தைமூரியப் பேரரசு
மத்திய கிழக்கில் தைமூரால் நிறுவப்பட்ட பேரரசு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தைமூரியப் பேரரசு (ஆங்கிலம்: Timurid Empire) என்பது நடுக் காலத்தின் பிந்தைய பகுதியில் அமைந்திருந்த ஒரு துருக்கிய-மங்கோலியப் பேரரசு[12][13] ஆகும். இது பாரசீகப் பண்பாட்டைப் பின்பற்றியது.[14] 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரிய ஈரான் பகுதி மீது ஆதிக்கம் செலுத்தியது. இப்பேரரசானது நவீன கால ஈரான், ஈராக்கு, ஆப்கானித்தான், பெரும்பாலான நடு ஆசியா, தென்காக்கேசியா மற்றும் சமகால பாக்கித்தான், வட இந்தியா, மற்றும் துருக்கியின் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இப்பேரரசானது கலவையான பண்பாட்டை உடையதாக இருந்தது. துருக்கிய, மங்கோலிய மற்றும் பாரசீகத் தாக்கங்களைக் கொண்டிருந்தது.[15][16] இந்த அரசமரபின் கடைசி உறுப்பினர்கள் "முன் மாதிரி பாரசீக-இசுலாமிய ஆட்சியாளர்களாகக்" கருதப்பட்டனர்.[17]
துருக்கிய-மங்கோலியப் பண்பாட்டில் தோன்றிய ஒரு போர்ப் பிரபுவான தைமூரால் இப்பேரரசு நிறுவப்பட்டது. இவர் 1370 மற்றும் இவர் இறந்த ஆண்டான 1405-க்கு இடையில் இப்பேரரசை நிறுவினார். இவர் செங்கிஸ் கானின் மங்கோலியப் பேரரசை மீண்டும் உருவாக்கும் ஒரு பெரும் நபராக தன்னைத் தானே கனவு கண்டார். செங்கிஸ் கானின் வாரிசாக தன்னைத் தானே கருதினார். செங்கிஸ் கானின் அரசமரபான போர்சிசின் அரசமரபுடன் நெருக்கமாகத் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டார். மிங் சீனா மற்றும் உருசியாவின் தங்க நாடோடிக் கூட்டம் ஆகிய அரசுகளுடன் திடமான வணிக உறவுகளை தைமூர் தொடர்ந்தார். மா குவான் மற்றும் சென் செங் போன்ற சீன தூதுவர்கள் மேற்கு நோக்கி பொருட்களை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் சமர்கந்திற்குப் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இப்பேரரசானது தைமூரிய மறுமலர்ச்சிக்குத் தலைமை தாங்கியது. குறிப்பாக வானியலாளரும், கணிதவியலாளருமான மன்னர் உலுக் பெக்கின் ஆட்சிக் காலத்தின் போது இவ்வாறு திகழ்ந்தது.
1467 வாக்கில் ஆட்சி செய்த தைமூரிய அரசமரபு அல்லது தைமூரியர்கள் பெரும்பாலான பாரசீகத்தை அக் கோயின்லு கூட்டமைப்பிடம் இழந்தனர். எனினும், தைமூரிய அரசமரபின் உறுப்பினர்கள் சிறு அரசுகளை ஆட்சி செய்வதைத் தொடர்ந்தனர். சில நேரங்களில், இந்த அரசுகள் தைமூரிய அமீரகங்கள் என்று அறியப்பட்டன. இவை நடு ஆசியா மற்றும் இந்தியாவின் பகுதிகளில் அமைந்திருந்தன. 16-ஆம் நூற்றாண்டில் பெர்கானாவைச் (நவீன கால உசுபெக்கிசுத்தான்) சேர்ந்த ஒரு தைமூரிய இளவரசனான பாபுர் காபூலிசுதான் (நவீன கால ஆப்கானித்தான்) மீது படையெடுத்தார். அங்கு ஒரு சிறிய இராச்சியத்தை நிறுவினார். 20 ஆண்டுகள் கழித்து இந்தியாவிலிருந்த தில்லி சுல்தானகம் மீது படையெடுக்க இந்த இராச்சியத்தை அவர் அடித்தளமாகப் பயன்படுத்தினார். முகலாயப் பேரரசை நிறுவினார்.
Remove ads
தோற்றப் பின்னணி
தைமூரிய வம்சத்தினரின் தோற்றம் பர்லாசு (Barlas) என அழைக்கப்படும் மங்கோலிய நாடோடிக் கூட்டமைப்புடன் தொடங்குகிறது. பர்லாசுகள் செங்கிசுக் கானின் படையினரில் எஞ்சிய குழுக்களாவர். மங்கோலியர் மத்திய ஆசியாவைக் கைப்பற்றிய பின்னர் பர்லாசுகள் துருக்கத்தானத்தில் குடியேறினர். இதனால் இது மகுலித்தானம் (மங்கோலியர் நாடு) எனவும் எனவும் அழைக்கப்பட்டது. உள்ளூர்த் துருக்கருடனும், பிற துருக்க மொழி பேசுவோருடனும் குறிப்பிடத்தக்க அளவு கலந்து பழகியதால், தைமூரின் காலத்தில் பர்லாசுகள் மொழியாலும், பழக்க வழக்கங்களாலும் துருக்கராகவே மாறிவிட்டனர். மேலும், இசுலாத்தைக் கைக்கொள்ளத் தொடங்கிய பின்னர், இசுலாமியச் செல்வாக்கு உருவான காலத்தின் தொடக்கத்திலிருந்து முன்னிலை வகித்த பாரசீகக் கல்வி, உயர் பண்பாடு ஆகியவற்றையும் மத்திய ஆசியத் துருக்கரும், மங்கோலியரும் ஏற்றுக்கொண்டனர். தைமூரிய உயர் குடியினர், பாரசீக-இசுலாமிய அரசவைப் பண்பாட்டுடன் ஒன்றுகலப்பதற்கு பாரசீக இலக்கியம் முக்கிய பங்காற்றியது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads