டிராக்டபிள் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிராக்டபிள் நடவடிக்கை (Operation Tractable) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் போது பிரான்சின் ஃபலேசு நகர்ப் பகுதி அருகே பல ஜெர்மானியப் படைப்பிரிவுகளைச் சுற்றி வளைக்க நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சி.
நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு நார்மாண்டிப் பகுதியில் ஜூன் 6, 1944ல் துவங்கியது. இரு மாதங்கள் கடும் சண்டைக்குப்பின்னர் கடற்கரைப் பகுதியிலிருந்து பிரான்சின் உட்பகுதிக்கு நேச நாட்டுப் படைகள் முன்னேறத் தொடங்கின. இதனை முறியடிக்க ஜெர்மானியர்கள் நிகழ்த்திய லியூட்டிக் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தது. லியூட்டிக்கில் ஈடுபட்ட ஜெர்மானியப் படைப்பிரிவுகள் சுற்றி வளைக்கப்படும் அபாயம் உருவானது. லியூட்டிக் தாக்குதலில் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் நேச நாட்டுப் படை நிலைகளை ஆழமாக ஊடுருவித் தாக்கியதால், தாக்குதல் முறியடிக்கப்பட்டவுடன் முப்புறமும் எதிரிப்படைகளால சூழப்பட்டு சிக்கிக் கொண்டன. நேச நாட்டுப் படைநிலைகளின் இடையே ஜெர்மானியக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி ஃபலேசு வீக்கப்பகுதி (Falaise Gap) என்று அழைக்கப்பட்டது. வடக்கில் கனடியப் படைகளும், மேற்கில் பிரிட்டானிய 2வது ஆர்மியும், தெற்கில் அமெரிக்க 1வது ஆர்மியும் இவ்வீக்கப்பகுதியை சூழ்ந்திருந்தன. இதன் நான்காவது புறத்தையும் கைப்பற்றி ஜெர்மானியர்களைச் சுற்றி வளைக்க நேச நாட்டுப் படைகள் வடக்கிலிருந்து டிராக்டபிள் நடவடிக்கையைத் தொடங்கின. இதில் 1வது கனடிய ஆர்மியும், 1வது போலந்திய கவச டிவிசனும் பங்கு கொண்டன.
ஆகஸ்ட் 14, 1944ல் இத்தாக்குதல் தொடங்கியது. துவக்கத்தில் மெதுவாக இருந்தாலும் போலந்திய 1வது கவச டிவிசன் புதிய தாக்குதல் முறைகளைப் பயன்படுத்தி ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட ஜெர்மானியர்களைச் சுற்றிய படைவளையத்தைப் பூர்த்தியாக்கிவிட்டது. ஆகஸ்ட் 19ல் சில நூறு மீட்டர்களே ஜெர்மானியர்கள் தப்பிச் செல்வதற்கு இடைவெளி எஞ்சியிருந்தது. ஃபலேசு வீக்கப்பகுதியில் சிக்கியுள்ள படைப்பிரிவுகளை மீட்டு நேச நாட்டுப் படைவளையத்தை உடைக்க ஜெர்மானியப் படைகள் அடுத்த இரு நாட்களில் கடும் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டன. போலந்திய 1வது கவச டிவிசன் இவற்றைச் சமாளித்து ஆகஸ்ட் 21ம் தேதி அமெரிக்கப் படைப்பிரிவுகளுடன் கைகோர்த்துவிட்டது. ஃபலேசு வீக்கப்பகுதி ஃபலேசு இடைப்பகுதியாக (Falaise Pocket) மாறிவிட்டது. இதில் ஜெர்மானிய ஆர்மி குரூப் “பி” ஐச் சேர்ந்த 1,50,000 வீரர்கள் சிக்கிக்கொண்டனர். இவர்களுள் பலர் தப்பினாலும், பெரும்பாலானோர் அடுத்த சில நாட்களில் சரணடைந்தனர்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads