பாலி

இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவு From Wikipedia, the free encyclopedia

பாலிmap
Remove ads

பாலி (ஆங்கிலம்: Bali; இந்தோனேசியம்: Provinsi Bali; பாலினிய மொழி: ᬩᬮᬶ) என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளின் மேற்கு அந்தலையில், ஜாவாவுக்கும், லொம்போக் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் தென்பசார் என்பதாகும்.[5]

விரைவான உண்மைகள் பாலி Bali, நாடு ...
விரைவான உண்மைகள் புவியியல், தீவுக்கூட்டம் ...
Thumb
கருட விஷ்ணு காஞ்சன பண்பாட்டுப் பூங்கா, பாலி
Thumb
பாலியில் தீபாவளி கொண்டாட்டம் (2012)
Thumb
பாலி உபூட் நகரில் தீபாவளி அலங்காரங்கள் (2012)
Thumb
பாலி நடன மங்கையர்
Thumb
ரெஜாங் எனும் பாலினிய புனித நடனம்
Thumb
கெச்சாக் நடனம்

பாலியில் பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாசாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. பெரும் தென்பசாரில் உள்ள உபூட் (Ubud) எனும் மலையக நகரம் பாலியின் பண்பாட்டு மையமாகக் கருதப்படுகிறது.

இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாக இந்த மாநிலம் உள்ளது. 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. மேலும், இந்த மாநிலம் இந்தோனேசியாவில் கூடுதலாக சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாப் பகுதியாகவும் மாறியுள்ளது. பாலியின் பொருளாதாரத்தில் அதன் சுற்றுலா தொடர்பான வணிகம் 80% ஆகும்.[6]

Remove ads

வரலாறு

கிமு 2000 ஆம் ஆண்டில் தைவான் தீவிலிருந்து தென்கிழக்காசியா மற்றும் ஓசியானியாவிற்கு கடல்சார் தென்கிழக்காசியா வழியாக குடிபெயர்ந்த ஆசுத்திரோனீசிய மக்கள் தான் பாலி தீவின் முதல் குடியேற்றவாதிகள் என அறியப்படுகிறது.[7] பண்பாட்டு வழியாகவும் மொழியியல் வழியாகவும், பாலினியர்கள் இந்தோனேசியத் தீவுக்கூட்டம், மலேசியா, புரூணை, பிலிப்பீன்சு மற்றும் ஓசியானியா மக்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

அத்துடன், கிமு 2000-ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கல் கருவிகள் தீவின் மேற்கில் உள்ள செகிக் கிராமத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[8][9]

பாலி திவீபா

பண்டைய பாலியில், பாசுபதம், பைரவர், சிவ சித்தாந்தம், வைணவ சமயம், போதா, பிரம்மன், ரேசி, சோரா மற்றும் கணாபத்தியம் ஆகிய ஒன்பது இந்து பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவினரும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை அவர்களின் தனிப்பட்ட கடவுளராகப் போற்றினர்.[10][11]:129,144,168,180

பாலினிய பண்பாடு என்பது இந்திய, சீனப் பண்பாடுகளைப் பின்னணியாகக் கொண்டது; குறிப்பாக இந்து மதப் பண்பாடுகளினால் வலுவாகத் தாக்கம் பெற்றுள்ளது. இந்தத் தாக்கம் கி.பி 1-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. பாலி திவீபா (Bali dwipa) என்ற பெயர் இந்தோனேசியாவின் பல்வேறு கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பெலாஞ்சோங் கல்தூண்

இதில் செரி கேசரி வருமதேவன் கி.பி 914-இல் உருவாக்கிய பெலாஞ்சோங் கல்தூண் மற்றும் வாலித் வீபா (Walidwipa) என குறிப்பிடுவதும் அடங்கும். வாலித் வீபா என்பது பாலி தீவைக் குறிப்பிடுவதாகும்.

இந்தக் கட்டத்தில்தான், பாலி மக்கள் ஈரமான வயல் சாகுபடி செய்வதற்கு சிக்கலான நீர்ப்பாசன முறையான சுபாக் முறையை (Subak irrigation) உருவாக்கினர். இன்றும் பாலி தீவில் நடைமுறையில் உள்ள சில மத மற்றும் கலாசார மரபுகள் இந்தக் காலக் கட்டத்தில்தான் உருவாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

Remove ads

பாலியின் இந்து சமயம்

பாலியில் தீபாவளி

பாலி மக்கள் அவர்களின் இந்து மதத்தை இந்து ஆகம இந்து தர்மம் (Agama Hindu Dharma); ஆகம தீர்த்தம் (Agama Tirtha); ஆகம புனிதம் (Agama Suci); ஆகம இந்து பாலி (Agama Hindu Bali) என அழைக்கிறார்கள். மதம் தொடர்பான சடங்குகள்; வேளாண்மை தொடர்பான நிகழ்ச்சிகள்; இவற்றுக்கு 210 நாட்கள் கொண்ட நாள்காட்டியைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு பாவுக்கோன் (Balinese Pawukon calendar) நாள்காட்டி என்று பெயர். கலுங்கான் குனிங்கான் நாள்காட்டி (Galungan Kuningan) என்றும் பெயர் உள்ளது.[12][13]

பூமிக்கு வரும் தெய்வங்கள் பத்து நாட்கள் தங்கிவிட்டு கலுங்கான் தினத்தில் திரும்பிச் செல்வார்கள் என்பது பாலி இந்து மக்களின் நம்பிக்கை. அந்தப் பத்து நாட்களில் தெய்வங்களை வரவேற்று ஆராதனை செய்யும் திருவிழாக்களில் தீபாவளியும் ஒரு திருவிழாவாக அமைகின்றது.

ஒற்றை மூங்கிலில் தென்னை ஓலைகள்

தீபாவளியின் போது பாலி தீவில் வழக்கம் போல் வியாபாரம் நடக்கும். உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் மளிகைக் கடைகள் அனைத்தும் திறந்து இருக்கும். வழக்கம் போல் கூட்டம் அதிகமாக இருக்கும். பாலி தீவில் உள்ள அனைத்து இந்து வீடுகள், இந்து கடைகள், இந்து நிறுவனங்கள் மற்றும் பயிர் நிலங்களில் ஒற்றை மூங்கிலில் தென்னை ஓலைகளைக் கட்டி அலங்காரம் செய்கிறார்கள்.

மூங்கிலில் ஓர் ஆள் உயரத்தில் ஒரு சிறிய ஓலைத் தட்டில் பூக்கள் மற்றும் உணவு பொருள்களை வைத்து அழகு படுத்துகிறார்கள். தெய்வங்களை மகிழ்ச்சிப் படுத்தும் ஓர் அன்புப் படையல் என சொல்கிறார்கள். மக்கள் தங்களுக்குப் பிடித்தமான சிறந்த ஆடைகளை உடுத்திக் கொள்கின்றனர். உணவுக் கூடைகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் கோவில்களுக்குச் செல்கின்றனர்.

தெய்வங்களுக்கு காணிக்கை

கோயில் என்பது பாலி இந்து மக்களுடன் ஒன்றாக இணைந்து விட்டதால் தீபாவளி தினத்தன்று குடும்பத்தோடு கோயிலுக்குப் போகிறார்கள். வீட்டில் சமைத்து எடுத்த உணவுப் பொருட்களைக் கூடைகளில் ஏந்தியவாறு கோயிலுக்குச் செல்கிறார்கள்.

பெண்கள் சிலர் உணவுப் பொருட்களை தலையில் சுமந்து கொண்டு போவார்கள். தங்களின் உணவுப் பொருட்களைத் தங்களின் விருப்பத் தெய்வங்களுக்கு காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். கோயிலில் வந்து சேரும் உணவுப் பொருட்களை அங்கு வரும் அனைவரிடமும் பகிர்ந்து கொடுக்கிறார்கள். சாதி சமயம் எனும் பேச்சுக்கு இடம் இல்லை. அதே வேளையில் பாலியில் சாதி சங்கங்கள் எதுவும் இல்லை.

குனிங்கான் திருவிழா

பொதுவாகவே, பாலி இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறவர்கள். அவர்களின் குடும்பம் ஒவ்வொன்றிலும் ஒரு குடும்பக் கோயில் இருக்கும். அதாவது, அவர்களின் வீட்டுக்கு வெளியே ஒரு கோயிலைக் கட்டி விடுவார்ர்கள். இவர்கள் வீடும் கோயிலும் அடுத்து அடுத்து உள்ளன. கலுங்கான் குனிங்கான் திருவிழா 210 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. அதாவது அவர்களின் தீபாவளி 210 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது.[14]

அந்த வகையில் பாலியில் பிறக்கும் இந்து மதக் குழந்தைகளுக்கு கலுங்கான் குனிங்கான் நாள்காட்டியின்படி (Pawukon calendar) 210 நாள்களுக்கு ஒருமுறை பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்கள்.[15]

பாலி மக்களின் நம்பிக்கை

ஜாவா தீவில் 400 ஆண்டுகளுக்கு முன்பு, மஜபாகித் காலத்தில் இசுலாமிய மதமாற்றம் நடைபெற்றது. அதை ஏற்க விரும்பாத இந்துக்கள் பாலி தீவில் தஞ்சம் அடைந்தார்கள். அன்றில் இருந்து பாலி தீவில் இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார்கள். தீபாவளி என்பது அவர்களின் புத்தாண்டின் தொடக்கத்தை மட்டும் அல்ல; தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிப்பதாக நம்புகிறார்கள். தீபாவளி திருவிழா ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது.[16]

கலுங்கான் நாளில் தான் பாலி மக்களின் தீபாவளி நாளும் வருகிறது. பூமிக்கு வரும் தெய்வங்கள் பத்து நாட்கள் தங்கிவிட்டு கலுங்கான் தினத்தில் திரும்பிச் செல்வார்கள் என்பது பாலி இந்து மக்களின் நம்பிக்கை. அந்தப் பத்து நாட்களில் தெய்வங்களை வரவேற்று ஆராதனை செய்யும் திருவிழாக்களில் தீபாவளியும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது.[17]

புரத்தான் மலை ஏரி

பாலி தீவின் தலை நகரம் தென்பசார். அங்கு இருந்து சிங்கராஜா (Singaraja) நகரத்திற்குச் செல்லும் வழியில் பெடுகுல் (Bedugul) எனும் இடத்தில் ஒரு மலை ஏரி உள்ளது. அதன் பெயர் புரத்தான் ஏரி (Lake Bratan). பாலித் தீவின் வடக்கே உள்ளது. ஓர் எரிமலை வெடிப்பினால் இந்த மலைஏரி உருவானது.

இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4,900 அடி (1,500 மீட்டர்). இந்த ஏரியைச் சுற்றிலும் பல இந்துக் கோயில்கள் உள்ளன. அனைத்தும் சிறிய கோயில்கள். அவற்றில் புரத்தான் சிவன் கோயில் மட்டுமே சற்று பெரியது. அந்தக் கோயிலின் படத்தை இந்தோனேசியாவின் 50,000 ரூப்பியா பணத்தாட்களில் பதிப்பு செய்து இருக்கிறார்கள்.[18] இந்தக் கோயில் தான் பாலித் தீவின் பெரிய சிவன் கோயில் ஆகும்.

Remove ads

பாலி இராச்சியம்

10-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில், பூர்வீக பாலினிய அரசாட்சி முறைமையைச் சார்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.

பாலி இராச்சியத்தின் வரலாறு என்பது மாதரம் இராச்சியம் (Mataram Kingdom) (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு) தொடங்கி மஜபாகித் பேரரசு (Majapahit Empire) (13-நூற்றாண்டு – 15-ஆம் நூற்றாண்டு) ஆகிய இரு இராச்சியங்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அத்துடன் பாலி தீவின் பண்பாடு, மொழி, பாரம்பரியக் கலைகள் மற்றும் கட்டிடக்கலை போன்றவையும் ஜாவாவின் தாக்கத்தைக் கொண்டுள்ளன.

மஜபாகித் பேரரசு

Thumb
பாரம்பரிய இந்து மத உடையில் பாலினியச் சிறுமிகள்
Thumb
கோயிலுக்கு உண்வுப் பொருட்களைக் கொண்டு செல்லும் பெண்கள்

15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மயாபாகித்து பேரரசு வீழ்ச்சி அடைந்தது. ஜாவானிய இந்துமதத் தாக்கங்களும் வலுவடைந்தன. மயாபாகித்து பேரரசு எனும் இந்து அரசு, டெமாக் சுல்தானகத்திடம் (Demak Sultanate) வீழ்ந்த பிறகு, மஜபாகித் பேரரசின் அரசவைக் குடும்ப உறுப்பினர்கள், அரசவைப் பிரபுக்கள், அரசவைப் பாதிரியார்கள் மற்றும் கைவினைஞர்கள் பலர், பாலி தீவில் தஞ்சம் அடைந்தனர்.

இதன் விளைவாக பாலி தீவு, இந்தோ-ஜாவானிய பண்பாடு மற்றும் இந்தோ-ஜாவானிய நாகரிகத்தின் கடைசிப் புகலிடமாகவும் மாறியது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பாலி இராச்சியம், அதன் செல்வாக்கை அண்டைத் தீவுகளில் விரிவுபடுத்தியது. இதன் தொடர்ச்சியாக, கெல்கெல் இராச்சியம் (Gelgel Kingdom) எனும் ஒரு புது குடியேற்றவிய இராச்சியத்தை உருவாக்கியது. இதன் பின்னர் பாலி இராச்சியத்தின் நீட்சியாக காராங்காசம் இராச்சியம் (Karangasem Kingdom); குலுங்கோங் இராச்சியம் (Klungkung kingdom) போன்ற துணை இராச்சியங்களும் உருவாகின.

டெமாக் சுல்தானகம்

15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மயாபாகித்து பேரரசு வீழ்ச்சி அடைந்தது. ஜாவானிய இந்துமதத் தாக்கங்களும் வலுவடைந்தன. மயாபாகித்து பேரரசு எனும் இந்து அரசு, டெமாக் சுல்தானகத்திடம் (Demak Sultanate) வீழ்ந்த பிறகு, மஜபாகித் பேரரசின் அரசவைக் குடும்ப உறுப்பினர்கள், அரசவைப் பிரபுக்கள், அரசவைப் பாதிரியார்கள் மற்றும் கைவினைஞர்கள் பலர், பாலி தீவில் தஞ்சம் அடைந்தனர்.

இதன் விளைவாக பாலி தீவு, இந்தோ-ஜாவானிய பண்பாடு மற்றும் இந்தோ-ஜாவானிய நாகரிகத்தின் கடைசிப் புகலிடமாகவும் மாறியது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பாலி இராச்சியம், அதன் செல்வாக்கை அண்டைத் தீவுகளில் விரிவுபடுத்தியது. இதன் தொடர்ச்சியாக, கெல்கெல் இராச்சியம் (Gelgel Kingdom) எனும் ஒரு புது குடியேற்றவிய இராச்சியத்தை உருவாக்கியது. இதன் பின்னர் பாலி இராச்சியத்தின் நீட்சியாக காராங்காசம் இராச்சியம் (Karangasem Kingdom); குலுங்கோங் இராச்சியம் (Klungkung kingdom) போன்ற துணை இராச்சியங்களும் உருவாகின.

Remove ads

இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள்

Thumb
பாலி, பாடுங் எனும் இடத்தில், இடச்சுக்காரர்களுக்கு எதிராகப் போராடி உயிர் துறந்த பாலி மக்களுக்கான நினைவுச் சின்னம்
Thumb
பாலி போலேலேங் அரசரின் பூபுத்தான் நிகழ்வைச் சித்தரிக்கும் 1849-ஆம் ஆண்டு ஓவியம்

19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, இடச்சு கிழக்கிந்திய அரசு, பாலியில் தன்னுடைய ஆட்சி அதிகார ஈடுபாடுகளைக் காட்டத் தொடங்கியது. பாலினிய சிறு இராச்சியங்களுக்கு (Balinese Minor Kingdoms) எதிராக ஒன்றன் பின் ஒன்றாகப் படையெடுப்பைத் தொடங்கியது. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இடச்சுக்காரர்களின் பாலி மீதான படையெடுப்பு ஒரு முடிவிற்கு வநதது.

இந்தச் சிறு இராச்சியங்கள் வலுக்கட்டாயமாகவோ அல்லது எதிர்வினை இல்லாத சரணடைதல் மூலமாகவோ இடச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அதே வேளையில் பூபுத்தான் (Puputan) போன்ற சில துர்நிகழ்வுகளும் நடந்து உள்ளன.[19]

தற்போதைய பாலி

பல வகையான தாக்குதல்கள் மற்றும் துர்நிகழ்வுகளில் இருந்தும், பாலினிய அரசக் குடும்பங்கள் தப்பிப் பிழைத்தன. இருப்பினும் இந்த நிகழ்வுகள் பூர்வீக பாலினிய இறையாண்மை இராச்சியங்களின் ஆயிரமாண்டு ஆட்சிக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன.

பின்னர் பாலினிய உள்ளூர் அரசாங்கம், இடச்சு குடியேற்றவிய் நிர்வாகமாக மாறியது. பின்னர் பாலி நிர்வாக அமைப்பு, இந்தோனேசியா குடியரசின் அரசாங்க ஆளுமைக்குள் வந்தது.[20]

Remove ads

பாரம்பரிய தளங்கள்

சூன் 2012 இல், மத்திய பாலியின் ஜத்திலுவே (Jatiluwih) பகுதியில் உள்ள நெல் வயல்களின் நீர்ப்பாசன அமைப்பான சுபாக் நீர்ப்பாசன முறைமை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய இயற்கைத் தளமாக பட்டியலிடப்பட்டது.[21]

மக்கள்

பாலியில் இந்து சமயம்

பண்பாடு & சுற்றுலாத் தளங்கள்

மேற்கோள்கள்

நூல்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads