சி. மூ. இராசமாணிக்கம்
இலங்கைத் தமிழ் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சின்னப்பு மூத்ததம்பி இராசமாணிக்கம் (Sinnappu Moothathamby Rasamanickam, சனவரி 20, 1913 - செப்டம்பர் 7, 1974) இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் பட்டிருப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
1913 இல் பிறந்தவர் இராசமாணிக்கம்.[1] இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மண்டூர் என்னும் ஊரில் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை திருப்பழுகாமத்தைச் சேர்ந்த சோமநாதர் சின்னப்பு உடையார், தாயார் மண்டூரைச் சேர்ந்த சின்னப்பிள்ளை. இவர்களுக்கு மூத்தவராகப் பிறந்தவர் இராசமாணிக்கம். இவருடன் கூடப் பிறந்தவர்கள் சிவகுரு, சங்கரப்பிள்ளை, நடராசா, சிவப்பிரகாசம், நேசம் ஆகியோர். இராசமாணிக்கம் மண்டூர் சைவப்பள்ளி, கல்முனை உவெசுலி கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இலண்டன் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டம் பெற்றார். இராசமாணிக்கம் அரசு சேவையில் இணைந்து கூட்டுறவு அலுவலர், உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி, உதவி அரச அதிபர், காணி ஆணையாளார் எனப் பல பதவிகளை பதுளை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் வகித்துள்ளார்.[2][3]
Remove ads
திருமணம்
இராசமாணிக்கம் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த மருத்துவர் வைரமுத்து ஜேம்ஸ் செல்லையா, மார்கிரட் தங்கம்மா ஆகியோரின் மகள் லீலா செபரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு 2 பெண்களும் 4 ஆண்களும் பிள்ளைகள். இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 1988 இல் 4வது பிள்ளை சக்கரவர்த்தி இறந்தார்.[2] மற்றைய மகன் மருத்துவர் ராஜபுத்திரன் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் பட்டிருப்புத் தொகுதி கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.[4] ராசபுத்திரனின் மகன் சாணக்கியன் இராசமாணிக்கம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
Remove ads
அரசியலில்
1947 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சோ. உ. எதிர்மனசிங்கம் என்பவரிடம் சுமார் 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[5] ஆனாலும், 1952 தேர்தலில் போட்டியிட்டு 460 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்மனசிங்கத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[6]
சா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த போது அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பண்டா-செல்வா ஒப்பந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டார்.[1] 1956 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு எதிர்மனசிங்கத்திடம் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[7] ஆனாலும் மார்ச்சு 1960 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[8] சூலை 1960, 1965 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1970 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சோ. தம்பிராஜாவிடம் 600 வாக்குகளால் தோற்றார்.[9][10][11]
இராசமாணிக்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவராகவும் செயல்பட்டவர்.[3][12]
சமூக சேவைகள்
இராசமாணிக்கம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராகவும் மட்டு மாவட்ட தவிசாளர் ஒன்றியத் தலைவராகவும் (1956) இருந்தார். களுவாஞ்சிக்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க ஒன்றியத்தின் தலைவராகவும், களுவாஞ்சிகுடி சைவ மகா சபையின் தலைவராகவும் (1960-1974) பணியாற்றியுள்ளார்.[2]
நினைவுச் சின்னங்கள்
- இராசமாணிக்கனாரின் வீட்டுக்கு வடக்கே களுவாஞ்சிகுடி வீரபத்திரர் ஆலயத்திற்கு முன்னால் அவரது முழு உருவச்சிலை ஒன்று 1983 சனவரி 20 இல் அமைக்கப்பட்டது.
- களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இராசமாணிக்கத்தின் நினைவுக் கலாசார மண்டபம் 2002 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads