய துணை மாவட்டம்
- பெக்கோ துணை மாவட்டம் - சிகாமட்டின் ஆகப் பெரிய துணை மாவட்டம்
- ஜாபி துணை மாவட்டம்
- செர்மின் துணை மாவட்டம்
- பூலோ காசாப் துணை மாவட்டம்
- ஜெமாந்தா துணை மாவட்டம்
- பாகோ துணை மாவட்டம்
- லாபிஸ் துணை மாவட்டம்
- சாஆ துணை மாவட்டம்
- கிம்மாஸ் துணை மாவட்டம்
Remove ads
பொருளாதாரம்
சிகாமட்டின் பொருளாதார முன்னோடியாக விளங்குவது வேளாண்மைதான். சிகாமட் மாவட்ட மக்களில் 61.8 விழுக்காட்டினர் வேளாண்மையையே நம்பி வாழ்கின்றனர். அடுத்து தொழில் துறையில் 13.1 விழுக்காட்டினரும் அரசாங்கப் பணியில் 12.2 விழுக்காட்டினரும் ஈடுபட்டுள்ளனர்.
சிகாமட் போக்குவரத்து தொடர்புகள்
சிகாமட் நகரம் கூட்டரசு, தேசிய மாநில நெடுஞ்சாலைகளினால் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டரசு நெடுஞ்சாலைதான் பிரதான வடக்கு-தெற்கு தலைநெடுஞ்சாலையாகும். இது தேசிய விரைவுச் சாலையுடன்
இணைகின்றது. வடக்கு-தெற்கு விரைவுச் சாலை சிம்பாங் அம்பாட், யோங் பெங் சந்திப்புகளில் இணைகின்றது.
கூட்டரசு நெடுஞ்சாலை சிகாமட் நகரத்தை தங்காக், மலாக்கா, மூவார், பத்து பகாட் நகரங்களுடன் இணைக்கின்றது. மற்றொரு வடக்கு-தெற்கு விரைவுச் சாலையும்
தங்காக் நகரை இணைக்கின்றது. இதைத் தவிர, துன் ரசாக் நெடுஞ்சாலை
கிழக்கு கரை நகரமான குவாந்தனை இணைக்கின்றது.
Remove ads
சுற்றுலா இடங்கள்
சிகாமட் ஒரு நடுத்தரமான நகரம். இங்கே பழையதும் புதியதும் கலந்த கலாசாரங்கள் மேலோங்கி நிற்கின்றன. இந்த நகரத்திற்கு அருகாமையில் வரலாற்றுப் புகழ்மிகு லேடாங் மலை (Gunung Ledang) எனும் இருக்கின்றது. தவிர ’ஆயர் பனாஸ்’ சுடுநீர் வீழ்ச்சி, பெக்கோக் நீர்வீழ்ச்சி போன்றவை சுற்றுப்பயணிகளைக் கவரும் சுற்றுலாத் தளங்களாகும்.
- சிகாமட் சதுக்கம் - 1996-ஆம் ஆண்டு கட்டப் பட்ட இந்தச் சிகாமட் சதுக்கத்தை (Segamat Square) என்று அழைக்கிறார்கள். தேசிய, மாநில அளவிலான விழாக்கள் அல்லது கொண்டாட்டங்கள் இங்கு நடைபெறும். இங்கு ஓர் அழகான மணிக்கூண்டும், முள்நாறி பழத்தின் கல் சிற்பமும் உள்ளன.
- கல்பாறை பூங்கா - இதை (Rock Garden) என்று அழைக்கிறார்கள். இது சிகாமட் நகரின் முக்கியமான பொழுது போக்கு பூங்காவாகும். இங்கு மாவட்ட அதிகாரியின் மாளிகையும், ஜொகூர் அரசரின் ஓய்வு மாளிகையும் உள்ளன.
- மலாக்கா பெண்டாகாரா கல்லறை - சிகாமட் நகரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில், மலாக்கா சுல்தானகத்தின் கடைசி பெண்டகாராவின் கல்லறை இங்கு தான் உள்ளது.
Remove ads
உயர் கல்விக் கூடங்கள்
- மாரா தொழில்நுட்பப் பல்கலைகழக ஜொகூர் வளாகம் (Universiti Teknologi Mara Kampus Johor) [3]- சிகாமட் நகரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இந்த UiTM வளாகம் உள்ளது. பச்சைப் பசும்புல்வெளிகள் நிறைந்த இடம்.
- துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி (Kolej Tunku Abdul Rahman) [4]- சிகாமட் நகரின் தென் பகுதியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து உள்ளது. 1998 மே மாதம் 8 ஆம் தேதி திறக்கப்பட்டது.
- சிகாமட் சமூகக் கல்லூரி (Kolej Komuniti Segamat) [5]- சிகாமட் நகரில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2001 ஜூன் மாதம் திறக்கப்பட்டது.
Remove ads
சிகாமட் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
ஜொகூர்; சிகாமட் மாவட்டத்தில் (Segamat District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 841 மாணவர்கள் பயில்கிறார்கள். 154 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]
Remove ads
வெள்ளப் பெருக்குகள்
கடந்த 50 ஆண்டுகளில் சிகாமட் நகரம் மூன்று முறை வெள்ளப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்டுள்ளது. 1950, 1984, 2006 ஆகிய ஆண்டுகள் சிகாமட் நகரத்தின் மறக்க முடியாத ஆண்டுகள் ஆகும். 2006 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய உத்தோர் சூறாவளி, சிகாமட்டிலும் மோசமான வெள்ளச் சேதங்களை ஏற்படுத்தியது.
2011 ஆம் ஆண்டு மற்றொரு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அது ஒரு மிக மோசமான வெள்ளப் பெருக்காகும். அந்த வெள்ளப் பெருக்கு அண்டை மாநிலமான மலாக்காவையும் பாதித்தது. இந்தப் பேரிடரினால் 31,00 பேர் துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் அடைந்தனர். பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
Remove ads
சிகாமட் வட்டாரத்தின் மற்ற பட்டணங்கள்
- பண்டார் புத்ரா
- லாபிஸ்
- ஜெமிந்தா
- பூலோ காசாப்
- சாஆ
- பெக்கோ
- பத்து அன்னம்
- பாகோ
- பெக்கான் ஆயர் பானாஸ்
- கிம்மாஸ் பாரு
- சுங்கை காராஸ்
- கம்போங் தெங்கா
மேற்கோள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads