உவர் நீர் முதலை
ஒரு முதலை இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உவர் நீர் முதலை (Saltwater crocodile; Crocodylus porosus)[2] அல்லது உப்பு நீர் முதலை[3] என்பது முதலை வரிசையைச் சேர்ந்த உயிரினமாகும். இது உயிர் வாழும் ஊர்வன இனங்கள் அனைத்திலும் மிகப்பெரியதாகும். இது வட ஆஸ்திரேலியா, இந்தியாவின் கிழக்குக் கரையோரம், இலங்கை, தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகள் என்பவற்றில் உள்ள பொருத்தமான வாழிடங்களில் பரவி வாழ்கிறது.

Remove ads
உடலமைப்பும் உருவமும்
உவர்நீர் முதலைகளின் முகப்பகுதி சாதாரண முதலையின் முகத்தைவிட நீண்டதாகும்: அதன் நீளம் அதன் தடிப்பிலும் இரு மடங்காகும்.[4] ஏனைய வகை முதலைகளை விடக் குறைவான அளவு செதில்களே உவர்நீர் முதலைகளின் கழுத்துப் பகுதியில் காணப்படுகிறது. இதன் காரணமாக, இவை முற்காலத்தில் அல்லிகேட்டர் வகை முதலையினமெனத் தவறாகக் கணிக்கப்பட்டது.[5]
வளர்ந்த ஓர் உவர்நீர் முதலையின் நிறை 600-100 கிலோகிராம் ஆகவும் அதன் நீளம் 4.1-5.5 மீற்றர் ஆகவும் காணப்படும். எனினும், அவற்றின் நன்கு வளர்ச்சிடைந்த ஆண் முதலையொன்று 6 மீற்றர் நீளமும் 1300 கிலோகிராம் வரையான எடையும் கொண்டிருக்கலாம்.[6][7][8] இவ்வினம் தற்காலத்தில் வாழும் ஏனைய முதலை இனங்களிலும் பார்க்கக் கூடியளவான பாலியல் சார் நடத்தையைக் காட்டுகிறது. உவர்நீர் முதலைகளில் பெண் உயிரினங்களின் உடலளவு 2.1-3.5 மீற்றர் ஆகும்.[5][6] இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய பெண் உவர்நீர் முதலையின் நீளம் 4.2 மீற்றர் ஆகும்.[8] பெண் உவர்நீர் முதலையின் சாதாரண நிறை 450 கிலோகிராம் ஆகும்.[9]
இதுவரை அளவிடப்பட்ட மிகப் பெரிய உவர்நீர் முதலையின் நீளம் அதன் முகத்திலிருந்து வால் நுனி வரை - அதன் தோலை அளந்ததன் படி - 6.1 மீற்றர் ஆகும். விலங்குகளின் தோல் அவற்றின் உடலிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பொதுவாக சுருங்கும் தன்மையைக் கொண்டுள்ளமையால், மேற்படி முதலை உயிருடன் இருந்த போது 6.3 மீற்றர் நீளமும் 1200 கிலோகிராமுக்கு மேற்றபட்ட எடையும் கொண்டதாக இருந்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது.[10] இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்[11]) படம் பிடிக்கப்பட்ட ஓர் உவர்நீர் முதலையின் மண்டையோடு, மேற்படி முதலை 7.6 மீட்டர் நீளமானதாக இருந்ததாகக் கூறப்பட்ட போதிலும் அது 7 மீட்டருக்கு மேற்பட்டிருக்காதென அறிஞர்கள் கூறுகின்றனர்.[10] உவர்நீர் முதலைகள் கிட்டத்தட்ட 9 மீற்றர் நீளமுள்ளனவாக இருந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்: 1840 ஆம் ஆண்டு வங்காள விரிகுடாவில் சுடப்பட்ட முதலையின் நீளம் 10 மீட்டராக இருந்தது; பிலிப்பீன்சு நாட்டில் 1823 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட முதலையின் நீளம் 8.2 மீட்டர் ஆகும்; கொல்கத்தா நகரின் ஹூக்லி ஆற்றில் கொல்லப்பட்ட முதலையின் நீளம் 7.6 மீட்டர் ஆகும். எனினும், மேற்படி முதலைகளின் மண்டையோடுகளைப் பரிசீலித்த பின்னர் அவை 6-6.6 மீட்டர் நீளமுள்ளனவாக இருந்ததிருக்கவே வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மைக் காலத்தில் உவர்நீர் முதலைக்கான வாழிடங்களை வேறாக்கியுள்ளமையாலும் அவற்றை வேட்டையாடுதல் குறைவடைந்துள்ளமையாலும் தற்காலத்தில் 7 மீட்டர் நீளமான உவர்நீர் முதலைகள் உயிர் வாழக்கூடும்.[12] மிகச் சரியாக அளவிடப்படாவிடினும், கின்னஸ் உலக சாதனை அமைப்பு இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள பிதார்கனிகா பூங்காவில் வாழும் ஏழு மீற்றர் முதலையைப் பதிவு செய்துள்ளது.[11][13].
1957 ஆம் ஆண்டு குயீன்ஸ்லாந்தில் சுடப்பட்ட முதலையொன்றின் நீளம் 8.5 மீட்டர் இருந்ததாகக் கூறப்பட்ட போதும் அதனைச் சரியாக அளவிட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன் அதன் எச்சங்களும் தற்போது காணப்படுவதில்லை. அங்கு அமைக்கப்பட்டுள்ள அம்முதலையின் உருவச்சிலை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடியதாக உள்ளது.[14][15][16] 8 மீற்றரிலும் கூடிய முதலைகள் பற்றிப் பல்வேறு தகவல்கள் கூறினாலும் அவற்றிலெதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.[17][18]
Remove ads
பரவல்


உவர்நீர் முதலையானது சாதாரண முதலை, ஒடுங்கிய முதலை என்பவற்றுடன் சேர்த்து இந்தியாவில் காணப்படும் மூன்று முதலையினங்களில் ஒன்றாகும்.[19] இந்தியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் கணிசமாகக் காணப்பட்ட போதிலும் உவர்நீர் முதலைகள் இந்தியத் துணைக் கண்டத்தின் உட்பகுதிகளில் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இவை இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள பிதார்கனிகா வனவிலங்கு சரணாலயத்தில் பெருந்தொகையாகக் காணப்படும் அதே வேளை சுந்தரவனக் காடுகளின் இந்திய, வங்காள நாட்டுப் பகுதிகளிலும் ஏராளமாக வாழ்கின்றன.
ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியம், மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து உள்ளிட்ட பகுதிகளின் மிக வடக்கான பகுதிகளில் உவர்நீர் முதலைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அங்கே 6 மீற்றரிலும் பெரிதான முதலைகள் சர்வசாதாரணமாகக் காணப்படுகின்றன. ஆஸ்திரேலிய உவர்நீர் முதலைகளின் எண்ணிக்கை 100,000-200,000 இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உவர்நீர் முதலைகள் தென்கிழக்காசியா முழுவதிலும் வாழ்ந்ததாக வரலாறு கூறிய போதிலும் அப்பகுதிகளில் இன்று அவை அருகிவிட்டன. உவர்நீர் முதலைகள் தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளில் முற்றாகவே அழிந்துவிட்டன. எனினும், இவை மியான்மர் நாட்டின் இராவாடி கழிமுகப் பகுதியில் ஏராளமாகக் காணப்படுகின்றன.[20] உவர்நீர் முதலைகளைக் கொண்டுள்ள இந்தோசீனப் பிராந்திய நாடு மியன்மார் மாத்திரமாக இருக்கலாம். இவை மேக்கொங் ஆற்றில் ஒரு காலத்தில் மிகப் பரவலாகக் காணப்பட்ட போதிலும் 1980களின் பின்னர் அவை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் அவை உலகளவில் முழுமையக அற்றுப் போவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளின் போர்ணியோ தீவு போன்ற சில பகுதிகளில் இவை பெரும் எண்ணிக்கையிலும் பிலிப்பீன்சு போன்ற நாடுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படுகின்றன. சுமாத்திராவின் உட்பகுதிகளில் பெரிய அளவிலான முதலைகள் மனிதர்களைத் தாக்கியதாக அண்மையில் வெளிவந்த நம்பகமான தகவல்கள் இருப்பினும் சுமாத்திரா, சாவகம் போன்ற தீவுகளில் இவற்றின் எண்ணிக்கை பற்றிச் சரியாக அறியப்படவில்லை. முதலைகள் ஏராளமாகக் காணப்படும் வடக்கு ஆஸ்திரேலியாவுக்கு மிக அருகில் உள்ள போதிலும் பாலித் தீவில் உவர்நீர் முதலைகள் தற்போது காணப்படுவதில்லை. உவர்நீர் முதலைகள் தென்பசிபிக் பிராந்தியத்தில் மிகக் குறைந்தளவில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரம், சீசெல்சு ஆகிய இடங்களிலும் உவர்நீர் முதலைகள் ஒரு காலத்தில் பரவி வாழ்ந்தன.
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads