ஜெயமாலா
இந்திய நடிகை, அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெயமாலா (Jayamala, பிறப்பு 1955) [1] என்பவர் ஒரு இந்திய நடிகையும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும், கர்நாடக அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு, மூத்த குடிமக்கள் நலன் துறையின் அமைச்சராகவும் பணியாற்றியவர்.[2] 2008 மற்றும் 2010க்கு இடையில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் பெண் தலைவராக பணியாற்றினார்.[3][4] இவரது பிரபலமான கன்னட படங்களாக பிரேமத காணிக்கே, சங்கர் குரு, அந்தா, சண்டி சாமுண்டி உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. விருது பெற்ற படமான தாய் சாஹேபா படத்தினை தயாரித்து நடித்துள்ளார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
ஜெயமாலா மங்களூரில் துளுவ மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜி. ஓமையா ஒரு விவசாயி, தாய் கமலம்மா, ஒரு இல்லத்தரசி. இவருக்கு ஆறு சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். பனம்பூரில் துறைமுக வேலை காரணமாக இடம்பெயர்ந்த பின்னர் இவர்கள் குடும்பம் 1963 இல் சிக்மகளூருக்கு குடிபெயர்ந்தது.[5] கன்னடத் திரைப்பட நடிகர் டைகர் பிரபாகரை இவர் திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு சௌந்தர்யா என்ற மகள் உண்டு. இந்த இணையரின் மணமுறிவுக்குப் பிறகு [6][7] ஒளிப்பதிவாளர் எச். எம். ராமச்சந்திராவை இரண்டாவதாக மணந்தார்.[8]
Remove ads
திரைப்பட வாழ்க்கை
ஜெயமாலா முதன்மையாக கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980களின் முற்பகுதியில் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக ஜெயமாலா இருந்தார். இவர் படத்தில் ராஜ்குமாரின் கதாநாயகியாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், அவருடன் வெற்றிகரமான பல திரைப்படங்களில் நடித்ததுடன், கன்னடத் திரையுலகின் அனைத்து முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.[9] அனந்த் நாக் உடன், இவர் ஜன்ம ஜன்மதா அனுபந்தா மற்றும் பிரேமவே பாலின பெலகு. விஷ்ணுவர்தனுடன், ஹந்தகானா சஞ்சு, நாக கால பைரவா போன்ற படங்களிலும் பல நாயகர்கள் சேர்ந்து நடித்த சித்திதா சகோதராசித்திதா சகோதரா போன்ற படங்களிலும் நடித்தார். அம்பரீஷுடன் அஜித், பிரேமா மத்ஸரா மற்றும் கதீமா கல்லாரு போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். பல திரைப்படங்களில் சங்கர் நாக் உடன் இவர் ஜோடி சேர்ந்தது நடித்தார். கதாநாயகிக்கு முக்கியத்தும் தரக்கூடிய சாண்டி சாமுண்டி உட்பட வெற்றிகரமான பல படங்களில் நடித்து அதிரடி நாயகி என பெயர் பெற்றார்.
இவரது முதல் தயாரிப்பு படமான தாயி சாஹேபாவை கிரிஷ் காசரவள்ளி இயக்கினார். இப்படம் தேசிய விருதை வென்றது. இப்படத்தில் நடித்ததற்காக ஜெயமாலாவுக்கு சிறப்பு ஜூரி விருது கிடைத்தது.[10] இந்திய திரைப்படத் துறையிலிருந்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ஒரே நடிகை என்ற பெருமையைப் பெற்று, ஜெயமாலா புதுவகையான சாதனையை நிகழ்த்தினார். இவரது ஆய்வுக்களமாக கர்நாடகத்தின் கிராமப்புற பெண்ணின் மறுவாழ்வு குறித்து இருந்தது. மேலும் இதற்காக இவர் கர்நாடகத்தில் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு பல ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததாக கூறினார். பெங்களூரு பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தை 18 ஜனவரி 2008 அன்று முன்னாள் ஜனாதிபதி ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களால் வழங்கப்பட்டது.
Remove ads
சர்ச்சை
'நம்பினார் கெடுவதில்லை' என்ற தமிழ்த் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சபரிமலையில் உள்ள ஐயப்பன் சிலையைத் தொட்டு வணங்கியதாக கூறியபோது இவர் ஒரு சர்ச்சையின் மையமாக ஆனார். காரணம் 10-50 வயதுடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதால், இது இந்தியாவில் ஒரு பரபரப்பை உருவாக்கியது. மேலும் இது இந்திய ஊடகங்கள் மற்றும் நீதிமன்றங்களில் கருத்தியல் போருக்கு வழிவகுத்தது. தற்போது பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில குழு உறுப்பினராக உள்ள திரு வி ராஜேந்திரன் [11][12] இவருக்கு எதிராக ராணி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக ஜெயமாலா கூறினார். ஆனால் பக்தர்கள் கூட்டத்தினால் தான் சன்னதிக்குள் தள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார். இந்த கோயிலுக்குள் கருவறை வெகு தொலைவில் உள்ளதால் தெய்வத்தின் சிலையை தொட முடியாது என்று ராஜேந்திரன் குறிப்பிட்டார். சபரிமலையின் தலைமை பூசாரியான காந்தாரு மகேஸ்வராரு நடிகையின் கூற்று கற்பனையான கருத்து என்று நிராகரித்தார்.[13][14][15][16][17]
திரைப்படவியல்
தமிழ்
- ஒரு கொடியில் இரு மலர்கள் (1976)
- ஜம்பு (1980)
- பாமா ருக்மணி (1980)
- அன்று முதல் இன்று வரை (1981)
- கடவுளின் தீர்ப்பு (1981)
- கல்தூண் (1981)
- அஸ்திவாரம் (1982)
- வள்ளியாக கண் சிவந்தால் மண் சிவக்கும் (1983)
- தலைமகன் (1983)
- குவா குவா வாத்துகள் (1984)
- பொழுது விடிஞ்சாச்சு (1984)
- படிக்காத பண்ணையார் (1985)
- நம்பினார் கெடுவதில்லை (1986)
- மயிலுவாக என் பொண்டாட்டி நல்லவ (1995)
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads