சிவப்பிரகாசர் (துறைமங்கலம்)
17ஆம் நூற்றாண்டு தமிழ்ப் புலவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவப்பிரகாசர் (Siva Prakasar) என்பவர் "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். சிற்றிலக்கியப் புலவர். இவர், "கவி சார்வ பெளமன்", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம்" சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார்.[1][2] தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார்.

Remove ads
குடும்பம்
தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் வேளாளர்களின் ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவருக்குச்
- சிவப்பிரகாசர்
- வேலையர்
- கருணைப்பிரகாசர்
- ஞானாம்பிகை
எனும் பெயரில் நான்கு பிள்ளைகள். மக்களின் கல்விப் பருவத்திலேயே, குமாரசாமி தேசிகர் இறந்தார்.
கல்வியும் இறையருளும்
தந்தை இறந்த பின்னர், மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு திருவண்ணாமலை சென்று, அங்குத் தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி அங்கேயே இருந்துகொண்டு தாம் கற்கவேண்டிய நூல்களைக்கற்று வந்தார். ஆங்கோர் நாள், திருவண்ணாமலையை வலம்வரும்பொழுது, இறையருளால் "சோணாசலமாலை" என்னும் நூலை நூறுபாக்களாக இயற்றிப்பாடி இறைவனை வணங்கினார்.
துறைமங்கலம் செல்லல்
அதன் பின்னர், சிவப்பிரகாச அடிகளார் தமிழ்மொழியிலுள்ள இலக்கண இலக்கியங்கள் கற்பான்வேண்டி, தணியா வேட்கையுடன் வடநாட்டுக்குத் தன் தம்பியருடன் சென்று வாலிகண்டபுரத்துக்குத் தென்பாலுள்ள துறைமங்கலம் அடைந்து ஆங்கோர் நந்தவனத்தில் சிவவழிபாடு செய்தார். அப்போது அவ்வூரின் அதிபதியும் கல்வி கேள்விகளில் சிறந்தவருமான அண்ணாமலை ரெட்டியார் அங்கு வந்து வணங்கி நின்றார்; அடிகளின் நல்லருள் பெற விழைந்தார். அடிகளை அங்கேயே தங்கியிருந்து அருட்பணிபுரிதல் வேண்டுமென இறைஞ்சியதால், அடிகளாரும் ஒப்பினார். அதன்பின், அண்ணாமலை ரெட்டியார், தம் குருவாகிய சென்னவசவையர் திருமடத்திற்கு மேற்றிசையில் ஒரு திருமடம் கட்டுவித்து, அதில் அடிகளை இருக்கச் செய்து தானும் அணுக்கத் தொண்டனாக அருகிருந்து அறிவுரைகள் பெற்று இரண்டரையாண்டு ஆனந்தித்திருந்தார்.
தென்னாட்டில் அடிகளார்
அதன்பின் அடிகளார் தென்னாடு செல்ல விழைந்து தம் கருத்தை அண்ணாமலை ரெட்டியாரிடம் அறிவித்துப் புறப்பட்டுத் திருநெல்வேலியை அடைந்தார்.
திருநெல்வேலியை அடைந்த அடிகளார், அங்கிருந்த சிந்துபூந்துறையில் தருமபுர ஆதீன "வெள்ளியம்பலவாண சாமிகள்" இலக்கண இலக்கிய நூற்புலமையில் வல்லுநரெனக் கேள்வியுற்று, அவரிடம் சென்று வணங்கி நின்று தாம், "இலக்கணம் கற்கவேண்டி வந்தோமென்றார்." அதற்கியைந்த குரு, சிவப்பிரகாச அடிகளாரின் இலக்கியப் பயிற்சியைச் சோதிக்க எண்ணி, "ஐயா! 'கு'விலாரம்பித்து, 'ஊருடையான்' என்பதை இடையிலமைத்து, 'கு'என்னும் எழுத்தில் முடியுமாறு இறைவனைப் புகழ்ந்து பாடுக" என்றார்.
உடனே அடிகளார்:
- "குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
- முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு
- தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
- ஊருடையான் என்னும் உலகு."
என்னும் வெண்பாவை இயற்றிப் பாடினார்.
இருவருக்கும் பதினைந்து தினங்களில் ஐந்து இலக்கணங்களையும் பாடம்சொல்லி அவர்களின் இலக்கணப் புலமையினை நிறைவுபெறச் செய்தார்.
Remove ads
குரு காணிக்கை
அடிகளார் தனக்கு அண்ணாமலை ரெட்டியார் வழிச்செலவுக்காகத் தந்தனுப்பிய பொன்னில் 300 பொன்னைக் குரு காணிக்கையாகத் தர அதை மறுத்த குரு, "திருச்செந்தூரிலிருக்கும் ஒரு தமிழ்ப் புலவரை வென்று செருக்கழித்து வாரும்; அதுவே குரு காணிக்கை" என்றார்.
கருத்தறிந்த சிவப்பிரகாச அடிகளார் திருச்செந்தூர் சென்று திருக்கோவில் வலம்வருங்கால், செருக்குற்ற புலவரைச் சந்தித்தார். சொற்போர் ஆரம்பித்தது. போட்டி என்ன? என்றதற்குத் திருச்செந்தூரார், "நாம் இருவரும் நீரோட்டக யகமம் (வாயிதழ் குவியா அடிமுதல் மடக்கு) பாட்டு முருகப் பெருமானைப் போற்றிப் பாடவேண்டும்; முன்னர்ப் பாடி முடித்தவற்கு, அஃதியலாதார் அடிமையாக வேண்டும்" என்றார். அடிகள் நீரோட்டக யமகவந்தாதியின் "கொற்ற வருணனை" எனத் தொடங்கும் காப்புச் செய்யுளை முதற்கொண்டு "காயங்கலையநலி" என முற்றுப்பெறும் செய்யுளோடு, முப்பத்தியொரு கட்டளைக் கலித்துறைப் பாக்களை முதலில் பாடி முடித்தார். திருச்செந்தூராரோ, ஒரு பாடலைக்கூட முடிக்க இயலவில்லை. திருச்செந்தூராரை அடிமையாக்கித் தம் குரு, வெள்ளியம்பலத் தம்பிரானிடம் அவரை ஒப்புவித்தார்.
பின்னர்த் தம்பிரான், "தாங்கள் பாடிய செய்யுளில் சிவனுக்கு உகந்தது சிதம்பரமே எனக் குறிப்பாலுணர்த்தியதால், அத்தில்லையில் சில காலம் இருக்க" எனப் பணித்து விடை கொடுத்தார். அடிகளார் அவ்வாறே சிதம்பரத்தில் சிலகாலமிருந்தார்.
Remove ads
துறைமங்கலம் மீளல்
பின்னர்ச் சிவதலங்களுக்குச் சென்று வணங்கிப் பின்னர்த் துறைமங்கலத்திற்குப் போய் அண்ணாமலை ரெட்டியாரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கித் திருவெங்கைமாநகரில் தம்பொருட்டு அவரால் கட்டப்பட்ட திருமடத்தில் வாழ்ந்து, அந்நகரிலுள்ள பழமலைநாதரைப் போற்றித் திருவெங்கைக்கோவை முதலிய நான்கு நூல்களை இயற்றித் தந்தார்.
பின்னர், அண்ணாமலை ரெட்டியார் "அடிகள் இல்லறம் மேற்கொள்ளவேண்டும்" என்று தம் உள்ளக் கிடக்கையைத் தெரிவிக்க அடிகள் உடனே,
- "சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுட னேயரவப்
- பாய்கொண்டா னும்பணியும் பட்டீச் சுரத்தானே
- நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தளவிருந்து
- பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ளல் ஆகாதே."
என்னும் பாவால் தம் இசைவின்மையை உணர்த்தினர். இதேபோல, அடிகளின் தம்பிகள் இருவரிடமும் ரெட்டியார் வினவ, அவர்கள் திருமணம் செய்துகொள்ள இயைந்தனர். இளவலிருவரின் இச்சையைப் புரிந்துகொண்ட அடிகள் இருவருக்கும் தக்கபடி திருமணம் செய்து வைத்தார்.
Remove ads
மீண்டும் சிதம்பரத்தில்
அதன்பின்னர், ரெட்டியாரோடு சிதம்பரம் சென்று, ஆங்கொரு திருமடம் கட்டுவித்து இறைவழிபாடு செய்து வந்தனர். அப்பொழுது, தருக்க பரிபாஷை, சிவப்பிரகாச விகாசம், நால்வர் நான்மணிமாலை, சதமணிமாலை ஆகிய நூல்களை இயற்றினார். பின் அங்கிருந்து கிளம்பி பல சிவத்தலங்களுக்கும் சென்று பின்னர்த் திருக்காட்டுப்பள்ளியை அடைந்தார்.
சிவஞான பாலைய தேசிகரைப் பாடுதல்
ரெட்டியாரோடு காஞ்சி செல்லும் வழியில் சாந்தலிங்க சுவாமிகளைச் சந்தித்தார். சாந்தலிங்க சுவாமிகள் போரூர் செல்லும் காரணத்தை வினவ, அதற்கு அவர் சிவஞான பாலைய தேசிகரைத் தரிசிக்கச் செல்வதாகக் கூறினார். பின்னர் இருவரும் போரூர் செல்லும் வழியில் புத்துப்பட்டு கிராமத்தில் தங்கி இருக்கும்போது, அடிகளாரை நோக்கிச் சாந்தலிங்க சுவாமிகள், சிவஞான பாலைய தேசிகரைப் புகழ்ந்து சில பாக்களை இயற்றவேண்டினார். அதற்கு அடிகளார், "யாம் மக்களைப் பாடுவதில்லை" என மறுத்தார். இரவு உறங்குங்பொழுது, முருகன் கனவில் தோன்றி ஒரு பாத்திரத்தில் விடுபூக்களை இட்டு, "இவற்றைத் தொடுத்து மாலையாக்கி எமக்கிடுவாயாக" எனக் கூறி மறைந்தார்.
உதயத்தில், சாந்தலிங்க சுவாமிகளிடம் கனவைக் கூறுகையில், "முருகன் உத்திரவு வந்துவிட்டது; பாடுங்கள்" என்றார். மறுக்கவியலாது, சிவஞான பாலைய தேசிகரின் பெருமையை, "நெஞ்சுவிடு தூது, தாலாட்டு" என்னும் நூல்களாக இயற்றிச் சிவஞான பாலைய தேசிகரின் முன் அரங்கேற்றினார். தேசிகரும் அடிகளாருக்கு உண்மையறிவைப் புகட்டினார். தேசிகனாரின் கட்டளைக்கிணங்கி சாந்தலிங்க சுவாமிகளுக்குத் தன் தங்கை ஞானாம்பிகையாரைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, ரெட்டியாரைத் துறைமங்கலத்துக்குச் செல்லுமாறு பணித்துவிட்டுத் தான் சிவஞான பாலைய தேசிகருடன் தங்கிவிட்டார்.
Remove ads
தொடரும் இலக்கியப் பணி
சிலகாலம் கழித்துச் சிவஞான பாலைய தேசிகரிடம் விடைபெற்று காஞ்சி சென்று இறைத்தொண்டு புரிந்திருந்தபோது, நிசகுணயோகி என்பவரால் கன்னட மொழியில் இயற்றப்பட்ட விவேக சிந்தாமணியின் ஒரு பாகமாகிய "வேதாந்த பரிச்சேதத்திற்கு வேதாந்த சூடாமணி" என்னும் பெயரிட்டுத் தனி நூலாகப் பாடினார். இரேணுகர் என்னும் கணத்தலைவரால் அகத்தியருக்கு அருளப்பட்ட சித்தாந்த சிகாமணியையும் பாடினார். அத்தருணத்தேதான் அல்லமதேவராகிய பிரபுதேவர் வரலாறான பிரபுலிங்க லீலையும் இயற்றி அருளினார்.
சிவப்பிரகாச அடிகளார் இன்னும், திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ், திருக்கூவப் புராணம், பழமலையந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, கொச்சகக் கலிப்பா, பெரியநாயகியம்மை ஆசிரிய விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, நன்னெறி ஆகிய நூல்களை இயற்றினார். அப்பொழுது, சதுரகராதி தொகுத்த வீரமாமுனிவர் வாதுசெய்ய அடிகளை அழைத்தார். அவர்தம் கொள்கையை மறுத்து, ஏசுமத நிராகரணம் என்னும் நூலை இயற்றினார்.
இறுதிக் காலம்
இறுதியாக, நல்லாற்றூரையடைந்து, சிவநாம மகிமை, அபிசேகமாலை, நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சனமாலை, கைத்தலமாலை முதலிய நூல்களையும், சீகாளத்திப் புராணத்தில் கண்ணப்ப சருக்கம், நக்கீரர் சருக்கம் ஆகியவற்றையும் பாடி முடித்துத் தன் முப்பத்திரண்டாம் அகவையில் புரட்டாசிப் பவுர்ணமியில் இட்டலிங்கப் பரசிவத்தில் காலமானார். அவர் இயற்றியவற்றில் எளிதாகக் கிட்டுவது பிரபுலிங்க லீலை மட்டுமே.
இயற்றிய நூல்கள்
இவர் வீரசைவச் சமயச் சார்புள்ள பல நூல்களை இயற்றினார்.[3]
- திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒருவகை பா வகை)
- திருவெங்கை உலா
- திருவெங்கை அலங்காரம்
- நால்வர் நான்மணி மாலை
- சிவப்பிரகாச விகாசம்
- தருக்கப்பரிபாஷை
- சதமணி மாலை
- வேதாந்த சூடாமணி
- சிந்தாந்த சிகாமணி
- பிரபுலிங்க லீலை
- பழமலை அந்தாதி
- பிட்சாடண நவமணி மாலை
- கொச்சகக் கலிப்பா
- பெரியநாயகி அம்மை கட்டளைக் கலித்துறை
- சிவநாம மகிமை
- இஷ்டலிங்க அபிஷேக மாலை
- நெடுங்கழி நெடில்
- குறுங்கழி நெடில்
- நிரஞ்சன மாலை
- கைத்தல மாலை
- சோணசைல மாலை
- சீகாளத்திப் புராணம்
- திருவெங்கைக்கோவை
- நெஞ்சுவிடு தூது
- சிவஞான பாலையர்
- திருக்கூவ புராணம்
- நன்னெறி
Remove ads
வெளி இணைப்புகள்
- கற்பனைக் களஞ்சியத்தின் அற்புதச் சொற்கோயில், இடைமருதூர் கி.மஞ்சுளா, தினமணி
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads