சையிது வம்சம்

தில்லி சுல்தானகத்தை ஆண்ட நான்காவது அரசமரபு (1414-1451) From Wikipedia, the free encyclopedia

சையிது வம்சம்
Remove ads

சையிது அரசமரபு (Sayyid dynasty) என்பது தில்லி சுல்தானகத்தின் நான்காவது அரசமரபு ஆகும். 1414 முதல் 1451 வரை 37 ஆண்டுகளுக்கு இந்த அரசமரபை சேர்ந்த நான்கு ஆட்சியாளர்கள் ஆண்டனர்.[4] இந்த அரசமரபின் முதல் ஆட்சியாளர் கிசிர் கான் ஆவார். இவர் தைமூரியர்களுக்கு திறை செலுத்தி வந்த, முல்தானை ஆண்ட ஆட்சியாளர் ஆவார். இவர் 1414இல் தில்லியை வென்றார். இதன் ஆட்சியாளர்கள் தில்லி சுல்தானகத்தின் சுல்தான்களாக தங்களைத் தாமே முபாரக் ஷாவின் ஆட்சிக்கு கீழ் அறிவித்துக் கொண்டனர்.[5][6] இந்த அரசமரபு துக்ளக் அரசமரபுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தது. 1451இல் லௌதி அரசமரபால் இடம் மாற்றம் செய்யப்படும் வரை இந்த அரசமரபு சுல்தானகத்தை ஆண்டது.

விரைவான உண்மைகள் தலைநகரம், பேசப்படும் மொழிகள் ...
Remove ads

பூர்வீகம்

சம கால எழுத்தாளரான எகுயா சிர்கிந்தி தனது தரிக்-இ-முபாரக் சாகி நூலில் கிசிர் கானை இறை தூதர் முகம்மது நபியின் ஒரு வழித்தோன்றல் என்று குறிப்பிடுகிறார்.[7] இறை தூதர் முகம்மது நபியின் மகள் பாத்திமாவின் வழியாக தாங்கள் தோன்றியவர்கள் என்ற வாதத்தின் அடிப்படையில் சையிது என்ற தங்களது பட்டத்தை இந்த அரசமரபின் உறுப்பினர்கள் பெற்றனர் என்கிறார். எனினும் எகுயா சிர்கிந்தி தனது கருத்தை உறுதியற்ற சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிடுகிறார் என்று குறிப்பிடப்படுகிறது. முதலில், கிசிர் கானின் சையிது பாரம்பரியத்தை உச் சரீப்பின் பிரபல துறவி சையிது சலாலுத்தீன் புகாரியின் ஒரு தோராயமான அங்கீகரிப்பை முதன்மையாகக் கொண்டு இவர் குறிப்பிடுகிறார்.[8][9] இரண்டாவது, சுல்தானின் உயர்ந்த பண்புகளானவை ஓர் இறை தூதரின் வழித் தோன்றலுக்கான நன்னெறி தகுதிகளை கொண்டிருந்தவராக இவரை தனித்துவமாக காட்டியது என்பதன் அடிப்படையில் குறிப்பிடுகிறார்.[10] ஆபிரகாம் எராலி என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி தொடக்க கால துக்ளக் ஆட்சியின் போது முல்தான் பகுதியில் நெடுங்காலத்திற்கு முன்னர் குடியமர்ந்த ஓர் அரபு குடும்பத்தின் வழித்தோன்றல்களாக கிசிர் கானின் முன்னோர்கள் இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். ஆனால் இவர்களது சையிது மரபை இவர் சந்தேகத்துக்கு உள்ளாக்குகிறார்.[11] ரிச்சர்டு எம். ஈட்டன் மற்றும் கிழக்கத்திய அறிஞர் சைமன் திக்பி ஆகியோரது கூற்றுப் படி கிசிர் கான் என்பவர் கோகர் இனத்தைச் சேர்ந்த ஒரு பஞ்சாபிய தலைவர் ஆவார். தைமூரிடம் ஒரு தூதுவராக இவர் அனுப்பப்பட்டார். மிக அண்டைய பகுதியான பஞ்சாப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இவர் அனுப்பப்பட்டிருந்தார். தான் பெற்ற தொடர்புகள் காரணமாக இறுதியாக தில்லியில் அதிகாரப் பிடிப்பு கொண்டவராக கிசிர் கான் உருவானார்.[12][13] பிரான்செசுகா ஒர்சினி மற்றும் சமீரா சேக் ஆகியோர் தங்களது நூல்களில் இதே போன்ற ஒரு பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.[14]

Remove ads

வரலாறு

Thumb
புது தில்லியின் லௌதி தோட்டங்களில் உள்ள முகம்மது ஷாவின் சமாதி.

உண்மையில் துக்ளக் அரசமரபின் காலத்தில் தில்லி சுல்தானகத்தில் இருந்த ஓர் உயர் குடியினர் கிசிர் கான் ஆவார். சுல்தான் பிரூசு ஷாவுக்கு கீழ் முல்தானின் ஆளுநராக இவர் திகழ்ந்தார். 1395இல் முல்தானை ஆக்கிரமித்த சரங் கானின் தலைமையிலான முயின் பழங்குடியினங்களால் நகரத்தில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டார்.[15][16] சரங் கான் என்பவர் ஓர் இந்திய முஸ்லிம் ஆவார். தில்லியின் நடைமுறை ரீதியிலான ஆட்சியாளரான மல்லு இக்பால் கானின் சகோதரர் ஆவார்.[17][18][19][20] முல்தானின் ஒரு முந்தைய ஆளுநரான மாலிக் மர்தான் பட்டியின் பணியாளர்களால் சரங் கான் ஆதரவு பெற்றார். தத்தெடுப்பு முறையில் கிசிர் கானின் தாத்தாவாக மாலிக் மர்தான் பட்டி விளங்கினார்.[21][22] தைமூரின் படையெடுப்பில் பங்கெடுத்த மிக முக்கியமான இந்திய உயர் குடியினரில் கிசிர் கானும் ஒருவராவார். தில்லியின் அதிகாரத்தை இவர் எதிர்த்து வந்தார்.[23]

1398இல் தில்லியை தைமூர் சூறையாடியதை தொடர்ந்து[24] பஞ்சாப்பின் முல்தானின் துணை அலுவலராக கிசிர் கானை தைமூர் நியமித்தார்.[25] லாகூர், தீபல்பூர், முல்தான் மற்றும் மேல் சிந்துப் பகுதி ஆகியவற்றை கிசிர் கான் வைத்திருந்தார்.[26][27] முல்தானில் தனது படைகளை சேர்த்த பிறகு 1405இல் தில்லியில் மல்லு இக்பால் கானை கிசிர் கான் தோற்கடித்து கொன்றார்.[28] 28 மே 1414 அன்று பிறகு தில்லியை கைப்பற்றினார். இவ்வாறாக சையிது அரசமரபை நிறுவினார்.[25] கிசிர் கான் சுல்தான் என்ற பட்டத்தை வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் தைமூரியர்களிடம் திறை செலுத்தியவராக முதலில் தைமூரிடமும் பிறகு அவரது மகன் சாருக்கிடமும் தனது கூட்டணியை தொடர்ந்தார்.[29][30] கிசிர் கான் பதவிக்கு வந்த பிறகு பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் சிந்துப் பகுதி ஆகியவை தில்லி சுல்தானகத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. இப்பகுதிகளில் தனது நேரத்தை கிளர்ச்சிகளை ஒடுக்குவதில் இவர் செலவழித்தார்.[31] கிசிர் கான் மற்றும் அவருக்கு பின் வந்தவர்களின் சக்தி தளமாக பஞ்சாப் பகுதி திகழ்ந்தது. ஏனெனில், முல்தான் மற்றும் தீபல்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தான் இவர்களது ஆட்சியின் போது தில்லி இராணுவத்தின் பெரும்பாலான பகுதியினர் சேர்க்கப்பட்டனர்.[32]

கிசிர் கானின் இறப்பிற்கு பிறகு இவரது மகன் சையிது முபாரக் ஷா 20 மே 1421 அன்று ஆட்சிக்கு வந்தார். முபாரக் ஷா தன்னைத் தானே முயிசுத்தீன் முபாரக் ஷா என்று நாணயங்களில் அச்சிட்டார். தன்னை ஷா என்று அறிவித்துக் கொண்டார்.[33][34] இவரது ஆட்சி காலம் குறித்த விரிவான விளக்கமானது எகுயா பின் அகமது சிர்கிந்தி எழுதிய தரிக்-இ-முபாரக் சாகி நூலில் கிடைக்கப் பெறுகிறது. முபாரக் ஷாவின் இறப்பிற்கு பிறகு அவரது உறவினர் முகம்மது ஷா அரியணைக்கு வந்தார். அவர் தன்னைத் தானே சுல்தான் முகம்மது ஷா என்று அழைத்துக் கொண்டார். அவரது இறப்பிற்கு சற்று முன்னர் அவர் தனது மகன் சையிது அலாவுதீன் ஷாவை பதாவுனில் இருந்து அழைத்தார். அவரைத் தன் வாரிசாக பரிந்துரைத்தார்.[சான்று தேவை]

சையிதுகளின் கடைசி ஆட்சியாளரான அலாவுதீன் 19 ஏப்ரல் 1451 அன்று பக்லுல் கான் லௌதிக்கு வழி விடுவதற்காக தில்லி சுல்தானகத்தின் அரியணையிலிருந்து தானாகவே விலகிக் கொண்டார். பின்னர், பதாவுனுக்கு சென்றார். அங்கு 1478ஆம் ஆண்டு இறந்தார்.[35]

Remove ads

மன்னர்கள்

கிசிர் கான்

Thumb
பிரூசு ஷா துக்ளக்கின் பெயரில் அச்சிடப்பட்ட கிசிர் கானின் நாணயம்.

பிரூசு ஷா துக்ளக்கின் கீழ் முல்தானின் ஆளுநராக கிசிர் கான் திகழ்ந்தார். இந்தியா மீது தைமூர் படையெடுத்த போது முல்தானை சேர்ந்த ஒரு சையிதுவான கிசிர் கான் அவருடன் இணைந்து கொண்டார். முல்தான் மற்றும் லாகூரின் ஆளுநராக இவரை தைமூர் நியமித்தார். பிறகு தில்லி நகரத்தை கிசிர் கான் வென்றார். 1414இல் சையிதுகளின் ஆட்சியை இவர் தொடங்கினார். தைமூரின் பெயரிலேயே இவர் ஆட்சி செய்து வந்தார். எந்த விதத்திலும் சுதந்திரமான நிலையை இவரால் அடைய இயலவில்லை. கிசிர் கானின் பெயரில் அச்சிடப்பட்டதாக எந்த ஒரு நாணயமும் அறியப்படவில்லை.[36]

முபாரக் ஷா

Thumb
முபாரக் ஷாவின் நாணயம்

முபாரக் ஷா கிசிர் கானின் மகன் ஆவார். 1421ஆம் ஆண்டு இவர் அரியணைக்கு வந்தார். தைமூரியர்களுடன் தனது தந்தை கொண்டிருந்த பெயரளவிலான கூட்டணியை இவர் முடித்துக் கொண்டார்.[37] தன்னுடைய பெயருடன் அரச பட்டமான ஷா என்ற பட்டத்தையும் இவர் சுதந்திரமாக பயன்படுத்தினார்.[38] சையிது அரசமரபின் திறன் வாய்ந்த ஆட்சியாளராக இவர் கருதப்படுகிறார்.[39] முன்னேறி வந்த மால்வா சுல்தானகத்தின் ஆட்சியாளரான கோசங் ஷா கோரியை இவர் தோற்கடித்தார். இவரது ஆட்சிக் காலத்தின் போது கோசங் ஷா கோரியை அதிகப் படியான திறை செலுத்த வைத்தார்.[40] சசரத் கோகரின் கிளர்ச்சியையும் முபாரக் ஷா ஒடுக்கினார். காபுலைச் சேர்ந்த தைமூரியர்களின் பல படையெடுப்புகளை இவர் முறியடித்தார்.[41]

முகம்மது ஷா

Thumb
முபாரக் ஷாவின் சமாதி.

முபாரக் ஷாவின் உடன் பிறப்பின் மகன் முகம்மது ஷா ஆவார். இவர் 1434 முதல் 1443 வரை ஆட்சி செய்தார். சர்வர் உல் முல்க்கின் உதவியுடன் இவர் அரியணைக்கு வந்தார். இவரது நம்பிக்கைக்குரிய உயர் அதிகாரியான கமல் உல் முல்க்கின் உதவியுடன் சர்வர் உல் முல்க்கின் ஆதிக்கத்திலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள முகமம்து ஷா விரும்பினார். இவரது ஆட்சிக் காலமானது பல்வேறு கிளர்ச்சிகள் மற்றும் சதி திட்டங்களால் குறிக்கப்படுகிறது. அதே ஆண்டு இவர் இறந்தார். இவரது ஆட்சியின் போது லங்கர்களின் கீழ் முல்தான் சுதந்திரமான இராச்சியமாக உருவானது.[42]

ஆலம் ஷா

சையிது அரசமரபின் கடைசி ஆட்சியாளர் அலாவுதீன் ஷா ஆவார். இவர் லௌதி அரசமரபைத் தொடங்கிய பக்லுல் கான் லௌதியால் தோற்கடிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads